தமிழகம்

தவெக அரசின் செயல்பாடு அடிப்படையில் அணுகுமுறை

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு முடிவு

புதிதாகப் பதவியேற்றுள்ள தவெக அரசின் செயல்பாடு அடிப்படையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அணுகுமுறையை மேற்கொள்வது என மாநிலக் குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில நிர்வாகக் குழு மற்றும் மாநிலக் குழுக் கூட்டங்கள் மே 14, 15, 16 தேதிகளில் திருவாரூர் நகரில் எம்.ஆறுமுகம் (கோவை), கே.கேசவராஜ் (திருவாரூர்), ஜி.லதா (வேலூர்) ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா, மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், மூத்த தலைவர்கள் இரா.முத்தரசன், கோ.பழனிசாமி, தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் டி.எம்.மூர்த்தி, கே.சுப்பராயன் எம்.பி., வை.செல்வராசு எம்.பி., துணைச் செயலாளர்கள் நா.பெரியசாமி, எம்.ரவி, சட்டமன்ற உறுப்பினர் க.மாரிமுத்து (திருத்துறைப்பூண்டி), மாநில செயற்குழு உறுப்பினர்கள் பி.பத்மாவதி, டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், எம்.செல்வராஜ், வை.சிவபுண்ணியம், தி.ராமசாமி, வஹிதா நிஜாம் உள்பட மாநிலக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

சட்டப்பேரவை தேர்தல் முடிவு குறித்துப் பரிசீலனை

17-வது சட்டப்பேரவை தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி, தேசிய ஜனநாயகக் கூட்டணி என இரண்டு முக்கிய கூட்டணிகளும், தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி ஆகியவை தனித்தும் போட்டியிட்டன. இந்த நான்கு முனைத் தேர்தல் களத்தில் வேறு சில கட்சிகள் கூட்டணி அமைத்தும், தனித்தும் போட்டியிட்டன. மே 4ஆம் தேதி வெளியான தேர்தல் முடிவுகள் சில திட்டவட்டமான செய்திகளை வெளிப்படுத்தியுள்ளன.

திமுக தலைமையேற்ற மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியும், அஇஅதிமுக, பாஜக அங்கம் பெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியும் தோல்வியடைந்துள்ளன. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த திமுக, அதிமுக என்ற இருதுருவ அரசியல் பின்னடைவைச் சந்தித்துள்ளது

மதவாத, சாதிய, குறுகிய தேசிய இனவெறி கட்சிகள் முற்றிலுமாக இந்தத் தேர்தலில் நிராகரிக்கப்பட்டுள்ளன. கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் நான்கு இடங்களைப் பெற்றிருந்த பாஜக, தற்போது ஒரே ஒரு தொகுதியில் மட்டும் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

தமிழ்நாட்டின் தேர்தல் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில், எந்தக் கட்சிக்கும், எந்தக் கூட்டணிக்கும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை வழங்காத ஒரு புதிய தீர்ப்பை மக்கள் வழங்கியுள்ளனர்.

த.வெ.க.வின் சார்பாக 108 சட்டப்பேரவை உறுப்பினர்கள் வெற்றி பெற்றுள்ளனர். ஆனால், ஆட்சி அமைக்கும் அளவுக்கு அறுதிப் பெரும்பான்மையை அக்கட்சி பெறவில்லை. இந்தநிலையில் தனிப்பெரும் கட்சி என்பதை அங்கீகரித்து, தவெக-வை ஆட்சியமைக்க அழைக்காமல், பெரும்பான்மைக்கான 118 உறுப்பினர்கள் இருப்பதை நிரூபித்தால் மட்டுமே ஆட்சி அமைக்க அழைக்க முடியும் என பல முறை த.வெ.க. தலைவரை ஆளுநர் திருப்பி அனுப்பினார். இதன் மூலம் கொல்லைப்புற வழியாக ஆர்எஸ்எஸ், பாஜக ஒன்றிய அரசின் அரசியல் கருவியான, ஆளுநர் ஆட்சியை தமிழ்நாட்டில் ஏற்படுத்தும் முயற்சி நடைபெற்றது.

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகளின் தொகுதிப் பங்கீட்டின் போது, பொதுவெளியில் பிரச்சினைகளை கிளப்பி 28 தொகுதிகளைப் பெற்றுப் போட்டியிட்டு, 5 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி, தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் தமிழக வெற்றிக் கழகத்தோடு கூட்டணி அமைப்பதாகக் கூறி மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியிலிருந்து வெளியேறியது. அதன் பிறகும் தேவையான பெரும்பான்மை எண்ணிக்கையை தவெக பெற முடியவில்லை.

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைக்க தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகளிடம் ஆதரவு கோரவில்லை என்றும், இடதுசாரி கட்சிகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் ஆதரவு தர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டது.

இத்தகைய சூழலில், இது குறித்து முடிவெடுப்பதற்கு முன் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆழ்ந்து சிந்தித்து ஆக்கப்பூர்வமாக விவாதித்தது. ”ஆர்எஸ்எஸ் மூலம் வழிநடத்தப்படும் ஒன்றிய பாஜக அரசானது தமிழ்நாட்டின் மீது இந்தி, சமஸ்கிருத மொழிகளைத் திணித்தது. தமிழ்நாட்டிற்குத் தரவேண்டிய கல்வி நிதி, பேரிடர் நிவாரண நிதி ஆகியவற்றை வழங்காமல் வஞ்சித்தது. மேலும், பாஜக ஆட்சி நடைபெறாத மற்ற மாநிலங்களை பலவகையில் பாரபட்சமாக நடத்தியது என்பன உள்ளிட்ட பல காரணங்களால் ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டுக்கு எதிரானது. எனவே, பாஜகவை தமிழ்நாட்டில் காலூன்ற இடமளிக்க கூடாது” என்பதே மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் முதன்மையான தேர்தல் முழக்கமாக இருந்தது. ஆனால், தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தோல்வி அடைந்து விட்டது என்பதற்காக பொருள் பொதிந்த தமிழ்நாட்டு நலன் சார்ந்த இந்த முழக்கத்தைக் கைவிட முடியாது. மேலும் தொடர்ந்து அதனை முன்னெடுத்துச் செல்வது அவசியமாகும்.

எனவே, பாஜகவின் மறைமுக ஆட்சி (ஆளுநர் ஆட்சி) தமிழ்நாட்டில் ஏற்பட்டுவிடாமல் தடுக்கும் பொறுப்புள்ள அரசியல் கடமையை நிறைவேற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யும் உணர்ந்தன. மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் தொடர்கிற அதே நேரத்தில், தனிப்பெரும் கட்சியை ஆட்சியமைக்க ஆளுநர் அழைக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்துவதற்காக தவெக-வுக்கு ஆதரவுக் கடிதம் அளிப்பதென இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளின் அமைப்புகளும் முடிவு செய்தன. இதே அணுகுமுறையை வி.சி.க.வும் மேற்கொண்டது. இதைத்தொடர்ந்து ஐ.யூ.எம்.எல். கட்சியும் ஆதரவளித்தது.

இவ்வாறு நான்கு கட்சிகளின் எட்டு சட்டப்பேரவை உறுப்பினர்களும் ஆதரித்ததால் த.வெ.க. ஆட்சியமைக்க 120 உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்தது. இதனால், ஆளுநரின் தடைகளைத் தகர்த்து ஆட்சியமைக்க அழைக்க வேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து தமிழக வெற்றிக் கழகம் 2026, மே 10ஆம் தேதி பதவியேற்றது.

சட்டப்பேரவையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு மே 13ல் நடைபெற்ற போது, தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த அஇஅதிமுகவின் 25 உறுப்பினர்களும், அமமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு உறுப்பினரும் ஆதரித்து வாக்களித்ததையும், திமுக வெளிநடப்பு செய்ததையும் மாநிலக்குழு கவனத்தில் கொள்கிறது.

சமூகநீதி, சமநீதி, மதச்சார்பின்மை ஆகிய கொள்கைகளில் தனது அரசு உறுதியாக இருப்பதாகவும், ஏற்கனவே திமுக அரசு செயல்படுத்திய நலத்திட்டங்களைத் தொடர்வதாகவும் முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் அவர்கள் உறுதியளித்து இருக்கிறார். அதனை உறுதிப்படுத்துவதோடு, த.வெ.க. மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றும் எனவும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்பார்க்கிறது. எனவே, தவெக அரசின் செயல்பாடுகளின் அடிப்படையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தனது அணுகுமுறையை மேற்கொள்வது என மாநிலக் குழு முடிவு செய்கிறது.

பெட்ரோல் டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்

ஒன்றிய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மீண்டும் உயர்த்தியுள்ளன. இதன் காரணமாக பெட்ரோல் லிட்டர் ரூ.103.77, டீசல் லிட்டர் ரூ.95.33 ஆக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு உணவு பொருள்களில் விலைகளை கடுமையாக உயர்த்த வழிவகுக்கும். இந்த விலை உயர்வு அடித்தட்டு மக்களின் வாழ்க்கை மீது நடத்தப்படும் தாக்குதலாகும்.

 

ஒன்றிய பாஜக அரசும், அதன் அமைச்சர்களும் நாட்டின் தேவைக்குப் போதுமான எரிபொருள் இருப்பு இருப்பதாகத் தெரிவித்து வரும் நிலையில், மேற்காசிய நாடுகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை காரணம் காட்டி பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்தி வரும் மக்கள் விரோத ஒன்றிய அரசின் நடவடிக்கையை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக் குழுக் கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது. உயர்த்தப்பட்ட விலையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் ஒன்றிய அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்

வேலை பெறும் உரிமைக்காக உடல் உழைப்புத் தொழிலாளர்கள் நீண்ட காலமாகப் போராடி வந்த நிலையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஒன்றிய ஆட்சியில் 2005 ஆம் ஆண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ் ஊரகப் பகுதிகளில் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு, உடல் உழைப்புத் தொழிலாளர் குடும்பங்கள் ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை பெறுவதற்கு சட்டபூர்வ உரிமை வழங்கப்பட்டது.

இதன் மூலம் நாடு முழுவதும் 25 கோடி தொழிலாளர்களுக்கும், தமிழ்நாட்டில் ஒரு கோடியே 30 லட்சம் தொழிலாளர்களுக்கும் வாழ்வாதாரம் உறுதி செய்யப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த இந்த முன்னோடி திட்டத்தை ஒன்றிய பாஜக அரசு, கடந்த 2025 டிசம்பர் 21 ஆம் தேதி ரத்து செய்து, விக்ஷித் பாரத்- ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதித் திட்டம் என்ற (விபி- ஜி-ராம் – ஜி) புதிய திட்டத்தை அறிவித்தது. இதன் மூலம் 20 ஆண்டுகளாக ஊரகப் பகுதி உடல் உழைப்புத் தொழிலாளர்களின் சட்டபூர்வ வேலை பெறும் உரிமை பறிக்கப்பட்டு, அரசின் தயவை நாடி நிற்கும் பயனாளிகளாக மாற்றப்பட்டனர்.

ஒன்றிய அரசு நிதிப் பொறுப்பை கைகழுவி விட்டு, மாநிலங்களின் தலையில் நிதிச்சுமையை ஏற்றிவிட்டுள்ளது. கிராமத் தொழிலாளர் நலனுக்கும், மாநில உரிமைக்கும் எதிரான விபி ஜிராம்ஜி சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி நாடு முழுவதும் விவசாயத் தொழிலாளர்கள் போராடி வருகின்றனர். இது தொடர்பாக பஞ்சாப் மாநில சட்டமன்றத்தில் 2025 டிசம்பர் மாதமும், தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2026 ஜனவரி 23 ஆம் தேதியும், கர்நாடக மாநில சட்டமன்றத்தில் பிப்ரவரி 4 ஆம் தேதியும், கேரள மாநில சட்டமன்றத்தில் பிப்ரவரி 5 ஆம் தேதியும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டத்தை வலுப்படுத்தி, மீண்டும் அமலாக்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இந்த நிலையிலும், ஒன்றிய அரசு மறுபரிசீலனை செய்ய முன்வராமல், 11.05.2026 அன்று விபி ஜிராம்ஜி சட்டத்தை ஜூலை முதல் தேதியிலிருந்து அமலாக்க வேண்டும் என அறிவிக்கை வெளியிட்டுள்ளது. ஒன்றிய அரசின் விவசாயத் தொழிலாளர் விரோத இந்த நடவடிக்கையை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழுக் கூட்டம் வன்மையாக கண்டிப்பதுடன், இது தொடர்பாக தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை மீண்டும் அமலாக்க ஒன்றிய அரசுக்கு வலுவான அழுத்தம் தர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறது.

கௌரவப் பேராசிரியர்கள் ஊதியத்தை உயர்த்தி வழங்குக!

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் பத்தாண்டுகளுக்கு முன்பு நியமனம் செய்யப்பட்ட 8500 க்கும் மேற்பட்ட கௌரவப் பேராசிரியர்கள் குறைந்த ஊதியத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு யுஜிசி நிர்ணயித்துள்ள ஊதியமான ரூ 57,700 வழங்க வேண்டிய நிலையில் ரூ.30 ஆயிரம் மட்டுமே வழங்கப்படுகிறது. இது முனைவர் பட்டப்படிப்பில் ஆய்வு மாணவர்கள் பெறுகிற உதவித் தொகைக்கும் குறைவான தொகையாகும்.

கௌரவப் பேராசிரியர்களுக்கு இழைக்கப்படும் அநீதியை தமிழ்நாடு அரசு உடனடியாக தடுத்து நிறுத்தி, யுஜிசி நிர்ணயித்துள்ள 57,700 ரூபாய் ஊதியம் வழங்க வேண்டும் என்றும், இதுவரை வழங்கப்படாத மே மாத ஊதியத்தையும் சேர்த்து வழங்க வேண்டும் என்றும் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழுக் கூட்டம் தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறது.

மதுபானக் கடைகள் மூடப்படுவதற்கு வரவேற்பு –பணியாளர் பணிப் பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும்!

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்தவுடன் வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிலையங்கள், பேருந்து நிலையங்கள் ஆகியவை அமைந்துள்ள எல்லையில் இருந்து 500 மீட்டர் தொலைவுக்கு அப்பால் உள்ள மதுபானக் கடைகள் மூடப்படும் உத்தரவு பிறப்பித்துள்ளது. மக்கள் நலன், பொது அமைதியை கருத்தில் கொண்டு முதலமைச்சர் விஜய் மேற்கொண்ட நடவடிக்கைக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழுக் கூட்டம் வரவேற்கிறது. அரசு வரையறுத்துள்ள இதே எல்லைக்குள் உள்ள எஃப்.எல் 2, மனமகிழ் மன்றங்கள் நடத்தி வரும் மதுபான விற்பனை மையங்களையும் மூட உத்தரவிட வேண்டும். அதே சமயம் 2003 ஆம் ஆண்டில் அரசின் அழைப்பை ஏற்று, மதுபான விற்பனைப் பிரிவில் சேர்ந்து, 23 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வரும் பணியாளர்களை அரசின் பிற துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களில் நிரந்தரப் பணியாளர்களாக, பணியமர்வு செய்ய வேண்டும் என முதலமைச்சர் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

விபத்தில்லா பட்டாசு உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்!

இந்தியாவில் பட்டாசு தொழில் என்றால் சிவகாசி நகரம் தான் நினைவுக்கு வருகிறது. சிவகாசியை சுற்றி நடைபெறும் பட்டாசு தொழிலில் பல லட்சம் குடும்பங்கள் நேரிலும் மறைமுகமாகவும் ஈடுபட்டு ஜீவனம் கழித்து வருகிறார்கள். இந்த வாழ்க்கை உயிரை பணயம் வைத்து நடைபெறும் வாழ்க்கையாக மாறிவிட்டது. உயிரைக் காக்க உழைப்பு என்பது மாறி உயிரைக் கொடுத்து உழைப்பு, திரும்பி வந்தால் தான் வாழ்க்கை என்று ஆகிவிட்டது.

அடிக்கடி ஏற்படும் வெடி விபத்துக்கள் உயிர்ப் பலிகள் தொடர்கின்றன. விபத்தை தடுக்க அரசு எடுக்கும் முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. விபத்து தொடர்வதால் தொழிலாளர்களிடம் பீதியும், அச்சமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அச்சத்திலேயே வாழ வேண்டிய நிலை உள்ளது. எனவே மாற்று தொழில் செய்யலாமா என்ற மறு சிந்தனையும் தொழிலாளர்களிடம் ஏற்படுவது நியாயமாகத் தெரிகிறது. மாற்றுத் தொழில் ஏற்பாடு செய்ய வேண்டும். முறையான அனுமதி பெற்று தொழில் நடைபெறக்கூடிய எட்டு நிறுவனங்களில் விபத்து என்பது கடந்த 20 ஆண்டு காலமாக இல்லை.

அனுமதி பெறுவதிலேயே முறையற்ற நடவடிக்கைகளைப் பின்பற்றி தொழில் நடத்துபவர்கள், விபத்துக்கு காரணமாக மாறுகிறார்கள். விபத்து தடுக்கப்பட்டு விபத்தில்லா பட்டாசு தொழிலாக நடைபெற தொடர் நடவடிக்கைகள் அவசியம்.

1. பட்டாசு தொழிற்சாலைகளை லீசுக்கு விடும் நடைமுறை தடை செய்யப்பட வேண்டும். லீசுக்கு விடப்பட்டுள்ள பட்டாசு தொழிற்சாலைகள் உரிமங்கள் ரத்து செய்யப்பட வேண்டும். தொழில் நடத்துபவர்கள் பெயரில் உரிமம் மாற்றப்பட வேண்டும்.

2. வீடுகளில் மற்றும் குடிசைகளில் அனுமதி இல்லாமல் நடைபெறும் பட்டாசு தொழில் தடை செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களுக்கு மாற்று தொழில் கொடுக்க வேண்டும்.

3. விபத்து நடந்தால் விதிமுறை மீறல்களை கண்டறிவதற்காக அமைக்கப்பட்ட அதிகாரிகள் குழுவின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். விதிமுறைகளை கடைபிடிப்பது என்பது அதிகாரிகள் உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் மூவரையும் சார்ந்தது.

4. மருந்து கலவை போன்ற முக்கியமான வெடி விபத்து ஏற்படுத்தும் தொழிலை செய்யும் தொழிலாளர்களுக்கு பயிற்சி கொடுத்து பயிற்சி சான்றிதழ் பெற்றவர்களை தான் இந்தத் துறையில் நியமிக்க வேண்டும்.

5. காண்ட்ராக்ட் முறை ஒழிக்கப்பட்டு அரசு வழங்கும் குறைந்தபட்ச கூலி சட்டத்தின் அடிப்படையில் சம்பளம் வழங்கி அவர்களை அந்தந்த தொழிற்சாலைகளை நிரந்தர தொழிலாளர்களாக ஆக்கி அனைத்து சட்ட உரிமைகளையும் வழங்கி பணிவரன்முறை செய்ய வேண்டும்.

கேளிக்கை நிறைந்த உலகத்தில் பட்டாசு அவசியம் தேவை. அரசுக்கு வருமானமும், பல லட்சம் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கும் தொழில் என்பதால் விபத்தில்லா பட்டாசு உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறோம்.

பிஎம்சிறி திட்டத்தை தமிழக அரசு எதிர்க்க வேண்டும்!

ஒன்றிய பாஜக அரசு “இந்துத்துவா” கருத்தியலையும், சமஸ்கிருதம், இந்தி மொழித் திணிப்பையும் உள்ளடக்கமாகக் கொண்ட பிஎம்சிறி திட்டத்தை தமிழ்நாடு அரசு ஆரம்ப நிலையில் இருந்தே எதிர்த்து வருகிறது. இத்திட்டத்தை ஏற்க வேண்டும் என நிர்பந்தித்து வரும் ஒன்றிய அரசு, தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்திற்கு நிதியை வழங்க மறுத்து விட்டது. மாநில அரசின் சொந்த நிதிப் பொறுப்பில் கல்வித்துறை பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் ஒன்றிய அரசு 07.05.2026 அன்று பிஎம்சிறி திட்டத்தை ஏற்று கையெழுத்திட வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. புதிதாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள தமிழக வெற்றிக் கழக அரசும் பிஎம் திட்டத்தை உறுதியுடன் நிராகரிக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழுக் கூட்டம் தமிழ்நாடு முதலமைச்சரை கேட்டுக் கொள்கிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button