கட்டுரைகள்

பிற கட்சிகளைப் பிளவுபடுத்தி நாடாளுமன்றத்தில் 3ல் 2 பங்கு பெற பா.ச.க. முயற்சி

மே.து.ரா.

கட்சித் தாவல் என்பது தற்போது புதிய வடிவத்தை எட்டியிருக்கிறது. தேர்தலையடுத்து, சிலர் கட்சி அல்லது அணி மாறி வேறொரு பகைக் கட்சியை ஆட்சியில் அமர்த்துவது என்னும் நடைமுறைக்கு மாறாக, கட்சியையே கைப்பற்றுவது, களவாடுவது என்கின்ற புதிய நிலை உருவாகிவருகிறது.

இத்தகைய முயற்சிகள் ஒன்றிய அரசுக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெறுகின்ற வாய்ப்பினை உருவாக்கிக்கொள்ளும் நோக்கில் நகர்ந்துகொண்டிருக்கின்றன.

தனிப்பட்ட தாக்குதல்கள் வரை சென்று, பகைமை பாராட்டிய கட்சிகளோடு இணைந்து மாநில ஆட்சிக்கு ஒத்துழைப்புத் தரும் போக்கு பல மாநிலங்களுக்கும் பரவி வருகிறது.

வலுப்படுத்திக்கொள்ள நினைக்கும் ஆளும் கட்சிகள்

தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்கத்தக்க எண்ணிக்கை கிடைத்த பின்னரும், எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்குள் பிளவினை ஏற்படுத்தியும் அய்வரை விலகச் செய்தும் தங்களை வலுப்படுத்திக் கொள்ளத் தமிழக வெற்றிக் கழகம் முனைந்துள்ளது.

மேற்கு வங்கத்தில் மிக வலிமையுடன் பா.ச.க. ஆட்சியைப் பிடித்தும், எதிரணியான மம்தா கட்சியைக் கைப்பற்றும் முயற்சிகள் தொடர்கின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட எண்பது சட்டப்பேரவை உறுப்பினர்களில், மம்தாவோடு மாறுபட்ட அறுபது எண்ணிக்கையினரைத் தனித்து ஏற்றுள்ளார் பேரவைத் தலைவர்.

1952இல் அன்றைய சென்னை மாமாநிலத் தேர்தலில் தோல்வி கண்ட காங்கிரசார் ஆட்சி அமைக்க, எதிர்த்துப் போட்டியிட்ட இரு கட்சியினரைத் தங்கள் பக்கம் முழுமையாக இழுத்துக்கொண்டதில் தொடங்கி, இன்று வரை இத்தகைய முயற்சிகள் பல மாநிலங்களிலும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

ஆனால், இன்று பாச.க.வின் நோக்கமும் விருப்பும் வேறு திக்கில் சென்றுகொண்டிருக்கிறது.

அரசமைப்புச் சட்டத்தை முழுமையாகத் திருத்துவதையே நோக்கமாகக் கொண்டு 2024 தேர்தலில் போட்டியிட்ட பா.ச.க. தனிப்பெரும்பான்மைகூடப் பெறவில்லை. இருப்பினும், கூட்டணிக் கட்சிகளின் துணையுடன் ஒன்றிய அரசைத் தன்வயப்படுத்திக்கொண்டது. எதிர்பார்த்த மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை அவர்களுக்கு இப்போதைக்குக் கிடைக்கவில்லை.

அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னரே இதனை அடையும் நோக்கிலேயே பா.ச.க.வினர் பல கட்சிகளைப் பிளவுபடுத்தித் தங்கள் கட்டுக்குள் கொண்டு வரும் எண்ணத்தைச் செயல்படுத்திவருகின்றனர்.

பேரவைத் தலைவர்கள் துணை

மக்களவை, மாநிலங்களவை, சட்டப்பேரவைகள் போன்றவற்றின் தலைவர்களது துணையுடன் பிரிப்பு, இணைப்பு முயற்சிகளும் ஆங்காங்கு நடந்து வருகின்றன. குறிப்பாக மாநிலக் கட்சிகள் இதனால் சிக்கல்களை எதிர்நோக்குகின்றன.

மராட்டியத்தில் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரசு இரண்டாகப் பிளவுபட்டது. அதேபோன்று, உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனையும் பிரிவைக் கண்டது.

இரண்டு கட்சிகளிலுமிருந்த தேர்ந்தெடுக்கப்பட்ட பேரவை உறுப்பினர்களது எண்ணிக்கையினை வைத்து உண்மையான கட்சி எது என்பது தேர்தல் ஆணையத்தால் முடிவு செய்யப்பட்டது.

அரசமைப்பில் கட்சித் தாவலுக்கு இடமில்லை

கட்சியில் பிளவு அல்லது கட்சிகளின் இணைவு என்பது இரண்டு நிலைகளில் ஏற்கப்படுகின்றன அல்லது ஒப்புதல் பெறுகின்றன. முதலாவது, கட்சியில் ஏற்படும் பிளவாகும். ஒரு கட்சி தொடர்பான பொறுப்பாளர்கள், பொதுக் குழு உறுப்பினர்கள், அந்தக் கட்சியின் அமைப்பு விதிகள் ஆகிய விவரங்கள் தேர்தல் ஆணையத்திடம் முறையாக வழங்கப்பட்டிருக்கின்றன. இந்த விவரங்களின் அடிப்படையில், பொதுக்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் கொண்டு மட்டுமே எந்தக் கட்சி உண்மையானது என்பதைத் தேர்தல் ஆணையம் முடிவு செய்யவேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுடைய எண்ணிக்கையை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டு முடிவு செய்யக்கூடிய உரிமையோ கடமையோ பொறுப்போ தேர்தல் ஆணையத்துக்கு எப்போதும் வழங்கப்படவில்லை.

எடுக்கின்ற முடிவு எதுவாக இருந்தாலும், எதிர்த்து வழக்கு மன்றத்தை நாட முடியும். உண்மையான கட்சி எது என்பது இறுதியான பின்னர் அதனைத்தான் நாடாளுமன்ற, சட்டப்பேரவையில் உள்ள உறுப்பினர்கள் ஏற்றாகவேண்டும்.

ஆனால், இந்த முறைமையை ஏற்றுக்கொள்ளாமல் தன்விருப்பில் தேர்தல் ஆணையம் முடிவுகளைச் செய்து வருகிறது.

தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பெரிதும் நம்பியே தன்னுடைய முடிவுகளை இதுவரை தேர்தல் ஆணையம் வழங்கி வந்திருக்கிறது. இதோடு தொடர்பில்லாத சிலவற்றை அது சேர்த்துக்கொள்வதும் உண்டு.

பேரவையில் இணைப்புத் தனித்து ஏற்பட இயலாது

இரண்டாவது, நாடாளுமன்றம் அல்லது சட்டப்பேரவைகளில் ஏற்படும் பிளவு அல்லது இணைவு தொடர்பானதாகும். அரசமைப்புச் சட்டத்தின் பத்தாவது இணைப்பு தெளிவான சில வரையறைகளை வகுத்துக் கொடுத்திருக்கிறது. அரசமைப்புச் சட்டத்தில் கட்சியில் ஏற்படும் பிளவு குறித்த எத்தகைய குறிப்பும் காணப்படவில்லை. ஒரு கட்சி தன்னுடைய அமைப்பு முறைமைகளின் அடிப்படையில் இன்னொரு கட்சியோடு இணைவது என்று முடிவெடுப்பதை மட்டுமே அரசமைப்புச் சட்டம் ஒப்புக்கொள்கிறது. அப்படி இணைப்பு ஏற்படும்பொழுது, அந்த இணைப்பைப் பேரவையில் உள்ள மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் ஏற்கவேண்டும். இல்லையென்றால் அந்த இணைப்பு நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவையைப் பொறுத்து இணைப்பாகக் கருதப்படாது.

அவைக்கு வெளியே இணைப்பு ஏற்பட்டாலும், பேரவைக்குள் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் ஒப்புதல் தந்தாகவேண்டும். அப்படித் தந்தால் மட்டுமே இணைப்பு என்று அரசமைப்புச் சட்டம் வகுத்திருக்கிறது.

கட்சியில் பிளவு என்கின்ற ஒரு நிலையைப் பற்றி அரசமைப்புச் சட்டத்தின் பத்தாவது இணைப்பு எந்த வகையிலும் குறிப்பிட்டுக் கூறவில்லை.

ஒரு முதன்மைக் கட்சி முறைப்படி இணைப்பினை மேற்கொள்ளாவிட்டால், பேரவையில் உள்ள கட்சி உறுப்பினர்கள் மூன்றில் இரண்டு பகுதியினர், பேரவையில் உள்ள மற்றொரு கட்சியோடு இணைந்தாலும்கூட அது கட்சி மாறுதலாகவே கருதப்படும்.

மறைக்கப்படும் விதிகள் மாற்றப்படும் முடிவுகள்

ஆனால், இன்று இந்த விதி முழுமையாக மறைக்கப்பட்டு பேரவையில் இருக்கின்ற உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் கட்சி மாறி, இன்னொரு கட்சியோடு இணைந்தால், அது ஏற்றுக்கொள்ளத் தக்கதாக அமையும் என்னும் கருத்துத் தவறாக நிலவிவருகிறது.

இதனைப் பேரவைத் தலைவர்களும் ஏற்றுக்கொண்டு வருகின்றனர். மாநிலங்களவையில் ஆம் ஆத்மி கட்சியின் பத்து உறுப்பினர்களில் ஏழு எண்ணிக்கை கொண்டோர் பா.ச.க.வில் இணைந்தபோது துணைக் குடியரசுத் தலைவரான மாநிலங்களவைத் தலைவர் ஏற்றுக்கொண்டார். ஆம் ஆத்மிக் கட்சியில் பிளவு ஏற்படாததால், இது அரசமைப்புச் சட்டத்தின் பத்தாவது இணைப்புக்கு முற்றிலும் முரணானதாகும்.

மேற்கு வங்கச் சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு மம்தா கட்சியின 27 நாடாளுமன்ற உறுப்பினர்களில் இருபது எண்ணிக்கையினர் பா.ச.க. பக்கம் சாயப்போவதாக மக்களவைத் தலைவருக்கு மடல் எழுதியுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஊடகங்கள் அனைத்தும் மூன்றில் இரண்டு பங்குக்கு மேல் இருப்பதால் இது ஏற்புடையது என்றே கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றன. ஆனால், மம்தாவின் திரிணமூல் கட்சி அமைப்பில் எத்தகைய பிளவும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. அப்படி ஏற்பட்டாலும், தேர்தல் ஆணையத்தின் தீர்வினைப் பெறுகின்ற வரை அது பிளவாகவும் அமையாது.

தற்போது மராட்டியத்தில் உத்தவ் தாக்கரே தலைமையில் உள்ள கட்சியின் மூன்றில் இரண்டு பங்கினர் நாடாளுமன்றத்தில் பா.ச.க.வில் இணையப் விரும்புவதாகச் செய்திகள் பரவுகின்றன.

பகைவர்களிடம் பயன் பெறும் நோக்கம்

யாரை எதிர்த்துத் தேர்தலில் போட்டியிட்டார்களோ, யாரைப் பகையாகக் கொண்டு குற்றச்சாட்டுகளைச் சுமத்தினார்களோ அவர்களிடமே வெற்றி பெற்ற பின்னர் போய்ச் சேர்வது என்பது மக்களது வாக்குகளைச் சிறுமைப்படுத்துவதில் சென்று முடிகிறது.

இத்தகைய தாவல்கள் அனைத்தும் ஆளும் கட்சிகளை நோக்கியே செல்கின்றன என்பது வேடிக்கைதான்.

ஆளும் கட்சியின் செல்வாக்கு, அதன் வழியாகக் கிடைக்கின்ற செல்வ வளம், பொறுப்புகள், குற்றச்சாட்டுகளிலிருந்து விடுபடல், ஒன்றிய அரசு சார்ந்த புலனாய்வு அமைப்புகளின் பிடியிலிருந்து தப்பித்தல் போன்ற எத்தனையோ எதிர்பார்ப்புகளுக்காக இத்தகைய கட்சி மாறுதல்கள் இப்பொழுது இயல்பாகவே நடக்கத் தொடங்கிவிட்டன.

அதுவும் ஆளுங்கட்சியில் பல்லாண்டுகள் இருந்து, அனைத்துப் பயன்களையும் முழுமையாகப் பெற்றுக்கொண்ட பின்னர், ஒன்றிரண்டு தோல்விகளைக்கூடப் பொறுத்துக்கொள்ள முடியாமல் மீண்டும் ஆளுங்கட்சியோடு இணைந்து செயல்படுவதன் வழியாக மேன்மை பெறவேண்டும் என்ற நோக்கமே பொதுவாழ்வுப் பணிகளுக்கு எதிரான அறைகூவலாகும்.

கொள்கையில்லாத் தலைமை

வாக்குகள் பெறுவதையும், அந்த வாக்குகளினால் பெறுகின்ற ஆட்சியுரிமையும், அதன் வழியாகத் தேடும் வளமையும் வாய்ப்புகளும் மட்டுமே அரசியல் என்ற அளவிலேயே கட்சி அணியினர் பெரிதும் உருவாக்கப்படுகின்றனர்.

கொள்கைகள், கோட்பாடுகள், அவற்றில் நம்பிக்கை, மக்கள் நலன் போன்ற நோக்கங்கள் எல்லாம் பின்னுக்குத் தள்ளப்படுகின்றன.

ஒரு வகையில், கட்சித் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களைக்கூட முழுமையான பிடிப்போடு உருவாக்குகின்ற எண்ணம் இருக்கவில்லை என்றே தோன்றுகிறது.

வாக்களிக்கும் மக்களுக்கு விழிப்புணர்வு தந்து, அவர்களைத் தெளிவுறச் செய்வதில் எப்படி அரசியல் கட்சிகள் தவறியிருக்கின்றனவோ, அது போன்று கட்சி அணிகளையும் தலைமையையும் உருவாக்குவதில்கூட பெரும் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாகவே தெரிகிறது.

இடது நிலையில் இருக்கின்ற ஒரு சிலரைத் தவிர மற்ற பெரும்பாலான கட்சிகளுக்கும் இது பொருந்தும் என்று கூறலாம்.

சனாதனிகளிடம் நாடு செல்லக்கூடாது

இதுதான் பா.ச.க. என்ற சனாதன அமைப்பின் வலிமையாக மாறிவிடுகிறது. அண்மைப் போக்குகளைப் பார்க்கும்போது சனாதனிகள் விரைவில் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்றுவிடுவார்கள் என்றே தோன்றுகிறது.

ஒன்றிய அரசைத் தனது பிடிக்குள் வைத்துக்கொண்டு, அரசமைப்பு உருவாக்கிய நீதிமன்றங்கள், தேர்தல் ஆணையம் போன்ற அமைப்புகளையும், ஒன்றிய அரசு சார்ந்த புலனாய்வு போன்ற நிறுவனங்களையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்ட சனாதன பா.ச.க., நாடாளுமன்றத்தில் மூன்றில் இரு பங்கு வலிமை பெற்றுவிட்டால், அரசமைப்பு வழங்கியுள்ள வாக்குரிமை, தனி மனித உரிமைகள் உள்ளிட்டு அனைத்தும் முற்றாகப் பறிபோகும் நிலை ஏற்படலாம்.

மக்கள் மட்டுமல்லாது, அரசியல் அணியினரும் இதை முழுமையாகப் புரிந்துகொள்ளாவிட்டால், சனாதனிகளிடம் மீண்டும் நாடு வீழ்ந்துவிடலாம் என்பதை மனதில் கொள்ளவேண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button