
முன்னாள் பா.ஜ.க. மாநிலத் தலைவரும், முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியுமான அண்ணாமலை, பாஜகவில் இருந்து விலகிவிட்டார். தனிக்கட்சி தொடங்கப் போகிறார். இளம் ரத்தங்களை ஈர்க்கப் போகிறார். இப்படி எல்லாம் அண்ணாமலையின் முன்னாள், இன்னாள் ரசிகர்கள் அளந்து விடுகிறார்கள்.
ஜூன்-5 ஆம் தேதி பதவி விலகும் முன்பு, டெல்லி சென்ற அண்ணாமலை, அகில இந்திய பாஜக தலைவர் நிதின் நபின், அமைப்புச் செயலாளர் பி.எல்.சந்தோஷ், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரை சந்தித்துப் பேசினார். கட்சியில் இருந்து விலகுவது குறித்தும் அதற்கான காரணங்கள் குறித்தும் பேசியதாகத் தெரிவித்தார்.

பின்னர் அண்ணாமலை வெளியிட்ட பதவி விலகல் அறிவிப்பில், “பாஜகவில் இணைந்து கடந்த 6 ஆண்டு காலமாக தமிழக மக்களுக்காகப் பணியாற்றியதைப் பாக்கியமாகக் கருதுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அண்ணாமலையின் விலகல் குறித்து தலையங்கம் தீட்டியுள்ள துக்ளக் பத்திரிகை, “பிளவல்ல, பிரிவுதான்” என்கிறது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா அளவிலும் தனிக்கட்சி கண்ட தலைவர்களைப் பட்டியலிட்டு, “அவர்கள் கட்சிகளில் இருந்து விலக அல்லது நீக்கப்பட பரஸ்பர விரோதமும் துவேஷமும் ஏற்பட்டது.” என்கிறது துக்ளக்.
“இதற்கெல்லாம் நேர்மாறாக, தமிழக பாஜகவின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகித்த அண்ணாமலை, அதிலிருந்து சுமுகமாக விலகியது, உயர் பண்புகளுக்கு ஏங்கும் நம் சரித்திரத்தில் ஒரே உதாரணம் என்பது மறுக்க முடியாத உண்மை” என்று கொண்டாடுகிறது துக்ளக்.
ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குடிமைப் பணிகள் தேர்வில் 2011 ஆம் ஆண்டு தேர்ச்சி பெற்று, கர்நாடக மாநில காவல்துறை அதிகாரியாக பணியில் சேர்ந்தார். 2019 ஆம் ஆண்டு காவல் துணை ஆணையராக இருந்த அண்ணாமலை, விருப்ப ஓய்வில் பணியிலிருந்து விலகினார்.
ஐ.பி.எஸ். பதவியில் இருந்து விலகி, விவசாயம் செய்கிறார், ஆடு வளர்க்கிறார் என்றெல்லாம் தமிழ்நாட்டின் அரசியல் களத்திற்கு கொண்டுவரப்பட்டார். ஊடகங்கள் ஊதிப் பெருக்கின. நடிகர் ரஜினிகாந்த் தொடங்க இருந்த அரசியல் கட்சியின் தலைவராக்கப்பட இருக்கிறார் என்ற பேச்சு எழுந்தது. கட்சி தொடங்கும் திட்டத்தை நடிகர் ரஜினிகாந்த் கைகழுவியதால், 2020ஆம் ஆண்டு பாஜகவில் சேர்ந்தார். 2021 ஆம் ஆண்டு பாஜகவின் தமிழகத் தலைவராக அறிவிக்கப்பட்டார்.
ஆர்எஸ்எஸ் வார்ப்பான அண்ணாமலை, பாஜகவின் அரசியலை புதிய வழியில் எடுத்துச் சென்றார். ஆளும்கட்சியான திமுகவுக்கு எதிராக களமாடக்கூடியது அண்ணாமலையின் பாஜகதான் என்ற நிலையை உருவாக்க முயன்றார்.
‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் பாஜக மாநிலத் தலைவராக அண்ணாமலை மேற்கொண்ட மாநில அளவிலான நடைபயணம் மற்றும் அரசியல் பரப்புரையாகும். இந்துத்துவ அரசியலை மக்களிடம் எடுத்துச் சென்றார். தமிழ்ப் பேச்சு, தமிழ் உடை, தமிழ் பண்பாட்டின் மீதான ஈடுபாடு என்பதுடன் இந்துத்துவ தேசியத்தையும் ஆர்எஸ்எஸ் அரசியலையும் இணைத்து எடுத்துச் சென்றார். அண்ணாமலையின் முயற்சிகள் பெரும் வெற்றியைத் தராவிட்டாலும், பாஜகவில் உற்சாகத்தையும் இந்துவாக பெருமை கொள்ளும் உணர்வும் பொங்கி வழிந்தது. 3 விழுக்காட்டிற்குள் இருந்த பாஜகவின் வாக்கு சதவீதம், 11.8 விழுக்காட்டிற்கு உயர்ந்தது.
தஞ்சை மாவட்டம் மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப் பள்ளி மாணவி லாவண்யா தற்கொலைக்கு கட்டாய மதமாற்றமே காரணம் என அண்ணாமலை புயலைக் கிளப்பினார். ஆனால் இந்த வழக்கை விசாரித்த ஒன்றிய அரசின் மத்திய புலனாய்வு அமைப்பு (CBI), கட்டாய மதமாற்றத்திற்கான எந்த ஆதாரமும் இல்லை என உச்சநீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்துத்துவ அரசியலைப் பரப்புவதற்காக இப்படி எந்தப் பொய்யைச் சொல்லவும், சமூகத்துக்கு பாதகம் இழைக்கவும் அண்ணாமலை துணிந்தார்.
இந்தக் காலத்தில் அண்ணாமலை தன்னுடைய இமேஜை உயர்த்துவதற்காக டிஜிட்டல் ஊடகப் பரப்புரையை தீவிரப்படுத்தினார். இதற்காக தனக்கென ஒரு குழுவை உருவாக்கினார். வார் ரூம் அமைத்தார். இவற்றின் மூலம் இந்துத்துவ அரசியலை மட்டுமல்ல, தன்னுடைய செல்வாக்கையும் உயர்த்திக் கொண்டார்.
அண்ணாமலையின் முயற்சிகளும் நோக்கங்களும் பாஜக-வின், பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவின் நோக்கங்களுக்கும் எதிரானதோ முரண்பட்டதோ அல்ல. இந்தியா இந்துத்துவ தேசியமாக, இந்துராஷ்டிராவாக அறிவிக்கப்பட வேண்டும் என்ற ஒரே இலக்கைக் கொண்டவர்களே. இன்றைய அரசியல் சூழல்களுக்கு இயைந்து எடுத்துச் செல்லப்பட வேண்டும் என பாஜக தலைமை கடிவாளமிடுகிறது. அப்படியெல்லாம் இயைந்து செல்ல வேண்டாம் என நினைக்கிறார் அண்ணாமலை. இவைதான் முரண்பாடு.
இதனால்தான் துக்ளக் கொண்டாடுகிறது. இந்துத்துவ பாசிசக் கொள்கையை எடுத்துச் செல்வதில் உறுதியுடன் இருக்கும் அனுமன்தான் அண்ணாமலை. அவரை விட்டுவிட வேண்டாம் என உயர்த்திப் பிடிக்கிறது.
“ஆன்மீக, தேசிய நீரோட்டத்தில் இருந்து விலகியுள்ள தமிழகத்தில், 60 ஆண்டுகளுக்குப் பிறகு தலையெடுத்திருக்கும் ஒரே சீரியசான தேசிய ஆன்மீக அரசியல்வாதி அண்ணாமலைதான். திமுக, அதிமுக, தவெக மூன்றுக்கும் மாற்றாக அவர் உருவானால் அது தமிழகத்துக்கு மட்டுமல்ல, பாரத நாட்டுக்கும் நல்லது. இறுதியாக, நம் கருத்தில் அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகியது கொள்கைப் பிளவு அல்ல. அமைப்பிலிருந்து பிரிவு மட்டுமே” என்று அண்ணாமலையின் அரசியலை மட்டுமல்ல, எதற்காக கட்சி தொடங்குகிறார் என்பதைத் தெளிவாக எடுத்துச் சொல்கிறது துக்ளக்.
“பாரத நாட்டிற்குள், இந்திய நாட்டிற்குள் முதன்மையான மாநிலமாக தமிழகத்தைக் கொண்டுவருது மட்டும்தான் குறிக்கோள்” என்று தனிக்கட்சி அறிவிப்பு குறித்து சமூக ஊடகத்தில் பேசும்போது கு.அண்ணாமலையும் இதையேதான் கூறுகிறார்.
மேலும், “கருத்தியல் (ஐடியாலஜி) தன்னைத்தானே மாற்றிக் கொள்ளாவிட்டால், அடுத்த தலைமுறைக்குத் தேவையான வசதியை செய்து கொடுக்கவில்லை என்றால், எந்தக் கருத்தியலும் அழிந்துவிடும்” என்று அண்ணாமலை கூறுகிறார். அதாவது, இந்துத்துவ பாசிச அரசியலை, கருத்தியலை இன்றைய இளம் தலைமுறைக்கு ஏற்ப மாற்ற வேண்டும் என்று அண்ணாமலை விரும்புகிறார். இதைத்தான் அவர் “மாறுவோம், மாற்றுவோம்” என்று கூறுகிறார்.
அதாவது அண்ணாமலை ஏற்கனவே கூறியதுபோல, “தமிழகத்தின், தமிழர் நலத்தின் அடையாளத்துடன் பாஜக இயங்க வேண்டும்” என்பதுதான். அண்ணாமலை தொடங்கும் கட்சி, தமிழக அடையாளத்துடன் இயங்கும் பாஜகவாக இருக்கும். வள்ளுவருக்கு காவிச் சாயம் பூசப்பட்டது போன்று இருக்கும்.
அண்ணாமலை சொல்லும் மாற்றம் என்பது தமிழ்நாட்டு மக்கள் விரும்பும் வகையில் இந்துத்துவ அரசியலை மாற்றுவோம். இந்துத்துவ அரசியலை எடுத்துச் செல்வதற்கு ஏற்ப மாறுவோம் என்பதுதான். அவர் சொல்கின்ற மாறுவோம்; மாற்றுவோம் என்பது மக்களுக்கானதோ, இந்த சமூகத்தின் நலனுக்கானதோ அல்ல. இந்துத்துவ பாசிச அரசியலுக்கானது. இந்துராஷ்டிராவை கொண்டுவருவதற்கானது.