
சட்டப்பேரவைக்கூட்டம் துவங்கும்போதே “பேசுங்கள் முதல்வரே” என்று அட்டை அணிந்தபடி திமுக உறுப்பினர்கள் அவைக்குள் வந்தனர்.
புதிய முதல்வர், முந்தைய முதலமைச்சர்களைப் போலல்லாது, சட்டப் பேரவைக்கூட்டத்தை இப்போது தான் முதல்தடவையாகப் பார்க்கிறார். சேர்ந்து இயங்க இன்னும் சில காலம் தேவைப்படலாம்.
கூட்ட நிறைவில் அவர் பேசியபோது தனது அரசின் நிலைப்பாடுகளை வெளியிட்டார். “மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி” என்ற பாதையில் தன் அரசு பயணிக்கும் என்றார். “தற்போதைய மத்திய அரசு சார்ந்த கட்சியின் அரசியலில் கொள்கை அளவில் நேர் எதிராக நிற்கிறவர்கள்தான் நாம்” என்றதோடு, “அதே நேரத்தில் எதற்கெடுத்தாலும் கண்ணை மூடிக்கொண்டு மத்திய அரசுடன் மோதல் போக்கை விரும்புபவர்கள் நாம் அல்ல” என்றும் சொன்னார். எதில் இணக்கம் காட்டப் போகிறார்கள் என்று இனிமேல் பார்க்க வேண்டும்.
“தமிழ்நாட்டின் வளர்ச்சி மட்டும்தான் முக்கியம். மாநில உரிமைகளைக் கொஞ்சமும் விட்டுக் கொடுக்க மாட்டோம். அதில் ரொம்ப தெளிவாகவும், உறுதியாகவும் இருக்கிறோம். நம் மக்களுக்கோ, சிறுபான்மை சகோதரர்களுக்கோ, ஆதரவு இயக்கங்களுக்கோ எந்தவித சந்தேகமும் வேண்டாம். இன்னும் சொல்லப்போனால் நாம் மதச்சார்பின்மை மற்றும் சமூகநீதி அணி’ என்றார்.
தமிழ்த்தாய் வாழ்த்தை பொறுத்தவரையில் மத்திய அரசின் அறிவிக்கையில் திருத்தங்கள் மேற்கொள்ள கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
“நீட்” தேர்வைப் பொறுத்தவரை, கிராமப்புற மற்றும் பொருளாதார ரீதியாக பின் தங்கிய மாணவர்களுக்கு சமமான வாய்ப்பை வழங்குவதில்லை. மருத்துவ கல்வியில் சமூக நீதி, சமவாய்ப்பை நீட் தேர்வு பாதிக்கிறது என்பதை உணருகிறோம். எனவே மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் நடத்த வேண்டும்.
மத்திய அரசிடம் நீட்தேர்வில் இருந்து விலக்கு வழங்க வேண்டும் என்று அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
அண்ணா தலைமையிலான அரசு 1968-ல் இருமொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்தியது. தமிழ் ஆட்சி மொழி, தமிழ்மொழியை பாதுகாப்பது, மாணவர்களுக்கு ஆங்கிலத்தின் மூலம் உலகளவிலான வாய்ப்புகளை வழங்குவது, எந்த ஒரு மொழியையும் கட்டாயமாக திணிப்பதை தவிர்ப்பது, எதிர்ப்பது, நிலத்தின் மொழி மற்றும் பண்பாட்டு அடையாளத்தை பேணுவது என்பதை நம் த.வெ.க. ஆட்சி ஏற்றுக் கொண்டுள்ளது. எனவே தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சி மொழி மற்றும் இருமொழிக் கொள்கை என்பதில் மாற்றமே இல்லை.
என்று அவர் பேசியிருப்பது முந்தைய ஆட்சிகளின் நிலைப்பாடு தொடரும் என்பதற்கான அடையாளமாகும். இவற்றை செயல்படுத்தி, இந்த அரசு வெற்றி பெறவேண்டும்.
தனது கட்சியின் ஆட்சியில் ஊழல் இருக்காது; யாரையும் ஊழல் செய்யவிட மாட்டோம்; ஊழல் செய்தவர்களையும் விட மாட்டோம் என்றார். நல்லது. அதற்கு ஆதாரப்பூர்வமான நடவடிக்கைகள் தொடர வேண்டும்
விவசாயிகள் போராட்டத்தை எதிர்க்கட்சிகள் தூண்டிவிடுகின்றன என்றதும், மின்வெட்டுக்கு எதிர்க்கட்சிகளின் சதி வேலை காரணம் என்று தோன்றும் வகையிலும் அவர் பேசியது, உண்மை நிலவரத்தை அவர் உணரத் தவறுகிறாரா அல்லது எதிர்க்கட்சிகள் மீது பழி போட்டு தப்பிக்கும் உத்தி கை கொடுக்கும் என்று நம்புகிறாரா என்ற அய்யத்தை ஏற்படுத்துகிறது.
ஜனநாயகத்தில் மக்கள் நேரடியாக ஆட்சி செய்ய முடியாது. எனவே, தங்களின் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து சட்டப்பேரவைக்கு அனுப்புகிறார்கள். அந்த வகையில், சட்டப்பேரவை என்பது மக்களின் இறையாண்மையை பிரதிபலிக்கும் அமைப்பு. “பொறுப்புள்ள அரசு” சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு அல்ல; மக்களுக்குப் பதில் சொல்கிறது. மக்கள் அதனைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
கட்சி அரசியல் லாவணி செய்வது சுலபம். முதலமைச்சர் பதிலுரையின் ஒரு பகுதி முழுவதும் சென்ற அரசை, இன்றைய எதிர்க்கட்சியைத் தாக்கும் பிரச்சார உரை போல இருந்தது.
அதிலும் குறிப்பாக, “அப்பாவைக்காணோம்” என்றதும், தனது வலது கையால் காட்டிய உடல்மொழியும், ஆளும்கட்சியின் தொண்டர்களை உற்சாகப்படுத்தலாம். ஆனால் முதலமைச்சர் என்ற உயர்வான பொறுப்புக்கு உகந்ததாக இல்லை.
ஜனநாயகத்தில் யாரும் வெல்லலாம், தோற்கலாம். தோற்பது இழிவோ அல்லது தோற்றவர்கள் அவமதிக்கத்தக்கவர்களோ அல்ல. சமூகத்துக்கு வாழ்நாளெல்லாம் பெரும்பங்களிப்பைச் செய்தவர்கள் தோற்றிருக்கிறார்கள். அதே போல வெற்றி பெற்றவர்கள் குதித்து ஆனந்தமடைய இது குத்துச்சண்டையும் அல்ல.
ஆட்சிகள் மாறலாம்; எதிர்க்கட்சிகள் மாறலாம். ஆனால் ஜனநாயகத்தின் அடிப்படை விழுமியங்கள் மாறக்கூடாது. சட்டப்பேரவையில் வெற்றிக் களிப்பை விட பொறுப்புணர்வும், அரசியல் கிண்டலை விட அரசியல் நாகரிகமும் மேலோங்கும்போதுதான் மக்கள் எதிர்பார்த்த மாற்றம் உண்மையான மாற்றமாக அமையும்.