தமிழகம்

வானம்பாடிக் கவிஞர் புவியரசு காலமானார்!

அரசு மரியாதையுடன் கோவையில் இறுதி அஞ்சலி!!

கோவையின் இலக்கிய முகமாக விளங்கியவரும், இருமுறை சாகித்ய அகாதமி விருது பெற்றவருமான கவிஞர் புவியரசு (வயது 95) ஜுன் 30 அன்று வயது மூப்பு காரணமாக காலமானார்.

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்துடன் ஐம்பது ஆண்டுகாலம் பயணித்துள்ள கவிஞர் பெருமன்றத்தின் மாவட்டத் தலைமைக்குழு உறுப்பினராக வழிகாட்டி வந்தார். 2012 இல் கோவையில் நடைபெற்ற பெருமன்றத்தின் பொன்விழா மாநாட்டில் கவிஞர் புவியரசுவிற்கு தோழர் தா.பாண்டியன் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிச் சிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரியநாய்க்கன்பாளையம் சிவா நகர் இல்லத்தில் கவிஞர் புவியரசின் உடலுக்கு பல்வேறு அமைப்பினரும், இலக்கிய அன்பர்களும் மலரஞ்சலி செலுத்தினர். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டச் செயலாளர் சி.சிவசாமி, இஸ்கஃப் மாநிலப் பொதுச் செயலாளர் எஸ்.ராதாகிருஷ்ணன், கலை இலக்கியப் பெருமன்றம் சார்பாக ப.பா.ரமணி, கே.புருசோத்தமன், எல்.ஜான், பேராசிரியர் த.திலிப்குமார், ஆவணப்பட இயக்குநர் செல்வின், ஓவியர் ஞானகுமார் இலங்கை வடகிழக்கு மாகாண மேனாள் முதல்வர் வரதராஜபெருமாள் உட்பட ஏராளமான கலை இலக்கிய அன்பர்கள் திரண்டு அஞ்சலி செலுத்தினர்.

இலக்கிய அமைப்புகள், எழுத்தாளர்கள் சார்பில் மறைந்த கவிஞருக்கு தமிழ்நாடு அரசு அரசு மரியாதை அளிக்க தமிழ்நாடு முதல்வருக்குக் கோரிக்கை விடப்பட்டது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சி.சிவசாமி முன்முயற்சி எடுக்க, மாநிலச்செயலாளர் மு.வீரபாண்டியன், கவிஞர் புவியரசுவிற்கு அரசு மரியாதை வழங்கப்பட மாநில அரசுக்கு கடிதம் அனுப்பினார். அரசு மரியாதைக்கான ஆணை முதலமைச்சரால் பிறப்பிக்கப்பட்டது.

ஜுலை 1 காலை ஜோதிபுரம் நித்யானந்தா மின்மயானத்திற்கு கவிஞரின் பூதவுடல் கொண்டு செல்லப்பட்டது.

அங்கு நடைபெற்ற புகழஞ்சலி நிகழ்வில் கவிஞரின் வானம்பாடி சகாவான பத்மஸ்ரீ சிற்பி பாலசுப்ரமணியம், உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பி.கே.ராஜகோபால், தமுஎகச மாவட்டத் தலைவர் தி.மணி, கவிஞர் பெ.சிதம்பரநாதன், மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் சுனில் ஆனந்த், கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர் அஞ்சலியுரை நிகழ்த்தினர். கவிஞர் நெருங்கிய நண்பர் விஜயா மு.வேலாயுதம் மலரஞ்சலி செலுத்தினார். கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாவட்டச் செயலாளர் ப.பா.ரமணி நிகழ்வை ஒருங்கிணைத்தார்.

அடுத்து தமிழ்நாடு அரசின் சார்பில் மாவட்ட வருவாய் அலுவலர் மதுராந்தகி, வட்டாச்சியர் ஜெயகுமார், காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியபின், காவல்துறை காவலர்களின் துப்பாக்கிகள் 21 குண்டுகள் முழங்க, இரங்கல் இசை ஒலிக்க அரசு மரியாதை கவிஞருக்கு வழங்கப்பட்டது.

கவிஞர் விரும்பியபடி, அவரது குடும்பத்தினர் எவ்வித சடங்குகளையும் தவிர்த்து எரிமயானத்திற்கு அனுப்பினர். கவிஞரின் பெயர்த்தி மருத்துவர் ஜனனி கவிஞருக்குக் கொள்ளி வைக்க பன்முக ஆளுமை புவியரசு இயற்கையுடன் கலந்தார்.

மனிதநேயம், சமத்துவ நோக்கு, உலக சகோதரத்துவம், பெண்ணுரிமை, இயற்கையைப் பேணுதல், மதநல்லிணக்கம் அதிகாரத்திற்கு எதிரான குரல் என அவரது கவிதைகள், நாடகங்கள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் என 130 படைப்புகள் மற்றும் உரைகள் வழியாக கவிஞர் புவியரசு சாகாவரம் பெற்று என்றும் வாழ்வார் என்பது உறுதி.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button