தேங்கிக் கிடக்கும் தொழிலாளர் பிரச்சினைகள் மீது புதிய அரசு தீர்வு காண வேண்டும்
தமிழ்நாடு ஏஐடியுசி பொதுக்குழு வலியுறுத்தல்

தமிழ்நாடு ஏஐடியுசி பொதுக்குழு கூட்டம் – 2026 ஜூன் 7, 8 தேதிகளில் சென்னை தாரக் இல்லத்தில் எஸ். காசி விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்றது. தேசிய செயலாளர் டி.எம்.மூர்த்தி அகில இந்திய ஏஐடியுசி பொதுக்குழு முடிவுகளை விளக்கி பேசினார்.
பொதுச் செயலாளர் எம்.ராதாகிருஷ்ணன் சங்கங்களின் பேரவை மாவட்ட மாநில மாநாடுகள் நடத்துவது தொடர்பான அமைப்பு நிலை விவரங்களை முன்வைத்து பேசினார். விவாதத்தில் பங்கேற்று பொதுக்குழு உறுப்பினர்கள் பேசினர். முன்னதாக செயற்குழு கூட்டம் ஜூன் 6 ஆம் தேதியும், நிர்வாகக் குழு கூட்டம் ஜூன் 7 ஆம் தேதியும் நடைபெற்றது.
இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
1. தமிழ்நாட்டில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசுக்கு, 106 ஆண்டுகள் போராட்டப் பாரம்பரியமுள்ள, இந்தியாவின் முதல் மத்திய தொழிற்சங்க அமைப்பான ஏஐடியுசி சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம். புதிய திறனோடு, தேங்கிக் கிடக்கும் தொழிலாளர் பிரச்சினைகளின் மீது கவனம் செலுத்தி தீர்வு காண்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு, தமிழ்நாட்டுத் தொழிலாளர் நலன்களைப் புதிய அரசு பாதுகாக்கும் என்ற நம்பிக்கையோடு பின்வரும் முறையீடுகளை தமிழ்நாடு ஏஐடியூசி முன்வைக்கிறது.
பஞ்சாப் மாநில அரசு அண்மையில் அரசு மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள், அயலகப் பணி (அவுட்சோர்ஸிங்) தொழிலாளர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 2 ஆண்டுகளில் 480 நாட்கள் பணிபுரிந்திருந்தால் அவர் தானாகவே பணி நிரந்தரம் பெற்றவராகிறார் என்ற விதி, “தமிழ்நாடு தொழிலக (நிரந்தரத் தகுதியை உறுதிப் படுத்துதல்) சட்டம் இருந்தும் செயல்படுத்தப்படாமல் இருக்கிறது. தற்போதைய ஆளும் கட்சியின் தேர்தல் அறிக்கையில், பல ஆண்டுகளாக ஒப்பந்தம் மற்றும் அவுட்சோர்சிங் முறைகளில் அரசு மற்றும் அரசு சார்ந்த துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் நிரந்தரம் செய்யப்படும் என்று கூறியிருப்பதையும் அரசின் கவனத்துக்குக் கொண்டு வருகிறோம்.
கர்நாடக மாநில அரசு, குறைந்தபட்ச ஊதிய விகிதத்தை சட்ட நியதிகளின்படியும், உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையிலும் நிர்ணயம் செய்து, உயர்நுட்பப் பிரிவினருக்கு (Highly Skilled) ரூ. 31,114, திறன்நுட்பப் பிரிவினருக்கு (Skilled) ரூ.28,285, அரைநுட்பப் பிரிவினருக்கு (Semi Skilled) ரூ. 25,714, திறன்சாராப் பிரிவினருக்கு (UNskilled) ரூ.23,376 என்றும் இவற்றுடன் அகவிலைப்படியும் பொருந்தும் என்றும் அறிவித்துள்ளது. அதே சட்ட நியதிகள் தமிழ்நாட்டுக்கும் பொருந்துபவையாகும்.
பக்கத்திலுள்ள, கேரள மாநில அரசு, ஒன்றிய அரசு அறிவித்துள்ள, தொழிலாளர் உரிமைகளைப் பறிக்கிற நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை தமது மாநிலத்தில் நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று அறிவித்துள்ளது.
புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு, மேற்குறிப்பிட்ட மூன்று மாநிலங்கள் செயல்படுத்தியுள்ள இந்த மூன்று கொள்கை முடிவுகளையும் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறது.
தொழிலாளர் பிரச்சினைகளில் தீர்வு காண, மாநில அரசின் மிக உயர்ந்த முத்தரப்பு அமைப்பான மாநில தொழிலாளர் ஆலோசனை வாரியம் (SLAB) உள்ளிட்ட, பல சட்டப்படியான முத்தரப்பு அமைப்புகள் சரியாகக் கூட்டப்படாமலும், அவற்றில் எடுத்த முடிவுகள் அமலாக்கப்படாமலும் உள்ளன. இந்த சட்டவிரோதமான நடைமுறை அகற்றப்பட்டு உடனடியாக முத்தரப்பு அமைப்புகளுக்கு தொழிலாளர் தரப்பு, முதலாளி தரப்பு உறுப்பினர்களை நியமித்து, சட்டபூர்வ இடைவெளிகளில் கூட்டவும், முடிவுகளை செயல்படுத்தவும் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறது.
தமிழ்நாடு அரசின் தொழிலாளர் துறையின் செயல்பாடுகள் தொழிலாளர்களின் நலன்களை பாதுகாப்பதாக அமையவில்லை என்பதை ஆழ்ந்த கவலையோடு சுட்டிக்காட்டுகிறோம். அவற்றைச் சீர்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறது.
கட்டுமானம், அமைப்பு சாரா ஓட்டுநர் நல வாரியங்களில், அதிக தொகை சேர்ந்திருந்தும், தொழிலாளர்களுக்கான நிதி பலன்களை அதிகரிக்கவில்லை. அதேபோல வீட்டுப் பணியாளர், தெருவோர வியாபாரி உள்ளிட்ட உடல் உழைப்பு தொழிலாளர் நலவாரியங்கள் இயங்கும் முறைகளில் குறைகளைக் களையக் கோரி பல போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. அனைத்து நல வாரியங்களுக்கான உறுப்பினர்கள் நியமித்து, வாரிய கூட்டங்களை முறையாக குறிப்பிட்ட கால இடைவெளியில் நடத்திட உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறது.
மாண்புமிகு தொழிலாளர் துறை அமைச்சர் பொறுப்பேற்றதும், நேரம் ஒதுக்கி தொழிற்சங்கங்களை அழைத்துப் பேசி குறைகளை அறியும் மரபு நீண்ட காலமாகத் தமிழ்நாட்டில் பின்பற்றப்பட்டு வருகிறது. புதிய அரசு பொறுப்பேற்று ஒரு மாதம் கடந்து விட்ட நிலையில் மேலும் தாமதிக்காமல் தொழிற்சங்களை அழைத்துப் பேசுமாறு தமிழ்நாடு ஏஐடியூசி கேட்டுக்கொள்கிறது.
2. டாஸ்மாக் நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களையும் உடனடியாகப் பணிநிரந்தரம் செய்து, அரசு ஊழியர்களுக்கு இணையான காலமுறை ஊதியம், ஓய்வூதியம் மற்றும் அனைத்து சமூகப் பாதுகாப்பு நலன்களையும் வழங்க வேண்டும். மேலும், பல ஆண்டுகளாக மாற்றமின்றி தொடரும் பணியாளர்–கடை விகிதாச்சாரம் காரணமாக பணியாளர்கள் கடுமையான பணிச்சுமைக்கு ஆளாகி வருகின்றனர். எனவே, தற்போதைய தேவைக்கேற்ப கூடுதல் பணியிடங்களை உருவாக்கி, காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதுடன் புதிய பணியாளர்களை உடனடியாக நியமிக்க வேண்டும். தமிழகம் முழுவதும் இயங்கி வரும் மதுக்கூடங்களில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான பார் பணியாளர்களின் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், அவர்களின் பணிநிலையை முறைப்படுத்தி உரிய ஊதியம், பணிப் பாதுகாப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பு வசதிகளை உறுதி செய்ய வேண்டும். டாஸ்மாக் பணியாளர்களுக்கு அநியாயமான பொருளாதாரச் சுமைகளை ஏற்படுத்தும் ‘பை-பேக்’ உள்ளிட்ட நடைமுறைகள் கைவிடப்பட வேண்டும். மதுக்கூடங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய நிர்வாக நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்பட வேண்டும். தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு, வாழ்வாதாரம் மற்றும் சட்டப்பூர்வ உரிமைகளை பாதிக்கும் அனைத்து விதமான நடவடிக்கைகளும் கைவிடப்பட வேண்டும்.
3. புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெகா அரசு தேங்கிக்கிடக்கும் தொழிலாளர் பிரச்சினைகளின் மீது கவனம் செலுத்தி தீர்வு காண்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு, தமிழ்நாட்டுத் தொழிலாளர் நலன்களைப் பாதுகாத்திட வேண்டும்.
4. அரசு நிர்ணயம் செய்த குறைந்தபட்ச ஊதியம் வழங்கிட வேண்டும். குறிப்பாக தூய்மை பணியாளர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கு தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு துறை நிர்ணயம் செய்த குறைந்தபட்ச ஊதியத்தை விட, தன்னிச்சையாக குறைத்து மாற்றி அமைக்கப்பட்டுள்ளதை கைவிடவும் அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியம் மற்றும் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப நியாயமான அகவிலைப்படி உயர்வு வழங்கிட வேண்டும்.
5. உள்ளாட்சி பணியாளர்களுக்கு அரசாணை 62 ன்படி நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும். நீண்ட காலம் பணிபுரியும் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும்.
6. அரசு போக்குவரத்து கழகங்களை பாதுகாத்திடும் வகையில் வரவு செலவு பற்றாக்குறைய அரசு பொறுப்பேற்க வேண்டும். காலி பணியிடங்கள் பூர்த்தி செய்திட வேண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்திட வேண்டும்.
7. பீடி தொழிலாளர்களுக்கான கூலி உயர்வு பேச்சு வார்த்தையினை உடனடியாக துவங்கிட வேண்டும்.
8. மீன் பிடி மற்றும் அது தொடர்புடைய தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களை தொழிலாளர் பட்டியலில் இணைத்திட வேண்டும். 60 வயதில் ஓய்வூதியம் ரூபாய் 3000 வழங்கிட வேண்டும்.
9. கைத்தறி மற்றும் நெசவாளர்களுக்கு வேலை வழங்கும் வகையில் பள்ளி சீருடை, மின்வாரியம், போக்குவரத்து போன்ற அரசு துறைகளின் கீழ் செயல்படும் நிறுவன தொழிலாளர்களுக்கான சீருடைகள் தயாரித்திட, உற்பத்தி செய்யும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
10. தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு உயர்நீதிமன்ற தடையினை நீக்கி நிர்ணயித்த ஊதியம் வழங்கிட வேண்டும்.
11. ஆட்டோ தொழிலாளார்களுக்கு மீட்டர் கட்டணம் உயர்த்திட வேண்டும்.பொது மக்களுக்கு பயன்படும் வகையில் அரசு செயலி உருவாக்கிட வேண்டும். பைக் டாக்சி, ஓலா, உபர் போன்ற ஆன்லைன் செயல்பாடுகள் கட்டுப்படுத்த வேண்டும். எப்சி கட்டண உயர்வு திரும்ப பெற வேண்டும் மோட்டார் வாகனச் சட்டத் திருத்தம் கைவிடப்பட வேண்டும்.
12. தெருவோர வியாபாரிகளின் நலன்களை பாதுகாப்பதற்கான முறையில் வணிகக் குழு மூலம், வியாபாரம் செய்யும் இடங்கள் முறைப்படுத்தப் பட வேண்டும்.
13. டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும். நுகர்வோர் வாணிப கழகம் உள்ளிட்ட சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்கிட வேண்டும்.
மேலும், 13-வது அகில இந்திய ஏஐடியூசி மாநாடு கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நவம்பர் 22 முதல் 26 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக சங்கங்களின் பேரவைகள் ஜூலை மாதத்திற்குள் நடத்த வேண்டும். ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களுக்குள் மாவட்ட மாநாடுகள் நடத்தவும், அக்டோபர் 15-க்கு முன்பாக மாநில மாநாடு நடத்திட வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.
