மாநில செயலாளர்

அமைப்பை வலுப்படுத்துவோம்! முன்னேறுவோம்!

மு.வீரபாண்டியன், மாநிலச் செயலாளர்

தோழர்களே! வணக்கம்.

தமிழக சட்டமன்ற சூழல் நீங்கள் அறிந்ததே, நாடும் அறியும்.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களில் வெற்றி பெற்றது. ஆட்சி அமைப்பதற்கு இடங்கள் தேவைப்பட்டதால், இடதுசாரிகளிடம் அவர்கள் ஆதரவு கேட்டனர். இதனால் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வெளியில் இருந்து ஆதரவு அளிக்கிறது. ஜோசப் விஜய் முதலமைச்சரானார்.

தமிழ்நாட்டு மக்கள் பெருவாரியான வாக்குகளையும், அதிக இடங்களையும் தமிழக வெற்றி கழகத்திற்கு அளித்திருக்கின்றனர். தமிழக மக்கள் அளித்திருக்கும் இந்த ஜனநாயகத் தீர்ப்புக்கு மதிப்பளித்து, தமிழக மக்கள் முன்மொழிந்ததை நாம் வழிமொழிந்திருக்கிறோம். இதன் மூலம் பல்வேறு நிலைகளில் ஜனநாயகத்தை கடந்து சென்றுவிடாமலும், ஆளுநர் அதிகாரத்தில் வந்து அமர்ந்து விடாமலும் தடுத்திருக்கிறோம். இன்னொரு தேர்தல் திணிக்கப்படுவதையும் நாம் தடுத்துள்ளோம்.

தற்போது தமிழக வெற்றிக்கழகம் அமைச்சரவையை விரிவாக்கம் செய்திருக்கிறது. இதில் பெண்களுக்கும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் அதிக வாய்ப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது. நல்ல துவக்கம், இதை வரவேற்கிறோம்.

அதேநேரத்தில் தமிழக வெற்றிக்கழகம் முந்தைய ஆட்சியின் நலத் திட்டங்களைத் தொடர வேண்டும். புதிய நலத்திட்டங்களையும் முன்மொழிய வேண்டும்.

அரசியலாக நாட்டின் மதச்சார்பின்மையை தவெக பற்றிக் கொள்ள வேண்டும். தமிழக உரிமைகளுக்குத் தொடர்ந்து குரல் எழுப்ப வேண்டும். தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், கிராமப்புற பாட்டாளிகள், விவசாயிகள், சிறு குறு தொழில் நடத்துவோர், ஒடுக்கப்பட்ட மக்கள், ஏழை எளிய மக்கள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் என பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டும். அந்தக் கோரிக்கைகளை தமிழக வெற்றிக் கழகமும், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களும் நிறைவேற்ற முன்வர வேண்டும்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை பொறுத்த வரை, இடதுசாரிகளைப் பொறுத்தவரை வெளியில் இருந்து தருகிற ஆதரவு என்பது சிலர் சொல்வது போல் கல்லெறிவது அல்ல, நெருக்கடிகளை கொடுப்பதற்கும் அல்ல.

இன்னும் சிலர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது தேவையற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். திமுக தலைவர் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தலைவர், அவர் எப்பொழுதுமே இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் உள்விவகாரங்களில் தலையிட்டதில்லை. எத்தகைய அழுத்தங்களையும் கொடுத்ததில்லை. இதனை நாங்கள் சொன்ன பிறகும் கற்று அறிந்தவர்கள் பலரும் வலைதளங்களில் அவதூறு பேசுவது ஏற்புடையதல்ல.

கம்யூனிஸ்டுகள் எப்பொழுதுமே அரசியல் அறத்தின் பக்கம், அதன் விழுமியங்களின் பக்கம் நின்றுதான் குரல் எழுப்புவோம். குடைச்சல் கொடுப்பதும், சிந்தனையில் பதற்றத்தை உருவாக்குவதும் கம்யூனிஸ்ட்டுகளின் வேலை அல்ல.

தமிழக அரசிடம் மக்கள் எதிர்பார்ப்பது, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். நல்லாட்சியைத் தர வேண்டும் என்பதும் தான். இத்தகைய மாறுதலுக்காக தான் மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். இதனை தமிழக வெற்றிக் கழகமும் அறியும். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் இதற்காகத்தான் தனது ஆதரவை இந்த அரசுக்கு நல்கியது. இந்த ஆதரவு தொடரும். பிரச்சினைகள் அடிப்படையில் அரசின் அணுகுமுறைகளைக் கண்காணித்து அதன் மீதான கருத்துக்களைச் சொல்வோம். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை பொறுத்தவரை எப்பொழுதுமே உழைப்பாளி மக்களுக்கு அருகில் இருந்து, அவர்களுக்கு ஆதரவாகத்தான் குரல் கொடுப்போம். ஒடுக்கப்பட்ட மக்களுக்கான, எளிய மக்களுக்கான போராட்டங்கள் ஜனநாயகத்தைச் செழுமைப்படுத்தும், சட்டத்தின் ஆட்சி முறையை செழுமைப்படுத்தும்.

தமிழ்நாட்டில் ஜனநாயக சக்திகள் இணைந்து இயங்க வேண்டும், அனைத்து ஜனநாயக சக்திகளும் மதச்சார்பின்மை என்கிற மகத்தான புள்ளியில்; தமிழ்நாட்டின் நலன்கள் என்கிற புள்ளியில் இணைந்து தொடர்ந்து குரல் கொடுப்போம்.

நாடு ஒரு பெரும் மாற்றத்தை நோக்கி நகர்ந்து வருகிறது என்று நம்புகிறோம். தமிழ்நாடும், இந்தியாவும் இடது மாற்றுக்குத் தயாராகிறது. நிலவும் இந்த முதலாளித்துவ சமூகத்திற்கு மாற்றாக இருப்பது இடது பாதை தான்.

இடது பாதை என்பது நமது விடுதலைப் போர். நம் முன்னோர்கள் வழிமொழிந்தது. அவர்களின் கனவுகளைச் சுமந்தபடி இடதுசாரி இயக்கங்கள், கம்யூனிச இயக்கங்கள் முன்னேறுவோம். நல்லதொரு மாற்றம் எழும். அதுவரை நாம் ஜனநாயகத்தில், பல கட்சி இயங்குமுறை கொண்ட ஜனநாயகத்தில் நமக்குரிய கடமையை ஆற்றுவோம். அந்த கடமை ஜனநாயகத்தை செழுமைப்படுத்தும். அரசியல் சாசனத்தைப் பாதுகாக்கும், பன்முகத்தின் அடித்தளமாக இருக்கிற மதச்சார்பின்மையை உறுதிப்படுத்தும்.

தோழர்களே! நமக்கு ஏராளமான கடமைகள் இருக்கின்றன. மாநிலக் குழுவில் பல முடிவுகளை எடுத்திருக்கிறோம். கிளைகள், அமைப்புகள் அனைத்தையும் மக்களுடன் பின்னிப்பிணைந்த வெகுமக்கள் இயக்கமாக மாற்றி, அவர்களின் கோரிக்கைகளை தீவிரமாக முன்னெடுப்போம். எளிய மக்களின், உழைக்கும் மக்களின் கோரிக்கைகளை சுமந்த கிளர்ச்சியை முன்னெடுப்போம். கட்சிக் கிளைகளைக் கட்டி வளர்ப்போம்.

தோழர் லெனின் சொன்னது போல், நிலவும் முதலாளித்துவ சமூக அமைப்பை மாற்றியமைக்க நம்மிடம் அமைப்பைத் தவிர வேறு ஆயுதம் இல்லை. இதனால் அமைப்பை வலுப்படுத்துவோம், நாம் முன்னேறுவோம். எதிர்கால தேசத்தின் திசை இடது பக்கம் தான். தோழர்களே. முன்பை விட கூடுதலாக உழைப்போம், பாடுபடுவோம்.

இடது ஒற்றுமைக்காக, ஜனநாயக சக்திகளின் ஒற்றுமைக்காக, மக்களின் நல்லிணக்கத்திற்காக, மதச்சார்பின்மைக்காக, தேசத்தின் வளர்ச்சிக்காக முன் எப்பொழுதையும் விட கூடுதலாக சிந்திப்போம், களமாடுவோம்.

தோழமையுடன்
மு.வீரபாண்டியன்
மாநிலச் செயலாளர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button