சொல் மோதல் அல்ல; பதற்றத்தின் வெளிப்பாடு: முரசொலி விமர்சனத்துக்குப் பதிலடி
டி.எம்.மூர்த்தி

தமிழ்நாட்டின் அரசியல் சூழல், சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின் வெகுவாக மாறிவிட்டது, யார் ஒப்புக்கொண்டாலும் இல்லாவிட்டாலும் இதுதான் உண்மை.
பாசிச எதிர்ப்பை மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தேர்தல் முழக்கமாக முன்வைத்தது. அந்தக் கூட்டணியை மக்கள் தேர்வு செய்யவில்லை என்றாலும், பாசிச எதிர்ப்பை கவனமாக கடைப்பிடித்தார்கள். தாமரைச் சின்னம் 32 தொகுதிகளில் போட்டியிட்டும், ஒரே தொகுதியைத்தான் தந்தார்கள்.
ஆனால், யாருக்கும் பெரும்பான்மை இல்லை. பாஜக-அதிமுக கூட்டணி, மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டது. தி.மு.க. எதிர்க்கட்சியாக செயல்படுவோம் என்று அறிவித்துவிட்டது. 108 இடங்களைப் பெற்ற த.வெ.க, காங்கிரசின் 5 எண்ணிக்கையையும் பெற்று, 112 (திருச்சி கிழக்கு தவிர்த்து) இடங்களோடு நின்றது.
அதிக எண்ணிக்கை பெற்ற கட்சியை ஆளுநர் ஆட்சியமைக்க அழைத்து, சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்கக் கூறியிருந்தால், பேரவைக்கூட்டத்தில் என்ன செய்வது என யோசித்திருக்கலாம்.
ஆனால், ஆளுநர் 118 என எண்ணிக்கையைக் காட்டினால்தான் அழைக்க முடியும். 10 ஆம் தேதி கேரளத்துக்கு புறப்படுவேன் என்றார். “யார் 118 இடங்களைக் காட்டினாலும் ஆட்சியமைக்க அழைப்பேன்” என்று தனது எல்லை தாண்டி ஐயங்களை எழுப்பினார் ஆளுநர்.
அண்மையில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், “விஜய் எத்தனை முறை ஆளுநர் மாளிகைக்கு அலைந்தார், தொலைபேசி மூலம் யாரிடம் எல்லாம் ஆதரவு கேட்டார் என்ற முழுப் பட்டியலையும் தன்னால் வெளியிட முடியும்” என்று பேசியுள்ளார்.
ஆக, ஆளுநர் எடுத்த நடவடிக்கைகள் எல்லாம் பாஜகவுக்கு தெரிந்திருக்கிறது. சரியாகச் சொன்னால், பாஜக சொல்வதை ஆளுநர் செயல்படுத்திக்கொண்டிருந்தார். என்ன முயற்சித்தாலும், யாரிடம் பேசினாலும் 118ஐக் காட்டாமல் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்திருக்க மாட்டார் என்பதைத்தான் நயினார் வெளிப்படுத்தியிருக்கிறார்.
“தமிழ்நாட்டின் தேர்தலுக்குப் பிந்தைய அரசியல் சூழல், வியாழக்கிழமை (மே 7, 2026) தலைகீழாக மாறியது. தமது பிரதான அரசியல் எதிரியான அதிமுகவுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிக்கும் யோசனையை திமுக தலைமை பரிசீலிக்கத் தொடங்கியதே இதற்குக் காரணம். ஒரு வாரத்திற்கு முன்புவரை கற்பனைக்குக் கூட எட்டாததாக இருந்த இந்த சாத்தியம், தற்போது அரசியல் விவாதத்தின் மையமாகியுள்ளது.
மாநிலத்தில் ஒரு “நிலையான” அரசாங்கம் அமைய வேண்டும் என்ற கட்சியின் முதன்மை நோக்கத்துக்கு ஏற்ப, அவசரத் தீர்மானங்களை எடுக்க கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு அதிகாரம் வழங்கும் தீர்மானத்தை திமுக முக்கியக் கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றியது” என்று ‘தி இந்து’ செய்தி வெளியிட்டுள்ளது. இந்த விஷயம் ஏற்கனவே விரிவாக அரசியல் தளத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
மே 7ஆம் தேதி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விசிக தலைவர்களை அழைத்து தி.மு.க. தலைவர் பேசினார். புதிய சூழலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி என்ன நிலை எடுப்பது எனப் பேசப்பட்டது. ஆனால், திமுக முன்வைத்த யோசனை என்ன என்று பகிரங்கமாக அறிவிக்கும் துணிச்சல் தி.மு.க.வுக்கு ஏன் வரவில்லை? அதைச் சொல்ல அவர்களுக்கே கூச்சம்.
சரி, சொன்ன யோசனையை “சரியல்ல, திமுகவுக்கே கூட நல்லதல்ல” என்று தோழமைக் கட்சிகள் தெரிவித்த பின்பு, மாற்று யோசனை ஏதாவது தி.மு.க. சொன்னதா? இதுவரையில் பொதுவெளியில் சொல்லப்பட்டுள்ளதா? எதுவும் இல்லை.
மே 10க்குள் 118 எம்எல்ஏக்களின் ஆதரவை விஜய்யோ, அல்லது வேறு யாருமோ காட்டாவிட்டால், அடுத்தது ஆளுநர் ஆட்சிதான்” என்பது தெளிவு.
இதில் என்ன “பம்மாத்து” உள்ளது என்பதை ‘முரசொலி’தான் விளக்க வேண்டும்.
நம் கூட்டணி தோற்றுப்போய் விட்டது என்பதற்காக, தமிழ்நாடு – எதிர் – டில்லி என்ற பாசிச எதிர்ப்பு முழக்கத்தை தூக்கிப் போட்டு விடலாமா? தமிழ்நாடு எக்கேடோ கெட்டுப் போகட்டும் என்று குடியரசுத் தலைவர் ஆட்சி என்ற பெயரில் தமிழ்நாட்டை பாஜக கையிலேயே தூக்கிக் கொடுத்துவிடலாமா?
அதனை மையமாகக் கொண்டே ஆட்சியமைக்க வெளியிலிருந்து ஆதரவு தருவதென இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக்குழு முடிவு செய்தது. மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுவும் அதே முடிவுக்கு வந்தது.
“காங்கிரஸ் முதுகில் குத்திவிட்டது. நாங்கள்தான் விஜய் ஆட்சியமைப்பதற்காக மற்ற கூட்டணிக் கட்சிகளை அனுப்பி வைத்தோம். எங்கள் தயவில் தான் ஆட்சி அமைந்திருக்கிறது” என தி.மு.க. உயர் தலைவர்கள் கூறி வந்தனர். இதனைப் பற்றி தேஜஸ்வி யாதவ் கூட ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டு, தென்னிந்தியாவில் ஆரோக்கியமான அரசியல் நடக்கிறது என்று பாராட்டினார்.
ஆனால், இதுதான் ‘பம்மாத்து’ என்பதை முரசொலிக் கட்டுரையில் “ஆதரவுக் கடிதம் இல்லாமல் காங்கிரஸ் ஆதரித்ததற்கும், ஆதரவுக் கடிதத்தை கம்யூனிஸ்டுகள் கேட்டு வாங்கியதற்கும் பெரிய வித்தியாசம் ஏதுமில்லை” என்று எழுதி நிரூபித்திருக்கிறார்கள்.
கடிதத்தை கம்யூனிஸ்டுகள் கேட்டு வாங்கினார்களாம்! 118பேர் ஆதரவுக் கடிதத்தைக் காட்டி, ஆட்சி அமைக்க அழைக்கப்பட்ட பிறகு, விஜய் திமுக தலைவர் வீட்டுக்கு வந்தாரே, நீங்கள் அழைத்துத்தான் வந்தாரா? கட்டித் தழுவி ஆலோசனை சொன்னார்களே, அது என்ன ஆலோசனை?
திமுக தலைவரைச் சந்தித்ததை அடுத்து, அதிமுகவின் சி.வி.சண்முகத்தைப் பார்க்கச் சென்றார். அது நீங்கள் சொன்ன யோசனைதானா?
“அதிமுகவின் 25 உறுப்பினர் ஆதரவை விஜய் வாங்கி விட்டார். சிபிஐ, சிபிஎம், விசிக, முஸ்லீம் லீக் ஆதரவு தரவில்லை என்றாலும் பெரும்பான்மையை நிரூபித்திருப்பார். 132 வாக்குகள் வந்து விட்டது. குடியரசுத் தலைவர் ஆட்சி என்பது ஊரை ஏமாற்றும் பசப்புவாதம்” என்கிறது முரசொலி.
118 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுக் கடிதத்தில், அதிமுகவின் 25 உறுப்பினர்கள் கையெழுத்து இருந்ததா? பசப்புவது யார்?
ஆதரவு தெரிவிப்பது என அறிவித்த மே 8ஆம் தேதி மாலையிலிருந்து உடன்பிறப்புகள், கம்யூனிஸ்டுகள் மீது கொச்சையாக வசை மாரி பொழிந்தனர். ஆ.ராசாவோ, பூச்சூட்டிய மனைவி வேறு யாரோடோ படுக்கையைப் பகிர்ந்து கொண்டதாக கொச்சையாகப் பதிவிட்டார்.
“அப்பாவைக் காணோம்” என்று முதல்வர் சட்டப்பேரவையில் சொன்னதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டித்துள்ளது. ஆனால் அதற்குப் பொங்குகிற நீங்கள் கடந்த 40 நாட்களில் கம்யூனிஸ்டுகளைப் பற்றி பேசியுள்ள பண்பாடற்ற வசவுகள் சாதாரணமானவையா?
கம்யூனிஸ்டுகளுக்கு இப்போது புதிய பல்லக்கு கிடைத்துவிட்டது என்கிறது முரசொலி. அதாவது தி.மு.க. பழைய பல்லக்காம். கம்யூனிஸ்டுகளை “பல்லக்குத் தூக்கி“களாகத்தான் தி.மு.க. கணித்து வைத்திருக்கிறது. “வீர வணக்க“ முழக்கம் எல்லாம், அவர்கள் பாஷையில் சும்மா “பம்மாத்து”, அப்படித்தானே!
இது வெறும் சொல் மோதல் அல்ல; தி.மு.க.வின் தற்போதைய அரசியல் பதற்றத்தின் வெளிப்பாடு.
தவெகவை விட்டுவிட்டு கம்யூனிஸ்டுகள் மீது “பல்லக்குத் தூக்கிகள்” என்று பாய்வதற்கு சில காரணங்கள் உள்ளன.
அரசியல் வெளியை மீட்டெடுக்க முயற்சி:
தவெக ஆட்சியில் உள்ள நிலையில், அதன் மீது நேரடியாகத் தொடர்ந்து தாக்குதல் நடத்தினால் அது தவெகவுக்கே அதிக விளம்பரமாகவும், “எங்களைத் தாக்குகிறார்கள்” என்ற அனுதாப அரசியலாகவும் மாறலாம். அதற்குப் பதிலாக, தவெகவுடன் இணைந்து செயல்படும் அல்லது அதற்கு ஆதரவு தரும் இடதுசாரிகளைத் தாக்கி, தவெக அரசை மறைமுகமாகச் சுற்றிவளைப்பது தி.மு.க.வுக்கு எளிதான வழியாக இருக்கிறது.
இடதுசாரி அரசியலின் நியாயத்தைத் தகர்ப்பது:
கம்யூனிஸ்டுகள் வெறும் தேர்தல் கூட்டணி கட்சிகள் அல்ல; தொழிலாளர், விவசாயி, சமூகநீதி, மதச்சார்பின்மை போன்ற கேள்விகளில் தனித்த அரசியல் மரபும் அமைப்பும் கொண்டவர்கள். அவர்களை “பல்லக்குத் தூக்கிகள்” என்று சுருக்குவது, அவர்களது அரசியல் விமர்சனத்தை “பதவி ஆசை” அல்லது “யாருக்கோ சேவை” என்று காட்டும் முயற்சி.
இடதுசாரி குரல் தனியாக வலுப்பெறக்கூடாது எனும் பாரம்பரிய அச்சம்:
கம்யூனிஸ்டுகள் தமக்குத் துணையிருந்தால் “முற்போக்கு முகம்” கிடைக்கிறது. ஆனால் இடது கொள்கை நிலைப்பாட்டிலிருந்து தி.மு.க.வை விமர்சிக்கும் போதெல்லாம் ‘முரசொலி’ கம்யூனிஸ்டுகளைத் தாக்கியிருக்கிறது. “அதனால் கம்யூனிஸ்டுகளை வளரவிடாமல் பார்த்துக்கொள்கிறோம்” என்பது கலைஞர் வாயிலிருந்தே வந்த ஒப்புதல் அல்லவா?
குறிப்பாக தொழிலாளர் உரிமை, தனியார் மயமாக்கல், மாநில நிதி, சாதி ஒடுக்குமுறை, மதவெறி எதிர்ப்பு போன்ற கேள்விகளில் இடதுசாரி குரல் தனியாக வலுப்பெறுவது, தி.மு.க.வின் “முற்போக்கு பிரதிநிதித்துவ” ஏகபோகத்திற்கு சவாலாகும்.
திமுகவால் எழுப்ப முடியாத ஆட்சேபணைகள்:
த.வெ.க. அரசின் நிலைப்பாடுகள் வெளிப்பட இன்னும் சில மாதங்கள் ஆகும். தி.மு.க. தவெக அரசை சட்டம்-ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு, நிர்வாகத் தோல்வி போன்ற கேள்விகளில் தாக்கி வருகிறது.
ஆனால் அதேநேரத்தில், தவெக அரசின் வர்க்கக் கொள்கை, தனியார்மயப் போக்கு, மத்திய அரசுடனான உறவு, கார்ப்பரேட் நலன் போன்ற அடிப்படைக் கேள்விகளை இடதுசாரிகளைப் போல தி.மு.க.வால் எழுப்பவே முடியாது. ஏனெனில் அதே தவறுகளை தி.மு.க.வும் தனது ஆட்சியில் செய்திருக்கிறது. இடதுசாரிகளின் விமர்சனம் தி.மு.க.வின் விமர்சனத்தைவிட ஆழமானதாகத் தோன்றும். அதனால் கோபம் வருகிறது.
“பல்லக்குத் தூக்கிகள்” என்ற சொல்லின் அரசியல் பொருள் என்ன?
“நீங்கள் சொல்லும் கொள்கை எமக்கு உடன்பாடானதா?” என்று சொல்ல இயலாததால், அதனைத் தவிர்த்து, “யாருக்காகச் சேவை செய்கிறீர்கள்?” என்று மாற்றும் அவதூறு அரசியலே இது. கம்யூனிஸ்டுகள் மீது இதைப் பயன்படுத்துவது, அவர்களது வரலாற்றையும் மக்கள் இயக்கப் பங்களிப்பையும் இழிவுபடுத்தும் திட்டமிட்ட முயற்சி.
எந்தக் கட்சியின் பல்லக்கையும் தூக்குவதற்காக அல்ல; உழைக்கும் மக்களின் சுமையை இறக்குவதற்காகவே கம்யூனிஸ்டுகள் அரசியலில் இருக்கிறார்கள்.