கட்டுரைகள்

நெருக்கடியிலிருந்து போக்குவரத்துக் கழகங்களை மீட்டெடுக்க அரசு செய்யவேண்டியது என்ன?

இரா.ஆறுமுகம்

கடந்த ஜூன் 17ஆம் தேதி அன்று தமிழ்நாடு அரசின் போக்குவரத்து துறை செயல்பாடுகள் மற்றும் செயல்படுத்த உள்ள திட்டங்கள் தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்ததாக அறிகிறோம். வரவேற்கத்தக்க முயற்சி.

அரசு போக்குவரத்து கழகங்களின் எதிர்காலம், பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவையின் நிலைத்தன்மை, நம்பகமான போக்குவரத்து வலையமைப்பைப் பராமரித்தல்,தொழிலாளர்களின் பாதுகாப்பு ஆகியவற்றை பாதுகாத்து மேம்படுத்த பின்வரும் விஷயங்களை அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.

வெள்ளை அறிக்கை – 2021

2021ஆம் ஆண்டு அரசு போக்குவரத்து கழகங்கள் தொடர்பாக வெளியிடப்பட்ட மொத்தமாக ரூ.42143.69 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,ஒரு கிலோமீட்டர் பேருந்து இயக்கத்திற்கு வருவாய் ரூ.37.60 என்றும், செலவு ரூ.59.15 எனவும் மதிப்பிடப்பட்டது.

அதற்கான காரணிகளாக பின்வரும் விஷயங்கள் முன்வைக்கப்பட்டன:

 2018 ஜனவரிக்குப் பின் பேருந்து கட்டண உயர்வு இல்லாததால் வருவாய் உயரவில்லை.  டீசல் மற்றும் உதிரி பாகங்களின் விலை உயர்வினால் செலவு அதிகரிக்கிறது.  பொருள் மேலாண்மை மற்றும் செலவு நிர்வாகத்தில் உள்ள குறைபாடுகளால் கொள்முதல் செலவு கூடுதலாகிறது  லாபம் ஈட்டாத வழித்தடங்களில் தொடர்ந்து பேருந்துகள் இயக்கப்பட்டது, லாபம் தரும் வழித்தடங்கள் தனியார் நிறுவனங்களுக்குத் தரப்பட்ட வழித்தட தேவைகளைச் சீரமைப்பதில் போதிய கவனம் செலுத்தப்படவில்லை.

வெள்ளை அறிக்கை – 2026

சென்ற வாரத்தில் தமிழக அரசு வெளியிட்ட வெள்ளை அறிக்கையில், மொத்த வருவாய் இழப்பு ரூ.72,667 கோடி எனவும், ஒரு கிலோமீட்டர் பேருந்து இயக்கத்திற்கு வருவாய் ரூ.25.97 என்றும், செலவு ரூ.78.81 என்றும் பற்றாக்குறை ஒரு கி.மீ. இயக்கத்துக்கு ரூ.52.84 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்களுக்கான சேவை

அரசு போக்குவரத்து கழகங்கள், முக்கிய நகரங்கள், மலைப்பகுதிகள், கடைக் கோடி கிராமங்கள், புதிய குடியிருப்பு பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் மக்களின் போக்குவரத்துத் தேவைகளை நிறைவேற்றுகின்றன. லாபம் மட்டுமே நோக்கமாக இல்லை.

விவசாய விளைபொருட்களை கிராமப்புறங்களில் இருந்து சந்தைகளுக்கு கட்டணம் இன்றி கொண்டு செல்கின்றன. மாணவர்களுக்கு கட்டணம் இல்லாத பயணம், சமூக முன்னேற்றத்திற்கான முதலீடாகிறது

மேலும் பத்திரிக்கையாளர்கள், முதியோர், மகளிர், நோயாளிகள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் அவர்களின் உதவியாளர்கள் உள்ளிட்டோருக்கு சலுகை மற்றும் கட்டணமில்லா பயண வசதிகளை வழங்கி, அரசின் சமூக நலத் திட்டங்களை நிறைவேற்றுகின்றன.

நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு, எந்த நிபந்தனையுமற்ற கட்டணமில்லாத பயணம் வழங்கப் பட்டுள்ளது.

இவை அனைத்தும் தமிழ்நாடு அரசின் சமூக நலத் திட்டங்களாகும். இவற்றுக்கான மொத்தச் செலவையும் சரியாகக் கணக்கிட்டு தமிழ்நாடு அரசு வழங்கி ஈடுகட்டுவதில்லை. கொடுக்கும் தொகையும் காலதாமதமாகக் கொடுக்கப்படுகிறது. இதனால் கடனுக்கான வட்டி மேலும் அதிகரிக்கிறது.

இவ்வளவு சமூக நலத்திட்டங்களை நிறைவேற்றும் போக்குவரத்துக் கழகங்கள் லாபத்தில் இயங்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதும், நட்டத்தில் இயங்குகின்றன என்று குறைப்பட்டுக் கொள்வதும் அறிவுடையோரின் செயல் அல்ல.

நட்டம் என்று கருதப்படும் தொகை வேறு வகைகளில் பார்த்தால் மிகச்சிறந்த சமூக முதலீடாகும். கல்வி மேம்பாட்டிலும், தொழில் வளர்ச்சியிலும், பெண் பணியாளர்கள் எண்ணிக்கை இந்தியாவில் மிக அதிகமாக இருப்பதிலும் போக்குவரத்து கழகங்கள் இன்றியமையாத பணியைச் செய்து கொண்டிருக்கின்றன. இவற்றை பண அளவாக இதுவரை யாரும் கணக்கிடவில்லை.

பக்கத்து இலைக்கு பாயாசம்

டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப பேருந்துக் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள தனியாருக்கு அனுமதி வழங்கலாமா என தமிழக அரசு கருத்து கேட்டுள்ளது. கடந்த ஆட்சியில் நீதிமன்ற வழிகாட்டுதலின் பேரில் குழு அமைக்கப்பட்டது. இதுவரையில் அதன் அறிக்கை எதுவும் கிடைக்கப் பெறவில்லை.

எந்த சமூக கடமையையும் நிறைவேற்ற தேவையில்லாத தனியார் பேருந்துகளுக்கு மட்டும் கட்டண உயர்வு என்பதும், அதை அவர்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று பேசுவதும் சரியல்ல. பேருந்து கட்டண நிர்ணயம் என்பது அரசின் கைகளிலேயே இருக்க வேண்டும். தனியார் கட்டணம் உயர்வு என்றால், அது அடுத்து அரசுப் பேருந்தையும் தொடும்.

மெட்ரோவுக்கு உண்டு, பேருந்துக்கு இல்லை

ரயில்வே, மெட்ரோ, விமானப் போக்குவரத்து போன்ற அதிக முதலீடு தேவைப்படும் துறைகளுக்கு ஒன்றிய, மாநில அரசுகள் நிதி உதவி வழங்குகின்றன.

ஆனால் மாநில போக்குவரத்து கழகங்கள், அரசாங்கத்தின் சமூகக் கடமைகளை நிறைவேற்றுவதோடு அந்தச் செலவுகளை தாங்கி ஏற்றுக்கொண்டு, லாபமும் ஈட்ட வேண்டும் என்று எதிர்பார்ப்பதும், பற்றாக்குறைக்கு நிதி உதவி வழங்க மறுப்பதும் பொருத்தமற்றது.

போக்குவரத்துக் கழகங்கள் வாங்கிய கடனுக்கு, வருவாயில் 12.45 % வட்டியாக செலுத்தப்படுகிறது. கடனைக் குறைக்க, 12-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டதுபோல், பொதுப் போக்குவரத்தை வலுப்படுத்த மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு நிதி உதவி வழங்க வேண்டும்.

மேலைநாடுகளில் பொதுப் போக்குவரத்து மேம்படுத்துவதன் அவசியத்தை உணர்ந்து அதற்கான வசதி வாய்ப்புகள் உருவாக்கித் தரப்படுகின்றன. வாகன வரி, டீசலுக்கான வரி, சுங்க கட்டணம், வருமான வரி, சேவை வரி ஆகியவற்றில் இருந்து விலக்கு அளித்திட வேண்டும்.

அதைப் போலவே, குறைந்த முதலீட்டில் அதிகமான பொதுமக்களுக்கு சேவை வழங்கும் போக்குவரத்துக் கழகங்களுக்கு மாநில அரசு, உரிய நிதி மற்றும் பொருளாதார ஆதரவு வழங்க வேண்டும். நிதிப் பற்றாக்குறையால் முடங்கி விட அனுமதிக்கக்கூடாது.

யாருக்காகப் பேருந்து?

நகரப் பேருந்துகளைப் பயன்படுத்துவோர் சாமானிய மனிதர்களே. அவர்களின் தேவையைக் கருத்தில் கொண்டு பேருந்து வடிவமைப்பு செய்யப்பட வேண்டும். நவீன வடிவமைப்பு பேருந்துகளில் அதிக முதலீட்டைக் கொட்டுவது அர்த்தமற்றதாகும்.

தமிழ்நாட்டில் தொலைதூர பேருந்துகள் ஆம்னி பஸ்கள், டூரிஸ்ட் பஸ் என உரிமம் பெற்றுக்கொண்டு, இரண்டு ஊர்களுக்கிடையே இடைவழி நிறுத்தங்களோடு (ஸ்டேஜ் கேரியர்) இயக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் 4000 க்கு மேற்பட்ட ஆம்னி பஸ்கள் இயங்குகின்றன இவற்றில் கணிசமானவை வெளி மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டவை. இதனால் தமிழ்நாட்டுக்கு பல கோடி ரூபாய் வரிவருவாய் இழப்பு ஏற்படுகிறது. உரிமம் இல்லாமல் சட்டவிரோதமாக இயக்கப்படும் வாகனங்களும் உண்டு. இதனால் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. அவை கடுமையாக கட்டுப்படுத்தப்பட வேண்டும்.

பயணக் கட்டணம் அல்லாத வருவாய்

அரசு போக்குவரத்து கழகங்களுக்கு சொந்தமான பயன்பாடற்ற இடங்களை வணிக பயன்பாட்டிற்கு கொண்டு வந்து வருவாய் பெருக்க வேண்டும். கூரியர் (பார்சல்,தபால்) சேவைகளை முறைப்படுத்தியும், விளம்பரங்கள் பெறுவது மூலமாகவும் பயணக் கட்டணம் அல்லாத வருவாயை அதிகரிக்க வேண்டும்.

தற்போது சரக்கு போக்குவரத்து சுமார் 80 சதவீதம் தனியார் வசம் உள்ள நிலையில், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு சொந்தமான இடங்களை பயன்படுத்தி மீண்டும் சரக்கு போக்குவரத்து சேவைகளை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நிர்வாகச் சீரமைப்பு

மாநிலத்துக்குள் இயக்கப்படும் அரசு பேருந்துகள் மாநிலம் முழுவதும் ஒரே அரசு நிறுவனமாக செயல்பட வேண்டும். திறமை மிக்க மேல் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட வேண்டும். பேருந்துகள் செல்லும் போதும் வரும்போதும் அதிகமான பயணிகள் பயன்படுத்தும் வருமானம் கொழிக்கும் வழித்தடங்களில் சட்டவிரோதமாக இயக்கப்படும் தனியார் போக்குவரத்து தடை செய்யப்பட வேண்டும். வருவாய் அதிகரிப்பதற்கு பயண வசதி தேவைப் படும் போது சரியான நேர மேலாண்மை கடைப்பிடிக்கப்பட வேண்டும். அரசு பேருந்துகள் மட்டுமே இயங்கினால் சமூக விரோதிகள், மற்றும் தீவிரவாதிகள் போக்குவரத்து பயன்படுத்துவதை அரசால் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் முடியும்.

அவசியமான அரசியல் தலையீடுகளுடன், ஊழலற்ற நிர்வாக செயல்பாடுகள் அரசு போக்குவரத்து கழகங்களில் உறுதிப்படுத்தப்பட்டால், நிதிநிலை மேம்படும்.

இயக்கப்படாத பேருந்துகள்

பணியாளர் பற்றாக்குறை காரணமாக பேருந்துகள் முழுமையாக இயக்கப் படவில்லை. பேருந்து இயக்குவதற்கு தேவையான ஓட்டுனர் நடத்துனர், தொழில்நுட்பம் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் காலி பணியிடங்கள் நிரப்பிட வேண்டும். பயணிகள் காத்திருந்தும், பேருந்துகள் கையிலிருந்தும் பணியாளர் இல்லாமல் நிறுத்தி வைக்கும் முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

மாற்று எரிபொருள்

கர்நாடக அரசு போக்குவரத்து கழகத்தில் 20 சதம் பயோடீசலும், 80 சதம் உயர் வேக டீசலும் கலந்து 8200 பேருந்துகளுக்கு பயன்படுத்தப்பட்டு, நல்ல பலன் தந்துள்ளது. எரிபொருள் செலவு மிச்சமாவதோடு சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தப்படுவதும் குறையும்.

புதிய போக்குவரத்து அமைச்சர் பொறுப்பேற்று 40 நாட்களுக்கு மேலாகியும் போக்குவரத்து தொழிலாளர் பிரதிநிதிகளைச் சந்திக்கவில்லை. தொழிற்சங்கங்களை அழைத்து, களஅனுபவத்தின் அடிப்படையில் அவர்களது ஆலோசனைகளைப் பெற்று செயல்படுத்துவது அவரது பணிக்கு உதவிகரமாக இருக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button