மாறும் ஆளும்கட்சிகள், மாறாத அரசு எந்திரம் இந்திய அதிகாரத்துவத்தின் காலனியத் தொடர்ச்சி
அருண் நெடுஞ்செழியன்

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று, தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்து ஒரு மாதம் கடந்துவிட்டது. “ஆட்சி நடத்திய அனுபவமற்ற புதிய கட்சி, அரசை எப்படி எந்தவொரு முன் அனுபவமும் இன்றி நடத்த முடியும்?” என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன.
ஆனால், இங்கு நமது முதன்மையான அக்கறை த.வெ.க-வின் மீதோ அல்லது அந்த அரசியல் விமர்சனங்களின் மீதோ அல்ல. மாறாக, “ஆட்சி அனுபவமற்ற ஒரு கட்சி தேர்தலில் வென்று ஆளும்கட்சியாக ஒரு அரசை முழுமையாக நடத்த முடியுமா?” என்ற கேள்வியைப் பற்றியது.
இந்திய நிர்வாகக் கட்டமைப்பைப் பொறுத்தவரை, எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அரசாங்கம் தொய்வின்றி நடைபெறும் என்பதே நிஜம். அரசாங்கம் என்பது நிலையான தன்மையுடையது.மேலே யார் அதிகாரத்திற்கு வந்தாலும், அதாவது எந்தக் கட்சி ஆளும்கட்சியாக அமர்ந்தாலும், அரசாங்க மற்றும் நிர்வாக நடைமுறைகள் எந்த மாற்றமும் இல்லாமல் நதி போல ஓடிக்கொண்டே இருக்கும். இங்கு ஆட்சியாளர்களுக்கு “நிர்வாக அறிவு” என்பது ஒப்புக்கு மட்டும்தான்; அவர்களின் தனிப்பட்ட திறனையோ, அனுபவத்தையோ நம்பி மட்டுமே இங்கு அரசு இயங்கவில்லை என்பதே எதார்த்தமான உண்மை.
காலனித்துவத் தொடர்ச்சியும் நேருவின் வரலாற்று முரண்பாடும்
மன்னராட்சி காலத்திற்குப் பிந்தைய காலனித்துவக் காலம் என்பது, முற்றிலும் ஒரு முதலாளித்துவ அரச நிர்வாகக் கட்டமைப்பைக் கொண்டது. வரி வசூல் முதல் இதர சேவைத்துறைகள், போலீஸ் கட்டமைப்பு என ஒட்டுமொத்த நிர்வாகப் பேரொழுங்கையும் இங்கிலாந்து காலனியாதிக்க ஆட்சி முறையே இங்கு உருவாக்கி வைத்துள்ளது. இந்தியா சுதந்திரம் பெற்ற போதிலும், அந்த நிர்வாக முறையில் எந்தவொரு பெரிய மாற்றத்தையோ, தடைகளையோ ஏற்படுத்தாமல், அதே கட்டமைப்பைத்தான் நாம் இன்றுவரை தொடர்ந்து வருகிறோம். இது உலகளாவிய அளவில் சுதந்திரம் பெற்ற அனைத்து பின்-காலனித்துவ நாடுகளிலும் காணப்படும் ஒரு பொதுவான வரலாற்றுப் பாணியாகும்.
சுதந்திரத்திற்கு முன்பு பிரிட்டிஷாரின் ஐ.சி.எஸ் (ICS) அமைப்பை “இந்தியப் பண்பாடும் இல்லாத, சேவையும் செய்யாத வர்க்கம்” என்று ஜவஹர்லால் நேரு கடுமையாக விமர்சித்த போதிலும், 1947-ல் பிரதமரான போது, அதே அமைப்பை ஐ.ஏ.எஸ் (IAS) என்ற பெயரில் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டிய வரலாற்றுச் சமரசத்திற்கு ஆளானார். அதன் விளைவாக, வெறும் சிவில் சர்வீஸ் மட்டுமல்லாமல், நீதித்துறை, காவல்துறை (Police – 1861 இந்தியக் காவல் சட்டம்) மற்றும் வருவாய்த்துறை என ஒட்டுமொத்த சட்டக் கட்டமைப்பும் பிரிட்டிஷார் இந்தியாவை ஆள உருவாக்கிய அதே பாணியில், சுதந்திர இந்தியாவிலும் நீடிக்கக் காரணமானது.
கலெக்டர் – ஆளுநர்’ முரண்பாடுகள்
பிரிட்டிஷார்,இந்தியர்களைக் கண்காணித்து ஒடுக்க உருவாக்கிய கவர்னர் , கலெக்டர் , சப்-கலெக்டர், மற்றும் வட்டாட்சியர் போன்ற பதவிகளும், அதிகாரப் படிநிலைகளும் இன்றும் அப்படியே தொடர்வது இக்காலத்து மக்களாட்சியின் மிகப்பெரிய முரண்பாடாகும்.
கலெக்டர் – பெயருக்கும் செயல்பாட்டிற்குமான முரண்: பிரிட்டிஷ் ஆட்சியில் நிலவரி மற்றும் இதர வரிகளை மக்களிடம் இருந்து “வசூலிப்பது” மட்டுமே இந்த அதிகாரியின் முதன்மைப் பணியாக இருந்தது; அதனால்தான் அவருக்கு ‘கலெக்டர்’ (வரி வசூலிப்பவர்) என்ற பெயரே வந்தது. ஆனால் இன்று, மாநகராட்சிகள் , நகராட்சிகள் மற்றும் வருமானவரித் துறை போன்ற தனித்தனி அரசு அமைப்புகள் வரிகளை வசூலிக்கும் பணியைச் செய்கின்றன; கலெக்டருக்கும் வரி வசூலுக்கும் இன்று நேரடித் தொடர்பே இல்லை. இருப்பினும், ஒரு மாவட்டத்தின் ஒட்டுமொத்த அதிகாரமும் ஒரு தனி அதிகாரத்துவ நபரிடம் குவியும் அந்தப் பழைய காலனித்துவ வடிவத்தை நாம் இன்னும் மாற்றாமல் வைத்துள்ளோம்.
ஆளுநர் – ஒன்றிய அரசின் அரசியல் ஆயுதம்: காலனித்துவக் காலத்தில் இந்தியாவின் மாகாணங்களை லண்டனில் இருக்கும் பிரிட்டிஷ் பேரரசு தன் நேரடிப் பிடிக்குள் வைத்திருக்கவே ‘கவர்னர்’ பதவிகள் பயன்படுத்தப்பட்டன. இன்று சுதந்திர இந்தியாவில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகள் இருந்தாலும், டெல்லியில் இருக்கும் ஒன்றிய அரசு தனக்கு எதிர்க் கட்சிகள் ஆளும் மாநிலங்களை மறைமுகமாகக் கட்டுப்படுத்தவும், முடக்கவும் அதே ‘ஆளுநர்’ என்ற காலனித்துவப் பதவியை ஒரு நிழல் அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தி வருகிறது.
தொடரும் காலனித்துவப் பதவிகளும் அவற்றின் சமகால முரண்பாடுகளும்
மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (SP) மற்றும் ‘மேஜிஸ்ட்ரேட்’ முரண்பாடு: 1861-ஆம் ஆண்டின் இந்தியக் காவல் சட்டத்தின்படி எஸ்பி பதவி உருவாக்கப்பட்டது. இதன் ஒரே நோக்கம் மக்கள் சேவையல்ல; 1857 சிப்பாய் புரட்சி போன்ற சுதந்திரப் போராட்டங்கள் மீண்டும் வெடிக்காமல் இந்தியர்களை லத்தி மற்றும் துப்பாக்கிச் சூடு மூலம் ஒடுக்குவது மட்டுமே. பிரிட்டிஷ் இந்தியாவில் காவல்துறைக்குத் தன்னிச்சையான அதிகாரம் கிடையாது; அது மாவட்டக் கலெக்டரின் (District Magistrate) உத்தரவுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் கடந்தும் இன்றும் அதே 1861 காவல் சட்டமே சிறிய மாற்றங்களுடன் தொடர்கிறது. ஒரு குற்றவியல் நடுவராக (Executive Magistrate) இன்றும் கலெக்டரே நீடிப்பதால், சட்டம்-ஒழுங்கு பிரச்சினையின் போது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிடும் காலனித்துவ அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியிடம் இல்லாமல், ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்குள்ளேயே சுழன்று கொண்டிருக்கிறது.
கிராம நிர்வாக அதிகாரி (VAO) மற்றும் பழைய ‘கர்ணம் / மணியக்காரர்’ வர்க்கம்: கிராம அளவில் பிரிட்டிஷ் அரசுக்கு விசுவாசமாக இருந்து, நில வரிகளையும் ரகசியத் தகவல்களையும் சேகரித்துத் தரும் ‘கர்ணம்’ அல்லது ‘தலையாரி’ என்ற பரம்பரைப் பதவிகள் காலனித்துவ ஆட்சியில் கிராமங்களை ஆட்டிப்படைத்தன. 1980-களில் தமிழ்நாட்டில் பரம்பரை வாரிசு முறை ஒழிக்கப்பட்டு, டி.என்.பி.எஸ்.சி (TNPSC) தேர்வு மூலம் ‘கிராம நிர்வாக அதிகாரி’ (VAO) என்ற பதவி உருவாக்கப்பட்டாலும், அதன் அதிகாரப் படிநிலை இன்னும் மாறவில்லை. இன்றும் ஒரு சாமானிய குடிமகன் தன் இருப்பிடச் சான்றிதழ் அல்லது சாதிச் சான்றிதழ் பெற கிராம அளவில் இருக்கும் இந்த ஒரேயொரு அதிகாரத்துவ நபரின் கையெழுத்துக்காகக் காத்துக் கிடக்க வேண்டும். தொழில்நுட்பம் வளர்ந்த டிஜிட்டல் யதார்த்தத்திலும், ஒரு கிராமத்தின் ஒட்டுமொத்த நிர்வாக ஆவணங்களும் ஒரு தனி நபரின் பிடிக்குள் இருக்கும் அந்தப் பழைய காலனித்துவக் கட்டமைப்பு அப்படியே நீடிக்கிறது.
தலைமைச் செயலாளர் (Chief Secretary) மற்றும் ‘நிழல் முதலமைச்சர்’ அதிகாரம்: 1799-ல் வெல்லெஸ்லி பிரபுவால் கிழக்கிந்திய கம்பெனியின் வர்த்தக மற்றும் ராணுவக் கோப்புகளை ஒருங்கிணைக்க இந்த ‘சீஃப் செக்ரட்டரி’ பதவி உருவாக்கப்பட்டது. கவர்னர் ஜெனரலுக்கு அடுத்தபடியாக ஒட்டுமொத்த அதிகாரத்துவத்தின் உச்சமாக இந்தப் பதவி இருந்தது. இன்று மக்களாட்சியில் மாநிலத்தின் உண்மையான அதிகாரம் முதலமைச்சரிடம் இருந்தாலும், தலைமைச் செயலகத்தின் ஒட்டுமொத்த கோப்புகளையும், அரசாணைகளையும் நகர்த்தும் இறுதிப் பேனா முனையாக இந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியே நீடிக்கிறார். பல நேரங்களில், அரசியல் ரீதியான குழப்பங்கள் அல்லது குடியரசுத் தலைவர் ஆட்சி அமலாகும் போது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவையே இல்லாமல், இந்தத் தலைமைச் செயலாளரே ஒட்டுமொத்த மாநிலத்தையும் இயக்கும் “நிழல் முதலமைச்சராக” மாறும் காலனித்துவ அதிகார வடிவம் இன்னும் மாறாமல் உள்ளது.
அதிகாரத்துவ வன்முறையின் உச்சம்: தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு
மக்களாட்சி விழுமியங்களை முற்றிலும் குழிதோண்டிப் புதைத்துவிட்டு, காலனித்துவ ‘எக்சிகியூட்டிவ் மேஜிஸ்ட்ரேட்’ மற்றும் 1861ன் காவல் சட்டத்தின் கொடூரமான அதிகார பலத்தை அரசு இயந்திரம் எவ்வாறு பிரயோகிக்கும் என்பதற்கு 2018-ல் நடந்த தூத்துக்குடி ஸ்டெர்லைட் மக்கள் போராட்டம் மற்றும் அதன் மீதான துப்பாக்கிச்சூடு ஒரு கோரமான சான்றாகும். 100 நாட்களாகத் தங்களின் வாழ்வாதாரத்திற்காகவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காகவும் அமைதியான முறையில் போராடிய சாமானிய மக்கள் மீது, எந்தவொரு முறையான முன்னறிவிப்பும் இன்றி, கலைந்து போகும் வாய்ப்புகளையும் தராமல், போர்க்களத்தில் எதிரி நாட்டு ராணுவத்தின் மீது நடத்துவது போலப் பாய்ந்து பாய்ந்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் “டிவியில் பார்த்துதான் தெரிந்துகொண்டேன்” என்று பொறுப்பின்றி கைவிரித்த அந்தச் சூழலில், நாம் மேலே குறிப்பிட்ட மாவட்டக் கலெக்டர், எஸ்பி (SP) மற்றும் ஒரு துணை வட்டாட்சியர் கொடுத்த ஒற்றை உத்தரவின் பேரில் 13 அப்பாவி மனித உயிர்கள் அநியாயமாகப் பறிக்கப்பட்டன. அருணா ஜெகதீசன் ஆணையத்தின் இறுதி அறிக்கை சுட்டிக்காட்டியபடி, துப்பாக்கிக் குண்டுகள் பலரின் தலை மற்றும் நெஞ்சுப் பகுதிகளில் பாய்ந்திருந்த விதம்—அது கூட்டத்தைக் கலைப்பதற்கான நடவடிக்கை அல்ல, மாறாகப் போராட்டக்காரர்களைக் குறிவைத்து ஒடுக்குவதற்காகப் பிரிட்டிஷ் காலத்து ‘ஜாலியன் வாலாபாக்’ மனநிலையோடு நடத்தப்பட்ட அதிகாரத்துவ வன்முறை என்பதை அப்பட்டமாக நிரூபித்தது.
அதிகாரத்துவம் குறித்த உலகளாவிய கோட்பாடுகளும் புரட்சிகர மாற்று மாதிரிகள்
அரசு இயந்திரத்தின் இந்த அசைக்க முடியாத அதிகாரத்தை பற்றி மேக்ஸ் வெபர், அதிகாரிகள் மனிதர்களை விட விதிகளுக்கே முக்கியத்துவம் கொடுத்து, அது மக்களைச் சிறைப்பிடிக்கும் “இரும்புப் போர்வையாக” மாறிவிடும் என்றும், கார்ல் மார்க்ஸ், அரசு இயந்திரம் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ளும் “அரசின் தனிச்சொத்தாக” மாறி, மக்களைக் குழப்பப் புரியாத தொழில்நுட்ப மொழியையும் ரகசியத்தன்மையையும் பயன்படுத்தும் என்றும் விமர்சித்தனர்.
இதற்கு நேர்மாறாக, ரஷ்யா (1917), சீனா (1949), பிரான்ஸ் (1789) போன்ற நாடுகளில் ஏற்பட்ட மாபெரும் மக்கள் புரட்சிகள் பழைய இரும்புப் பிடி அரசு இயந்திரத்தை வேரோடு பிடுங்கி எறிந்துவிட்டு, முற்றிலும் புதிய முறையில் அதிகாரிகளைத் தேர்ந்தெடுத்தன. குறிப்பாக, சோவியத் ரஷ்யாவில் ஜார் மன்னனின் பழைய அதிகாரத்துவ முறையை ஒழித்து, பாரம்பரிய அமைச்சகங்களுக்குப் பதிலாக உழைக்கும் வர்க்கத்தின் பிரதிநிதிகளான ‘மக்கள் கமிசார்கள் ‘தலைமையிலான புதிய நிர்வாக அமைப்பு உருவாக்கப்பட்டது; இதுவே அமெரிக்காவின் தற்காலிக அரசியல் நியமனங்கள் கொண்ட ‘ஸ்பாயில்ஸ் சிஸ்டம்’ மற்றும் ஐரோப்பாவின் துறை சார்ந்த ‘தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆட்சி’ போன்ற மாற்று மாதிரிகளுக்கு இணையாக உலக அளவில் உருவெடுத்தது.
அரசியல் நாற்காலிகளில் அமரும் முகங்கள் மாறுவதால் மட்டும் நிர்வாகம் மாறிவிடாது; த.வெ.க போன்ற ஒரு புதிய கட்சிக்கு நிர்வாக அனுபவம் இருக்கிறதா இல்லையா என்ற விவாதமே இங்கு தேவையற்றது. ஏனெனில், கலெக்டர் என்ற பெயரில் வரி வசூலிக்காத ஒரு பதவியையும், கவர்னர் என்ற பெயரில் மாநிலங்களை முடக்கும் ஒற்றையாட்சி அதிகாரத்தையும், கிராம அளவில் ஒரே நபரின் கீழ் முடங்கும் VAO ஆவணங்களையும், தூத்துக்குடியில் மக்கள் உயிரைப் பறித்த அதே காலனித்துவ 1861 காவல் சட்டத்தையும் நாம் இன்னும் அப்படியே சுமந்து கொண்டிருக்கிறோம்.
சோவியத், அமெரிக்க, ஐரோப்பிய புரட்சிகர மற்றும் நிர்வாக மாதிரிகளில் இருந்து பாடம் கற்று, வெறும் பொது அறிவுத் தேர்வை மட்டும் நம்பியிருக்காமல், துறை சார்ந்த நிபுணத்துவம் மற்றும் மக்களின் தேவைகளுக்குப் பதிலளிக்கக் கடமைப்பட்ட வெளிப்படையான, இடஒதுக்கீடு மற்றும் சமூக நீதி மாறாத நிர்வாக-காவல்துறைச் சீர்திருத்தத்தைக் கொண்டு வரும்போதுதான் காலனித்துவ இரும்புப் பிடியில் இருந்து விடுபட்ட உண்மையான மக்களாட்சி சாத்தியப்படும்.