செயலிசார் தொழிலாளர்களின் உரிமைகளுக்கான ஐ.எல்.ஓ ஒப்பந்தம் வாக்கெடுப்பில் இந்திய அரசு வெளிநடப்பு
ம.இராதாகிருஷ்ணன்

செயலிசார் பணியாளர்களின் (கிக்) உரிமைகள் குறித்த ஐ.எல்.ஓ. ஒப்பந்தத்திற்கு இந்திய தொழிலாளர்கள் மற்றும் முதலாளிகள் தரப்பு ஆதரவு அளித்த போதும், இந்திய அரசு மட்டும் வெளிநடப்பு செய்து ராஜாவை மிஞ்சிய ராஜ விசுவாசத்தை வெளிப்படுத்தி இருக்கிறது.
சர்வதேச தொழிலாளர் கழகத்தின் (ஐ.எல்.ஓ) 114-வது மாநாட்டில் செயலிசார் பணியாளர்களின் (கிக் மற்றும் பிளாட்ஃபார்ம் தொழிலாளர்கள்) உரிமைகளைப் பாதுகாப்பதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
“செயலிசார் பொருளாதாரத்தில் கண்ணியமான வேலை” (Convention on Decent Work in the Platform Economy) என்ற இந்த ஒப்பந்தம், செயலி சார்ந்து பணியாற்றும் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

உலகம் முழுவதும் உணவு விநியோகம், வாடகை ஊர்தி (டாக்சி) சேவை, பார்சல் விநியோகம், இணைய வழிச் சேவை உள்ளிட்ட துறைகளில் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் டிஜிட்டல் தளங்கள் மூலம் பணிபுரிகின்றனர். ஆனால் அவர்களில் பெரும்பாலானோருக்கு நிலையான வேலை இல்லை; உறுதியான வருமானம் இல்லை; சமூகப் பாதுகாப்பு இல்லை; தொழிலாளர் நலச் சட்டங்களின் முழுமையான பாதுகாப்பும் கிடைப்பதில்லை. இந்த அநீதியான சூழலுக்கு குறைந்தபட்ச சர்வதேச தரநிலையை உருவாக்கும் முயற்சியாகவே இந்த ஒப்பந்தம் உருவாகியுள்ளது.
இந்த ஒப்பந்தம் செயலிசார் பணியாளர்களின் தொழிற்சங்கம் அமைக்கும் உரிமையை அங்கீகரிக்கிறது. கூட்டு பேர உரிமையை உறுதி செய்கிறது. பாதுகாப்பற்ற மற்றும் உயிருக்கு ஆபத்தான சூழலில் வேலை செய்ய மறுக்கும் உரிமையை வழங்குகிறது. சமூகப் பாதுகாப்பு, நியாயமான வேலை நிபந்தனைகள் மற்றும் கண்ணியமான வேலைவாய்ப்பை வலியுறுத்துகிறது.
பெரும்பான்மையான உலக நாடுகள் இந்த ஒப்பந்தத்திற்கு ஆதரவு அளித்துள்ளன. சீனா, ஜப்பான், ஜெர்மனி, பிரான்ஸ், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளின் அரசுகள் ஆதரவாக வாக்களித்தன. மொத்தத்தில் இந்த ஒப்பந்தத்திற்கு ஆதரவாக 406 பிரதிநிதிகள் வாக்களித்துள்ளனர். அமெரிக்கா, நியூசிலாந்து உட்பட 8 நாடுகளின் பிரதிநிதிகள் எதிராக வாக்களித்துள்ளனர். இந்திய அரசு இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கான வாக்கெடுப்பில் பங்கேற்காமல் வெளிநடப்பு செய்துள்ளது.
சர்வதேச தொழிலாளர் கழகத்தின் (ஐ.எல்.ஓ) அடிப்படையே, தொழிலாளர்கள், முதலாளிகள், அரசுகள் ஆகிய முத்தரப்பும் இணைந்து தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதே. இந்த செயலிசார் பணியாளர்களின் உரிமைகளையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான ஒப்பந்தத்தின் மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பிலும் முத்தரப்பும் பங்கேற்றன.
இந்தியத் தொழிலாளர்களின் பிரதிநிதியாக ஏஐடியுசி, பாரதிய மஸ்தூர் சங்கம் (BMS) உட்பட பல்வேறு தொழிலாளர் சங்கங்கள் கலந்து கொண்டன. ஆனால் இந்திய தொழிலாளர் பிரதிநிதியாக வாக்களிக்கும் உரிமை பாரதிய மஸ்தூர் சங்கத்திற்கே உள்ளது. ஆர்எஸ்எஸ் – பாஜகவின் தொழிற்சங்கமான இந்த பாரதிய மஸ்தூர் சங்கத்தின் அகில இந்திய அமைப்புச் செயலாளர் சுரேந்திரன் போஜ்ஜி ஒப்பந்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தார்.
இந்திய முதலாளிகள் தரப்பின் பிரதிநிதியாக அலோக் பன்ஷிதர் சிறீராம் கலந்து கொண்டார். டிசிஎம் சிறீராம் குழுமத்தின் மூத்த நிர்வாகியான இவர், அகில இந்திய முதலாளிகள் அமைப்பு (All India Organisation of Employers – AIOE) மற்றும் இந்திய முதலாளிகள் பேரவையின் (Council of Indian Employers – CIE) தலைவராக இருக்கிறார். இவரும் ஒப்பந்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தார்.
அதாவது, செயலிசார் பணியாளர்களின் உரிமைகளையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான ஒப்பந்தத்தை..
தொழிலாளர் தரப்பு ஆதரிக்கிறது.
முதலாளிகள் தரப்பும் ஆதரிக்கிறது.
இந்திய அரசு வெளிநடப்பு செய்கிறது.
தொழிலாளர்களும் முதலாளிகளும் ஏற்றுக்கொண்ட குறைந்தபட்ச சர்வதேச தரநிலையை சமூக நலனுக்கான கொள்கையாக மாற்ற வேண்டியது அரசின் பொறுப்பு. ஆனால் அதிலிருந்து இந்திய அரசு விலகி நிற்கிறது. இது முத்தரப்பு வாதத்தின் அடிப்படை நோக்கத்திற்கு எதிரானது மட்டுமல்ல, முதலாளிகளின் நலன்களைப் பாதுகாப்பதில் “ராஜாவை மிஞ்சிய ராஜ விசுவாசத்தை” இந்திய அரசு வெளிப்படுத்துகிறது என்று சொல்லலாம்.
பொருளாதார வளர்ச்சியும் தொழிலாளர் உரிமைகளும் ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல. உண்மையில் தொழிலாளர் பாதுகாப்பு இல்லாத வளர்ச்சி, நிலையான வளர்ச்சியாக இருக்க முடியாது. கண்ணியமான வேலை, சமூகப் பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் உரிமைகள் ஆகியவையே நீடித்த பொருளாதார வளர்ச்சிக்கான அடித்தளம் என்பதை ஐ.எல்.ஓ தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
எனவே இந்த வாக்கெடுப்பு ஒரு சாதாரண சர்வதேச நிகழ்வு அல்ல. இந்திய தொழிலாளர் கொள்கையின் எதிர்கால திசை குறித்த முக்கியமான அரசியல் கேள்வியாகும். இதற்கான பதில்தான் இந்தியாவின் கோடிக்கணக்கான செயலிசார் தொழிலாளர்களின் எதிர்காலத்தையும், இந்திய தொழிலாளர் கொள்கையின் உண்மையான திசையையும் தீர்மானிக்கப் போகிறது.
மனு ஸ்மிருதி போன்ற பண்டைய நீதிதான் தனது அரசின் தொழிலாளர் நீதி என்று பிரகடனப்படுத்திய பாஜக அரசிடம் நியாயமான பதிலை எதிர்பார்க்க முடியாது. அதே நேரத்தில் தொழிலாளர் உரிமைகள் எந்தக் காலத்திலும் ஆட்சியாளர்கள் தாமாக ஒப்புக்கொண்டதில்லை. தொழிலாளி வர்க்கத்தின் உறுதியான, தொடர்ச்சியான போராட்டங்களே புதிய உரிமைகளையும் புதிய பாதுகாப்புகளையும் வென்றெடுத்துள்ளன. செயலிசார் தொழிலாளர்களின் (கிக்) உரிமைகளும் அதற்கு விதிவிலக்கல்ல.
ஐ.எல்.ஓ மாநாட்டில் இந்திய அரசு விலகி நின்றிருக்கலாம். ஆனால் செயலிசார் தொழிலாளர்களின் உரிமைகளுக்கான போராட்டத்தில் இந்திய தொழிலாளர் இயக்கம் விலகி நிற்க முடியாது.