
நாம் வரலாற்று வெற்றி அடைந்ததற்கு, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூரியகாந்திற்கு முதலில் நன்றி தெரிவிப்போம்.
டெல்லி ஜந்தர் மந்தர் பல்வேறு விதமான, பல்வேறு தரப்பினரின், போராட்டங்களைப் பார்த்துள்ளது. ஏன் மாணவர்களின் போராட்டங்களையும் கண்டுள்ளது. ஆனால் செயற்கை நுண்ணறிவு யுகத்தில், இன்றைய மாணவர்கள் தொழில்நுட்பத்தை கையாள்வதில் கைதேர்ந்தவர்களாக இருப்பதால் போராட்டத்தை – கொண்டாட்டமாகவும், காவல்துறை அடக்குமுறையை – நையாண்டியாகவும் மாற்றியதை இப்போதுதான் பார்க்கிறோம். வழமையான போராட்ட வடிவங்கள், முழக்கங்கள், உடல் மொழி என அனைத்திலும் மாற்றம் கண்டுள்ளது.
இணையத்திலேயே மூழ்கிக் கிடக்கும் தலைமுறை என்ற விமர்சனத்திற்கு உள்ளான ஜென் ஜி மற்றும் ஜென் ஆல்ஃபா தலைமுறையினர், முந்தைய தலைமுறையைவிட வேகமாக அரசியல் மயப்படுபவர்களாகவும், வேகமாக கற்றுக் கொள்ளக் கூடியவர்களாகவும் உள்ளனர்.
பெற்றோரிடமோ ஆசிரியர்களிடமோ அடி வாங்காமல் வளர்ந்த தலைமுறையினராக இருந்த போதிலும், காவல் துறையினரின் லத்திகளுக்கு அஞ்சாமல் எதிர்த்து நின்றனர். இந்த அஞ்சாமையும், துணிச்சலும், வேகமும் வெறும் தொழில் நுட்ப அறிவினால் மட்டும் வந்ததல்ல. பொதுக் கல்வி, பொதுத்துறை போன்ற சோசலிச கட்டுமானங்கள் 90 களுக்குப் பிறகு, நவ தாராள மயமாக்கலால் பலவீனம் அடைந்ததால் ஏற்பட்ட சமூக நெருக்கடிகளுக்கு அதிகம் பாதிப்புக்கு உள்ளானவர்களே ஜென் ஜி. முந்தைய தலைமுறையினர் நவ தாராளமயமாக்கலினால் உருவான தற்காலிக பயன்களை அனுபவித்தவர்கள். ஜென் ஜி-யோ கல்வி வேலை வாய்ப்பு என அனைத்துக்கும் போட்டியிட நிர்பந்திக்கப்பட்டவர்கள்.
தற்போது உள்ள போட்டி மற்றும் தகுதி தேர்வுகள் அனைத்தும் கேட்ஸ் ஒப்பந்தத்தில் இருந்து உருவானது. படித்த படிப்புக்கேற்ற வேலைவாய்ப்பு கிடைக்காததால் பெரும் பகுதி இளைஞர்கள் “கிக்” வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஜே.இ.இ, நெட், டெட், யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட அனைத்து போட்டி தேர்வுகளுக்கும் லட்சக்கணக்கான இளைஞர்கள் தங்களைத் தயார்படுத்தி வருகின்றனர்.
இவ்வளவு சமூக நெருக்கடிகளுக்கு மத்தியில், உழன்று வரும் இளைஞர்களை, வேலையின்மைக்கு எதிராகப் போராடுபவர்களை, கொச்சைப்படுத்தும் விதமாக கரப்பான் பூச்சிகள் என்று தலைமை நீதிபதி சூரியகாந்த் பேசியதே நாடு முழுக்க இளைஞர்களைக் காயப்படுத்தி கோபப்படுத்தியது.
கரப்பான் பூச்சி என்ற சொல்லை சமயோஜித அறிவு மற்றும் சமூக வலைதள பயன்பாட்டுத் திறனால் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி என்ற இன்ஸ்டாகிராம் கணக்கை அஜித் தீப்கே தொடங்கினார். தொடங்கிய சில மணி நேரங்களிலேயே மிகவும் பிரபலமாகத் தொடங்கியது. பாஜகவின் சமூக வலைதளக் கணக்குகளைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையை சிஜேபியின் கணக்கு தாண்டியது. அபிஜித் சமூக வலைதள கருத்து பதிவிடுவதோடு மட்டும் நிற்காமல் ஒரு அடி முன்னெடுத்து வைத்து போராட்ட அறைகூவல் விடுத்தார்.
ஜூன் 6ஆம் தேதி முதல் போராட்டத்தை நடத்தியது சிஜேபி. இந்தப் போராட்டத்தில் சில ஆயிரக்கணக்கானோர் பங்கெடுத்தனர். இதனைத் தொடர்ந்து லக்னோ, ஜெய்ப்பூர், பூனே, நாக்பூர், பெங்களூரு உட்பட பல்வேறு நகரங்களுக்கும் அபிஜித் நேரடியாகச் சென்று போராட்டத்தில் கலந்து கொண்டார். இதன் பின்னர் தான் தொடர் காத்திருப்புப் போராட்டத்தை அறிவித்து ஜூன் 20 ஆம் தேதி தொடங்கினர். முதல் ஒரு வாரம் நாள் முழுவதும் வந்து சென்றவர்கள்; தொடர்ந்து இருந்தவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தில் மட்டுமே இருந்தது.
சோனம் வாங்சுக் உண்ணாவிரதம் தொடங்கி நாட்கள் நகர நகர, இளைஞர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியது. அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் உள்ளிட்ட இடதுசாரி மாணவர் அமைப்புகள் ஜூன் 6ஆம் தேதியும் அதேபோல் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் முதல் நாளிலிருந்தும் பங்கெடுத்து வந்தோம். பல்வேறு சந்தர்ப்பங்களில் பாஜக, சங்கப் பரிவார் கூட்டத்தினர் சமூக வலைதளங்களில் இந்தப் போராட்டம் இடதுசாரி அமைப்புகளால் தூண்டப்பட்டு, வழிநடத்தப்பட்டு வருகிறது என்று திரும்பத் திரும்ப பரப்பி வந்தனர், ஆசாதி (விடுதலை) முழக்கத்தை முன்வைக்கின்றனர், பைஸ் அகமது பைஸின் ஹம் தேக் கேங்கே (நீங்கள் வீழ்வதை நாங்கள் பார்க்கத்தான் போகிறோம்) கவிதை வரிகள் பாடப்படுவதாகவும் குற்றம்சாட்டி வந்தனர்.
காக்ரோச் இயக்கத்தில் இடதுசாரி அமைப்புகள் எப்படி ஒருங்கிணைந்தனர் என்பது பலராலும் விவாதிக்கப்பட்டு வருகிறது. காக்ரோச் இயக்கம் எழுப்பிய பிரச்சினை கடந்த 12 ஆண்டுகளாக, மோடி ஆட்சி காலத்தில் இடதுசாரி அமைப்புகள் தொடர்ந்து போராடி வருவதே. நீட் வினாத்தாள் கசிவிற்கு பொறுப்பெடுத்தும், 20 மாணவர்களின் மரணத்திற்கு பொறுப்பெடுத்தும் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை எல்லோராலும் முன்வைக்கப்பட்டதே.
இன்னும் கூடுதலாக கல்வியில் எழுந்துள்ள பிரதான பிரச்சனைகளான தேசிய கல்விக் கொள்கை, நீட், கியூட் போன்ற மையப்படுத்தப்பட்ட தேர்வுகளை முழுமையாக ரத்து செய்ய வேண்டும், வி.பி.எஸ்.ஏ மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து போராடி வருகிறோம். காக்ரோச் இயக்கத்தில் இடதுசாரி மாணவர் அமைப்புகள் பிரதான பாத்திரம் வகித்ததைப் பொது மாணவர்கள் ஏற்றுக் கொண்டதற்கான காரணம், நாடு முழுவதும் கல்வி வளாகங்களில் தொடர்ந்து இயக்கங்களை நடத்தி வந்ததே ஆகும்.

தொடர் காத்திருப்புப் போராட்டம் என்பதால், இரவு பகலாக மாறி மாறி மாணவர்கள் வருகை தந்தனர். மாணவர்களை அரசியல்படுத்த ஒவ்வொரு அமைப்பும் வெவ்வேறு உத்திகளைக் கையாண்டனர். அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தினர் இலவச நூலகத்தை ஜந்தர் மந்தரில் அமைத்தோம். இந்தப் புதிய சிந்தனை அனைவராலும் பாராட்டப்பட்டது. டைம்ஸ் ஆப் இந்தியா, டெக்கான் கிரானிக்கல், டெலிகிராப் உள்ளிட்ட ஊடகங்கள் இச்செய்தியை வெளியிட்டன. நூலகத்தில் இருந்து பகத்சிங்கின் – நான் ஏன் நாத்திகன்?, கோவிந்த் பான்சாரேவின் – சிவாஜி யார்?, அம்பேத்கரின் – சாதி ஒழிப்பு ஆகிய நூல்கள் மாணவர்களால் அதிகமாக எடுத்து வாசிக்கப்பட்டன.
மாணவர் – இளைஞர் பெருமன்ற தோழர்களால் பஞ்சாப் மாநிலம் ஹூசைனிவாலாவில் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் இருந்து மண் எடுத்துவரப்பட்டு ஜந்தர் மந்தரில் சோனம் வாங்சுக்கிடம் ஒப்படைக்கப்பட்டது.

டெல்லியில் தற்போது புழுக்கம் நிலவுகிறது. இந்தக் கால நிலையிலும் இளைஞர்கள் இரவு பகலாகத் தங்கிப் போராட்டத்தை முன்னெடுத்தனர். கடந்த ஒரு மாதத்தில் பலமுறை காவல்துறையினர் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்திக் கொண்டே இருந்தனர். திடீரென மழை பெய்ததால் நூலகத்திற்கு கூடாரம் அமைக்கவும் காவல்துறையினர் அனுமதிக்கவில்லை. ஒவ்வொரு முறையும் போராடித்தான் தடைகளைத் தகர்த்து போராட்டத்தை முன்னெடுத்து வந்தோம்.
போராட்டத்தின் தொடக்கத்தில், எந்த அரசியல் கட்சியும் வருகை தராத நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்களே முதலில் வந்து ஆதரவு தெரிவித்தனர். சோனம் வாங்சுக்கின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசம் அடைந்ததால், ஜந்தர் மந்தரில் இளைஞர்கள் மேலும் மேலும் குவியத் தொடங்கினர்.
ஜூலை 18ஆம் தேதி காலை, சோனம் வாங்சுக்கை ஜந்தர் மந்தர் போராட்டக் களத்தில் இருந்து காவல்துறை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி, மருத்துவமனைக்கு தூக்கிச் சென்ற செய்தி, இளைஞர்களை மேலும் கொதிப்படைய வைத்தது. ஏற்கனவே 20ஆம் தேதி நாடாளுமன்றப் பேரணிக்கு அறைகூவல் விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் 18 ஆம் தேதி மாலையிலிருந்தே கூட்டம் ஜந்தர் மந்தரில் நிரம்பி வழியத் தொடங்கியது. 19ஆம் தேதியும் கூட்டம் சாரை சாரையாக வந்து கொண்டே இருந்தது. அருகாமை மாநிலங்களில் இருந்து அதிகப்படியாகவும், நாட்டின் எல்லாப் பகுதிகளில் இருந்தும் தன்னெழுச்சியாக இளைஞர்கள் குவியத் தொடங்கினர்.
இப்படி லட்சக்கணக்கானோர் திரண்டனர். ஒன்றிய அரசும் உளவுத்துறையும் இதனை எதிர்பார்க்காததால், முன்தயாரிப்பு இல்லாமல் காவல்துறை திணறிக் கொண்டிருந்தது.
நாடாளுமன்றப் பேரணி தொடங்கியபோது சுவாசிப்பதற்குக்கூட இடமில்லாத அளவுக்கு மாணவர்கள் – இளைஞர்கள் குவிந்தனர். இணையம் மற்றும் தொலைத்தொடர்பு சேவை முழுமையாக முடக்கப்பட்டது.
அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் ஏறத்தாழ 3000க்கும் மேற்பட்ட பொதுவான மாணவர் இளைஞர்களையும் திரட்டி இருந்தோம். குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர்.
மகாராஷ்டிரா மாநில தலைவர் வைபவ், மாநிலச் செயலாளர் பிரதிக்ஷா ஆகியோர் தொடர்ந்து மராட்டிய உளவுத்துறையினரால் கண்காணிக்கப்பட்டு வந்தனர். டெல்லியிலும் அவர்கள் முகாமிட்டிருந்தனர். எனவே பேரணியில் கூட்ட நெரிசலில் நாங்கள் அனைவரும் சிதறப்பட்டிருந்ததால், அவர்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று மூன்று மணி நேரம் கடுமையாகத் தாக்கினர். பின்னர் தகவல் தெரிந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா அவர்கள் நேரடியாகச் சென்று காவல்துறையிடம் சண்டையிட்டு வைபவ், பிரதிக்க்ஷா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மாணவர்களை விடுவிக்க வைத்தனர்.
சன்சத் சலோ பேரணியில் லட்சக்கணக்கானோர் திரண்டிருந்ததால் காவல்துறையினரின் தாக்குதலில் பல நூறு பேர் காயம் அடைந்தனர். ஏஐஎஸ்எப் – ஏஐஒய்ஃப் அமைப்பு தோழர்கள் மட்டும் 13 பேர். இதில் சிலருக்கு கையெலும்பு, கால் எலும்பு முறிவு ஏற்பட்டது.
போராடியவர்கள் மீது பெல்லட் குண்டுகள் பயன்படுத்தப்பட்டன. உண்ணாவிரதம் இருந்த மாணவர்கள் மீதும் கண்மூடித்தனமான தடியடிகள் நடத்தப்பட்டன. மாணவிகளிடம் தவறான முறையில் காவல் துறையினர் நடந்து கொண்டனர்.
தடியடி நடத்தி சில மணி நேரங்களிலேயே ஒட்டுமொத்தக் கூட்டத்தையும் கலைத்து விட்டதாக ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவும், டெல்லி காவல்துறையும் பெருமூச்சு விட்டனர். ஆனால் கலைக்கப்பட்ட இளைஞர்கள், அன்று மாலையே ஜந்தர் மந்தரில் மீண்டும் குவியத் தொடங்கியது தான் பாசிச பாஜக அரசால் எதிர்பார்க்கப்படாதது.
டெல்லியில் நடத்தப்பட்ட தாக்குதலை ஊடகங்கள் மூலம் அறிந்து கொண்ட இளைஞர்கள், நாடு முழுவதும் தன்னெழுச்சியான போராட்டங்களில் ஈடுபடத் தொடங்கினர்.
இங்கிருந்து தான் ஜென் – ஜி முந்தைய தலைமுறையிடம் இருந்து எப்படி மாறுபட்டவர்கள் என்பதை வெளிப்படுத்தத் தொடங்கினர்.
தங்களை அடித்த காவல்துறையினரை நையாண்டி செய்யும் விதமாக நூற்றுக்கணக்கான காணொலிகளைப் பதிவிட தொடங்கினர். தங்களை அடித்த காவல்துறையினரை நேருக்கு நேர் சந்தித்து, “நாங்கள் போராடுவது உங்கள் குழந்தைகளுக்கும் சேர்த்து தான். ஏன் உங்கள் குழந்தைகளாக எங்களைப் பார்க்க முடியவில்லை?” என்று கேள்வி எழுப்பினர். இதனை எதிர்கொள்ள முடியாமல் காவல்துறையினர் தலைகுனிந்து, வெட்கப்பட்ட காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவின.
ஊடகங்களையே சந்திக்காத நமது பிரதமர் நரேந்திர மோடி, ஜென்சிகளிடம் பணிந்து விரைவு நீதிமன்றத்தை உருவாக்குவேன் என்கிற ஒரு குறும் வீடியோவை வெளியிட்டது மிகவும் நகைப்புக்குரியதாக மாறியது.
ஜந்தர் மந்தர் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு தன்னார்வலர்கள் உணவும் குடிநீரும் மூன்று வேளையும் கொடுத்துக் கொண்டே இருந்தனர். பாஜக ஆட்சியாளர்களால் இதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், பாகிஸ்தான், சீனாவிடம் இருந்து நிதி வருகிறது என்ற குற்றச்சாட்டை, பழைய பாணியில் வாட்ஸ்ஆப் பல்கலைக்கழகத்தில் பரப்பிக் கொண்டே இருந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் வெயில் புழுக்கத்தில் அவதிப்படாமல் இருப்பதற்காக முகம் தெரியாத உணர்வாளர்கள், மணிக்கணக்கில் விசிறிக்கொண்டே இருந்தது வியப்பாக இருந்தது.
காக்ரோச் கட்சியினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை அரசியல் ஆழமானதா?, கல்விப் பிரச்சனைகளுக்கு முழுமையான தீர்வை ஏற்படுத்தி விடுமா? என்பன போன்ற விவாதங்கள் நடைபெற்று வந்தன. ஆனால் தர்மேந்திர பிரதான் பதவி விலகல் என்பது ஒட்டுமொத்த இந்தியாவையும் பாசிச பாஜக அரசுக்கு எதிராக ஒன்று திரட்டி இருக்கிறது. உலக அரங்கில் தன்னை விஸ்வகுருவாக நிலை நிறுத்தி வந்த நரேந்திர மோடியின் பிம்பத்தை சுக்கு நூறாக உடைத்து எறிந்திருக்கிறது.
தேர்தல் ஆணையம், வருமான வரித்துறை, நீதித்துறை என அனைத்தையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டோம் என்ற இறுமாப்பில் இருந்த மோடி – அமித்ஷாவுக்கு முதல் சவுக்கடியை காக்ரோச் இயக்கம் கொடுத்திருக்கிறது. இந்தப் போராட்டத்தின் மிக முக்கியமான வெற்றியாக கருதப்படுவது மாணவர்கள் அரசியல் மயப்படுத்தப்பட்டதுதான்.