அதிகார நாற்காலியிலிருந்து மட்டுமல்ல, ஆர்.எஸ்.எஸ்.ஸின் அழுகிய சிந்தனைகளிலிருந்தும் விடுதலை வேண்டும்
டெல்லிப் பேரணியில் அமர்ஜித் கவுர் முழக்கம்

போராட்டம் நமது வாழ்வின் பிரிக்க முடியாத பகுதி. மக்களின் உரிமைகள் மறுக்கப்படும் போதெல்லாம், அடிமட்டத்திலிருந்து தொடங்கி, மாவட்ட, மாநில, தேசத் தலைநகர் என நாம் போராடாத இடம் எதுவுமில்லை. போராடித்தான் இந்த நாட்டின் விடுதலையை வென்றோம்.
ஆனால் இப்போது ஆட்சியில் இருப்பவர்களுக்கு போராட்டம் என்றாலே கசக்கிறது. ‘ஆந்தோலன்ஜீவி’ (போராட்டத்தையே வாழ்க்கையாகக் கொண்டவர்கள்) எனக் கேலி செய்தார்கள். ‘ஒட்டுண்ணிகள்’ என்றார்கள். போராட்டம் மேலும் தீவிரமடைந்தபோது ‘பயங்கரவாதிகள்’ என்றார்கள். போராட்டம் தொடர்ந்தபோது ‘தேசத்துரோகிகள்’ என்றார்கள். அதற்குப் பிறகு ‘நகர்ப்புற நக்சல்கள்’ என்றார்கள். அதற்கும் நாம் அசையவில்லை என்றதும், இப்போது செங்கோட்டையின் மேலிருந்து பிரதமர் திமாகி (அறிவார்ந்த) நக்சல்கள்’ என்று கூறியிருக்கிறார்.
இந்த ‘மாற்றத்துக்கான பேரணி’யை ராம்லீலா மைதானத்தில் எதற்காக நடத்துகிறோம்? இந்திய மக்களான நாம் துன்பப்படுகிறோம்; குழப்பத்திலும் இருக்கிறோம். அதே நேரத்தில் நமக்குள் பெரும் எழுச்சியும் இருக்கிறது; தெளிவான சிந்தனையும் இருக்கிறது. இன்று அதிகார நாற்காலியில் அமர்ந்திருக்கும் இந்த அரசு மிகவும் ஆபத்தானது என்பதை நாம் புரிந்துகொண்டிருக்கிறோம்.
யாருக்கு ஆபத்தானது?
நாட்டுக்கும், ஒட்டுமொத்த மக்களுக்கும், நமது இசைவான பன்முகக் கலாச்சாரத்துக்கும், நமது சிந்தனைக்கும், நமது அறிவியல் பாதைக்கும், சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் இந்த அரசு ஆபத்தானது.
அதனால்தான் இந்தப் பேரணி. இது பணம் தந்து கூட்டப்பட்டதல்ல. கிராமம் கிராமமாக நடைப்பயணங்கள் மேற்கொண்டோம். சைக்கிள் பேரணிகளை நடத்தினோம். மக்களிடையே சென்றோம். துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தோம். மக்களின் துயரங்களைக் கேட்டோம். அவர்களது துயரங்களைப் பகிர்ந்து கொண்டோம்.
அவர்களிடம், “நாங்கள் டெல்லிக்குச் செல்கிறோம்” என்று கூறினோம். மக்களின் நியாயமான கோரிக்கைகளை இந்த அரசிடம் வைத்தால், அதை நிறைவேற்றும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை.
அதனால்தான் சொல்கிறோம்: “நாடு மாற்றத்தை விரும்புகிறது.”

ஏன் மாற்றம் அவசியம்?
மாற்றம் வேண்டும் என்று நாடு கேட்கிறது. தொழிலாளர்கள், விவசாயிகள், பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள், பழங்குடியினர், பல நூற்றாண்டுகளாக சாதி, வர்ணம் என்ற பெயரில் நீங்கள் ஒடுக்கி வைத்திருக்கும் அத்தனை மக்களும் மாற்றத்தைக் கேட்கிறார்கள்.
2014-ல் நரேந்திர மோடி முதல்முறையாக அதிகார நாற்காலியில் அமர்ந்தபோது, “இது வெறும் ஆட்சி மாற்றம் அல்ல. ஆபத்தான மாற்றம். நாடு முழுவதற்கும் அபாய எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டுள்ளது” என்று நமது கட்சி கூறியது.
2015-ல் புதுச்சேரியில் நடைபெற்ற கட்சிப் பேராயத்தில் இதனை விரிவாக ஆய்வு செய்தோம். அவையனைத்தும் உண்மை என்பதைக் காலம் நிரூபிக்கிறது. சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரின் மீதும் தாக்குதல்கள் அதிகரித்திருந்தன.
நமது கல்வியின் மீது தாக்குதல், அறிவுஜீவிகள் மீது தாக்குதல், கலைஞர்கள் மீது தாக்குதல், பண்பாட்டுச் செயல்பாட்டாளர்கள் மீது தாக்குதல், தலித் மக்களிடமும் பழங்குடியின மக்களிடமும் பணியாற்றியவர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டனர்.
நிலைமை மேலும் மோசமாகிக் கொண்டிருக்கிறது. போராட வேண்டிய அவசியம் அதிகரித்துள்ளது. போராட்டங்களை தீவிரப்படுத்த வேண்டும்.
வெள்ளையரின் கொள்ளை
நமது நாட்டின் செல்வத்தை, இயற்கை வளங்களைக் கண்டுதான், பிரிட்டிஷ்காரர்கள், போர்த்துக்கீசியர்கள், பிரெஞ்சுக்காரர்கள், ஜெர்மானியர்கள் நமது நாட்டுக்குள் நுழைந்தார்கள். அந்தக் காலத்தில் இருந்த ‘கம்பெனி பகதூர்’ ஆட்சி படிப்படியாக நேரடியாக விக்டோரியா மகாராணியின் ஆட்சியாக மாறியது.
கம்பெனி ஆட்சிக் காலத்தில் நமது விவசாயிகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அவர்களது நிலங்கள் பறிக்கப்பட்டன.

நமது பழங்குடியின மக்களுக்கு உரிமையாக இருந்த நீர், காடு, நிலம் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டு, நாட்டின் இயற்கைச் செல்வங்களைக் கொள்ளையடிப்பதற்கான வழி உருவாக்கப்பட்டது.
பழங்குடியினர் போராடினர். ஏராளமான தலைவர்கள் உருவானார்கள். அவர்களில் பிர்சா முண்டா மிகவும் புகழ்பெற்றவர்.விவசாயிகள் போராடினர். தொழிலாளர்கள் போராடினர். 14 மணி நேரம், 15 மணி நேரம், 16 மணி நேரம், 18 மணி நேரம் உழைத்தும் வீட்டில் அடுப்பு எரியாத நிலை! விவசாயிகள், தொழிலாளர்கள், பழங்குடியினர் மிகப்பெரிய அளவில் ஆங்கிலேயர்களுக்கு எதிராகக் களத்தில் இறங்கினர்.
இந்த விடுதலைப் போராட்டத்தில் கம்யூனிஸ்டுகளின் இரத்தம் சிந்தப்பட்டுள்ளது. நமது தொழிலாளர்கள், விவசாயிகளின் இரத்தம் சிந்தப்பட்டுள்ளது.
நமது இளைஞர்கள் தூக்குமேடையை முத்தமிட்டார்கள். நெஞ்சில் துப்பாக்கிக் குண்டுகளை ஏற்றுக்கொண்டார்கள்.
கம்யூனிஸ்ட் கட்சி உருவான காலகட்டத்தில், இந்தப் பூமியில் சோசலிச நாடாக உருவெடுத்த “சோவியத்”தின் புரட்சி உலகம் முழுவதும் பேசப்பட்டது.
அதன்பிறகு உலகம் முழுவதும் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் கம்யூனிஸ்ட் இயக்கங்களுக்கு மிகப்பெரிய வலிமை கிடைத்தது.
வால்பிடித்த ஆர்.எஸ்.எஸ்.
நமது கடற்படை வீரர்கள் போராட்டத்தில் இறங்கியபோது, அங்கே முஸ்லிம் லீக் கொடி இருந்தது; மூவர்ணக் கொடி இருந்தது; கம்யூனிஸ்டுகளின் செங்கொடியும் சேர்ந்தே பறந்தது. அப்போது ஆர்எஸ்எஸ் எங்கே இருந்தது?
இந்தியாவின் துணிச்சலான தொழிலாளர்களும் விவசாயிகளும் செங்கொடியை ஏந்திப் போராடியபோது, ஆர்எஸ்எஸ் ஆங்கிலேயர்களின் ‘பிரித்தாளும்’ கொள்கையை எடுத்துக்கொண்டு செயல்பட்டுக் கொண்டிருந்தது.
இந்த மேடையில் இருந்து நான் சொல்ல விரும்புகிறேன்:
மிஸ்டர் மோடி, அமித் ஷா, மோகன் பகவத்! இதைக்கேட்டுக்கொள்ளுங்கள்!
உங்கள் முதல் குருவான கோல்வால்கரின் கருத்துகளிலிருந்து, நீங்கள் ஹிட்லரை ஏற்றுக்கொள்கிறீர்கள். நாசிசத்தை ஏற்றுக்கொள்கிறீர்கள். பாசிசத்தை ஏற்றுக்கொள்கிறீர்கள். இந்தியாவில் இந்து ராஜ்ஜியத்தை மட்டுமே ஏற்றுக்கொள்கிறீர்கள்.
அதனால்தான் கல்வியை அழிக்கிறீர்கள். உங்களுக்கு சிந்திக்கும் மனிதர்கள் தேவையில்லை. கேள்வி கேட்பவர்கள் தேவையில்லை. சந்தேகம் எழுப்புபவர்கள் தேவையில்லை. ஆர்வத்துடன் அறிய விரும்புபவர்கள் தேவையில்லை. அறிவியல் சிந்தனை கொண்டவர்கள் தேவையில்லை.
தலையில் வைக்கோல் மட்டுமே நிரப்பப்பட்டு, கண்மூடித்தனமாகப் பின்பற்றுபவர்களாக இருப்பவர்களைத்தான் விரும்புகிறீர்கள்.
இந்தியாவை பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய மனுஸ்மிருதி காலத்துக்குத் தள்ளிவிட அவர்கள் விரும்புகிறார்கள்.
1925-ல் ஆர்எஸ்எஸ் உருவாக்கப்பட்டபோது அவர்கள் கேட்டது என்ன?
“இந்த நாட்டை இரண்டு துண்டுகளாகப் பிரித்தாலும் பரவாயில்லை; பல துண்டுகளாகப் பிரித்தாலும் பரவாயில்லை; எங்களுக்கு எங்கள் இந்து ராஜ்ஜியம் வேண்டும்” என்பதுதான் அவர்களின் அரசியல். சகோதரத்துவம், நட்பு, கூட்டு மரபு, எதுவும் அவர்களது அகராதியிலயே இல்லை.
ஆர் எஸ் எஸ் தலைவர் ஹெட்கேவாரிடம், “ உங்கள் போராட்டம் யாருக்கு எதிராக?” என்று கேட்டபோது,“முஸ்லிம்களுக்கு எதிராக; கிறிஸ்தவர்களுக்கு எதிராக; சிவப்புக் கொடிக்கு எதிராக” என்றார்.
எங்களை ஒழிக்க முடியாது
நரேந்திர மோடி, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தனது பாஜகவின் உயர்மட்டத் தலைவர்கள் கூட்டத்தில், “இந்த கம்யூனிஸ்டுகள் ஆபத்தானவர்கள். இந்தச் சிவப்புக் கொடியை ஏந்துபவர்கள் ஆபத்தானவர்கள்” என்று கூறினார்.
மிஸ்டர் நரேந்திர மோடி! நீங்கள் யாரை அழிக்க விரும்புகிறீர்கள் என்பது எங்களுக்கு ஆரம்பத்திலிருந்தே தெரியும். அதனால்தான் இன்று நாங்கள் இங்கு வந்து சொல்லுகிறோம்:
“உங்களை அரசியல் ரீதியாக வீழ்த்துவோம்!”
நீங்கள் செங்கொடிக்கு சவால் விடுக்கிறீர்கள். மூவர்ணக் கொடியை காலால் மிதித்தவர்கள் நீங்கள்தான். அதை எரித்தவர்கள் நீங்கள்தான்.
அதனால்தான் ‘நகர்ப்புற நக்சல்’ என்கிறீர்கள் ‘திமாகி (மூளையுள்ள) நக்சல்’ என்கிறீர்கள். அட, மூளை இருந்தால்தானே ஏதாவது சிந்திக்க முடியும்!
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய சிந்தனையை மீண்டும் கொண்டுவரவும், அறிவியல் சிந்தனையை அழிக்கவும் முயலும் அரசாங்கம் இருக்கக்கூடாது!
இப்போது இது இளைஞர்களின் இந்தியா. நாட்டின் மக்கள் தொகையில் 70 சதவீதம் பேர் 35 வயதுக்குக் கீழே உள்ளவர்கள். இந்தியா இளமையான நாடு.அது நமது மூலதனம். அது நமது வலிமை.நமது பொருளாதாரத்துக்கு மிகப்பெரிய வளர்ச்சியைத் தரக்கூடிய சக்தி.
ஆனால் இந்த இளைஞர்களைப் படிக்க விடாமல் தடுத்தால், அவர்களை முன்னேற விடாமல் செய்தால், அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்காமல் இருந்தால்,
அவர்கள் ஒரு வெடிமருந்துக் கிடங்காக மாறிவிடுவார்கள்.
அதனால்தான் இந்த நாட்டின் மிகப்பெரிய இளைஞர் சக்தி சரியான திசையில் செல்ல வேண்டும். மாற்றம் எந்தத் திசையில் செல்ல வேண்டும் என்பதைத் தீர்மானிக்க வேண்டும்.
முன்னேறுவோம்
அதற்காகத்தான் இந்தப் பேரணி. நம்மால் சும்மா உட்கார்ந்திருக்க முடியாது. இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் முதன்முதலில் தொடங்கிய 1925-ல்தான் ஆர்எஸ்எஸ் உருவானது. அப்போதிருந்தே அவர்களுடன் நமக்கு மோதல் இருந்து வருகிறது.
உங்கள் வலிமையை நீங்கள் உணருங்கள். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை இன்னும் வலுப்படுத்த வேண்டும். மக்கள் அமைப்புகளை வலுப்படுத்த வேண்டும்.
அதிகார நாற்காலியிலிருந்து மட்டும் விடுதலை போதாது. ஆர்எஸ்எஸ் கொண்டிருக்கும் அந்த முழுமையான சிந்தனை முறையிலிருந்தே விடுதலை வேண்டும்.
சிந்தனையுடன் கூடிய மாற்றத்திற்காக; அறிவியல் பாதைக்காக; நீங்கள் முழங்கும் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேறக்கூடிய ஒரு புதிய அமைப்பை நோக்கி, ஒரு முழுதான சோசலிச அமைப்பை நோக்கி, முன்னேறுவதற்கான பாதை இது.
மாற்றம் அவசியம்!