இந்தியா

எது “தொழில்” என்பதற்கான உச்சநீதிமன்றத் தீர்ப்பு: தொழிலாளர் நலன்களைப் பறிக்கக்கூடாது

அமர்ஜித் கவுர், பொதுச் செயலாளர், ஏஐடியுசி

உத்தரப்பிரதேச அரசு – எதிர்- ஜெய்பீர்சிங் என்ற வழக்கில், தொழில் தகராறுகள் சட்டத்தின் கீழ் “தொழில்” என்பதற்கான வரையறையைப் பற்றி உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு வழங்கியுள்ள தீர்ப்பை ஏஐடியுசி தீவிரமாகக் கவனத்தில் கொள்கிறது.

ரத்து செய்யப்பட்டுவிட்ட தொழில் தகராறுகள் சட்டத்தின்கீழ் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு, பெங்களூரு குடிநீர் வடிகால் வாரிய வழக்கில் உருவாக்கப்பட்ட சட்டக் கட்டமைப்பை பெரும்பான்மை நீதிபதிகள் தொடர்ந்து ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆனால், “தொழில்” என்பதன் வரையறையை மறுவடிவமைக்க அவர்கள் முடிவு எடுத்துள்ளனர்.

புதிதாக நடைமுறைப்படுத்தப்படும் தொழிலாளர் உறவுகள் சட்டத் தொகுப்பின் 2(பி)-வது பிரிவு “தொழில்” என்பதற்கு வேறொரு வரையறை வகுத்துள்ளது. அதுபற்றி தீர்ப்பு எந்த விளக்கமும் தரவில்லை. எனவே, இனிவரும் வழக்குகளுக்கு ‘தொழில்’ என்பதன் வரையறை என்ன என்பது தொடர்பான மிக முக்கியமான கேள்விகளைத் தீர்க்கப்படாத நிலையிலேயே விடப்பட்டுள்ளன.

ஏஐடியுசி குறிப்பாக நீதியரசர் பி.வி. நாகரத்னா அவர்களின் மாறுபட்ட கருத்தைச் சுட்டிக்காட்டுகிறது. அவரது கருத்தில் வலுவான தொழிலாளர் நல மற்றும் அரசியல் பார்வை வெளிப்படுகிறது. ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளாக நிலைபெற்றுள்ள நீதித்துறை விளக்கத்தை மீண்டும் திறப்பதற்கான அவசியம் என்ன என்று நீதியரசர் நாகரத்னா சரியாகவே கேள்வி எழுப்பியுள்ளார்.

குறிப்பாக, தொழில் தகராறுகள் சட்டத்திற்குப் பதிலாக தொழிலாளர் உறவுகள் குறியீடு ஏற்கனவே வந்துவிட்ட நிலையில், இத்தகைய மறுபரிசீலனை அவசியமா என்ற கேள்வியை அவர் எழுப்பியுள்ளார். மேலும், தனியார்மயமாக்கலையும், பொதுத்துறை நடவடிக்கைகள் தனியார் கைகளுக்கு மாற்றப்படுவதால் தொழிலாளர்களுக்கு ஏற்படும் பாதுகாப்பின்மையையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நீதியரசர் பாக்சி, இந்த வழக்கை விசாரிப்பதற்கான சட்டப்பூர்வ காரணங்கள் உள்ளதை ஏற்றுக்கொண்ட போதிலும், பெரும்பான்மை நீதிபதிகள் மேற்கொண்ட மறுவடிவமைப்பை நிராகரித்துள்ளார். ஒரு நிறுவனத்தின் அடையாளத்தை மட்டும் கணக்கில் கொள்ளாமல், அந்த நிறுவனம் மேற்கொள்ளும் செயல்பாட்டின் தன்மைக்கே மைய முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று மிகச் சரியாக அவர் வலியுறுத்தியுள்ளார்.

புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளின் பின்னணியில் அவரது அணுகுமுறை பொருத்தமானது. ஏனெனில், ஒரு தொழில், இறையாண்மைச் சார்ந்த, தொண்டு, சமூக மற்றும் கொடைப் பண்புள்ள நடவடிக்கைகள் தொடர்பானதாக இருந்தால் அது சட்டப்பூர்வமாக தொழில் ஆகாது என்று கூறும்போது, அதில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு எந்த சட்டப்பூர்வ பாதுகாப்பும் இல்லாமல், தொழிலாளர் சட்டங்கள் அவர்களுக்கு பொருந்தாத நிலை உருவாகிவிடும்.

இந்த முக்கியமானக் கேள்விகளை எதிர்கால வழக்குகளுக்குத் தள்ளிவைத்திருப்பது குறித்து ஏஐடியுசி ஆழ்ந்த கவலை கொள்கிறது. தொழிலுறவு சட்டத்தொகுப்பின் 2(பி)-பிரிவில் உள்ள குறுகிய, சட்டத்திலிருந்து விலக்களிக்கிற கட்டமைப்பின் விளைவுகளை எதிர்கொள்வதற்குப் பதிலாக, பெரும்பான்மை நீதிபதிகள் இந்தக் கேள்விகளை எதிர்கால நீதிமன்ற வழக்குகளுக்கு விட்டுவிட்டுள்ளனர்.

இறையாண்மைச் சார்ந்த பணிகள் மற்றும் தொண்டு, சமூக, கொடைப் பண்புள்ள நிறுவனங்களை தொழிலாளர் சட்ட வரையறையிலிருந்து விலக்குவது தொடர்பாக கண்டிப்பான முறையிலும், அரசியலமைப்புக்கு இசைவான முறையிலும் விளக்கப்பட வேண்டும். அரசாங்கத்தின் செயல்பாடுகள் அனைத்தையும் தானாகவே இறையாண்மைச் சார்ந்தப் பணிகள் என்று கூறிவிட முடியாது.

அதேபோல், ஒரு நிறுவனம் “தொண்டு நிறுவனம்” என்ற அடையாளத்தைப் பெற்றிருப்பது மட்டுமே, அதன் ஊழியர்கள் மேற்கொள்ளும் பணியின் தொழில்தன்மையை அழித்துவிட முடியாது.

இந்த முக்கியமான பிரச்சினையைத் தள்ளிப்போடுவது அரசியல் ரீதியாக நடுநிலையான அணுகுமுறை அல்ல. தனியார்மயமாக்கல், பணிகளை வெளிப்புற நிறுவனங்களுக்கு ஒப்படைத்தல் (outsourcing), ஒப்பந்தமயமாக்கல் மற்றும் அரசு–தனியார் கூட்டாண்மை ஆகியவற்றால் பொருளாதாரம் பெருமளவில் மாற்றமடைந்து வரும் சூழலில், தொழிலின் உண்மையான தன்மையிலிருந்து கவனத்தைத் திருப்பி, முதலாளிகளின் நலன்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது தொழிலாளர்களுக்குப் பாதகமாகி விடும்.

இது, நீதிபதிகள் அமர்வின் பெரும்பான்மையினரின் வர்க்கத் தன்மையை வெளிப்படையாக எடுத்துக்காட்டுகிறது. மேலும், பெருநிறுவனங்களுக்கு பெரும் சலுகைகளை வழங்குகிற, அதற்காக தொழிலாளர் நலன்களைப் பறிக்கிற அரசின் கொள்கைகளுக்கு மறைமுகமாக ஒத்திசைந்து செல்வதாகத் தெரிகிறது.

எனவே, தொழிலாளர்களின் சங்க அமைப்புகளை உருவாக்கிக் கொள்ளும் உரிமை மற்றும் கூட்டுபேர சக்தியைக் காட்டிலும், நிறுவன மற்றும் நிர்வாக நலன்களுக்கு ஆதரவாகப் பெரும்பான்மை அணுகுமுறையில், ஒருதரப்பைச் சார்ந்து இருப்பதாக ஏஐடியுசி கருதுகிறது.

தனிப்பட்ட நீதிபதிகளின் நோக்கங்கள் குறித்து நாங்கள் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஆனால், சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள விலக்குகளை உரிய முறையில் ஆய்வு செய்யாமல் விட்டுச்செல்லும் இத்தகைய நீதித்துறை விளக்கத்தின் சமூக விளைவுகள் குறித்து நாங்கள் மிகுந்த வேதனையும், கவலையும் அடைகிறோம். இதை எந்தச் சூழலிலும் புறக்கணிக்க முடியாது.

நீதித்துறையோ, நாடாளுமன்றமோ தங்களை வெளிப்படையாக “மூலதனத்திற்கு ஆதரவானவை” அல்லது “தொழிலாளர்களுக்கு ஆதரவானவை” என்று அறிவிக்கிறதா என்பது பிரச்சினையல்ல.

உற்பத்திச் சாதனங்களைச் சொந்தமாகக் கொண்டிருப்பவர்கள், அவற்றைக் கட்டுப்படுத்துபவர்கள் அல்லது நிர்வகிப்பவர்கள் ஒருபுறமும்; உயிர்வாழ்வதற்காகத் தங்களது உழைப்பை விற்க வேண்டிய நிலையில் இருப்பவர்கள் மறுபுறமும் உள்ளனர். இவர்களுக்கு இடையிலான உறவில், எளியவர்களுக்கு சட்டப்பூர்வமாக எந்தப் பாதுகாப்பும் அவசியமில்லை என்ற கட்டமைப்புச் சார்ந்த சமத்துவமின்மையை சட்ட அமைப்பு அங்கீகரிக்கிறதா?

சமூக, பொருளாதார நீதியை உறுதிசெய்கிற அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கித் தந்துள்ள ஜனநாயகத்தில், தொழிலாளர்களின் சட்டப்பூர்வ நிலை என்னவாக இருக்க வேண்டும் என்பதையும், அவர்கள் சட்டத்தின்கீழ் பாதுகாப்பைப் பெறத் தகுதியுடையவர்களா என்பதையும் முதலாளிகள்தான் தீர்மானிப்பார்கள் என்பதை அனுமதிக்க முடியாது. அவ்வாறு செய்வது அரசியலமைப்புச் சட்டத்தையே முற்றிலும் சிதைப்பதாகும்.

அடிப்படையில் ஒரே மாதிரியான பணியைச் செய்யும் தொழிலாளர்களுக்கு, அவர்களின் வேலை வழங்குபவர் அரசு அமைப்பு, ஒப்பந்ததாரர், தொண்டு நிறுவனம் அல்லது சட்டத்தால் விலக்கப்பட்ட வேறு அமைப்பு என்பதைக் காரணமாகக் கொண்டு சமமான தொழிலாளர் பாதுகாப்பை மறுக்கும் வகையில் தொழிலுறவுச் சட்டத்தொகுப்பு பயன்படுத்தப்படுவதை ஏஐடியுசி உறுதியாக எதிர்க்கிறது.

புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகள், சமூக மற்றும் பொருளாதார நீதி, சமத்துவம், உழைப்பின் கண்ணியம் மற்றும் சங்கம் அமைக்கும் சுதந்திரம் ஆகியவற்றுக்கான அரசியலமைப்புச் சட்ட உறுதிப்பாட்டை பலவீனப்படுத்தும் கருவிகளாக மாற்றப்பட அனுமதிக்க முடியாது.

தொழிலாளர்களுக்கும், மூலதனத்திற்கும் இடையே நிலவும் கட்டமைப்புசார் சமத்துவமின்மையில் போதிய கவனம் செலுத்தாத வகையில், நீதித்துறை வெளிப்படையாக உடைமை வர்க்கச் சார்பை நோக்கி நகர்ந்து வருவது குறித்து ஏஐடியுசி ஆழ்ந்த கவலை தெரிவிக்கிறது.

நீதித்துறை நடுநிலைமை என்பது, தொழிலாளர்களின் கூட்டுச் சக்தியை பலவீனப்படுத்தும் வகையில் சட்டங்களின் நடைமுறை இருப்பது பற்றியும், அது ஏற்படுத்தும் சமூக விளைவுகள் குறித்தும் அலட்சியமாக இருப்பது நீதித்துறையின் நடுநிலையாக இருக்க முடியாது.

தொழிலாளர் உரிமைகள், சமூக நீதி, அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் சமத்துவத்தைப் பாதுகாப்பதில் இந்திய நீதித்துறை பாராட்டத்தக்க பங்காற்றியுள்ளது. இனிமேலும் அது நிறுவன அதிகாரம் மற்றும் பொருளாதாரச் சலுகைகள் கொண்டவர்களின் நலன்களுக்கு அடிபணியக் கூடாது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button