
கிராம சபா முதற்கொண்டு நாடாளுமன்றம் வரை. அமைப்புகள் முதற்கொண்டு அரசியல் கட்சிகள் வரை. தொடக்கப்பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை நிகழ்ச்சி நிரல் என்பது மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
கிராம சபை கூட்டத்தில் எப்பொருள் குறித்து விவாதிக்க உள்ளோம் என்பது குறித்து, கிராம ஊராட்சித் தலைவர் முன்மொழிந்து, வேறு பொருள் சேர்க்கப்பட வேண்டுமா? என கிராம மக்களைக் கேட்டறிந்து, அதன் அடிப்படையில் நிகழ்ச்சி நிரல் உருவாக்கப்படும்.
அதன் அடிப்படையில் முன்மொழிவுகளும், விவாதங்களும் நடைபெற்று இறுதியாக முடிவுகள் மேற்கொள்ளப்படும். இவை எல்லா அமைப்புகளுக்கும் பொருந்தும்.
குறிப்பாக நாடாளுமன்றம், சட்டமன்றம் இவைகளின் கூட்டங்களும், கூட்டங்களில் நடைபெறும் விவாதங்களும், மேற்கொள்ளப்படும் முடிவுகளும் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன.
நாடாளுமன்றம் எனில், ஆண்டின் தொடக்கக் கூட்டத்தின் முதல் நாள் இரு அவைகளின் உறுப்பினர்கள் மத்தியில் குடியரசுத் தலைவர் உரையாற்றுவார். அவரது உரை என்பது ஒன்றிய அரசின் கொள்கை குறித்து விவரிக்கப்படும்.
அதனைத் தொடர்ந்து நிதிநிலை அறிக்கை சட்டத் திருத்தங்கள், புதிய சட்டங்கள் நிறைவேற்றுதல் எனத் தொடரும்.
இவை அனைத்தும் அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்புடன் நடைபெற வேண்டும்.
சட்டப்பேரவை எனில், ஆண்டின் தொடக்கக் கூட்ட முதல் நாளில் அரசின் கொள்கைப் பிரகடனமாக ஆளுநர் உரை, தொடர்ந்து நிதிநிலை அறிக்கை, பின்னர் துறை வாரியான மானியக் கோரிக்கைகள் எனத் தொடரும். நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் கேள்வி-பதில் என்பதும், மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.
இவை எல்லாம் நிகழ்ச்சிநிரல்படியும், உரிய நேரம் ஒதுக்கப்பட்டும் முறையான விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.
நாடாளுமன்ற, சட்டமன்ற அவைகள் நடவடிக்கைகள் குறித்து, சட்டரீதியான வழிகாட்டுதல்கள் உள்ளன.
அவையை நடத்திட தலைவர் அங்கும் உண்டு, இங்கும் உண்டு.
அவைத் தலைவர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவது இன்றி, தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், அவரை ஆளுங்கட்சியில் அவை முன்னவரும், எதிர்க்கட்சித் தலைவரும் அவரை அழைத்துச் சென்று இருக்கையில் அமர வைப்பார்கள்.
அவையின் அனைத்துக் கட்சித் தலைவர்களும் பாராட்டி, புகழ்ந்து பேசுவார்கள்.
ஆளும் கட்சியைச் சேர்ந்தவர் பேரவைத் தலைவராக முன்மொழியப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டாலும், தேர்வான பின்னர், அவர் எக்கட்சியையும் சாராதவராக பணியாற்ற வேண்டும் என்பது ஒரு பொதுவான மரபு!
நமது நாடாளுமன்ற கூட்டம் 2026 ஜூலை 20ஆம் நாள் தொடங்கி ஆகஸ்ட் 13 வரை (விடுமுறை நாட்களை தவிர்த்து) நடைபெற்றது.
இக்கூட்டத் தொடரின் முதல் நாளான ஜூலை 20ஆம் நாள் மாணவர்கள், இளைஞர்கள் பெரும் பேரணி, பேரணிக்கு எதிராக துணை ராணுவப் படை, காவல்துறை, குண்டர்கள் என மாணவர் இளைஞர்கள் மீது நடத்திய கொடூரத் தாக்குதல், காட்டுமிராண்டித்தனமான வன்முறை இவை குறித்து நாடாளுமன்ற இரு அவைகளிலும் விவாதிக்க வேண்டும்.
இதற்கு பொறுப்பான அமைச்சரான உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலளிக்க வேண்டும். கடைசி வரை உள்துறை அமைச்சர் சபைக்கு வரவும் இல்லை, பதிலளிக்க தயாராகவும் இல்லை.
கூட்டம் நடந்தும் எவ்விதப் பயனும் ஏற்படவில்லை, தனக்குள்ள பெரும்பான்மையைப் பயன்படுத்தி, குரல் வாக்கெடுப்பு மூலம் சில மசோதாக்களை நிறைவேற்றிக் கொண்டார்கள்.
இதுதான் ஒன்றிய அரசு மேற்கொள்ளும் முறையாக பின்பற்றப்பட்டு, நாடாளுமன்றம் தொடர்ந்து ஒத்திவைக்கும் நிலையிலேயே முடிந்தது.
நாட்டு மக்களின் பிரச்சனைகள் குறித்துக் கவலைப்படவில்லை, விவாதிக்கவும், முடிவுகள் எடுக்கவும் முடியவில்லை. ஆளும் கட்சியின் அணுகுமுறையால் நாடாளுமன்ற ஜனநாயகம் சீர்குலைந்துள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றம் நீண்ட வரலாறு கொண்ட பேரவையாகும். சென்னை மாகாணம் என்றும், பின்னர் தமிழ்நாடு சட்டமன்றம் என்றும் போற்றப்படும் புகழுக்குரிய இடம்.
பல்வேறு ஜாம்பவான்கள் நிறைந்த அவையில், காட்டுமிராண்டித்தனத்திற்கு சிறிதும் இடமின்றி ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் ஆற்றிய பணிகள் வரலாறு படைத்ததாகும்.
எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள் மக்களின் பிரச்சினைகளை மிகக் கடுமையான முறையில், அதே நேரத்தில் கண்ணியமான முறையில், ஜனநாயக முறையில் முன் வைப்பதும், ஆளும் கட்சியைச் சேர்ந்த முதல்வர் மற்றும் அமைச்சர்கள் முறையான விளக்கம் அளிப்பதும் தொடர்ந்து வந்த நிலையில்,
ஒவ்வொரு மானியக் குழு அறிக்கையை உரிய அமைச்சர்கள் முன்மொழிவதும், அதன் மீது உறுப்பினர் சம்பந்தப்பட்ட மக்களின் பிரச்சனை குறித்து அரசின் கவனத்தை ஈர்க்க உரையாற்றுவதும், அதன் மீது அமைச்சர்கள் பதில் வழங்குவதும் நடைமுறை.
மானியக் கோரிக்கை விவாதத்திற்கு வரும் நாளை எதிர்பார்த்து, நம் பிரச்சனை குறித்து விவாதித்தார்களா? நம் தொகுதி எம்.எல்.ஏ.க்கள் எடுத்துச் சொன்னார்களா? அதற்கு அமைச்சர்கள் பதில் சொன்னார்களா? என ஒவ்வொருவரும் எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள்.
கடந்த ஆகஸ்ட் 5ஆம் நாள் தொடங்கிய சட்டப்பேரவை செப்டம்பர் 8ஆம் நாளுடன் நிறைவு பெற்றது. இப்படியும்கூட சட்டமன்றம் நடைபெறுமா? இதனை எதனுடன் ஒப்பிட்டுக் கூறுவது? ஒப்பீடு என்றால் தரம் தாழ்ந்து, மிகத் தாழ்ந்துதான் கூற முடியும்.
அவ்வாறு கூறி நம்மை அசிங்கப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று தோன்றுகிறது.
மக்கள் அன்றாடம் ஆயிரம், ஆயிரம் பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். குறைந்தபட்சம் நகரங்களிலும், கிராமங்களிலும் குடிப்பதற்கு தண்ணீர் இல்லை. திருத்துறைப்பூண்டி தொகுதி உறுப்பினர் கே.மாரிமுத்து அவையில் பேசுகின்ற போது, முதலமைச்சர் அவர்களை மன்றாடிக் கேட்கின்றேன் எனது தொகுதி முழுவதும் கடும் குடிநீர் பற்றாக்குறை நிலவுகின்றது. குடிப்பதற்கு தண்ணீர் இன்றி மக்கள் பரிதவிக்கின்றார்கள். தீர்வு காண வேண்டும் எனக் கோரி மன்றாடியதை அவை மட்டுமல்ல, அனைத்து மக்களும் நன்கறிவார்கள்.
மேட்டூர் அணை தண்ணீர் இன்மையால் ஜூன் 12 திறக்கப்படவில்லை, குறுவை சாகுபடி பெருமளவில் மேற்கொள்ளவில்லை, சம்பா ஒருபோக சாகுபடிக்கு உத்தரவாதம் உண்டா எனில், எவ்வித உத்தரவாதமும் இன்றி செப்டம்பர் முதல் நாள் முதலமைச்சர் மேட்டூர் அணையை திறந்து வைத்து, 45 நாட்களுக்கு அணை திறக்கப்படும் என்று அறிவித்துள்ளார்கள்.
ரூபாய் 6 கோடி செலவு – ஏன் எனில் முதல்வர் வருகையின் காரணமாக?
150 நாட்களுக்கு குறைவின்றி ஆறுகளில் தண்ணீர் வந்தால்தான் பயிரைக் காப்பாற்ற முடியும் என்ற நிலையில், 45 நாட்கள் தான் என்றால் இது குறித்து எங்கே பேசுவது? யாரிடத்தில் பேசுவது?
விலைவாசி பன்மடங்கு உயர்ந்துள்ளது. மிளகாய் வற்றல் கிலோ ரூ.220 லிருந்து ரூ.340 ஆக உயர்ந்துள்ளது. மல்லி ரூ.160 லிருந்து ரூ.250 ஆக உயர்ந்துள்ளது. துவரம் பருப்பு ரூ.120 லிருந்து ரூ.150 ஆக உயர்ந்துள்ளது. பூண்டு நினைத்துக்கூடப் பார்க்க முடியாத அளவிற்கு ரூ.150 லிருந்து ரூ.340 ஆக உயர்ந்துள்ளது. பாமாயில் ரூ.120லிருந்து ரூ.150ஆகவும், அரிசி விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.30 வரை உயர்ந்துள்ளது. காய்கறிகள் விலையும் உயர்ந்துள்ளது.
இவை குறித்து எங்கே விவாதிப்பது? யாரிடம் விவாதிப்பது? எங்கே தீர்வு காண்பது?
சட்டம் ஒழுங்கு பிரச்சனகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு இருக்கிறது.
கொலைகள், தொடர் கொலைகளாக மாறிப் போய்விட்டன.
வெளிநாட்டிற்கு அனுப்புவதாகக் கூறி இளைஞர்களிடம் மோசடி, சீட்டு மோசடி, பணம் கட்டினால் இரட்டிப்பாக வழங்கப்படும் என்று விளம்பரம் செய்து, அப்பாவி மக்களிடம் அபகரிக்கும் கொள்ளைகள்.
இவைகள் எல்லாம் அன்றாட நிகழ்வுகளாக நடந்து கொண்டே இருக்கின்றன. தமிழ்நாட்டில் பெருமளவில் புழக்கத்தில் உள்ள போதைப் பொருட்கள், குஜராத் போன்ற மாநிலங்களில் இருந்து இங்கு வருகின்றன.
இளைஞர்கள், மாணவர்கள் போதைப் பொருள் சீரழிவால் பெருமளவில் பாதிக்கப்படுகின்றார்கள்.
பாலியல் வன்முறை, தீண்டாமை கொடுமைகள், ஆணவக் கொலைகள், லாக் ஆப் மரணங்கள் என தொடரும் நிலையில் இவற்றை எங்கே விவாதிப்பது?
நிகழ்ச்சி நிரல் ஒன்றாக இருக்கின்றது. இதற்கான பதில் வேறொன்றாக இருக்கின்றது.
‘பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், கொட்டைப்பாக்கு விலை கூறியது போல்’ என்று கூறுவார்கள். இதுதான் இன்றைய சட்டப்பேரவை, அநாகரீகத்தின் உச்சம், இவை ஏற்புடையதல்ல,
பொதுவாக மறைந்த தலைவர்கள் குறித்து அவதூறு பேசுவது, குற்றம் சாட்டுவது என்பது மரபு அல்ல, ஜனநாயகக் கடமைகளை, மரபுகளை, கிராம சபைக் கூட்டம், முதலமைச்சர், அமைச்சர்கள் பெருமளவில் பங்கெடுத்துப் பயிற்சி பெறுவது தவறல்ல.
சத்தம் போட்டுப் பேசுவது, உரக்கக் குரல் எழுப்புவது, தனது உடல் மொழியால் அருவருக்கத்தக்க அநாகரிக செய்கைகளை மேற்கொள்வதன் மூலம் எவ்வித பயனும் இல்லை. பயனுள்ள முறையில் சபை நடவடிக்கைகள் அமைய வேண்டும் என தேர்ந்தெடுத்த மக்கள் எதிர்பார்க்கின்றார்கள்.
இவர்கள் மக்களை மதிப்பார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்!