கட்டுரைகள்

சொந்த நாட்டு மக்கள் மீது போர் தொடுக்கும் மோடி

மே.து.ரா.

‘இது போருக்கான காலகட்டம் அல்ல’ என்னும் பொன்மொழி ஒன்றினை மோடி அண்மைக் காலங்களில் உலக அரங்கில் உதிர்த்து வருகிறார். இதனை அவரது வெளியுறவுத் துறை அமைச்சரும் வழிமொழிகிறார்.

ஆனால், போருக்கான சூழ்நிலை ஏன் உருவாகிறது என்பதை மோடி கண்டுகொள்ளவில்லை.

பொருளியப் பயன்களுக்காகப் பிற நாடுகளை அல்லது இனங்களை அடிமைப்படுத்துதல், வணிக வாய்ப்புகளை உருவாக்குதல், இயற்கை வளங்களைக் கைப்பற்றுதல், பொருளிய அடக்குமுறையைக் கையாளுதல், மொழி பண்பாட்டு ஊடுறுவலை உறுதிப்படுத்துதல் போன்ற பல்வேறு அடிப்படைகளுக்காகப் போர்கள் நடக்கின்றன.

அடிமைப்படுத்தும் முறையில் மாற்றம்

அமெரிக்கா மற்றும் மேலை நாடுகள், மறைமுகமாகப் பொருளிய, வணிக வழிகளில் அடிமைப்படுத்தலைத் தற்போது மேற்கொண்டு வருகின்றன.

படை வலிமை, பொருளிய மேல்நிலை, வணிக நலன்கள் போன்றவை போர்களைத் தொடங்குவதற்குக் களன்களாகின்றன. இவற்றுடன் நுட்ப வளர்ச்சிப் போட்டியும் உற்பத்தி வளர்ச்சியும் சேர்கின்றன.

இருந்தாலும், ஒரே நாட்டிற்குள் உள்ள இனங்களில் ஒன்று பிறிதொன்றை ஒடுக்கும்போது, அந்த இனம் கருவிகளை ஏந்திப் போரிடுகிறது.

பாலத்தீனம் உலக அளவில் உடன்படிக்கை வழியாக ஏற்கப்பட்டும், தனியுரிமை கொண்ட நாடாக இன்னும் உருவாக முடியவில்லை. இசுரேலுக்குத் துணை நின்று, அமெரிக்க, அய்ரோப்பிய நாடுகள் பலவும் பாலத்தீனம் மலர்வதைத் தடுத்து வருகின்றன. இதனால், அங்குத் தன்னுரிமைக்கான போர் தொடர்கிறது

எகிப்து, துருக்கி எல்லைகளில் குர்துகள், பாக்கித்தான் பகுதிகளில் பலுச்சி, பக்தூன் போன்ற மக்களின் போர்கள் நீடிக்கின்றன.

தமிழீழ மக்களின் போர் ஓய்ந்தாலும், இன்னும் நெருப்பு கனன்று கொண்டிருக்கிறது.

இத்தகைய உரிமைப் போர்களை மோடி வரவேற்கவில்லை.

வணிகப் போர்

எண்ணெய் வணிகத்தில் அமெரிக்க டாலர் பயன்பாட்டைக் குறைத்ததால்தான், ஈராக், லிபியா போன்ற நாடுகளில் அமெரிக்கப் படைகள் நுழைந்து ஆட்சிக் கவிழ்ப்பை நடத்தின.

உக்ரைனில் ரசிய மொழி பேசும் டான்பாசு மாநிலங்களைச் சேர்ந்த விக்டர் யானுகோவிச் உக்ரைன் வளங்களைக் கொள்ளை கொள்வதைத் தடுத்ததால் வன்முறையில் பதவி நீக்கம் செய்யப்பட்டார். ரசிய மொழியினர் மிகுந்துள்ள உக்ரைன் நாட்டின் கிழக்குப் பகுதி வழியாக ரசிய நாட்டின் வளங்களைக் கைப்பற்றுவதற்காகவே மேற்கு நாடுகள் உக்ரைனுக்குப் படை உதவிகள் செய்கின்றன. இதனை முறியடிக்கவே உக்ரைனில் ரசியா போரிட்டு வருகிறது.

தங்களுக்குத் துணையிருக்கும் தென்கொரிய நலன்களைத் காக்க வடகொரியா மீது பல கட்டுப்பாடுகளை அய்நா வழியாக மேற்கு நாடுகள் புகுத்தியுள்ளன. இதனைத் தடுத்து நிறுத்த வடகொரியா அணுக்கருவிகளை உருவாக்கிக் காத்துக்கொள்கிறது.

உலக எண்ணெய் வணிகத்தில் அமெரிக்கப் பங்களிப்பினை உறுதிப்படுத்த ஈரான் மீது தடைகள் போடப்படுகின்றன. அணுக் கருவிகளை உருவாக்குகிறது என்ற பெயரில் ஈரான் மீது ஏவுகணைத் தாக்குதல் தொடுக்கப்படுகிறது. தன்னைத் தற்காத்துக் கொள்ள ஈரானும் போரிட வேண்டியுள்ளது.

வெனிசுலா எண்ணெய் வயல்களுக்காகவே நாட்டின் தலைவர் பன்னாட்டுச் சட்டங்களுக்குப் புறம்பாக தளைப்படுத்தப்பட்டு அமெரிக்கச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கியூபாவைப் பழி வாங்கி ஒடுக்குவதன் வழியாகப் பிற தென்அமெரிக்க நாடுகளைப் பணியவைத்து அவற்றின் வளங்களைக் கொள்ளையடிக்க அமெரிக்கா முனைகிறது.

ரசிய நாட்டிற்கு அருகில் இருக்கும் வடமுனைத் தன்னாட்சிப் பகுதியான கிரீன்லாந்தைத் தனது மாநிலங்களில் ஒன்றாக இணைத்து, பனிக்கடல் பகுதிகளிலுள்ள எண்ணெய், எரிவளி வளங்களைத் தனதாக்கிக்கொள்ள அமெரிக்க டிரம்ப் திட்டமிடுகிறார். நிலவுகூட அமெரிக்காவுக்குரியது என உரிமை கொண்டாடுகிறார்.

அமெரிக்காவை மிஞ்சும் படை வலிமை

கடந்த நூற்றாண்டினைப் போலப் போரிட்டு நாடுகளைக் கைப்பற்ற முடியாத நிலை இன்று ஏற்பட்டுவிட்டது. சோவியத் ஒன்றியத்தினையடுத்து, இப்போதைய ரசியா, அமெரிக்காவைவிட நுட்பத்தில் மேம்பட்ட போர்க் கருவிகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது.

சீனா அமெரிக்காவை மிஞ்சும் அளவில் கடற்படையினை விரிவுபடுத்திக் கொண்டுள்ளது.

போருக்கு உதவும் விண்வெளி ஆய்விலும் ரசியாவையும் சீனாவையும் அமெரிக்காவால் வெல்ல முடியவில்லை.

படைக்கு மேலாகப் பிற துறை வளர்ச்சிகள்

இவை யாவற்றிற்கும் மேலாக உயர் கல்வி, நுட்ப அறிவு, கண்டுபிடிப்புகள், தொழில் உற்பத்தி, உலக வணிகம் ஆகியவற்றில் சீனாவின் பங்களிப்புப் பிற நாடுகள் அனைத்திலும் மேம்பட்டதாக உயர்ந்துள்ளது. எண்ணொய், எரிவளி, உணவுப் பொருள்கள், போர் நுட்பங்கள் ஆகியவற்றில் ரசியாவும் சீனாவும் எல்லையற்ற உறவைப் பேணுகின்றன. போரிட்டுச் சீனாவையும் ரசியாவையும் வீழ்த்த இன்றைய படைச் சூழல் இடம் தரவில்லை.

ரசிய, சீன நாடுகளின் வணிகத்தினால் பயன்பெறும் கிழக்காசிய, ஆப்பிரிக்க, தென்அமெரிக்க நாடுகள், அமெரிக்காவின் கட்டுப்பாடுகளைப் புறக்கணித்து வருகின்றன. இதனால், ரசிய – உக்ரைன் போரினையடுத்து, நேட்டோ நாடுகளின் தடைகளை நடைமுறைப்படுத்த முடியவில்லை.

அமெரிக்கா அல்லது மேற்கத்திய நாடுகளின் வணிகம் இல்லாமல், பிற நாடுகள் தங்களுக்குள் ஏற்படுத்திக்கொள்ளும் ஒத்துழைப்பினால் வளர முடியும், வாழ முடியும் என்ற புதிய நிலை உருவாகிவருகிறது.

அமெரிக்க வலிமை உதவவில்லை

தங்களது காவலுக்கு அமெரிக்கப் படைத்தளங்கள் உதவும் என்று நம்பியிருந்த சவுதி அரேபியா, கதார், பக்ரைன், குவைத், அரபு அமீரகம் போன்ற நாடுகள், ஈரான் தாக்குதலைத் தாங்க முடியாமல் தவிக்கின்றன.

உலகம் முழுதும் சிறிதும் பெரிதுமாக 800 தளங்களையும் 1,73,000 பயிற்சி பெற்ற படை வீரர்களையும் வைத்துக் கொண்டு, பல நாடுகளை அச்சுறுத்திவந்த அமெரிக்காவின் வலிமை – வல்லாண்மை புதிய படை நுட்ப வளர்ச்சியில் செயலிழந்து கிடக்கிறது.

இருப்பினும் அமெரிக்க அச்சுறுத்தல்கள் தொடர்கின்றன. இதனால், ரசிய, சீன உதவியுடன் இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகள் தங்களது படைக்கருவிகளை மேம்படுத்திக் கொண்டுள்ளன. மேலும் மேம்படுத்தி வருகின்றன.

தங்களது மேலாண்மையை நிலைநிறுத்த பன்னாட்டு நுட்ப, உற்பத்தி, வணிக நிறுவனங்களை முன்னிலைப்படுத்தும் அமெரிக்க, அய்ரோப்பிய நாடுகளின் வல்லாண்மைச் செயல்கள் தொடர்வதால், தங்களது படை வலிமையைப் பெருக்கிக்கொள்ளப் பெரும்பாலான நாடுகள் முயற்சிக்கின்றன.

அத்துடன், பல நாடுகளது உற்பத்திக் கட்டமைப்புகளையும் வணிக வாய்ப்புகளையும் ஏற்றுமதி இறக்குமதி நலன்களையும் முதலாளித்துவ நாடுகளிடமிருந்து காத்துக்கொள்ளப் படை வலிமை இன்றியமையாததாக உள்ளது.

போரினைத் தொடங்குவது யார்?

வளரும் நாடுகள் எதுவும் பெரும் போரினைப் பெரிதும் தொடங்கபோவதில்லை.

இந்திய ஒன்றியத்துக்கும் சீனா, பாகித்தானுக்குமிடையில் எல்லைச் சிக்கல்கள் தொடர்கின்றன. சீனா, சப்பான், ரசியா, சப்பான் போன்ற நாடுகளுக்கிடையேயும் குரில் போன்ற கடல் தீவுகள் குறித்த வேறுபாடுகள் நீடிக்கின்றன. இருந்தாலும், இவை எதுவும் பெரும் போராக மாறவில்லை. சீனா – தைவான் முரண்களும் முட்டலாக முற்றவில்லை.

அமெரிக்காவின் தலையீட்டுடன் இசுரேல் தனது அண்டை நாடுகளுடன் நடத்தும் போர்தான் பல லட்சக்கணக்கான உயிர்களைக் காவு கொடுத்து வருகிறது.

அமெரிக்கா தனது நலன்களுக்காக ஈரான் மீது வீசும் ஏவுகணைகளால், அடிப்படைக் கட்டமைப்புகள் சீரழிவதோடு, பெரும் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

ஆனால், அமெரிக்காவிடமோ, இசுரேலிடமோ, ‘இது போருக்கான காலகட்டம் அல்ல’ என்ற தனது கூற்றை மோடி முன்னிறுத்தவில்லை.

தனது நாட்டில் மக்கள் மீது போர் நடத்தும் மோடி

தற்போது வனப்பகுதியில் உள்ள பழங்குடியினரை நக்சல்களாகக் கருதி ஒழித்துவிட்டோம் என்று கூறுகின்ற மோடி, அங்கு தனது படை வலிமையைத்தான் பயன்படுத்தினார். காடுகளில் வாழும் பழங்குடி மக்களின் வாழ்உரிமையையும் உற்பத்தி உரிமையையும் பறிப்பதால், அவர்கள் எதிர்த்து நிற்கின்றனர். அவர்களைத் துப்பாக்கி முனையில் அடக்க முடியும் என நினைக்கும் மோடி, ‘இது போருக்கான காலகட்டம் அல்ல’ என்று கூறுவது வேடிக்கையாகவே இருக்கிறது.

பேச்சுக்கள், கலந்துரையாடல்கள் வாயிலாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பிறருக்குத் துயர் தராமல் வாழ்ந்துவரும் பழங்குடிகளை எதிர்கொள்ளாமல், வன்முறையில் வெளியேற்றத் துடிக்கிறார் மோடி.

மக்கள், மாணவர்களின் உரிமைப் போராட்டங்கள் அடக்குமுறைக்கு ஆளாகி, எதிரிகளின் போர்க்களங்கள் போலாகின்றன.

ஒன்றிய இனங்களை ஒடுக்கும் மோடி

இந்திய ஒன்றியத்தில் இணைந்திருக்கும் மொழி இனங்கள், தங்களது தனித்தன்மை கொண்ட சமூக, பொருளிய, பண்பாட்டு உரிமைகளை இழந்து வருகின்றன. தங்களைத் தாங்களே முன்னேற்றிக்கொள்ளும் வாய்ப்பினை இழந்து, ஒன்றிய அரசின் திட்டங்களுக்குப் பணியும் நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதை எதிர்த்துப் போராடுவதைத் தடுப்பதற்காகவே ‘இது போர்களின் காலகட்டம் அல்ல’ என்று மோடி முழங்குகிறாரோ என்னும் அய்யமும் எழாமல் இல்லை.

சனாதனத்துக்கு எதிரானோர் கருத்துநிலை நக்சல்களா?

அத்துடன், அவர் மற்றொரு கருத்தையும் தற்போது இணைத்துள்ளார். ஒன்றிய அரசினை எதிர்த்துப் போராடும் மக்களை அடக்கிவிட்டதாகவும், அடுத்துக் கருத்துநிலை நக்சல்கள் அறைகூவலாக நிற்கிறார்கள் என்றும் கூறி வருகிறார்.

கருத்துநிலை நக்சல் என்போர் யார் என்ற வினா எழக்கூடும். ஒரே நாடு, ஒரே இனம், ஒரே மொழி, ஒரே நம்பிக்கை, ஒரே சமயம் எனக் கருதும் சனாதனத்தை எதிர்ப்போர் அனைவரையும் கொள்கைநிலை நக்சல் என்பதில் சேர்த்து, அவர்களை வன்முறையில் அடக்கி ஒழித்துவிட முடியும் எனக் கருதுகிறார்.

இந்த இடத்தில், அன்றைய சோவியத் ஒன்றியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த ஆந்திரபோவ் கூற்றான, “சோவியத்தின் படை வலிமையால்தான் உலக அமைதி நிலைநாட்டப்படுகிறது” என்பதுதான் நினைவுக்கு வருகிறது. நம்மிடம் வலிமை இருந்தால்தான் எதிரிகளை வெல்லமுடியும்.

அத்துடன், மக்களது ஒன்றுபட்ட ஒத்துழைப்பு இருக்கும் வரை டிரம்ப், மோடி போன்றோரின் எண்ணங்கள் எடுபட வாய்ப்புகளே இருக்காது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button