தலையங்கம்

தொடரும் படுகொலைகள்

ஜனசக்தி தலையங்கம்

தமிழ்நாட்டில் கொலைகள், பழிவாங்கும் கொலைகள், ஆணவப் படுகொலைகள், பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. ஆணவக்கொலைகளில் சாதி ஆதிக்கமும், பெண்களுக்கு எதிரான வன்முறையில் ஆணாதிக்கமும் வெளிப்படுகின்றன.

த.வெ.க. அரசு பதவியேற்றபின்பு, 200-க்கும் மேற்பட்ட கொலைகளும், 300-க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமைகளும், 8 காவல் மற்றும் சிறை மரணங்களும் நிகழ்ந்துள்ளதாக அறியமுடிகிறது.

முதலமைச்சர் விஜய், “அனைத்துக் குற்றங்களுமே கடந்த 100 நாட்களில் நடந்தவை அல்ல; ஒவ்வொரு குற்றத்திற்குப் பின்னாலும் பல்வேறு பிரச்சினைகள் இருக்கலாம்” என்று காரணங்களை சட்டப் பேரவையில் அடுக்கினார்.

குற்றத்தின் வேர்கள் சமூகத்தில் இருக்கலாம். சாதி ஆதிக்கம் சமூகத்தில் இருக்கலாம். ஆணாதிக்கம் சமூகத்தில் இருக்கலாம். போதை, மதுபழக்கம், வேலையின்மை, வறுமை, சமூக அந்நியப்படுத்தல் ஆகியவையும் குற்றச் சூழலை உருவாக்கலாம். ஆனால் இந்தச் சமூகச் சூழலை மாற்றுவதற்காகத்தானே அரசு இருக்கிறது!

குற்றம் நடக்காமல் தடுப்பது காவல்துறையின் கடமை. முன்கூட்டியே கண்டறிவது உளவுத்துறையின் கடமை. குற்றவாளியை விரைவாகக் கைது செய்து, புலனாய்வை முறையாக நடத்தி, நீதிமன்றத்தில் குற்றத்தை நிரூபிப்பது அரசின் பொறுப்பு. பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்வது நீதித்துறையின் பொறுப்பு.

இதில் ஏதேனும் ஓரிடத்தில் தளர்வு ஏற்படுவதால் தான், கொலை செய்தாலும் தப்பித்துக் கொள்ளலாம் என்ற துணிச்சல் அதிகரிக்கிறது. கொலையாளி சுதந்திரமாக தெருக்களில் உலவும்போது, சட்டம் வழங்காத தண்டனையை தான் வழங்க வேண்டும் என்ற உந்துதல் கொலையுண்டவரின் உறவுகளுக்கு வருகிறது.

பழிவாங்கும் கொலைகள் தொடர்வது தனிநபர்களின் வன்முறை மனநிலை மட்டுமல்ல. குற்றக் கும்பல்களின் வலையமைப்பு, அரசியல் பாதுகாப்பு குறித்த சந்தேகம், காவல்துறையின் தடுப்பு நடவடிக்கைகளின் பலவீனம் ஆகியவற்றையும் விசாரிக்க வேண்டிய அவசியத்தை அது காட்டுகிறது.

ஒருவர் தனது வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுத்ததற்காக அவரைக் கொல்லும் அதிகாரம் எந்த சமூகத்திற்கு உள்ளது? சாதி ஆதிக்கம் உயிரைக் காவு வாங்கும் அளவுக்கு வலிமையாக இருக்குமானால், அது தனிநபர் குற்றமல்ல; சமூக அதிகார உறவின் கொடூரமான வெளிப்பாடு.

ஆணவக்கொலைகளைத் தடுப்பதற்குத் தனிச்சட்டம் கொண்டு வரவேண்டும். இதற்காகச் சென்ற ஆட்சியில் நிறுவப்பட்ட நீதிபதி பி.என்.பாஷா ஆணையம் இன்னும் பரிந்துரையைத் தரவில்லை. தேர்தல் நேரத்தில் இத்தகைய பரிந்துரைகளைப் பெறுவதும், சட்டமாக்குவதும் வாக்கு வங்கியில் சிக்கல் ஏற்படுத்தலாம் என்று நினைத்திருக்கக் கூடும். புதிய அரசு அதனை துரிதப்படுத்தி சட்டம் கொண்டு வருவோம் என்று வாக்களித்து இருக்கலாம். அவ்வாறு ஏதும் நிகழவில்லை.

சட்டம் மட்டும் போதாது. காவல்துறையில் சாதியப் பாரபட்சத்தை எதிர்க்கும் நடைமுறை, ஆபத்தில் உள்ள காதல் இணையர்களுக்குப் பாதுகாப்பு, விரைவான புலனாய்வு, சாட்சிப் பாதுகாப்பு, விரைவான நீதிமன்ற விசாரணை ஆகியவை தேவை. ஆனால் காவல்துறையிலுமே சாதிய ஆணவம் கொடி கட்டிப் பறக்கிறது.

எதிர்க்கட்சியாக இருக்கும்போது கொலை நடந்தால் அரசுதான் பொறுப்பு, ஆட்சிக்கு வந்தவுடன் “சமூகம்தான் காரணம்” என்று தப்பிக்கக்கூடாது. மக்களுக்கு வேண்டியது குற்றம் நடந்தபின் அரசின் இரங்கல் அல்ல; இழப்பீடும் அல்ல: குற்றம் உருவாகும் சமூகச் சூழலை மாற்றும் அரசியல்.

சாதி ஆதிக்கத்தை உடைக்க வேண்டும். ஆணாதிக்கத்தை எதிர்க்க வேண்டும். போதை மற்றும் மதுவின் சமூகத் தாக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும். இளைஞர்களுக்கு வேலை, கல்வி, சமூகப் பாதுகாப்பு வழங்க வேண்டும். காவல்துறையை அரசியல் தலையீட்டிலிருந்து விடுவித்து, அறிவியல் புலனாய்வையும் தடுப்பு நடவடிக்கைகளையும் வலுப்படுத்த வேண்டும். நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்காமல் விரைவான நீதி கிடைக்க வேண்டும். இவற்றையெல்லாம் எந்த தனி மனிதனும் அல்லது ஒரு சமூகப் பிரிவும் செய்ய முடியாது. அரசுதான் இவற்றைச் செய்து தீர வேண்டும்.

“சமூகம் கெட்டுவிட்டது” என்பது பதிலல்ல. சமூகத்தை மாற்றத் தவறுவது அரசின் தோல்வி. ஒவ்வொரு கொலையின் பின்னாலும் ஒரு குடும்பம் சிதைகிறது; சமூகத்தின் பாதுகாப்பு உணர்வு குலைகிறது; குறிப்பாக சட்டத்தின் மீதான நியாயமான அச்சம் அழிகிறது; நம்பிக்கை தேய்கிறது.

குற்றங்கள் உருவாவதற்கான காரணங்கள் என்னென்ன என்று ஊகங்களைப் பட்டியலிட்டு அறிவிப்பதற்கு அரசு எதற்கு? சரியான சமூகப் பொருளாதாரக் காரணிகளைக் கண்டறிந்து, அவற்றை உறுதியாகத் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளையே அரசிடமிருந்து மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button