கட்டுரைகள்தமிழகம்

செப்.16 வட்டாட்சியர் அலுவலகங்களில் பெருந்திரள் முறையீடு!

அ.பாஸ்கர்

நமது அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 21 வாழ்வுரிமை பற்றிக் குறிப்பிடுகிறது. அது, நாட்டின் குடிமக்கள் கண்ணியத்துடனும், சுதந்திரத்துடனும் வாழ்வதை உறுதி செய்கிறது.

அரசியலமைப்புச் சட்டத்தின் மீதுதான் சத்தியப் பிரமாணம் செய்து ஆட்சியை வழிநடத்தும் பொறுப்பை மக்கள் பிரதிநிதிகள் ஏற்றுக் கொள்கிறார்கள். மக்கள் பிரதிநிதிகள் ஆட்சியை வழிநடத்துவதால் “குடியரசு” என பெருமை பொங்க பேசி வருகிறோம்.

ஆனால், உண்மை நிலை என்ன? ஒரு கை அளவு நிலத்திற்கும் உரிமை கோர முடியாத நிலையில் பல்லாயிரம் குடும்பங்கள் மனை நிலம் கேட்டு, வாரந்தோறும் மாவட்ட ஆட்சியர்களிடம் மனுப்போட்டு வருகின்றன.

விலங்குகளைப் போல் வாழ முடியாது என்பதால், தனியார் தயவில் கிடைக்கும் காலி மனைகளில், அரசிற்கு சொந்தமான பொது நிலங்களில், சாலையோரங்களில், நீர்வழிப் பாதைகளிலும், நீர்ப்பிடிப்புப் பகுதிகள் உட்பட அரசின் ஆட்சேபகரமான நிலப் பகுதிகளிலும் வாழ்ந்து வரும் அவல நிலைக்குத் தீர்வு காண்பதில், இதுவரை தொடர்ந்து வந்த அரசுகள் அனைத்தும் படுதோல்வி அடைந்துள்ளன.

தமிழ்நாடு அரசு 2025-26 நிதி நிலை அறிக்கையில் 10 லட்சத்திற்கு அதிகமான குடும்பங்களுக்கு குடிமனைப் பட்டா வழங்கியதாக கூறப்பட்டுள்ளது. அதில், மேலும் 5 லட்சம் குடும்பங்களுக்கு குடிமனைப் பட்டா வழங்க இருப்பதாகவும் இலக்கு நிர்ணயித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், மக்கள் வெளிப்படுத்திய விருப்பத்தின்படி, அமைந்துள்ள தமிழக வெற்றி கழக ஆட்சியில் 2026-2027 ஆண்டுகளில் இரண்டு லட்சம் குடும்பங்களுக்கு அரசு புறம்போக்கு நிலங்களிலும், அரசின் ஆட்சேபகரமான எல்லைக்குள் இல்லாத இடங்களில் குடியிருந்து வருபவர்களுக்கு மனைப் பட்டா வழங்கப்படும் என்ற அறிவிப்பு வந்துள்ளது.

இந்த அறிவிப்புகள், ஏட்டில் அச்சிட்ட எழுத்து நிலையிலேயே நின்று விடாமல், அவை செயல் வடிவம், பெற வேண்டும். கடந்த காலங்களிலும் அரசு பல இடங்களில் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு மனைப்பட்டா வழங்கியுள்ளது.

ஆனால், அரசு வழங்கிய மனைப் பட்டாவிற்கு பாத்தியப்பட்ட நிலத்தை அளந்து அத்து செய்து, நான்கு எல்லைகள் குறித்து, பட்டாதாரருக்கு கொடுக்காமல் அலட்சியப்படுத்தப்பட்டுள்ளது.

ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலமாக வீடில்லாத குடும்பங்களுக்குத் தனியார்களிடம் நிலம் கிரயம் பெற்று வழங்கவும் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் குடும்பங்களுக்கு வீட்டு மனைப் பட்டாக்கள் கொடுக்கப்பட்டு, பல ஆண்டுகள் ஆகியும் இதுவரை இடத்தை அளந்து ஒதுக்கீடு செய்யாத குறைபாடுகள் நீடிக்கின்றன. அரசு நேரடிக் கிரயம் மூலம் கையகப்படுத்தும் குடியிருப்பு நிலப்பகுதிக்கு, இணைப்புச் சாலை, தெரு விளக்கு, குடிதண்ணீர் போன்ற அடிப்படை தேவைகளை செய்து கொடுக்காமல் பயனற்றுக் கிடக்கும் அவல நிலையும் நீடித்து வருகின்றது.

குடிமனை உரிமைதாரரின் பெயர், நிலத்தின் விபரம் போன்றவை வருவாய்த்துறை கிராமக் கணக்கில் சேர்க்காமலும், கணினியில் பதிவேற்றம் செய்யாமலும் பயனாளிகள் மனைப் பட்டாத் தாளை கையில் வைத்துக் கொண்டு அலையும் நிலையும் தொடர்கின்றது.

நீர்வழி மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வாழ்ந்து வரும் குடும்பங்களுக்கு மாற்று குடியிருப்புக்கு ஏற்பாடு செய்யாமல், வீட்டு வசதியை உறுதி செய்யாமல், நீதிமன்ற உத்தரவுகளைக் காட்டி, அரசினர் புல்டோசர்களால் ஏழைகள் அரும்பாடுபட்டு கட்டி வாழும் வீடுகளை அகற்றும் அநியாயம் அன்றாடம் நிகழ்ந்து வருகிறது

இவை அனைத்தும் அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை வாழ்வுரிமையை மீறும் செயலாகும். நிலமற்ற ஏழை மக்கள் மீது அரசு நடத்தும் தாக்குதலாகும். இதனால், வேலைவாய்ப்பு, முதியோர் பாராமரிப்பு, குழந்தைகளின் கல்வி உரிமை அனைத்தும் கேள்விக்குள்ளாகி விடுகின்றன.

ஆட்சேபகரமான நிலப்பகுதிகளை ஆய்வு செய்து, அதனை வகைமாற்றம் செய்து, குடியிருந்து வரும் குடும்பங்களுக்கு மனைப் பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஆட்சியாளர்களிடம் முன்வைத்தாலும், சட்டமன்றத்தில் குரல் கொடுத்தாலும் ஏழைகளின் அழுகுரலை ஆட்சியாளர்கள் காதுகளை மூடிக்கொண்டு, கேட்க மறுத்து வரும் நிலையாக உள்ளது.

தமிழ்நாடு முழுவதும் தலைமுறை தலைமுறையாக அரசு புறம்போக்கு நிலங்கள், கோயில் நிலங்களில் குடியிருந்து வருபவர்களுக்கு குடிமனைப் பட்டா வழங்கிட வேண்டும்.

தொழில் வளர்ச்சி, முதலீடு ஈர்ப்பு போன்ற முழக்கங்களை முன்வைத்து விவசாயிகளின் சாகுபடி நிலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை, அடிமாட்டு விலையில் அரசு கையகப்படுத்தி, அடையாள விலையில் பன்னாட்டு பெரும் நிறுவனங்களுக்கும், குழும நிறுவனங்களுக்கும் வழங்கி வருகின்றது.

இந்த வகையில் அரசிடம் பல ஏக்கர் நிலத்தைப் பெறுகிற நிறுவனங்கள் நில வியாபாரத்தில் ஈடுபட்டு பெரும் லாபக் கொள்ளையடித்து வருகின்றன.

இந்த நிறுவனங்களுக்கு வரிச்சலுகை, மானியம், கடன் தள்ளுபடி என ஏராளமான உதவிகளைத் தாராளமாக வழங்கி வரும் ஒன்றிய, மாநில அரசுகள் நிலமற்ற ஏழை மக்களுக்கு வசிப்பிடம் வழங்குவதில் தயக்கம் காட்டுவது ஏன்? இந்த அரசு வர்க்க சார்பு அரசு, பன்னாட்டுக் குழும நிறுவனங்கள் மற்றும் நிதி மூலதன சக்திகளின் தயவில் இயங்கும் அரசு என்பதை ஏழை மக்களும் உணர்ந்து கொண்டு வருகிறார்கள்.

ஒன்றிய அரசு அறிவிக்கும் வீடு கட்டும் திட்டமாக இருந்தாலும், மாநில அரசு அறிவிக்கும் வீடுகட்டும் திட்டமாக இருந்தாலும், வீடு கட்டுவதற்கு, அடிப்படை ஆவணமாகக் கேட்பது, கட்டப்படும் வீட்டின் அடிமனை நில உரிமைக்கான வீட்டுமனைப் பட்டா என்பதை அரசு கருத்தில் கொள்ள வேண்டும்

21 ஆம் நூற்றாண்டின் நாகரிக வளர்ச்சியினையும், குடும்ப வாழ்வின் குறைந்தபட்சத் தேவைகளையும் கருத்தில் கொண்டு சமையலறை, கழிவறை போன்ற அடிப்படை வசதிகளுடன் இரண்டு அறைகள் கொண்ட வீடுகள் கட்டித்தர வேண்டும். அதன்மூலம்தான் கண்ணியமான வாழ்க்கை அமைத்துக் கொள்ள முடியும் என்பதை அரசு உணர வேண்டும்.

தமிழ்நாட்டில் உழைக்கும் மக்கள் வசிக்க, மனை நிலம் மற்றும் வீட்டுமனைப் பட்டாவுடன் 600 சதுர அடியில் பாதுகாப்பான வீடு கட்டக் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் மானிய நிதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 16.09.2026 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் வட்டாட்சியர் அலுவலகங்களில் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் கிராமப்புறப் பாட்டாளிகள் பெருந்திரளாக சென்று, மனு கொடுக்கும் இயக்கத்தை நடத்துகிறது

ஏழைகளின் குரலை அரசு காதுகொடுத்து கேட்குமா?

புதிய அரசு கேட்கும் என்று நம்புகிறோம்…

இல்லை எனில்…

போராட்டங்கள் மேலும் தீவிரமாகும்!

வீடு இல்லாத உழைக்கும் மக்களுக்கு மனை நிலம், வீட்டு மனைப்பட்டா கேட்டு விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில்செப்.16-ல் தமிழ்நாடு தழுவிய அளவில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பெருந்திரள் முறையீடு நடைபெறுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button