தலையங்கம்

போராடும் உரிமையை மறுக்கும் அரசு ஜனநாயக விரோதி!

ஜனசக்தி தலையங்கம்

அமைதியான முறையில் போராடுவது மக்களின் அரசியல் சாசன உரிமை என்று மீண்டும் உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. எத்தனை தடவை சொன்னாலும் ஆளுங்கட்சியின், அது எதுவாயினும், காதுகளில் விழுவதே இல்லை.

ஜனநாயகம் என்பது ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை வாக்குச்சாவடியில் பதிவாகும் வாக்கினால் மட்டும் உயிர் வாழ்வதில்லை; அன்றாட வாழ்வில் ஒலிக்கும் எதிர்ப்புக் குரல்களால்தான் அது சுவாசிக்கிறது. அதிகாரத்தின் அரியணை எவ்வளவு உயரமாக இருக்கிறது என்பதல்ல ஒரு நாட்டின் மாண்பு; அந்த அரியணையை நோக்கி மக்கள் எவ்வளவு அச்சமின்றி கேள்வி எழுப்ப முடிகிறது என்பதுதான் அதன் உண்மையான அளவுகோல்.

கருத்து வேறுபாட்டை குற்றமாக்கும் ஆட்சி, போராட்டத்தை அந்நியச் சதியாகச் சித்தரிக்கும் அரசு, முரண்படும் குரல்களை அடக்குமுறையால் மௌனமாக்க முயலும் அதிகாரம் ஆகியவை அனைத்தும் ஜனநாயகத்தின் உடலில் விழும் காயங்களாகும்.

இந்திய விடுதலை, நூறு ஆண்டுகளாக வீதிகளில் நடந்த மகத்தான மக்கள் எழுச்சிகளின் விளைவாகப் பறித்து எடுக்கப்பட்டதாகும். அந்த விடுதலையினால் தான், ஆளுபவர்கள் ஆட்சிக் கட்டிலில் புரண்டு அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

எட்டுமணி வேலைநேரம், குறைந்தபட்ச ஊதியம், மகப்பேறு உரிமை, தொழிற்சங்க அங்கீகாரம், நில உரிமை, கல்வி உரிமை, இடஒதுக்கீடு இவற்றில் எதுவும் ஆட்சியாளர்களின் கருணையால் கிடைக்கவில்லை. ஒவ்வொன்றும் தெருக்களில் சிந்திய ரத்தத்தாலும், வியர்வையாலும், சிறைக் கொடுமைகளாலும், உயிர்த் தியாகங்களாலும் வென்றெடுக்கப்பட்ட உரிமைகளே.

போராட்டங்கள் தான் வரலாற்றை மாற்றி எழுதி இருக்கின்றன.

இன்றைய ஆட்சியாளர்கள் போராட்டங்களைக் கண்டு அஞ்சுவதற்கு காரணம் அவர்களது கார்ப்பரேட் ஆதரவு அரசியல்.

தனியார்மயமாக்கல், பொதுத்துறை விற்பனை, தொழிலாளர் சட்டங்களின் சிதைவு, கல்வியும் மருத்துவமும் தனியார்களின் கொள்ளைக்கு திறந்து விடப்படுவது, இயற்கை வளங்களை ஒட்டச்சுரண்டி அழிப்பது போன்றவற்றை மக்களின் எதிர்ப்பின்றி அமல்படுத்த முடியாது.

எனவேதான், ஜனநாயக உரிமைகள் தாக்கப்படுகின்றன. எதிர்ப்பைக் குற்றமாக்க வேண்டும்; போராட்டத்தை சட்டம்-ஒழுங்குப் பிரச்சினையாக மாற்ற வேண்டும்; மக்களை அச்சத்தில் வைத்திருக்க வேண்டும். இதுவே இன்று ஒன்றிய அரசும், மாநில அரசுகளும் பின்பற்றும் பொதுவான அரசியல்.

உலகின் பல ஜனநாயக நாடுகளில் தலைநகரங்களின் முக்கிய வீதிகளிலேயே இலட்சக்கணக்கான மக்கள் அணிவகுத்துச் செல்கின்றனர். ஐக்கிய நாடுகள் சபை தலைமையகத்திற்கு எதிரில் கூட போராட்டத் திடல் உண்டு. இடதுசாரி அரசியலின் செல்வாக்கு மிகுந்த அண்டை மாநிலமான கேரளத்தில் சட்டப்பேரவை வாசலிலேயே போராட்டங்கள் அனுமதிக்கப்படுகின்றன. ஏனெனில், மக்களின் குரலைக் கேட்பது அரசின் கடமை; அதை மறைப்பது அல்ல.

ஆனால், டெல்லியில் ஜந்தர் மந்தரில் அமைதியாகப் போராடிய மாணவர்களை ஆணிகள் செருகிய ஆளுயரத் தடிகொண்டு தாக்குகிறார்கள்; பெண்கள் அவமதிக்கப்படுகிறார்கள்; கண்ணீர்ப்புகைக் குண்டுகள் வீசப்படுகின்றன; பெல்லட் துப்பாக்கிகள் பயன்படுத்தப்படுகின்றன.

பாட்னாவில் போராட்டக்காரர்களை நோக்கி ஏ.கே.-47 துப்பாக்கிகளால் சுடுகிறார்கள். அரசின் மனநிலை அபாயகரமான திசையில் நகர்கிறது. மக்களை குடிமக்களாக அல்ல, கட்டுப்படுத்த வேண்டிய எதிரிச் சக்தியாகப் பார்க்கும் ஆணவத்தில் அதிகார வர்க்கம் ஊறிக் கிடக்கிறது.

தமிழ்நாட்டின் நிலையும் வேதனைக்குரியது. சென்னையில் மெரினா கடற்கரை, பெரிய பொதுக்கூட்டங்கள் நடத்துகிற, போராடுகிற ஜனநாயக மேடையாக இருந்தது.ஜெயலலிதா ஆட்சியில் கண்ணகி சிலையை அகற்றி, கூட்டம் நடத்தும் சீரணி அரங்கத்தை இடித்தார்கள். திமுக ஆட்சிக்கு வந்ததும் கண்ணகி சிலை வந்தது; ஆனால் சீரணி அரங்கம் வரவே இல்லை. இன்று, பள்ளிகள் கல்லூரிகளுக்குள் நுழைந்து மாணவர்களை கைது செய்த அநியாயத்தைக் கண்ணில் பார்த்தோம்.

போராட்டத்திற்கு இடம் தரமாட்டோம்; சாலையில் நிற்கவும் கூடாது; அனுமதி கேட்க வந்தால் மறுப்போம்; மீறினால் வழக்குப் போடுவோம்; கைது செய்வோம் என்பது சர்வாதிகாரத்தின் மொழி. ஜனநாயக அரசிடமிருந்து வரக்கூடாது.

பிரிட்டிஷ்காரன் காலத்து அடிமை இந்தியாவின் காவல்துறையின் அணுகுமுறையே இப்போதும் இருக்குமாயின், எண்பது ஆண்டு கால சுதந்திரம் என்னதான் செய்கிறது?

வரலாறு ஒரு பாடத்தைத் தெளிவாகச் சொல்கிறது. மக்களின் உரிமைப் போராட்டங்களை எந்த ஆட்சியும் நிரந்தரமாக ஒடுக்கியதில்லை; ஒடுக்கவும் முடியாது.

அரசின் தவறான அணுகுமுறைகளை எதிர்த்து ஒலிக்கும் குரல்களில் தான் ஜனநாயகம் உயிர் வாழ்கிறது.

அந்தக் குரலை நசுக்கும் ஆட்சி, எவ்வளவு வலிமையானதாகத் தோன்றினாலும், இறுதியில் வரலாற்றின் நீதிமன்றத்தில் தோல்வியடைந்தே தீரும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button