உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாகத் தமிழ்
தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு சிபிஐ வரவேற்பு

உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாகத் தமிழை அங்கீகரிக்கக் கோரி சட்டமன்றத்தில் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது. இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் 03.09.2026 அன்று வெளியிட்ட அறிக்கை வருமாறு:
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மற்றும் அலுவல் மொழியாக அங்கீகரிக்கக் கோரி தனித் தீர்மானத்தை சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் முன்மொழிந்ததும், அது ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதும் வரவேற்புக்குரியது.
இது தமிழ்நாட்டு மக்களின் நீண்டகாலக் கோரிக்கையாகும். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான இலக்கியப் பேராசான் ஜீவானந்தம் அவர்கள் ஆரம்பக் கல்வி முதல் உயர் கல்வி வரை தமிழ் பயிற்று மொழியாகத் திகழ வேண்டும், ஆட்சி மொழியாக, நிர்வாக மொழியாக, நீதிமன்றத்தில் வழக்காடும் மொழியாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என குரல் கொடுத்து வந்தார்.
கம்யூனிஸ்ட் தலைவர்கள் பி.இராமமூர்த்தி, பேராசிரியர் நா.வானமாமலை மற்றும் ஏராளமான தமிழறிஞர்களும், வழக்கறிஞர்கள் சங்கமும் இந்தக் கோரிக்கைக்காக போராடி வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தமிழை வழக்காடு மற்றும் அலுவல் மொழியாக அங்கீகரிக்கக் கோரி தனித் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளதும், சென்னை உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு, தீர்ப்பாணை, உத்தரவுகள் அனைத்தும் தமிழில் வழங்கப்பட வேண்டும். வழக்குத் தொடர்பான வாதங்கள் தமிழில் இருந்தால் மக்களுக்கு எளிதாக புரியும் என முதலமைச்சர் தீர்மானத்தை முன்மொழிந்து உரையாற்றிய போது குறிப்பிட்டுள்ளதும் வரவேற்புக்குரியது.
இந்தத் தீர்மானத்தை ஏற்று, தமிழை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக, அலுவல் மொழியாக அங்கீகரிக்க வேண்டும். குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்றுத்தர வேண்டும் என ஒன்றிய பாஜக அரசை, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது என்று மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.