செங்கடலானது தலைநகர் டெல்லி: அடக்குமுறைகளை எதிர்கொள்வோம்! தாய் நாட்டைப் பாதுகாப்போம்!
டி.ராஜா முழக்கம்

♦ அக். 2-நல்லிணக்க நாள்
♦ நவ. 7-சோஷலிஸ்ட் புரட்சி நாள்
♦ டிசம்பரில் சிறை நிரப்பும் போராட்டம்
மாற்றம் தேவை (பத்லாவ் ஜரூரி ஹை) எனும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அறைகூவலை ஏற்று, செப்டம்பர்-1 அன்று நாடு முழுவதிலும் இருந்து ஆண்களும் பெண்களும் குடும்பத்தோடு செங்கொடிகள், பதாகைகளை ஏந்தியவாறு டெல்லியில் குவிந்தனர்.

தற்போதைய ஆட்சியின் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவின் பல்வேறு தரப்பு மக்களையும் ‘பத்லாவ் ஜரூரி ஹை’ இயக்கம் ஒன்றிணைத்தது.
வேலைவாய்ப்பையும் கட்டுப்படியாகும் செலவில் தரமான கல்வியையும் கோரும் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள்; பாதுகாப்பான வேலைவாய்ப்பையும் கண்ணியமான வாழ்வையும் கோரும் தொழிலாளர்கள்; குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் கோரும் விவசாயிகள்; சமத்துவத்தையும் உரிய பிரதிநிதித்துவத்தையும் கோரும் பெண்கள்; நீதியையும் அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய பாதுகாப்பையும் கோரும் தலித்துகள் மற்றும் பழங்குடியினர்; பாதுகாப்பையும் சமமான குடியுரிமையையும் கோரும் சிறுபான்மையினர்; மதவாத மற்றும் எதேச்சதிகாரத் தலையீடுகளிலிருந்து விடுபட்ட ஜனநாயக நிறுவனங்களை விரும்பும் குடிமக்கள் எனப் பல்வேறு தரப்பினரும் ஒன்றிணைந்தனர்.

இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் மரபான உடைகளை அணிந்து கொண்டு, அவரவர் மொழிகளில் முழக்கங்களை எழுப்பிக் கொண்டு, அனைத்து வயதிலும் மக்கள் திரண்டு, ஒரு குட்டி இந்தியாவை கண்முன்னே உருவாக்கியிருந்தனர்.
விலைவாசி உயர்வு, வேலையின்மை, கல்வி, சுகாதாரம், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம், தொழிலாளர் உரிமைகள், தேர்தல் சீர்திருத்தம், சமூக நீதி உள்ளிட்ட மக்களின் அன்றாட வாழ்வுடன் தொடர்புடைய பிரச்சினைகளை, ஆகஸ்ட் 6 முதல் 15ஆம் தேதி வரை நடைபயணங்களின் மூலம் நேரடியாக மக்களிடம் கொண்டு சென்ற தோழர்கள், அந்த அனுபவங்களோடு டெல்லியில் திரண்டிருந்தனர்.

பேரணி மேடையில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர்கள், மாநிலச் செயலாளர்கள், வர்க்க, வெகுஜன அரங்கங்களின் தலைவர், செயலாளர்கள், நாடாளுமன்ற / சட்டமன்ற உறுப்பினர்கள் அமர்ந்திருந்தனர்.

கட்சியின் தேசிய செயலாளர்களில் ஒருவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான, சந்தோஷ்குமார் மேடையிலிருந்தவர்களை அறிமுகம் செய்து வைத்தார்.

டெல்லி மாநிலச் செயலாளர் பேராசிரியர் தினேஷ் வார்ஷ்னே வரவேற்புரை நிகழ்த்தினார். பேரணியைத் துவக்கி வைத்து பொதுச்செயலாளர் டி.ராஜா உரையாற்றினார். அவரைத் தொடர்ந்து ஏஐடியுசி பொதுச்செயலாளரும், கட்சியின் தேசியச் செயலாளர்களில் ஒருவருமான அமர்ஜித் கவுர், ராமகிருஷ்ண பாண்டா, ஆனி ராஜா உட்பட 14 தோழர்கள் உரையாற்றினர்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜாவின் எழுச்சியுரை வருமாறு:

“வரலாற்றுச் சிறப்புமிக்க பேரணியை நாம் அனைவரும் சேர்ந்து நடத்தி இருக்கிறோம். நாட்டின் அனைத்து மூலைகளிலிருந்தும் அணிவகுத்து வந்திருக்கிறீர்கள். ‘ஆகஸ்ட் 6முதல் 15 ஆம் தேதி வரை நாடும் மக்களும் சேர்ந்து முன்னேற என்ன செய்ய வேண்டும் என மக்களுக்கு விளக்கியும், கோரிக்கைகளை மக்களிடமிருந்து கேட்டறிந்தும் பத்து நாட்கள் நடைபயணப் பரப்புரை நிகழ்த்திய அனுபவத்தோடு வந்திருக்கிறீர்கள்.
இன்று மோடி தலைமையிலான அரசு, நாட்டைப் பெரும் நெருக்கடிக்குள் ஆழ்த்தி விட்டது. பலமுனைகளிலும் நாடு நெருக்கடியைச் சந்திக்கிறது. மக்களின் வாழ்க்கையில் மேம்பாடு காணவேண்டும் என்றால் ஒரு மாற்றம் ஏற்பட்டேத் தீரவேண்டும். மக்களுக்கானதாக இந்தியாவை நாம் மாற்ற வேண்டும்.

பிஜேபி-ஆர்எஸ்எஸ் கையில் அதிகாரம் உள்ளது. உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரம் என்று மோடி மார்தட்டிப் பேசுகிறார். இந்த ராம்லீலா திடலிலிருந்து நாங்கள் கேட்கிறோம். இந்திய மக்களின் தனி நபர் வருமானம் உலக அளவில் எந்த இடத்தில் இருக்கிறது? மக்களின் பொருளாதார நிலை என்ன? அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே இருப்பது ஏன்? பணவீக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறதே, அதைத் தடுக்க நீங்கள் செய்ததென்ன? டாலருக்கு இணையான ரூபாய் மதிப்பு ஏன் விழுந்து கொண்டே இருக்கிறது.
நீங்கள் குஜராத்தின் முதலமைச்சராக இருந்தபோது, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 60 ரூபாயாக இருந்த போது நீங்கள் பேசியது நினைவிருக்கிறதா? “நமது நாணயம் ஐசியூ பிரிவில் மரணப் படுக்கையில் கடைசிக் கட்டத்தில் இருக்கிறது. அதற்கு உடனடியாக ஒரு மருத்துவரின் கவனிப்பு தேவை” என்று பேசினீர்களே! உங்கள் ஆட்சியில் டாலர் மதிப்பு 95 ரூபாயாக விழுந்துவிட்டதே! இப்போது ரூபாய் எங்கே இருக்கிறது?

இந்திய மக்கள் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து விடுதலைப் போரை நடத்தி வென்றனர் . எந்த நாடும் இன்னொரு நாட்டை ஆக்கிரமிக்கக் கூடாது என்ற பஞ்சசீலக் கொள்கையை முன்மொழிந்து, கூட்டு சேரா நாடுகளுக்குத் தலைமை தாங்கியது இந்தியா. பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்து அழித்த இஸ்ரேலோடு அமெரிக்கா கூட்டுச் சேர்ந்து கொண்டு, ஈரான் மீது கடும் தாக்குதல் நடத்துகிறது. உலகம் எங்கும் எண்ணெய்க்குச் சிக்கல் வந்துள்ளது.
பாலஸ்தீன இனத்தையே அழித்துக் கொண்டிருக்கும் இஸ்ரேலோடு நெருக்கமான நட்பில் இருக்கிறார் மோடி. இஸ்ரேலை, இந்தியர்களின் “தந்தை நாடு” என்று அந்த நாட்டில் இருந்து கொண்டு சொல்கிறார்.
ரஷியாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யக் கூடாது என்று தடை விதிப்பதற்கு அமெரிக்கா யார்? அதற்கு ஏன் மோடி தலைவணங்க வேண்டும். நமது முடிவுகளை நாமே எடுத்துக்கொள்ள நமக்கு உரிமையில்லையா? நாம் இறையாண்மை கொண்ட நாடு இல்லையா?
மோடி ‘சப்கா சாத், சப்கா விகாஷ்’ (அனைவரோடும் நாம், அனைவருக்கும் வளர்ச்சி) என்றார் மோடி. ஆனால் நடப்பதென்ன? மோடியின் ஆட்சியில் அம்பானி, அதானி ஆகியோருக்குத்தான் வளர்ச்சி. அவர் ஏழைகளின் நண்பர் அல்ல.
கார்ப்பரேட்டுகளின் நலனுக்காக பழங்குடி மக்கள் மீது அவரது அரசு கணக்கற்ற தாக்குதல் களை நடத்திக் கொண்டிருக்கிறது. பட்டியலின மக்கள் ஒடுக்கப்படுகிறார்கள். டாக்டர் அம்பேத்கர், “அரசியல், பொருளாதார சீர்திருத்தங்களுக்குத் தடையாக, ஒரு பூதமாக சாதிய முறைமை நிற்கிறது. அதைக் கொன்று முடிக்காமல் எந்த முன்னேற்றமும் சாத்தியமில்லை” என்றார்.
காங்கிரஸ் தலைவர், நாடா
ளுமன்ற உறுப்பினரான மல்லிகார்ஜூன கார்கே, உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் காங்கிரஸ் சார்பில் நடத்தப்பட்ட பேரணியில் உரையாற்றினார்.
அவர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால், மைதானம் தீட்டுப்பட்டதாகக் கூறி புனிதப்படுத்தும் சடங்கைச் செய்தனர்.
இது நாட்டுக்கு அவமானமில்லையா? நமது அரசியல் சாசனத்துக்கு எதிரானதில்லையா? இந்த வெட்கங்கெட்ட செயலை மோடியோ, அமித்ஷாவோ ஏன் கண்டிக்கவில்லை?
பெண்களின் ஆற்றலை “நாரி சக்தி” என்று புகழ்கிறார் மோடி. ஆனால் பெண்களுக்கான 33% இடஒதுக்கீட்டை ஏன் செயல்படுத்தவில்லை? நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும், பெண்கள் இட ஒதுக்கீட்டுக்கும் என்ன சம்பந்தம்?

கரப்பான்பூச்சி இயக்கம், நாடாளுமன்றத்தின் அருகில் ஜந்தர்மந்தரில் போராட்டம் நடத்தியது. இடதுசாரி மாணவர் அமைப்புகளான ஏஐஎஸ்எஃப், எஸ்எஃப்ஐ ஆகியவை அதற்கு உறுதுணையாக நின்றன.
அவர்கள் அமைதியாகப் போராடினார்கள். அவர்கள் மீது தடியடி, கண்ணீர்ப் புகை, தண்ணீர் பீய்ச்சி அடித்தல், பெல்லட் குண்டுகளால் சுடுதல் என அடக்கி ஒடுக்க ஏன் இவ்வளவு பெரிய முயற்சிகள்?
இந்தியாவின் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும், கண்ணியத்தோடு வாழும் வாழ்க்கையை அரசியல் சாசனம் உறுதி செய்திருக்கிறது. அதே அரசியல் சாசனத்தின் மீது ஆணையிட்டுத்தான், மோடியும் அமித்ஷாவும் பதவியேற்றார்கள்.
உலகிலேயே அதிக ஏழைகள் வாழும் நாடாக இந்தியா இருக்கிறது. மக்களுக்கான கண்ணியமான வாழ்க்கையைத் தருவதற்கு மோடி அரசு தவறிவிட்டது. அவர்களது வாழ்வை இன்னும் அவல நிலைக்குத் தள்ளிவிட்டது.
மதத்தின் பெயரில் விஷம் கக்குகிறது மோடி அரசு. கிறித்தவர்கள் நிறைந்த நியூயார்க் நகரின் மேயராக, சோஷலிஸ்ட்டான ஒரு முஸ்லிம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அங்கு யாரும் தமது மதம் அழிக்கப்படுகிறது என்று கூச்சலிடவில்லை.
இந்து – முஸ்லிம் ஒற்றுமையைத் தன் வாழ்நாள் செய்தியாகத் தந்தவர் மகாத்மா காந்தி. “ஈஸ்வர அல்லா தேரே நாம். சப்கோ ஷன்மதி தே பகவான்” (ஈஸ்வரன், அல்லா என்பதெல்லாம் உன்னுடைய பெயர்தான். இதைப் புரிந்து கொள்ளும் நல்ல புத்தியைக் கொடு ஆண்டவனே) என்று பிரார்த்தனை செய்தவர் அவர். இப்போது மோடி, மோகன் பகவத், அமித்ஷாவுக்கு அந்த நல்ல புத்தியைக் கொடு என்றுதான் கேட்கவேண்டும்.
அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தியை நல்லிணக்க நாளாக நாம் கொண்டாடப் போகிறோம்.
நவம்பர் 7, உலகின் முதல் சோஷலிஸப் புரட்சி வெற்றிபெற்ற நாளை சிறப்பாகக் கொண்டாடுவோம்.
அறிவார்ந்து சிந்திப்பவர்களை, சமூக செயற்பாட்டாளர்களை “திமாகி நக்சல்” என்று பெயரிட்டு, அவர்களை ஒழித்துவிடுவோம் என்று மோடி பேசுகிறார். சிந்தனையாளர்களை ஒழித்து விட்டு தேசத்தை முன்னேற்றப்பாதையில் அழைத்துச் செல்வோம் என்பது ஒரு ஏமாற்றுவித்தை.
2027ல் உத்தரப் பிரதேசத்தில், உத்தர்காண்ட் மாநிலத்தில், பஞ்சாப்பில் சட்டப் பேரவைத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. இந்தத் தேர்தல்களில் ஆக்கபூர்வமான, முக்கியமான பங்களிப்பை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி செலுத்தும்.
நடைபயணப் பரப்புரையில் நாம் முன்வைத்த முழக்கங்களை வலியுறுத்தி, வரும் டிசம்பர் மாதத்தில் சிறை நிரப்பும் போராட்டத்தை நாம் மேற்கொள்ள இருக்கிறோம். கட்சியின் அழைப்பை ஏற்று அனைத்து மாநிலங்களில் இருந்தும் வந்து குவிந்துள்ள உங்களால்தான், இந்தியாவை சாதாரண மக்களுக்கான நாடாக மாற்றியமைக்க முடியும்.
ஒரு புதிய இந்தியாவை, சாதி பேதமில்லாத, வர்க்க பேதமில்லாத, ஒரு சோஷலிஸ்ட் இந்தியாவை நாம் கட்டமைப்போம். செங்கொடி இந்தியாவை மாற்றும்; இந்தியாவைக் காக்கும். செம்படை ஒருபோதும் மெளனம் காத்து நிற்காது. எந்த அச்சுறுத்தலையும் எதிர்கொள்ளும். நமது தாய் நாட்டை நாம் காப்பாற்றியே தீருவோம்.” – இவ்வாறு கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா உரையாற்றினார்.