கவன ஈர்ப்புத் தீர்மானங்கள், தொகுதி கோரிக்கைகள்
சட்டமன்றத்தில் டி.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. பேச்சு

சட்டமன்றக் கூட்டத் தொடரில், நாள்தோறும் பல்வேறு மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வந்தது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக்குழுத் தலைவர் டி.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. இந்த விவாதங்களில் பங்கேற்றுப் பேசியதுடன், கவன ஈர்ப்புத் தீர்மானங்ளும் கொண்டுவந்தார். அவை வருமாறு:
ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்விலிருந்து விலக்கு – தீர்மானத்துக்கு வரவேற்பு
இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களுக்கு 2010ல் ஒன்றிய அரசு ஆசிரியர் தகுதி தேர்வு கொண்டுவந்த பிறகு, அவர்களுடைய பதவி உயர்வு, உரிய பயன்கள், பணிப் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருந்தது. இதனால் அந்த ஆசிரியர்களுக்கு தகுதி தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று நேற்றுகூட சட்டமன்றத்தில் வலியுறுத்திப் பேசினேன்.
இன்றைக்கு அந்த ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்கும் வகையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தீர்மானம் கொண்டு வந்துள்ளார். இதனை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக ஆதரிக்கிறேன். (25.8.2026)
மலைக் கிராமங்களுக்கு சாலை வசதி – கோரிக்கை
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி சட்டமன்றத் தொகுதியில் தமிழ்நாடு வனத்துறை சார்பாக காவிரி தெற்கு மற்றும காவிரி வடக்கு யானைகள் சரணாலயம் என 1,18,000 ஏக்கர் அறிவிக்கப்பட்டிருக்கிறது. என்னுடைய தளி சட்டமன்றத் தொகுதியில் தொழுவப்பெட்டா, புல்லட்டி, குடி போன்ற மலைக்கிராமங்கள் 7கி.மீ., 8 கி.மீ. தூரம் சாலை வசதி இல்லாமல், பேருந்து வசதி இல்லாமல் மாணவர்களும், பொதுமக்களும் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டி இருக்கிறது. இதற்கு வனச் சட்டங்கள் தடையாக இருக்கின்றன. ஆகவே, வனத்துறையின் சார்பாக உரிய அனுமதி வழங்கி, அந்த 3 மலைக் கிராமங்களுக்கும் தார்ச்சாலை அமைத்துத்தர வேண்டுகிறேன். (27.8.2026)
விலைவாசி உயர்வு -கவன ஈர்ப்புத் தீர்மானம்
அத்தியாவசியப் பொருள்களான அரிசி, பருப்பு, சர்க்கரை, காய்கறிகள் விலை பல மடங்கு உயர்ந்திருக்கிறது. குறிப்பாக கரும்பு 30 லட்சம் டன் எத்தனாலுக்கு அனுப்பப்படுவதால், சர்க்கரை விலை உயர்ந்திருக்கிறது. ஒரு கிலோ சர்க்கரை 70 ரூபாயிலிருந்து 80 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
சமையல் எரிவாயு விலை உயர்ந்திருப் பதால், சாதாரண டீக்கடைகளில், தெருவோரக் கடைகளில்கூட 10ரூபாய்க்கு விற்ற டீ 15ரூபாய்க்கு உயர்த்தியிருக்கிறார்கள். பொன்னி அரிசி 65 ரூபாயிலிருந்து 80 ரூபாயாக உயர்ந்திருக்கிறது. உளுத்தம்பருப்பு 120 ரூபாயிலிருந்து 150 ரூபாய்வரை உயர்ந்திருக்கிறது. கடலைப்பருப்பு 80 ரூபாயிலிருந்து 100 ரூபாய் வரை உயர்ந்திருக்கிறது. தனியா 160 ரூபாயிலிருந்து 250 ரூபாய் வரை உயர்ந்திருக்கிறது.
ஆகவே, அனைத்து அத்தியாவசியப் பொருள்களையும், பொதுவிநியோக முறையின் கீழ் அரசு வழங்க வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக அரசின் கவனத்தை ஈர்த்து அமர்கிறேன். (28-8-2026)
தேன்கனிக்கோட்டை பேரூராட்சியில் புறவழிச்சாலை
தளி சட்டமன்றத் தொகுதியில் உள்ள தேன்கனிக்கோட்டை வளர்ந்து வருகின்ற ஒரு பேரூராட்சி, இங்கு குறுகலான சாலைகள் உள்ளன. தேன்கனிக்கோட்டை, தளி, ஒசூரைச் சுற்றி ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. டாடா எலக்ட்ரானிக்ஸ், லைலேண்ட், டிவிஎஸ் போன்ற தொழிற்சாலைகள் ஒரு நேரத்திற்கு 100, 200 வாகனங்கள் வருவதால், காலை, மாலை நேரங்களிலே போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அடிக்கடி விபத்துகளும் நடக்கின்றன. போக்குவரத்து நெரிசலையும், விபத்துகளையும் தவிர்க்கும் வகையில் தேன்கனிக்கோட்டையில் புறவழிச்சாலை அமைக்கப்பட வேண்டும். (31-8-2026)
டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு – நன்றி
டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று இந்த அவையில் 23ஆண்டு காலமாக தொடர்ந்து கோரிக்கை வைத்திருக்கிறோம். கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில்கூட கோரிக்கையை வைத்தோம். தற்போது டாஸ்மாக் மேற்பார்வையாளருக்கு 33,250 ரூபாயும், விற்பனையாளர்களுக்கு 30,844 ரூபாயும், உதவியாளர்களுக்கு 29,650 ரூபாயும், பண்டிகைக் காலங்களில் சீருடை, 4ஆயிரம் ரூபாய் முன்பணம், 8 மணி நேர வேலை உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சருக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். (31.8.2026)
தூய்மைப்பணியாளர்கள் போராட்டம் – கவன ஈர்ப்புத் தீர்மானம்
தூய்மைப் பணியாளர்கள் 13 நாள்களாக பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, மகப்பேறு விடுப்பு, உணவுப்படி உட்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். 2025ல் போராடும் போது அவர்களைச் சந்தித்து மாண்புமிகு முதலமைச்சர் ஆதரவு கொடுத்தார். இப்போதும் முதலமைச்சரை சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்த வேண்டும், அதிகாரிகள் தொடர்ந்து தடுப்பதாகக் கூறுகின்றனர். எனவே, தூய்மைப் பணியாளர்களை அழைத்து, அரசின் சார்பாக அவர்களின் கோரிக்கையைப் பரிசீலித்து, நிறைவேற்ற வேண்டும் என அரசின் கவனத்தை ஈர்த்து அமர்கின்றேன். (31.8.2026)
காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும்
கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி உட்பட தமிழ்நாட்டிலுள்ள 26 சுங்கச்சாவடிகளில் 01.09.2026 முதல் ஒரு வாகனத்துக்கு 5 ரூபாயிலிருந்து 125 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தியிருக்கிறார். இதனால் வாகன ஓட்டிகளும், வாகன உரிமையாளர்களும் பாதிக்கப்படுகிறார்கள். ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட குத்தகைக்கு வழங்கப்பட்ட சுங்கச்சாவடிகள், காலாவதியான சுங்கச்சாவடிகள் தொடர்ந்து இந்தக் கட்டணத்தை வசூலிக்கிறார்கள். ஆகவே, காலாவதியான சுங்கச்சாவடிகள் கட்டணம் வசூலிப்பதை அரசு நிறுத்த வேண்டும் என்பதை அரசின் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன். (1.9.2026)
வனவிலங்குகளிடம் இருந்து காக்க நடவடிக்கை
என்னுடைய தளி சட்டமன்றத் தொகுதியை உள்ளடக்கி, காவிரி வடக்கு யானைகள் சரணாலயம், காவிரி தெற்கு உயிரின சரணாலயம் என ஒன்றிய – மாநில அரசுகள் அறிவித்துள்ளன. இங்கு வன விலங்குகள், யானைகள், காட்டுப்பன்றிகள் குடிநீர்த் தேவைக்காகவும், உணவுக்காகவும் விளைநிலங்களுக்கு வந்து, விவசாயிகளுடைய நெல், வாழை, கரும்பு, தக்காளி உள்ளிட்ட பயிர்களைச் சேதப்படுத்துகின்றன.
குறிப்பாக யானைகள் தாக்கி என்னுடைய தொகுதியில் ஆண்டுக்கு 20 பேர் உயிரிழக்கின்றனர். எனவே, வன விலங்குகள் குறிப்பாக குடியிருப்புப் பகுதிக்குள் வராதவாறு சோலார் ரோப்- இரும்பு மின்வேலி அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். காட்டுப்பன்றியை வனவிலங்குகள் பட்டியலிலிருந்து கேரளாவில் நீக்கி இருக்கிறார்கள். அதேபோன்று, தமிழ்நாட்டிலும் வனவிலங்குகள் பட்டியலிலிருந்து நீக்க வேண்டும். (2.9.2026)
நீட் போராட்ட வழக்குகளை திரும்பப்பெற வேண்டும்
ஜனநாயகத்தில் போராட்டங்கள் நடத்துவது அனுமதிக்கப்பட்டுள்ளது. அரசமைப்புச் சட்டம் 19 (ஏ), (பி), (சி)-யில் ஜனநாயக முறைப்படி போராட்டங்கள், சங்கம் அமைப்பது, கூடுவது என்பதெல்லாம் அனுமதிக்கப் பட்டுள்ளது. அந்த வகையில் தொடர்ந்து தமிழ்நாட்டினுடைய வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்காக, குறிப்பாக பரந்தூர் விமான நிலையம், ஓசூர் சிப்காட், திருவண்ணாமலை சிப்காட், 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து, மாணவர் அமைப்புகள், ஆசிரியர் அமைப்புகள், ஹைட்ரோ கார்பன் திட்டம் உட்பட பல்வேறு மக்கள் நலன் சார்ந்து கோரிக்கைகளுக்காகப் போராடிய விவசாயிகள் மீதும், மாணவர்கள் மீதும் போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படும் என்று அறிவித்த முதலமைச்சர் அவர்களுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நீட் போராட்டத்தின் போதும் மாணவர் அமைப்புகள் மீதும் போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். (2.9.2026)
சாயப்பட்டறைக் கழிவுகள்
பவானி, ஈரோடு, குமாரபாளையம் பகுதிகளில் சாயப்பட்டறைக் கழிவுகள் நேரடியாகக் காவிரி ஆற்றில் கலப்பதால், நீர் நிலைகள், நீர்வாழ் உயிரினங்கள், சுற்றுச்சூழல் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறது. அந்த சாயப் பட்டறைக் கழிவுகளை நேரடியாகக் காவிரி ஆற்றில் கலக்காமல், அரசின் சார்பாக பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். (3.9.2026)
உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழி தீர்மானம்
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாகவும், தீர்ப்பு மற்றும் தீர்ப்பு ஆணைகள், உத்தரவுகள் தமிழில் வழங்க வேண்டும் என்றும் முதலமைச்சர் அவர்கள் கொண்டு வந்திருக்கிற இந்த அரசியல் தீர்மானத்தை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக வரவேற்று ஆதரிக்கிறேன்.
உலகெங்கும் 9 கோடி மக்கள் பேசுகின்ற தமிழ்மொழி. நம்முடைய செப்பேடுகளில், கல்வெட்டுகளில் மூத்த மொழி என்ற நம்முடைய தமிழ் மொழியை ஒன்றிய அரசாங்கம் ஆராய்ந்து கடந்த 12.10.2004-ல் வழங்கியது.
இதே அவையில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில், உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழைக் கொண்டுவரவேண்டும் என்று 6.12.2006 அன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஒன்றிய அரசு மற்றும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர், உச்சநீதிமன்ற முழு அமர்வு இதை நிராகரித்து விட்டது என்று ஒன்றிய சட்ட அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இன்றைக்கு கீழமை நீதிமன்றங்களில் தமிழ் வழக்காடு மொழியாக இருக்கிறது. அனைத்து நீதிமன்றங்களும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக ஏஐ தொழில்நுட்ப வளர்ச்சிக்குப் பிறகு, நாம் தமிழில் பேசினால் ஒரே நேரத்தில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க முடியும். ஆகவே, மொழிபெயர்ப்புக் கட்டமைப்பு வசதியை ஏற்படுத்தி, உயர்நீதிமன்றத்திலும் தமிழை வழக்காடு மொழியாகக் கொண்டு வரவேண்டும்.
நீதிமன்றங்களின் கதவுகள் 24 மணி நேரமும் எளிய மக்களுக்காக திறந்திருக்கும் என்று சொல்கிறார்கள். எளிய மக்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், பெண்கள் எல்லோரும் தங்களுடைய நீதிக்காக வழக்காடுவது தமிழ்மொழியிலும், தீர்ப்புகளும், தீர்ப்பாணைகளும், உத்தரவுகளும் தமிழிலே வரவேண்டும் என்று காத்திருக்கிறார்கள்.
எனவே, தமிழை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாகக் கொண்டு வருவதற்காக மாண்புமிகு முதலமைச்சர் முன்மொழிந்திருக்கும் இந்தத் தீர்மானத்தை ஆதரிக்கிறேன். (3.9.2026)
இவ்வாறு சட்டமன்றத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் டி.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. உரையாற்றினார்.