இந்தியா

கேள்வி கேட்கும் உரிமை; கருத்து வேறுபாடுகள் அனைத்துமே அச்சுறுத்தல் அல்ல!

நீதிபதி பூயான் உறுதி

இந்தியா போன்ற அரசியலமைப்பு ஜனநாயகத்தில், அரசு குடிமக்களின் கருத்துகளைக் கேட்டறிய வேண்டும்; கருத்து வேறுபாடுகளுக்கு இடமளிக்க வேண்டும்; சமூகத்திற்குப் பொறுப்பேற்கிற நிறுவனங்களைக் கொண்டிருக்க வேண்டும். ஒவ்வொரு கருத்து வேறுபாட்டையும் ஓர் அச்சுறுத்தலாகக் கருதக்கூடாது என்று உச்சநீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் பூயான் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.

டெல்லியில் உள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று நீதிபதி பூயான் உரையாற்றினார். அவை வருமாறு:

“இந்திய அரசியலமைப்பு, சுதந்திரமாகப் பேசுவதற்கும், சிந்திப்பதற்கும், மாறுபட்ட கருத்துகளையும் நம்பிக்கைகளையும் கொண்டிருப்பதற்கும் உத்தரவாதம் அளிக்கிறது

ஜனநாயகத்தில் கேள்வி கேட்கும் உரிமை என்பது கீழ்ப்படிய மறுக்கும் செயலல்ல. அது குடியுரிமை, சுதந்திரம் மற்றும் அரசியலமைப்புச் சார்ந்த பொறுப்பு ஆகியவற்றின் இன்றியமையாத வெளிப்பாடாகும்.” என்று அவர் கூறினார்.

“கருத்து வேறுபாடு அல்லது எதிர்ப்புக் குரல் என்பது ஒரு நியாயமான மாறுபட்ட கருத்தாகக் கருதப்படாமல், மௌனப்படுத்தப்பட வேண்டியதாகவோ, நிராகரிக்கப்பட வேண்டியதாகவோ அல்லது தண்டிக்கப்பட வேண்டியதாகவோ கருதினால், சகிப்புத்தன்மையை இழந்தால், அந்த அணுகுமுறை அரசியலமைப்புக் கட்டமைப்பையே சீர்குலைக்கத் தொடங்குகிறது”.

“கருத்து வேறுபாடுகளுடன் இணைந்து வாழும் திறன் என்பது வெறுமனே ஒரு சமூகப் பண்பு மட்டுமல்ல. அது விரிவடைந்த அரசியலமைப்பு ஜனநாயகத்தின் அடிப்படை சாராம்சமே ஆகும். பெரும்பான்மையினரின் ஆதரவைப் பெற்ற பிரபலமான கருத்துக்களை அது எவ்வாறு மதிக்கிறது என்பது மட்டுமே ஒரு ஜனநாயகத்தின் முதிர்ச்சியாகாது. கடினமானதாக, பிரபலமற்றதாக அல்லது அதிகாரத்துக்கு வசதிக் குறைவை ஏற்படுத்துகிற கருத்துக்களுக்கு உரிய பதிலளிப்பதிலேயே முதிர்ச்சி அடங்கியுள்ளது.”

“அரசியலமைப்பின் கீழ் உள்ள சகிப்புத்தன்மை, நமது தனித்துவத்தை விட்டுக்கொடுக்கச் சொல்வதில்லை”

“ஒரு கருத்தை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரமும், நிலவும் கருத்துக்கு மாறுபட்ட கருத்தைக் கொண்டிருப்பதற்கான உரிமையும், பொது வாழ்க்கையில் பங்கேற்பதற்கான உரிமையும் அர்த்தமுள்ளதாக அமைய வேண்டுமெனில், கருத்து வேறுபாடுகளுக்கும் எதிர்ப்புக் குரல்களுக்கும் இடம் இருக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.

அனைவரும் ஒரே சிந்தனை மொழியில் பேசும்போது ஜனநாயகம் அர்த்தமுள்ளதாக மாறுவதில்லை; மாறுபட்ட குரல்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து வாழவும், அவை கேட்கப்படவும், கண்ணியத்துடன் நடத்தப்படவும் முடியும் போதுதான் ஜனநாயகம் அர்த்தமுள்ளதாகிறது என்று நீதிபதி பூயான் கூறினார்.

1986-ஆம் ஆண்டு பிஜோய் இம்மானுவேல் வழக்கில் நீதிபதி ஓ. சின்னப்பா ரெட்டி வழங்கிய தீர்ப்பை அவர் மேற்கோள் காட்டினார். அதில் நீதிபதி கூறியிருந்ததாவது:

“நமது பாரம்பரியம் சகிப்புத்தன்மையைக் கற்றுத் தருகிறது; நமது தத்துவம் சகிப்புத்தன்மையைப் போதிக்கிறது; நமது அரசியலமைப்பு சகிப்புத்தன்மையை நடைமுறைப்படுத்துகிறது; அதை நாம் நீர்த்துப் போகச் செய்ய வேண்டாம்.”

கேள்வி கேட்கும் சுதந்திரத்திற்கும், மாறுபட்ட கண்ணோட்டத்தை சகித்துக்கொள்ளும் பண்பிற்கும் இடையே உள்ள உள்ளார்ந்த தொடர்பை அவர் விளக்கினார்.

“வேறுபாடுகள் இருக்கும் என்பதையும், அந்த வேறுபாடுகள் விரிவான அரசியலமைப்புச் சட்டகத்திற்குள் ஏற்றுக்கொள்ளப்பட்டு இடமளிக்கப்பட வேண்டும் என்பதையும் புரிந்துகொள்வதன் அடிப்படையில்தான் ஒரு ஜனநாயகச் சமூகம் கட்டமைக்கப்படுகிறது” என்று அவர் கூறினார்.

நமது அரசியலமைப்பின் கீழ் உள்ள சகிப்புத்தன்மை என்பது நமது தனித்துவத்தை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று கேட்பதில்லை என்றும் நீதிபதி பூயான் கூறினார்.

“ஒரு சுதந்திரமான சமூகத்தில் வெவ்வேறு கருத்துகள், நம்பிக்கைகள் மற்றும் உலகைப் பார்க்கும் வெவ்வேறு பார்வைகள் இருக்கும் என்பதை அது அங்கீகரிக்கிறது” என்று அவர் தெரிவித்தார்.

“சுதந்திரத்தையும் வேறுபாடுகளையும் மதிக்கும் ஒரு ஜனநாயகச் சமூகத்தை நாம் விரும்பினால், அந்தப் பண்பாடு எங்கிருந்தாவது தொடங்க வேண்டும். அது நமது பல்கலைக்கழகங்களிலிருந்துதான் தொடங்க முடியும்.

“சுதந்திரமாகச் சிந்திக்கும் பழக்கம் முதலில் உருவாக வேண்டிய இடங்களில் ஒன்றாக ஒரு பல்கலைக்கழகம் இருக்க வேண்டும் என்பது எனது கருத்து” என்று நீதிபதி பூயான் கூறினார்.

-தமிழில்: டி.எம். மூர்த்தி

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button