தமிழகம்

உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அங்கீகரி!

இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் 9-வது மாநில மாநாடு தீர்மானம்

இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் மாநில 9-வது மாநாடு 19.09.2026 அன்று கோவை மாநகரில் அமைந்துள்ள NSK-தி கிராண்ட் ஸ்பேஸ் அரங்கில் நடைபெற்றது.

வரவேற்புக் குழுவின் சிறப்புத் தலைவர் தோழர் எம்.ஆறுமுகம் முன்னாள் எம்.எல்.ஏ. வரவேற்புரை ஆற்றினார்.

மாநாட்டு தொடக்கவுரை

நமது மாநிலத் தலைவர் வழக்கறிஞர் கு.சாமிதுரை தலைமையில் காலையில் நடைபெற்ற பொது மாநாட்டினை தொடங்கி வைத்து அகில இந்திய தலைவர், உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஆர்.எஸ்.சீமா உரையாற்றினார். மறைந்த மூத்த சட்ட வல்லுநர்கள் நீதியரசர்.வி.ஆர்.கிருஷ்ணய்யர், மறைந்த மூத்த வழக்கறிஞர் என்.டி.வானமாமலை, மறைந்த வழக்கறிஞர்கள் என்.ஜான் செல்வராஜ், வி.அஜய்கோஷ், ஐ.ஜார்ஜ், எஸ்.லிங்கன், என்.பாலகிருஷ்ணன் ஆகியோரது படங்கள் திறந்து வைக்கப்பட்டன.

நீதிபதி வாழ்த்து

சென்னை உயர் நீதிமன்றத்தின் மாண்பமை நீதியரசர்.என்.ஆனந்த் வெங்கடேஷ் பங்கேற்று சிறப்புரையாற்றினார். உணர்வு பூர்வமானதாகவும் அனைவரும் சிந்திக்க கூடியதாகவும் உரை அமைந்திருந்தது.

பத்திரிகைகள், தொலைக்காட்சி, சமூக வலைதளங்கள் மற்றும் அனைத்து ஊடகங்களும் அவரது உரையை முக்கியத்துவம் வழங்கி வெளிப்படுத்தின. சமூக ஊடகங்களில் அவரது உரை முழுமையாக இடம்பெற்றது சிறப்புக்குரியதாகும்.

பொது மாநாடு

மாநில 9 வது மாநாட்டினை வாழ்த்தி இந்திய வழக்கறிஞர் சங்கத் தேசிய பொதுச்செயலாளர் ஆர்.முரளிதரா, ஏஐடியூசி தேசிய செயலாளர் தோழர் டி.எம்.மூர்த்தி, இந்திய வழக்கறிஞர் சங்கத் தேசிய செயலாளர் கே.பி.ஜெயச்சந்திரன் (கேரளா), இந்திய வழக்கறிஞர் சங்க மூத்தத் தலைவர் தோழர் ப.பா.மோகன், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுத் தலைவர் வழக்கறிஞர் பி.நந்தகுமார், கோவை ஜில்லா மில் தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் சி.சின்னசாமி, கோயம்புத்தூர் வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் வழக்கறிஞர். ஆர்.பாலகிருஷ்ணன், கோயம்புத்தூர் வழக்கறிஞர் சங்கத்தின் செயலாளர் வழக்கறிஞர் கே.சுதீஷ் உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர்.

வெளிமாநிலத் தலைவர்கள்

கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, ஹரியானா, கர்நாடகா, ஒடிசா, உத்தரபிரதேசம், புதுடெல்லி உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் நிர்வாகிகள் நமது மாநாட்டில் பங்கேற்று சிறப்பித்தனர்.

புத்தக வெளியீடு

மாண்பமை. நீதியரசர். என்.ஆனந்த் வெங்கடேஷ் அவர்கள் எழுதி, என்சிபிஎச் வெளியிட்ட “அம்பேத்கரை தெரிந்துகொள்வோம்” என்ற நூல் மாநாட்டு அரங்கில் வெளியிடப்பட்டது.

சட்டக் கல்லூரியில் பயின்று வரும் 38 மாணவர்களுக்கு இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் (IAL) மற்றும் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் (AISF) சார்பில் மாண்பமை நீதியரசர்.என்.ஆனந்த் வெங்கடேஷ் மற்றும் அகில இந்திய தலைவர் உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் ஆர்.எஸ்.சீமா ஆகியோரால் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

பிரதிநிதிகள் மாநாடு

பிரதிநிதிகள் பதிவு குழு: எம்.முபீன் (கன்வீனர்), அ.ரஞ்சனி கண்ணம்மா, பி.முத்துலட்சுமி, எஸ்.ஹெலன் ரூபி, ச.அமர்ஜிதா ஆகியோர் பணியாற்றினர். சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஒ.ராமன் பாடல்களுக்கு பிறகு பிரதிநிதிகள் மாநாடு தொடங்கியது.

தமிழ்நாட்டின் 32 மாவட்டங்களில் இருந்து 152 பிரதிநிதிகள் பங்கேற்றனர். கடந்த 19.05.2023 அன்று மதுரையில் நடைபெற்ற 8-வது மாநில மாநாட்டிற்கு பிறகு நடைபெற்ற அரசியல், அமைப்பு நிலை மற்றும் வேலை அறிக்கைகளை மாநில பொதுச்செயலாளர் எஸ்.அருணாச்சலம் முன்வைத்தார். அறிக்கையின் மீது பிரதிநிதிகள் விவாதித்தபின்பு அறிக்கை ஒருமனதாக ஏற்கப்பட்டது.

மாநில பொருளாளர் வழக்கறிஞர் கே.ஆர்.ராமமூர்த்தி முன்வைத்த வரவு – செலவு அறிக்கையை ஒருமனதாக ஏற்கப்பட்டது.

மாநிலக்குழு தேர்வு:

67 வழக்கறிஞர்களை உள்ளடக்கிய புதிய மாநிலக்குழு தேர்வு செய்யப்பட்டது.

மாநில நிர்வாகிகளாக புரவலர்களாக ப.பா.மோகன் (ஈரோடு), பி.திருமலைராஜன் (கோவை), கே.சுகுமாரன் (கும்பகோணம்), கௌரவ உறுப்பினர்களாக கே.சுப்ரமணியன் (கோவை), கே.பாண்டியன் (நாகப்பட்டினம்), பெ.கணபதி சுப்ரமணியன் (தூத்துக்குடி), வி.கே.சுப்ரமணியன் (திருப்பூர்) ஆகியோரும், மாநிலத் தலைவராக கு.சாமிதுரை (மதுரை), பொதுச்செயலாளராக மு.அ.பாரதி (தஞ்சாவூர்), பொருளாளராக கே.ஆர்.ராமமூர்த்தி (சென்னை) ஆகியோர் ஒரு மனதாகத் தேர்வு செய்யப்பட்டனர்.

மாநில துணைத் தலைவர்களாக எஸ்.அருணாசலம் (சென்னை), ஏ.ஆதிமூலம் (சென்னை), எஸ்.ஏ.கனகசபாபதி (கன்னியாகுமரி), எல்.ராஜேந்திரன் (கோவை), என்.கார்த்திகேயன் (நாமக்கல்), எஸ்.பி.லோகநாதன் (புதுக்கோட்டை), கே.கே.சாமி (மதுரை), ஜி.பால்ராஜ் (விருதுநகர்), எஸ்.ஹெலன் ரூபி (திருப்பூர் புறநகர்), எம்.முபீன் (சென்னை உயர்நீதிமன்றம்), செயலாளர்களாக ப,மா.பாலமுருகன் (ஈரோடு), ஆர்.கிருஷ்ணகுமார் (சென்னை), ஜி.பி.சக்திவேல் (கோவை), ஆர்.முருகன் (விழுப்புரம்), கே.கலையரசன் (திருவாரூர்), ப.மோ.சுபாஷ் (தென்சென்னை), ஏ.ரஞ்சனி கண்ணம்மா (தூத்துக்குடி), ஏ.அர்ச்சனா (கள்ளக்குறிச்சி), எஸ்.பி.கோபிநாத் (திருப்பூர் மாநகர்), ஏ.முகமது பைசல் (தஞ்சாவூர்) ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.

தீர்மானங்கள்

1). தமிழ்நாடு ஆட்சிமொழிச் சட்டம் 1957ல் நடைமுறைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் இருக்கும் சார்நிலை நீதிமன்றங்களில் தமிழ் ஆட்சி மொழியாகும் என்று அறிவிக்கப்பட்டது. 1976இல் குற்றவியல் நீதிமன்றங்களிலும் 1982 இல் உரிமையியல் நீதிமன்றங்களிலும் தமிழ் ஆட்சி மொழியானது. 2006 இல் அன்றைய தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வரவேண்டும் என்பதற்கான தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றியது. சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக ஏற்கப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2). தெலுங்கானா மாநிலத்தில், வழக்கறிஞர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களது தொழில் சுதந்திரத்தை உறுதி செய்யும் வகையில் ‘Telangana Advocates Protection Act, 2026’ என்ற புதிய சட்டம் ஜூன் 2, 2026 முதல் அமலுக்கு வந்துள்ளது. இதைப்போல் தமிழ்நாட்டில் வழக்கறிஞர்கள் பாதுகாப்பு மற்றும் தொழில்முறை பணியை பாதுகாக்கும் வகையில் விரிவான தமிழ்நாடு வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டம் இயற்ற வேண்டும்.

3). தமிழ்நாட்டில் உள்ள வழக்கறிஞர்கள் உயிரிழக்கும் பட்சத்தில் வழக்கறிஞர்கள் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் சேமநல நிதி ரூபாய் 10 லட்சமாக உள்ளதை உயர்த்தி ரூபாய் 25 லட்சம் ஆக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4). தமிழகத்தில் உள்ள நீதித்துறையில் புதிய பணியிடங்களை உருவாக்கவும், காலிப் பணியிடங்கள் நிரப்பவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

5). பார் கவுன்சிலில் பதிவு செய்த இளம் வழக்கறிஞர்களுக்கு முதல் 3 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.10,000 உதவித் தொகை வழங்க வேண்டும். பெண் வழக்கறிஞர்களுக்கான நலத்திட்ட ஆரம்பகால வழக்கறிஞர் பணிக்காலத்தில் மாதம் ரூ.10,000 நிதியுதவியும், மகப்பேறு காலத்தில் மாதம் ரூ.5,000 உதவியும் வழங்க வேண்டும்.

6). கீழமை நீதிமன்றங்களில் கட்டாய இ-ஃபைலிங் முறையை நடைமுறைப்படுத்த படுவதற்கு முன்பு அதற்கான கட்டமைப்புகளை நடைமுறைப்படுத்தவும், இ – ஃபைலிங் செய்வதற்கு சேவை மையங்கள் தொடங்க வேண்டும் உள்ளிட்ட 16 தீர்மானங்களும் அனைத்தும் உரிய திருத்தங்களுடன் ஏற்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டன.

மாநாடு ஏற்பாடுகள், மண்டபம், உணவு உள்ளிட்ட விருந்தோம்பல் பணிகள் அனைத்தும் மாநாட்டு வரவேற்பு குழுவால் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அனைத்து ஏற்பாடுகளையும் மிகுந்த பொருட்செலவில் சிறப்பாக செய்திருந்த மாநாட்டு வரவேற்புக் குழு சிறப்புத் தலைவர் தோழர் எம்.ஆறுமுகம்,முன்னாள் எம்.எல்.ஏ, கோவை ஜில்லா மில் தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் சி.சிவசாமி, வரவேற்பு குழு செயலாளர் ஜி.பி.சக்திவேல், பொருளாளர் எல்.ராஜேந்திரன் உள்ளிட்ட குழுவினர் அனைவருக்கும் மாநிலக் குழு தனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button