அறிக்கைகள்

நீதியரசர் குரியன் ஜோசப் குழு கலைப்புக்கு எதிர்ப்பு

மறு பரிசீலனை செய்ய சிபிஐ வலியுறுத்தல்

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையிலான உயர்நிலைக் குழு கலைக்கப்பட்டதை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

ஒன்றிய – மாநில உறவுகள் குறித்து ஆய்வு செய்து, அரசுக்கு பரிந்துரை வழங்க உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையில் கடந்த ஆட்சியில் உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டது.

உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி முனைவர் பி.வி.ராஜமன்னார் தலைமையில் 1969 செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது. கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலான காலத்தில், ஒன்றிய – மாநில உறவுகளில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இவைகள் மீது முறையாக ஆய்வு செய்து, அரசுக்கு அறிக்கை அளிக்க அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவில், இந்திய ஆட்சிப் பணியாற்றி ஓய்வு பெற்ற மூத்த அலுவலர் முனைவர் கே.அசோக் வர்தன் ஷெட்டி மற்றும் கல்வி புலத்திலும், அறிவுத் தளத்திலும் முத்திரை பதித்துள்ள பேராசிரியர் முனைவர் எம்.நாகநாதன் ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உயர் மட்டக் குழு தனது முதல் தொகுதி அறிக்கையை, கடந்த 2026 பிப்ரவரி 16 ஆம் தேதியில் தமிழ்நாடு அரசிடம் வழங்கியுள்ளது. இதன் தொடர்ச்சியாக உயர் மட்டக் குழு, தனது இறுதி அறிக்கையை நிறைவு செய்யும் நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ஒன்றிய – மாநில உறவுகள் குறித்த உயர்நிலைக் குழு கலைக்கப்பட்டது சரியான நடவடிக்கையல்ல என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது. ஒன்றிய அரசு பொருளாதாரம், கல்வி, வேலை, விவசாயம், வேலை வாய்ப்பு, இயற்கை வளங்களை கையாளுதல் உட்பட அனைத்து அதிகாரங்களையும் தன்னிடம் குவித்துக் கொண்டுள்ளது. தொடர்ந்து குவித்தும் வருகிறது. இது, கூட்டாட்சி கோட்பாட்டிற்கு எதிரானது, மாநில உரிமைகளை மறுக்கும் செயலாகும்.

ஆளுநர்களை பயன்படுத்தி, மக்கள் தேர்வு செய்து அமைக்கப்பட்டுள்ள ஆட்சிக்கு எதிராக நடத்தி வரும் அதிகார அத்துமீறல்களை தமிழ்நாடு அரசும், மக்களும் கடந்த சில பத்தாண்டுகளாக அனுபவித்து, உணர்ந்த உண்மையாகும்.

இந்நிலையில் ஒன்றிய – மாநில உறவுகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டியது அவசியமாகும். அந்த அவசியத் தேவையை கவனத்தில் கொள்ளாமல் நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையிலான உயர்மட்டக் குழு கலைக்கப்பட்டதை மறுபரிசீலனை செய்து, அது தனது பணியை பூரணமாக முடித்து தருவதற்கு வாய்ப்பளிக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது என்று கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button