தமிழகம்

வலதுசாரி பாசிச – நவதாராளமய இருளுக்கு இடதுசாரி மாற்றே விடியல்

சிபிஐ, சிபிஐ(எம்), சிபிஐ(எம்எல்) லிபரேசன் கூட்டு அறைகூவல் வெளியீடு

வலதுசாரி – பாசிச கருத்தியல், ஆளும் வர்க்கங்களின் நவதாராளமய கருத்தியல் ஆகிய இரண்டுக்கும் எதிரான சித்தாந்தப் போரினை இடதுசாரி மாற்றை முன்வைத்து கூட்டாக முன்னெடுக்கவும், பரந்த மக்கள் இயக்கத்தை கட்டமைக்கவும் மூன்று இடதுசாரிக் கட்சிகள் கூட்டாக அறைகூவல் விடுத்துள்ளன.

இதற்காக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி , இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) லிபரேசன் ஆகிய கட்சிகள் இணைந்து தமிழ்நாடு மாநில அளவில் இடதுசாரி ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்துள்ளன.

இந்த ஒருங்கிணைப்புக் குழு சார்பாக சென்னையில் உள்ள சர் பிட்டி தியாகராயர் அரங்கில் 10.11.2026 அன்று “இடதுசாரிக் கட்சிகளின் கூட்டு அறைகூவல்” ஆவணம் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் –லெனினிஸ்ட்) லிபரேசன் மாநிலச் செயலாளர் பழ. ஆசைத்தம்பி ஆகியோர் கூட்டு அறைகூவலை வெளியிட்டு சிறப்புரையாற்றினர். சிபிஐ(எம்) மத்தியக்குழு உறுப்பினர் என்.குணசேகரன், சிபிஐ தேசியக்குழு உறுப்பினர் வகிதா நிஜாம், சிபிஐ(எம்எல்) லிபரேசன் மத்தியக்குழு உறுப்பினர் அ. சந்திரமோகன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.

இந்த விழாவுக்கு சிபிஐ(எம்) தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர். வேல்முருகன் தலைமை தாங்கினார். சிபிஐ தென்சென்னை மாவட்டச் செயலாளர் எஸ்.கே.சிவா வரவேற்புரையாற்றினார். மாவட்டச் செயலாளர்க் மு.வரதன், த.கு.வெங்கடேஷ் வேம்புலி (சிபிஐ), எம். ராமகிருஷ்ணன், ஜி. செல்வா (சிபிஐ-எம்), எம். மோகன் (சிபிஐ-எம்எல் லிபரேசன்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிபிஐ(எம்எல்) லிபரேசன் சென்னை மாவட்டச் செயலாளர் என். ஜேம்ஸ் நன்றி கூறினார்.

சிபிஐ, சிபிஐ(எம்), சிபிஐ-எம்எல் லிபரேசன் ஆகிய கட்சிகளின் கூட்டு செயல்பாட்டுக்காக அமைக்கப்பட்டுள்ள இடதுசாரி ஒருங்கிணைப்புக்குழு “ஒரு வரலாற்றுத் தேவை” என அறைகூவல் கூறுகிறது. மக்கள் விரோதப் பொருளாதாரக் கொள்கைகள் ஏற்படுத்திய கடும் பாதிப்புகளும், மாற்றம் தேவை என்ற மக்கள் மனநிலை யும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள தமிழகச் சூழலில், இடதுசாரி மாற்றுக்கான தேவை தற்போது அதிகரித்துள்ளது என்றும் ஆவணம் குறிப்பிடுகிறது. இடதுசாரிகளின் மாற்றுப்பாதையே இந்தியாவின் உண்மையான விடியலாகத் திகழ்கிறது என்றும் கூட்டு அறைகூவல் தெளிவுபட எடுத்துக் கூறுகிறது.

பன்முகம், சார்பின்மை

கூட்டு அறைகூவல் ஆவணத்தை வெளியிட்டு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் ஆற்றிய உரை வருமாறு:

“கூட்டு அறைகூவல் என்ற இந்த ஆவணத்தை இடதுசாரிகள் முன்மொழிகிறோம். இடதுசாரிகள் என்பது தனிமைப்படுத்தும் சொல் அல்ல. இடதுசாரி அரசியல் கட்சிகள் என்று சொல்கிற போது, இடதுசாரி குழுக்களை நாங்கள் கடந்து செல்ல விரும்பவில்லை. ஜனநாயக சக்திகளை கடந்து சென்று விட முடியாது. இந்தியா போன்ற உலகின் பல கோடி மக்கள் நிறைந்த நாட்டில், சட்டத்தின் ஆட்சிமுறை நிலைபெற்றிருக்கிற நாட்டில், நாடாளுமன்ற ஜனநாயகம் நிலைபெற்று இருக்கிற நாட்டில், பன்முகமும், சார்பின்மையும் நிலைபெற்றிருக்கிற நாட்டில், ஜனநாயக சக்திகளை இடதுசாரிகள் கடந்து சென்றுவிட முடியாது.

எனவே, இடதுசாரிகளின் இந்த கூட்டு அறைகூவலில் நாங்கள் அவர்களை நிரப்பிக் கொள்கிறோம். அது தமிழ் தேசியம் பேசுகிற தோழர்கள் ஆகட்டும், பெரியார் கருத்தியல், டாக்டர் அம்பேத்கர் கருத்தியல், காந்தி கருத்தியல் ஆகட்டும், இவை இடதுசாரிகளுக்கு அந்நியமானவை அல்ல. தமிழ் மண்ணில், இந்திய மண்ணில் ஒரு சோசலிசப் புரட்சி வெற்றி பெறும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

எங்கள் நோக்கம் சோசலிசம்

உலகில் வேறு எந்த நாட்டிலும் நிலவாத ஒரு மகத்தான பன்முகம் நிலவுகிற நாடு நம்முடைய நாடு. இதற்காக பலர் பாடுபட்டிருக்கிறார்கள். கதார் இயக்கம், கம்யூனிஸ்ட் இயக்கம், சுபாஷ் சந்திரபோஸ் இயக்கம், நவஜவான் இயக்கம், இந்திய தேசிய காங்கிரஸ், தனிப்பட்ட அறிஞர்கள்,குழுக்கள் என பலர் பாடுபட்டிருக்கிறார்கள். பழமைவாத, அறிவியலுக்கு எதிரான மூடத்தனங்களையும் மதவெறியையும் பரப்புபவர்களே எமது எதிரிகள்.

பன்முகம் நிலைபெறுவதற்கும், சார்பின்மை நிலைபெறுவதற்கும், சட்டத்தின் ஆட்சிமுறை நிலைபெறுவதற்கும் பாடுபட்ட, இந்தியாவின் பல திசையில் இருக்கிற இயக்கங்கள், முன்னோர்கள் அனைவரையும் நாங்கள் நினைவு கொள்கிறோம்.

ஆனால், இடதுசாரிகளுக்கு ஒரு நீண்ட நெடிய பார்வை இருக்கிறது. அந்த பார்வையில் உடன்படுகிறவர்களை எல்லாம் இணைத்துக் கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால் நிறைவில் எங்கள் நோக்கம் சோசலிசம் என்பதுதான். நிறைவான அந்த பாதைக்கான முன்னெடுப்புகள்தான் இவை யாவும்.” என்று மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் கூறினார்.

– வ. மணிமாறன்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button