
முதலாளித்துவ முறையில் நெருக்கடி வரும் என்று காரல் மார்க்ஸ் முன்கணித்துக் கூறினார். அந்த ஆண்டு 1930ம் வந்தது, பாசிச நெருக்கடியின் வருகையும் நடந்தது. முதலாளித்துவ உலகம் அந்த நெருக்கடிக்கு வித்தியாசமான வகையில் எதிர்வினை ஆற்றியது. நெருக்கடியை எதிர்த்துப் போராட ஆங்கிலோ-சாக்சன் உலகம் எனப்படும் அமெரிக்காவும் இங்கிலாந்தும் மற்றும் அவற்றின் செல்வாக்கின் கீழ் இருந்த நாடுகளும் நல வாழ்வு பொருளாதாரக் கொள்கைகளைத் தழுவி ஏற்றுக் கொண்டன. எனினும், ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஜப்பான் நாடுகளின் கீழ் இருந்த உலகம் சிறுபான்மையினர் மீதான அரச அடக்குமுறை மற்றும் சுரண்டல் முறையுடன் நெருக்கடியை எதிர்கொண்டது -அதுதான் பாசிசம் என்று அறியப்படுகிறது.
அந்நெருக்கடி உலகம் முழுவதையும் உள்ளடக்கிய ஒரு போராக முடிந்து, இரண்டாம் உலகப் போராக மாறியது. இவ்வாறு, இரண்டு குழுக்கள் இடையே ஏற்பட்ட முரண்பாடுகளில் இரண்டாம் உலகப் போர் தொடங்கியது. முதலாவது குழு ஜனநாயகம் மற்றும் நலவாழ்வு பொருளாதாரத்தை ஆதரித்துப் பாதுகாப்பது குறித்துப் பேசியது. இரண்டாவது குழு பாசிசத்தைப் பேசியது. எனினும், ஒரு மூன்றாவது தரப்பும் இருந்தது -அதனைச் சோசலிசதிற்காகப் பாடுபட்ட சோவியத் முகாம் பிரதிநிதித்துவப் படுத்தியது. பாசிசத்தை முறியடிக்க சோசலிச முகாம் ஜனநாயக முகாமுடன் இணைந்தது; இந்நிகழ்முறையில் சோசலிச முகாம் உலகைப் பாசிசத்திலிருந்து பாதுகாக்க மகத்தான எண்ணிறைந்த தியாகங்களைச் செய்தது. பாசிசத்தின் தோற்றத்தை இவ்வாறு முதலாளித்துவ நெருக்கடியுடன் தொடர்புபடுத்திக் காணலாம்.
தற்போது வேலையின்மை அதிகரிப்பு, விலைவாசி உயர்வு மற்றும் லாபம் குறையுமோ என்ற அச்சம் காரணமாக முதலாளித்துவ நாடு பாசிசத்தை நாடி உள்ளது. துரதிஷ்டவசமாக இம்முறை சோசலிச முகாம் இல்லாத நிலையில் பல்வேறு நாடுகளில் உள்ள கம்யூனிஸ்டுகளும் சோசலிஸ்ட்களும் ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும் பாசிசத்தை வீழ்த்தவும் எழுந்து நின்று போராட வேண்டியிருக்கும். உலகைச் சோசலிசத்தை நோக்கி இட்டுச் செல்லும் செயல்முறையும் காத்திருக்க வேண்டியிருக்கும்.
19-ஆம் நூற்றாண்டு மற்றும் 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதி ஆகியவை கம்யூனிசத்தின் தோற்றத்தையும் காலனித்துவத்தின் முடிவையும்; மற்றும் அதனுடன் கூட பல்வேறு நாடுகளின் அரசுகளும் விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் பாடுபடும் மக்கள் திரளின் மேம்பாட்டுக்காகப் பாடுபட்டதைக் கண்டது. இது ஜனநாயகம் மற்றும் ஜனநாயக அமைப்புகளை வலிமைப்படுத்தியது. எவ்வாறெனினும், இக்கொள்கையின் முதுகெலும்பு நலவாழ்வுப் பொருளாதாரம். இந்தக் காலகட்டத்தில் உண்மையான ஊதியம் உயர்வையும் முதலாளிகளுக்கு லாபங்களில் தோல்வியும் கண்டது.
முதலாளித்துவ உலகம் இந்த நெருக்கடிக்கு வாஷிங்டன் ஒருமித்த கருத்து அல்லது புதிய பொருளாதாரக் கொள்கை என்று அறியப்படும் ஒன்றை ஏற்றதன் மூலம் மறுவினை ஆற்றியது. அங்கு காரல் மார்க்ஸ் முன்கணித்துக் கூறியதைப் போல தொழில்நுட்ப மேம்பாடும் ஏற்பட்டது. லாபத்தை நோக்கமாகக் கொண்ட ஓர் அமைப்பை மீண்டும் அறிமுகப்படுத்துவதற்கு மூலதனம் மற்றும் சந்தையின் மீதான கட்டுப்பாட்டையும் இந்த புதிய தொழில்நுட்பத்தையும் முதலாளித்துவ நாடு சாதுர்யமாகப் பயன்படுத்தியது.
புகழ்பெற்ற பிரெஞ்சுப் பொருளாதார நிபுணரான தாமஸ் பிக்கெட்டி, உற்பத்தித் திறனிலும் லாபத்திலும் பெரும் வளர்ச்சி ஏற்பட்ட போதிலும், 1976 முதல் உண்மையான ஊதியங்கள் அதிகரிக்காமல் தேக்கமடைந்துள்ளன என்பதை தனது ‘இருபத்தோராம் நூற்றாண்டில் முதலாளித்துவம்’ (Capitalism in the 21st Century) என்ற நூலில் சுட்டிக்காட்டியுள்ளார். முன்னதாக, நிலைமை இவ்வாறு இருக்கவில்லை.
தற்போது புதிய பொருளாதாரக் கொள்கை (NEP) மற்றும் ‘வாஷிங்டன் ஒருமித்த கருத்து’ (Washington Consensus) ஆகியவை லாபத்தை அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் பிரிட்டன் போன்ற முன்னாள் வல்லரசுகளின் ஆதிக்கத்தைப் பாதித்துள்ளது; மற்றும் சீனா, ரஷ்யா, இந்தியா, பிரேசில், தென்கொரியா, ஜப்பான் முதலிய நாடுகள் புதிய அதிகார மையங்களாக உருவாக்கியுள்ளன. (இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டு அமெரிக்காவில் குடியேறிய பத்திரிக்கையாளரான) ஃபரீத் ஜகாரியா “பிறரின் எழுச்சி” (“The Rise of Others”) என்ற தனது நூலில் இதே நிகழ்வுகளை விளக்கியுள்ளார்.
இவ்வாறு முதலாளித்துவ முறை ஏற்பாடு லாபத் திறனை உயர்த்துவதில் வெற்றி அடைந்துள்ளது ஆனால் அது பிற சந்தைகள் மற்றும் நாடுகளின் எழுச்சியையும் விளைவித்துள்ளது. ஆதிக்க நிலையை மீண்டும் அடைவதற்காக முந்தைய முதலாளித்து நாடுகள் குறிப்பாக அமெரிக்கா லாபத்தை அதிகரிக்கவும் பிற நாடுகளைக் கட்டுப்படுத்தவும் போர்களை நாடி உள்ளது. எனவேதான் (தங்கள் நலனை மட்டும் பாதுகாத்துக் கொள்ளும்) பாதுகாப்புவாதம் (protectionism) மற்றும் பாசிசம் உலகில் அதிகரித்துள்ளதை நாம் காண்கிறோம்.
மறுபுறத்தில், மேம்பட்ட வாழ்க்கைக்கான மக்களின் எதிர்பார்ப்பு எழுச்சி பெற்றபோதும் அது நடைமுறையில் நிகழவில்லை என்பதால் பொது சமூக அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. அந்த அமைதியின்மையைக் கட்டுப்படுத்த ஜனநாயக அதிகார அமைப்புகளைச் சீர்குலைப்பது, ஒடுக்கு முறை சட்டங்களை நிறைவேற்றுவது மற்றும் மாறுபட்ட எதிர் கருத்துக்களைத் தேச விரோதம் அல்லது கம்யூனிஸ்டுகள் என்று அழைப்பது போன்ற ஜனநாயக விரோத முறைகள் அதிகரிப்பதை நாம் காண்கிறோம்.
எனினும், உலகப் பொருளாதாரம் தற்போது உண்மையில் ஒருங்கிணைந்துள்ளது மற்றும் 19வது மற்றும் இருபதாம் நூற்றாண்டுகளில் கற்பனை செய்தவாறு தேசியப் பொருளாதாரம் மீண்டும் வரும் என்று நினைப்பது நடக்க முடியாத ஒன்று. இந்த நூற்றாண்டில் ஒரு நாட்டில் மட்டும் சோசலிசத்தைச் சாதிப்பது முடியாதது. எனினும், பெரும்பான்மையான உலகப் பிரச்சனைகளுக்கு உலகளாவிய தீர்வு தேவைப்படுகிறது.
அனைவராலும் சந்திக்கப்படும் சூழலியல் நெருக்கடிக்கு உலகளாவிய தீர்வுகள் தேவை. தற்போதைய போர்கள் உலகளாவிய ஒத்துழைப்பு இல்லாமல் தீர்வு காணப்பட முடியாது. அதுபோலவே பொருளாதார நெருக்கடி தகராறு பிரச்சனைகளை தீர்க்க விதி அடிப்படையிலான பொருளாதாரம் தேவை. தற்போதுள்ள ஐநா அமைப்பைச் சீர்திருத்தி அதன் செல்வாக்கை அதிகரிப்பதற்கான கோரிக்கை வலுவடைந்துள்ளது.
இவ்வாறு தற்போதைய முதலாளித்துவத்தின் நெருக்கடியை தீர்க்கவும் உலகளாவிய ஒத்துழைப்பு முக்கியமானது. எனினும், முதலாளித்துவம் எதிர்மறையாகவே பதிலளித்து வருகிறது. தேவையாகியுள்ள புலம்பெயர்தல்கள் அச்சுறுத்தப்படுகிறது. நாட்டிற்கு வெளியில் இருந்து வரும் மக்கள்- தேசியவாதம் அல்லது உள்ளூர் வேலை வாய்ப்பைப் பாதுகாப்பது என்ற பெயரில்- குறி வைக்கப்படுகிறார்கள். இதன் விளைவு ‘பிறர்’ குறித்த அச்சத்தையும், அரச ஒடுக்குமுறையும் கூட சிறுபான்மையினர்கள் மீது ஏற்படுத்துகிறது. இவை அனைத்தும் முதலாளித்துவாதிகளின் லாபத்தை அதிகரிப்பதற்காகச் செய்யப்படுகிறது; எனவே இந்த அனைத்து நெருக்கடிகளுக்கும் ஒரு தீர்வாகத் தனியார்மயமாக்கல் முன்னிறுத்தப்படுகிறது.
இத்தகைய சூழ்நிலையில், ஜனநாயக விழுமியங்களையும் அமைப்புகளையும் பாதுகாக்கவும், பாசிசத்தை எதிர்க்கவும் ஒன்றிணைந்து செயல்படுவது அனைத்து முற்போக்கு சக்திகளின் கடமை ஆகும்.
-தமிழில்: நீலகண்டன்,
என் எஃப் டி இ, கடலூர்