
தமிழ்நாட்டில் த.வெ.க. ஆளும் பொறுப்பேற்று ஆறு மாதங்கள் முடிந்து விட்டன. விளையும் பயிர் முளையிலேயே தெரியும். எப்படி வளர்கிறது என்று மதிப்பிட ஆறு மாதம், போதுமான கால அவகாசம் தான்.
த.வெ.க. அல்லது அதன் தலைவர் விஜய் மீதான நேசத்தில் உள்ளவர்கள் மட்டுமே வாக்களித்து ஆட்சிக்கு வந்து விடவில்லை. திராவிட கட்சிகளின் ஆட்சிக்கு மாற்றாக, ஏற்கனவே தேர்தல்களில் வேறு கட்சிகள் போட்டியிட்டுள்ளன. ஆனால், த.வெ.க.வைத்தான் மக்கள் மாற்றாக கருதி ஆட்சிக்குப் பக்கத்தில் கொண்டு வந்தார்கள்..
அவர்களின் எதிர்பார்ப்பை, த.வெ.க. அரசு நிறைவேற்றும் பாதையில் பயணிக்க தொடங்கி விட்டதா?
அதன் தேர்தல் பரப்புரைகளில், திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, போதை பொருட்கள் அதிகம் புழங்குகின்றன, லஞ்ச ஊழல் பெருகிவிட்டது என்று தான் பெருமளவில் பேசப்பட்டது. இதிலிருந்து தமிழ்நாட்டை மீட்பதற்கான வாக்குறுதிகளும் தரப்பட்டன.
பதவி ஏற்கும் போது, நல்லாட்சிக்கான நேரம் துவங்கி விட்டது (டைம் ஸ்டார்ட்ஸ் நவ்) என்றார் முதல்வர் விஜய். ஆறு மாதத்தில் இந்தியாவிலேயே சிறந்த சட்டம் ஒழுங்கு, பெண்களுக்கான பாதுகாப்பு இருக்கும் மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றிக் காட்டுவோம் என்று சட்டப்பேரவையில் சூளுரைத்தார் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா.
மீட்கும் வேலையைத் தொடங்கி, வாக்குறுதிகள் நிறைவேற்ற முயற்சிக்கிறார்களா?

சட்டம், ஒழுங்கு
சொல்லிக் கொள்ளும் அளவுக்கு முன்னேற்றம் இல்லை. தீபாவளி நாளில் தமிழ்நாட்டில் 13 கொலைகள் என்கிறது டைம்ஸ் ஆப் இந்தியா. சென்ற தீபாவளி நாட்களில் எல்லாம் கொலைகள் நடக்கவில்லையா? என்று பதிலளிக்கிறார் அமைச்சர் ராஜமோகன். காவல்துறையின் சார்பாய்வாளரே நடுத்தெருவில் அடித்துக் கொல்லப்படுகிறார். சட்டப்பேரவை துணைத் தலைவர், தன்னைக் காண வந்த தன் கட்சிக்காரரையே அடித்து விரட்டுகிறார்! ஆளுங்கட்சியினருக்கு எதிராகப் புகார்கள் வரும்போது காவல்துறை, அரசு செயல்பாடுகள் நம்பிக்கை அளிக்கவில்லை.
பெண்கள் பாதுகாப்பு
ஒரு தவெக எம்எல்ஏ, சொந்தக் கட்சியைச் சேர்ந்த பெண் மீது இழைக்கப்பட்ட கூட்டு பாலியல் வன்கொடுமைக்குத் துணை நிற்கிறார்; அவர் காப்பாற்றப்படுகிறார். இன்னொரு எம்எல்ஏ, மாவட்ட கலெக்டருக்கு பாலியல் குறுஞ்செய்தி அனுப்புகிறார். பெண் குழந்தை காணாமல் போகிறது. ஒரு மாதமாக எந்தத் தகவலும் இல்லை. கேட்டால் கே என் நேரு தம்பியைக் கொன்றவர்களைக் கண்டுபிடித்து விட்டீர்களா என்கிறார்கள்! ஆளுங்கட்சியினருக்கு எதிராகப் புகார்கள் வரும்போது காவல்துறையும் அரசும் அவர்களை பாதுகாக்கும் வகையிலேயே செயல்படுகின்றன.
பெண்களின் பாதுகாப்புக்காக “சிங்கப்பெண் படை” உருவாக்கப்பட்டதாக செய்திகள் வந்தன. சீருடை அணிந்த பெண் சிங்கப்படையை புகைப்படங்களில் பார்க்கிறோம். தெருவில் ஒருவரையும் பார்க்க முடியவில்லை!
போதைப் பொருள்
ஒரு அமைச்சரே விளையாட்டு மைதானத்தில் பொடி நசுக்குகிறார். நாகை மாவட்ட தவெக நிர்வாகியிடமிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 135 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்படுகிறது. 700 க்கு மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்டது, ஆனால் அவை எந்த ஊர்களில் உள்ள கடைகள் என்று சொல்லப்படவே இல்லை!
ஊழல்
ஒரு முதலாளித்துவ சமூகத்தில் ஊழலை ஒழிக்க முடியாது. ஆனால் உயர் மட்டங்களில் ஊழல் கொஞ்சம் குறைந்து இருப்பதாகப் பேசப்படது. ஆனால் ஆளுங்கட்சியைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர், அரசு வழக்கறிஞர் பதவிக்காக 15 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்கப்பட்டதாக நீதிமன்றத்துக்கே போனார். தொடக்கத்தில் கொஞ்சம் அடக்கி வாசித்த கைகள் இப்போது நீளத் துவங்குகின்றன என்கிறார்கள்.
வேறு கட்சிகளின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களை, பதவி விலக வைத்து தன் கட்சிக்கு இழுத்துக் கொள்ளும் குதிரை பேரம், ஊழல் வகையில் சேராதா என்ன?
தொழிலாளர் உரிமைகள்
ஐந்து ஆண்டுகள் வேலை பார்த்தால் பணி நிரந்தரம் என்றது தவெக தேர்தல் அறிக்கை. போராடிய சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்களிடம் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பணி நிரந்தரம் என்று சொன்னது தேர்தலுக்கு முந்தைய தவெக. ஆனால், உள்ளாட்சி மட்டுமல்ல அரசு சார்ந்த அனைத்துத் துறைகளிலும், முழுக்க முழுக்க காண்ட்ராக்ட் அவுட்சோர்ஸ் என்று இனி நிரந்தர தொழிலாளர்களுக்கு இடமே இல்லை என்ற இடத்துக்கு வெகு வேகமாக பாய்ந்து செல்கிறது தமிழ்நாடு அரசு. பல ஐஏஎஸ் அதிகாரிகள், நிரந்தரம் பற்றி எல்லாம் பேசாதீர்கள் என்று எடுத்த எடுப்பிலேயே பேசுகிறார்கள்.
ஆட்சிக்கு வந்து ஆறு மாதம் ஆகியும் தொழிலாளர் அமைச்சர், தொழிற்சங்கங்களை ஒரு முறை கூட சந்தித்துப் பேசவில்லை. இப்படி ஒரு அலட்சியம் இதற்கு முன் எந்த ஆட்சியிலும் நடைபெற்றது இல்லை.
தொழிலாளர் சட்டப்படியான முத்தரப்புக்குழுக்கள் ஒன்று கூட நியமிக்கப்படவில்லை. அதிமுக ஆட்சி காலத்தில் இருந்ததை விடவும், மோசமான நிலையில் தொழிலாளர் துறை இருக்கிறது.
தனியார் மயம்
மின்சாரம், போக்குவரத்து போன்ற அரசு சார்ந்த துறைகள் மட்டுமல்ல, பதிவாளர் அலுவலகம் போன்ற அரசுத் துறைகளின் பணிகளே தனியாருக்குத் தரப்படுகின்றன. பொதுத்துறை செயல்பாடுகள் அனைத்தும், தனியார் அரசு பங்களிப்பு (பி-பி-பி) என்ற பெயரில் தனியார் கைக்கு மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
சென்ற சட்டப்பேரவை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தொழில் நடத்துவதை எளிதாக்கும் திருத்தச் சட்டம், தொழிலாளர் உரிமைகளை மட்டுமல்ல, சுற்றுச்சூழல், நீர் வளம், கழிவு மேலாண்மை, அரசு நிலங்கள் உள்ளிட்ட அனைத்தையும் பெரும் ஆபத்துக்கு உள்ளாக்கும்.
மின்சாரம்
ஒரு யூனிட் மின்சாரம் பத்து ரூபாய்க்கு கிடைக்கும்போது 37 ரூபாய்க்கு அரசு ஒப்பந்தம் போடுகிறது. 200 யூனிட் இலவசம் என்று வந்த அறிக்கையின் பின்னால் இரண்டு மடங்கு மின் கட்டண உயர்வு ஒளிந்து கிடக்கிறது. உயர் அழுத்த மின்சாரம் எடுத்துச் செல்லும் கட்டமைப்புகள் தனியாருக்குத் தரப்படுகின்றன. ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டம் தனியாரிடம் சொல்கிறது. நிரப்பப்படாத நிரந்தர பணியிடங்களில், ஒப்பந்த ஊழியர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.
போக்குவரத்து
போக்குவரத்து கழகங்கள் படிப்படியாகத் தனியாரிடம் தரப்படுகின்றன. ஒரு கோடி மதிப்புள்ள மின்சாரப் பேருந்துகள், 500 கோடி ரூபாய் செலவில், ஆயிரம் பேருந்துகள் வாங்க அரசு முடிவு செய்திருக்கிறது! இவை அனைத்தும் குளிரூட்டப்பட்ட பேருந்துகள். முழுமையாக தனியாரிடம் ஒப்படைக்கப்படுகின்றன. நடத்துனர் மட்டுமே போக்குவரத்து கழகத்தை சார்ந்தவராக இருப்பார். அவரும் கூட ஒரு உத்தரபிரதேச நிறுவனத்தில் இருந்து ஒப்பந்தத்திற்கு எடுக்கப்பட்டவர்! இந்தப் பேருந்துகளில் ‘வெற்றிப் பயணம்’ இல்லை.
விவசாயம்
தேர்தல் வாக்குறுதியில் தரப்பட்டவாறு, விவசாயிகளுக்கு கடன் ரத்து செய்யப்படவில்லை. காவிரி நீரை பெறுவதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளைத் திட்டமிட அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்துமாறு பல கட்சிகளும் கேட்டும், அரசு இசையவில்லை. காவிரி அணையை அவசரப்பட்டு திறந்தது காவிரிப் படுகை விவசாயிகளை நெருக்கடிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
மாநில உரிமைகள்
இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்று தான் அரசியல் சாசனமே கூறுகிறது. ஆனால் பாஜக ஒன்றிய அரசின் நடவடிக்கைகள் அனைத்தும் மாநிலங்களிடமிருந்து மொத்த அதிகாரத்தையும் பறித்து மையத்தில் குவிப்பதாக உள்ளது.
இதனை ஆய்வு செய்ய, நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டு, பலரும் பாராட்டுகிற அறிக்கையின் முதல் பகுதியை வெளியிட்டுள்ளது. இரண்டாவது பகுதிக்கான வேலை நடந்து கொண்டிருக்கும் போதே மாநில அரசு அதை கலைத்திருக்கிறது. இதனை முதலில் வரவேற்ற கட்சி பாஜகதான்.
தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (எஸ்ஐஆர்) வழியாக 13 கோடி பேரின் வாக்குரிமை பறிக்கப்பட்டதை எதிர்த்து இந்தியாவே கொதித்தெழுகிறது. ஆனால் இந்தியா கூட்டணியில் சேர்ந்து விட்டதாக கூறிக்கொண்டே, தவெக எதிர்க்கவில்லை. பாஜக அல்லாத அனைத்து கட்சி முதல்வர்களும் டெல்லி பேரணியில் பங்கேற்றபோது தமிழ்நாட்டின் முதலமைச்சர் பங்கேற்கவில்லை.
மோடி அமித்ஷா பெயர்களை ஒரு அமைச்சர் சட்டப்பேரவையில் உச்சரித்த உடனே, அதை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று மற்றொரு அமைச்சர் வேண்டுகோள் விடுத்ததை தமிழ்நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது.
ஒன்றிய அரசுடன் மாநில அரசு மோதிக் கொண்டே இருக்க வேண்டும் என்று யாரும் கேட்கவில்லை. ஆனால் மாநில உரிமைகளை பாதுகாப்பதில் இந்தியாவிலேயே முன்னணியில் நின்ற தமிழ்நாடு, அந்த இடத்தை இப்போது விட்டுவிட்டது என்பது மறுக்க முடியாத உண்மை.
மதச்சார்பின்மை
இந்துத்துவா எனும் பெயரில் மத வெறியை உச்சத்துக்கு தூண்டும் ஆர்எஸ்எஸ், தமிழ்நாட்டில் 128 இடங்களில் ஊர்வலம் நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு அனுமதிக்கிறது.
அதைக் கூட அரசியல் சார்பற்ற நடைமுறையாக கூறிக் கொள்ளலாம். ஆனால் இடதுசாரி கட்சிகள், தொழிற்சங்கங்கள், திராவிட இயக்கங்கள் நடத்தும் கூட்டங்கள், இயக்கங்கள், பேரணிகளுக்கு அனுமதி மறுக்கப்படுவதும், வழக்குகள் பதியப்படுவதும், இயக்கங்களில் பங்கேற்கும் பெண்கள் கூட காவல்துறையால் கடுமையான முறையில் நடத்தப்படுவதும், அரசின் சார்பற்ற தன்மையை பிரதிபலிக்கவில்லை.
இடதுசாரிகள் மீது குறி
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையில், சிபிஐ சிபிஎம் உறுப்பினர்களின் பெயர்களை முகவரியோடு திரட்டுமாறு வட்டாட்சியர் உத்தரவிட்டார்.
தமிழ்நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் இடதுசாரிகளின் இயக்கங்களில், பங்கேற்க வேண்டும் என்ற விருப்பம் மாணவர்களுக்குள் எழுந்து விடாது தடுக்க வேண்டும் என்று கல்லூரி இயக்குநரகம் உத்தரவு பிறப்பிக்கிறது. கண்டனங்களுக்குப் பிறகு, இவை திரும்ப பெறப்பட்டாலும், பாஜக ஆளும் மாநிலங்களில் கூட வெளிப்படையாக வராத இந்த உத்தரவு இங்கு ஏன் வந்தது என்பதற்கு அரசு இதுவரை பதில் சொல்லவில்லை.
வெளிப்படைத்தன்மை
சட்டப்பேரவையில் கூட, எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அரசு தரப்பில் சரியான பதில் தரப்படவில்லை. மாறாக எதிர் தாக்குதலே முன்வைக்கப்பட்டன. அமைச்சர்களில் நான்கு, ஐந்து பேரைத் தவிர வேறு யாரும் பொதுவெளியில் அரசு குறித்த எந்த கேள்விக்கும் பதில் சொல்வதில்லை. முதலமைச்சர் பத்திரிக்கையாளர்களை சந்திப்பதே இல்லை.
தகவல் உரிமை சட்டத்தின் படி, சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்த எந்த கேள்விக்கும் பதில் தர வேண்டியது இல்லை என்று சட்டம் இயற்றப்படுகிறது.
விலைவாசி உயர்வு
இந்தியாவிலேயே மிக அதிக விலை உயர்வு தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ளது! அடிப்படைத் தேவைகளைக் கூட குறைத்துக் கொள்ளும் அவல நிலைக்கு, சாதாரண குடும்பங்கள் தள்ளப்பட்டுள்ளன.
இன்னும் வேலை வாய்ப்பு, கல்வி, மூடப்படும் அரசுப் பள்ளிகள், மாநில நிதிநிலை, மருத்துவம்- பொது சுகாதாரம், சாதிய ஒடுக்கு முறை, சமூக நீதி, சிறுபான்மையினர், உள்ளாட்சி நிர்வாகம், வெளி மாநிலங்களுக்குச் செல்லும் தொழில்கள், அடிப்படை வசதிகள், அரசுப் பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதியம், சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள் கொள்ளை என்று ஒவ்வொரு தலைப்பிலும் இந்த அரசியல் செயல்பாடுகளை ஆய்வு செய்யலாம்.
எந்த ஒன்றிலும் முத்திரை பதிக்கும் செயல் எதுவும் இல்லை. குறைந்தபட்ச மேம்பாடு கூட, பெருமளவில் இல்லை.
முந்தைய ஆட்சியின் குறைபாடுகளைச் சரிசெய்வதாகக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் என்ன செய்திருக்கிறார்கள் என்ற கேள்வியை மக்கள் எழுப்புவார்கள். புதிய அரசு சில அறிவிப்புகளை வெளியிட்டிருப்பது மட்டும் மதிப்பீடு அல்ல. அந்த அறிவிப்புகள் மக்களின் வாழ்க்கையில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனவா என்பதே உண்மையான அளவுகோல்.
ஆளும் கட்சியினர் ஆட்சிக்கு மட்டுமல்ல; பொதுவாழ்வுக்கே புதியவர்கள். ஆனால் பிறந்த குழந்தை கூட ஆறு மாதத்தில் தவழ்ந்து, நகரத் தொடங்கி விடும்.
இந்த ஆட்சி மக்கள் நலனுக்கான திசையில் நகர வேண்டும்; ஆறு மாதத்தில் பின்தங்கிய தொலைவையும் சேர்த்து வேகமாக ஓட வேண்டும்.