கட்டுரைகள்

ஐரோப்பாவில் மாணவர் போராட்டங்கள்

ஆனந்த் பாசு

ஐரோப்பாவின் பல நாடுகளில் மாணவர்களும் இளைஞர்களும் வீதிகளில் இறங்கிப் போராடி வருகின்றனர். கல்விக்கான நிதி வெட்டுகள், அதிகரிக்கும் கல்விக் கட்டணங்கள், வீட்டு வாடகை உயர்வு, வேலைவாய்ப்பின்மை, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு ஆகியவை இந்தப் போராட்டங்களுக்கான முக்கியக் காரணங்களாக உள்ளன.

இந்தப் போராட்டங்களுடன் தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்களும் இணைகின்றன. பிரான்ஸ், செர்பியா, அல்பேனியா, ஸ்பெயின், இத்தாலி, கிரீஸ், பெல்ஜியம், போர்ச்சுகல், அயர்லாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் மாணவர்கள் போராடுகின்றனர்.

ஆஸ்திரியாவின் தலைநகரான வியன்னாவில் பல்கலைக்கழகங்களுக்கான நிதியை 10 சதவீதம் குறைக்கும் முடிவுக்கு எதிராக சுமார் 40,000 பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜெர்மனியில் கட்டாய ராணுவச் சேவைக்கு எதிராக இளைஞர்கள் பள்ளிப் புறக்கணிப்புப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டங்களின் பின்னணியில் ஒரு பொதுவான பொருளாதார நெருக்கடி உள்ளது. படிப்பை முடித்தால் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை பல இளைஞர்களுக்கு இல்லை. வேலை கிடைத்தாலும் போதுமான ஊதியம் கிடைப்பதில்லை. வீட்டு வாடகை, உணவு, மின்சாரம், போக்குவரத்து ஆகியவற்றின் செலவுகள் தொடர்ந்து அதிகரிக்கின்றன.

இது மாணவர்களின் தனிப்பட்ட பிரச்சினை மட்டுமல்ல. அவர்களின் பெற்றோர்களான தொழிலாளர்களும் இதே நெருக்கடியை எதிர்கொள்கின்றனர். குடும்ப வருமானத்தில் பெரும்பகுதி அடிப்படைத் தேவைகளுக்கே செலவாகிறது. கல்வி, மருத்துவம், ஓய்வூதியம் போன்ற சமூக உரிமைகள் பாதிக்கப்படுகின்றன. ஐரோப்பிய அரசுகள் ராணுவ வலிமையை அதிகரிக்கவும், ஆயுதங்களை வாங்கவும் பெரும் தொகைகளை ஒதுக்குகின்றன. அதே நேரத்தில் கல்வி, மருத்துவம், சமூகப் பாதுகாப்பு ஆகிய துறைகளில் செலவுகளைக் குறைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஒருபுறம் செல்வந்தர்களின் சொத்துகளும் லாபங்களும் அதிகரிக்கின்றன. மறுபுறம் சாதாரண மக்கள் தங்கள் அன்றாடச் செலவுகளைக் கணக்கிட்டுச் சமாளிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். பெரும் நிறுவனங்களின் லாபத்திற்கும் மக்களின் வாழ்க்கைத் தேவைகளுக்கும் இடையே பெரும் முரண்பாடு உருவாகிறது. இந்த முரண்பாட்டைத் தனிநபர்களின் தவறாக மட்டும் பார்க்க முடியாது. உற்பத்தி செய்யும் செல்வம் எவ்வாறு பகிர்ந்தளிக்கப்படுகிறது, பொருளாதார முடிவுகளை யார் தீர்மானிக்கிறார்கள் என்பதை ஆராய வேண்டும்.

 

மாணவர்கள் கல்வி உரிமைக்காகப் போராடுகிறார்கள். தொழிலாளர்கள் ஊதிய உயர்வு, வேலைப் பாதுகாப்பு, ஓய்வூதியம் ஆகியவற்றுக்காகப் போராடுகிறார்கள். ஆனால் இந்தக் கோரிக்கைகள் ஒன்றுக்கொன்று தொடர்பற்றவை அல்ல. கல்விக்கான நிதி குறைக்கப்பட்டால் அரசு கல்வி நிறுவனங்கள் பாதிக்கப்படும். தனியார்மயமாக்கல் அதிகரித்தால் கல்விச் செலவு குடும்பங்களின் சுமையாக மாறும். வேலைவாய்ப்புகள் பாதுகாப்பற்றதாக மாறினால் படித்து முடிக்கும் இளைஞர்களும் பாதிக்கப்படுவார்கள். எனவே மாணவர்களின் போராட்டம் தொழிலாளர்களின் ஆதரவைப் பெற வேண்டும். தொழிலாளர்களின் போராட்டங்களிலும் கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு போன்ற இளைஞர்களின் கோரிக்கைகள் இடம்பெற வேண்டும்.

மாணவர்கள், ஆசிரியர்கள், தொழிலாளர்கள், வேலையற்ற இளைஞர்கள், ஓய்வூதியதாரர்கள் ஆகியோர் பொதுவான கோரிக்கைகளை உருவாக்குவது அவசியம். இத்தகைய ஒற்றுமைதான் தனித்தனியாக நடைபெறும் போராட்டங்களுக்குப் பரந்த சமூக வலிமையை அளிக்க முடியும். அரசாங்கங்கள் மீது உண்மையான அழுத்தத்தை உருவாக்க, தொழிலாளர்களின் பங்கேற்புடன் ஜனநாயகமான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதோடு நிற்காமல், பரந்த சமூகப் பிரச்சினைகளிலும் தலையிட வேண்டும். மாணவர் அமைப்புகளுடனும் ஜனநாயக இயக்கங்களுடனும் தொடர்ந்து தொடர்புகளை உருவாக்க வேண்டும்.

இந்தியாவிலும் கல்விக் கட்டண உயர்வு, அரசுக் கல்வி நிறுவனங்களின் நிதிப் பற்றாக்குறை, வேலையின்மை, ஒப்பந்த வேலை, குறைந்த ஊதியம், விலைவாசி உயர்வு ஆகியவை ஒன்றோடொன்று தொடர்புடைய பிரச்சினைகளாக உள்ளன. கட்டுமானத் தொழிலாளர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், தொழிற்சாலைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிபவர்கள், தகவல் தொழில்நுட்பத் துறையின் இளம் ஊழியர்கள் எனப் பல்வேறு பிரிவினர் வேலைப் பாதுகாப்பு தொடர்பான சவால்களை எதிர்கொள்கின்றனர்.

இந்தச் சூழலில் தொழிற்சங்கங்கள் மாணவர் அமைப்புகளுடனும் இளைஞர் இயக்கங்களுடனும் இணைந்து செயல்பட வேண்டும். கல்வி உரிமை, அனைவருக்கும் வேலைவாய்ப்பு, குறைந்தபட்ச ஊதியம், சமூகப் பாதுகாப்பு, மலிவான வீடு, பொதுச் சுகாதாரம் ஆகியவற்றை உள்ளடக்கிய பொதுவான கோரிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

போராட்டங்கள் தொழிலாளர்களின் வாழ்க்கையில் உடனடி மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான கோரிக்கைகளையும், நீண்டகால சமூக மாற்றத்திற்கான இலக்குகளையும் இணைக்க வேண்டும். இந்த ஒற்றுமை மேலிருந்து திணிக்கப்படுவது அல்ல; அடிமட்ட உறுப்பினர்களின் விவாதங்கள், ஜனநாயக முடிவுகள், தொடர்ச்சியான கூட்டு நடவடிக்கைகள் மூலம் உருவாக்கப்பட வேண்டும்.

ஐரோப்பிய மாணவர் போராட்டங்கள் ஒரு முக்கியமான கேள்வியை எழுப்புகின்றன. அதாவது, “சமூகத்தின் செல்வமும் வளங்களும் பெரும்பான்மை மக்களின் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றனவா?” என்பதே அந்தக் கேள்வி. கல்வி, வேலை, வீடு, மருத்துவம், ஓய்வூதியம் ஆகியவை மக்களின் அடிப்படை உரிமைகளாகக் கருதப்பட வேண்டும். போரும் ஆயுதப் போட்டியும் அல்ல, மனிதர்களின் வாழ்க்கைத் தேவைகளே அரசின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு முன்னுரிமையாக இருக்க வேண்டும்.

மாணவர்களும் தொழிலாளர்களும் தங்களுடைய பொதுவான நலன்களை உணர்ந்து ஜனநாயக அடிப்படையில் ஒன்றிணைவது காலத்தின் தேவையாகும். இந்த ஒற்றுமை முதலாளித்துவத்தின் சமூக விளைவுகளை எதிர்கொள்ளும் போராட்டத்திற்கு வலிமை அளிக்கக்கூடும்.

கல்வி உரிமைக்காகக் கைகோர்ப்போம்! வேலைப் பாதுகாப்பிற்காக ஒன்றிணைவோம்! சமூக நீதிக்காகத் தொழிலாளர்களும், இளைஞர்களும் இணைந்து போராடுவோம்!

(“Europe’s student protests and the intervention of the working class,”
என்ற தலைப்பில் பீட்டர் ஸ்வார்ட்ஸ் எழுதிய கட்டுரையைத் தழுவி எழுதப்பட்டது.)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button