பொதுப்பணித்துறை செய்ய வேண்டிய வேலையை மருத்துவப் பணிகள் கழகம் செய்வதா? டெண்டரை உடனே கைவிடுக!
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கண்டனம்!

டாஸ்மாக் கிடங்குகளை பழுதுபார்ப்பதற்கு தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் (TNMSC) டெண்டர் கோரியுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. இத்தகைய முயற்சியை கைவிட வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுதொடர்பாக சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
டாஸ்மாக் கிடங்குகளை பழுதுபார்க்க தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம், நவம்பர் 12 அன்று நான்கு ஆன்லைன் டெண்டர்கள் கோரியுள்ளது.
சென்னை அம்பத்தூர், திருமழிசை மற்றும் தஞ்சாவூர் ஆகிய இடங்களில் உள்ள டாஸ்மாக் கிடங்குகளில் பணிகள் மேற்கொள்ள இந்த டென்டர்கள் கோரப்பட்டுள்ளன. கூரை ஒழுகுவதைச் சரிசெய்தல், சேதமடைந்த தரை ஓடுகள் மற்றும் ஃபால்ஸ் சீலிங் சீரமைப்பு, புதிய ரோலிங் ஷட்டர்கள் பொருத்துதல் மற்றும் மழைநீர் வடிகால் பழுதுபார்ப்பு ஆகிய பணிகள் இதன் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளன.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் முதல்முறையாக 1994 துவங்கப்பட்டு தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசின் மருத்துவமனைகளுக்கு தேவையான மருந்துகள், மருத்துவக் கருவிகள் மற்றும் இதர பொருட்களை நல்ல தரத்துடன் குறைந்த விலையில் வெளிப்படைத் தன்மையோடு கொள்முதல் செய்து வழங்குவதற்காக உருவாக்கப்பட்டது.
அதன் பணிகளை பாராட்டி ஒன்றிய அரசும் பிற மாநிலங்களும் இது போன்ற அமைப்பை ஏற்படுத்தி நடைமுறைப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் தமிழ்நாடு இதர மாநிலங்களுக்கு முன்னோடியாக உள்ளது. தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் மருந்துகளை வெளிச் சந்தையில் இருந்து கொள்முதல் செய்வதை கைவிட்டு சொந்தமாக மருந்து, மற்றும் மருத்துவ உபகரணங்கள் மற்றும் தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய வேண்டும்.
தமிழ்நாடு அரசே டிஎன்எம்எஸ்சி போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் மூலமாக மருந்துகளையும், மருத்துவ உபகரணங்களையும் உற்பத்தி செய்தால், மருந்துகளையும், மருத்துவ உபகரணங்களையும் வாங்குவதற்கு அரசு செய்யும் செலவு மிகப் பெரிய அளவிற்கு குறையும்.தரமான ,குறைந்த விலையிலான மருத்துவப் பொருட்களும் கிடைக்கும்.
இது சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் நீண்ட கால கோரிக்கையாகும்.
இதை நிறை வேற்றாத அரசு, மருத்துவத்துறை தொடர்பான பணிகளில், தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தினுடைய செயல்பாடுகளை அதிகரிக்காத தமிழ்நாடு அரசு, டாஸ்மாக் நிறுவனத்தின் பணிகளுக்கு டிஎன்எம்எஸ்சி அமைப்பை ஈடுபடுத்த வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.
பொதுப்பணித் துறையின் மூலம் செய்ய வேண்டிய பணிகளை டிஎன்எம்எஸ்சி மூலம் ஏன் செய்திட வேண்டும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இது போன்ற செயல்பாடுகளின் காரணமாக டிஎன்எம்எஸ்சி யின் நோக்கம் சிதைந்துவிடும். மருத்துவத் துறை பாதிக்கப்படும். எனவே, இத்தகைய முயற்சிகளை கைவிட வேண்டும் என தமிழ்நாடு அரசை சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.” இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.