
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, நிர்வாகக்குழு, மாநிலக்குழு கூட்டங்கள் முறையே அக்டோபர் 28, 29, 30 தேதிகளில், கட்சியின் மாநில அலுவலகமான பாலன் இல்லத்தில் நடைபெற்றது.
மாநிலக்குழு கூட்டத்திற்கு க.பாரதி, டாக்டர் ஏ.ஆர்.சாந்தி, லி.உதயகுமார் ஆகியோர் தலைமை தாங்கினர். கட்சியின் பொதுச்செயலாளர் டி.இராஜா, தேசிய செயலாளர்கள் ஆனிராஜா, ராமகிருஷ்ணா பாண்டா, மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


மாநிலக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட அரசியல் அறிக்கை வருமாறு:
மதவாத சக்திகள் தோற்கடிப்பு
தமிழ்நாடு சட்டப்பேரவையின் 17வது பொதுத் தேர்தல் 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்றது. திமுக தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியும், அதிமுக தலைமையில் தேசிய ஜனநாயக முன்னணியும், தமிழக வெற்றிக் கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவை தனித்தும் போட்டியிட்டன.
தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இரண்டாவது இடத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு அணியும், மூன்றாவது இடத்தில் தேசிய ஜனநாயக முன்னணியும் இடம் பெற்றன. எந்த ஒரு அணியோ, கட்சியோ தனித்து ஆட்சி அமைக்கும் பெரும்பான்மையைப் பெறவில்லை. தேசிய ஜனநாயக முன்னணியில் இருந்த பாஜக ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்தத் தேர்தலில் தமிழ்நாட்டு வாக்காளர்கள் மதவாத சக்திகளைத் தோற்கடித்துள்ளனர்.
வெளியிலிருந்து ஆட்சியமைக்க ஆதரவு
108 இடங்களில் வெற்றி பெற்ற தவெக, 5 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க தமிழக ஆளுநரிடம் உரிமை கோரியது. ஆனால், ஆளுநர் தவெகவை ஆட்சி அமைக்க அழைக்காமல், 118 உறுப்பினர்கள் ஆதரவு கொண்ட பட்டியலை வழங்க வேண்டும் எனக் கேட்டு, ஆட்சி அமைக்க அனுமதி தர மறுத்தார்.
இது கர்நாடக முன்னாள் முதலமைச்சர் பொம்மை அவர்களின் வழக்கின் நீதிமன்றத் தீர்ப்பிற்கும், மரபிற்கும் எதிரானதாகும். மேலும் வேண்டுமென்றே காலம் தாழ்த்தி குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டு வந்து, தமிழ்நாட்டில் மறைமுகமாக பாஜக ஆர்எஸ்எஸ் திட்டத்தை நிறைவேற்றும் உள்நோக்கம் கொண்டதாக இருந்தது.
எனவே, இதனை முறியடித்திடும் வகையில் கட்சியின் மாநில நிர்வாகக் குழுக் கூட்டத்தில் தவெக கோரிய ஆதரவு கடிதத்தைப் பரிசீலித்து அமைச்சரவையில் பங்கு பெறாமல் வெளியிலிருந்து, நிபந்தனைகளுடன் தவெக ஆட்சியமைக்க ஆதரவு கொடுப்பது என்று முடிவெடுக்கப்பட்டது.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) யும், பிறகு விடுதலை சிறுத்தைகள் கட்சியும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கும் தவெக ஆட்சி அமைக்க ஆதரவு கடிதம் கொடுத்தன. இதன் அடிப்படையில் தவெகவின் ஆட்சி அமைந்தது.
பின்னர், விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஐயூஎம்எல், காங்கிரஸ் கட்சி ஆகியவை அமைச்சரவையில் பங்கேற்றுள்ளன.
இதற்கிடையில் அதிமுக ஆட்சியமைக்க, திமுக ஆதரவு கொடுக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்தன. அமமுக வின் ஒரு சட்டமன்ற உறுப்பினரை தவெக தன்வசப்படுத்திக் கொண்டது. மேலும், அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் சிலரின் ஆதரவைப் பெற மறைமுக, பேரங்களை பேசியதோடு, ஆறு சட்டமன்ற உறுப்பினர்களை பதவி விலகச் செய்து, தவெக தனது கட்சியில் இணைத்துக் கொண்டது.
எந்தக் கூட்டணியிலும் இல்லை
தேர்தலுக்குப் பின்னர் 2026 – மே, 14, 15, 16 தேதிகளில் திருவாரூரில் கூடிய மாநில நிர்வாகக்குழு, மாநிலக்குழுக் கூட்டங்களிலும், 2026, ஜூன் 10, 11 – கோவையில் கூடிய மாநில நிர்வாகக்குழுக் கூட்டத்திலும் அரசியல் நிலை குறித்து விவாதித்து, தமிழ்நாட்டில் நிலவும் அரசியல் சூழலில் தற்போது இந்தியக் கம்யூனிஸ்ட கட்சி எந்தக் கூட்டணியிலும் இணைந்து செயல்படுவதற்கான தேவை எழவில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டது.
இதனடிப்படையில், தவெக தலைமையில் ‘மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி’யில் நமது கட்சியும் இடம் பெற வேண்டும் என்ற அழைப்பையும் நாம் ஏற்றுக் கொள்ளவில்லை. தமிழ்நாட்டில், இடதுசாரி கட்சிகள் இணைந்து மக்களின் பிரச்சனைகள், கோரிக்கைகள் ஆகியவற்றின் அடிப்படையில் போராட்டங்களை, இயக்கங்களை தொடர்ந்து நடத்துவது என்றும் கட்சியின் மாநில நிர்வாகக்குழு, மாநிலக்குழு கூட்டங்களில் முடிவெடுத்துள்ளோம்.
செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை
“தவெக தனது தேர்தல் அறிக்கையில் “ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்த ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரப்படுத்துவோம், அரசுப் பணியாளர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வருவோம், அங்கன்வாடி ஊழியர்களுக்கு ரூ.18,000 தூய்மைப் பணியாளர்களுக்கு பணி நிரந்தரம், 5 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி, அரசுத்துறையில் 5 லட்சம் புதிய அரசு வேலைகள், வேலை இல்லாத பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.4,000 வரை உதவி தொகை” என்பவை உள்ளிட்ட பல வாக்குறுதிகளை அளித்திருந்தது.
ஆனால், தவெ.க. ஆட்சியமைத்த பின்னர் பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்ற உரிய அக்கறை செலுத்தவில்லை. பொதுவாக, தவெக அரசின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை.
நமது கட்சி, தமிழ்நாட்டு மக்களின் நலன் சார்ந்த பிரச்சனைகளில் தவெக அரசு எடுக்கும் நிலைபாடுகளைப் பொறுத்து இவ்வரசின் செயல்பாடுகளை ஆதரித்தும், விமர்சித்தும் வருகின்றது. அவசியமான மக்கள் பிரச்சனைகளுக்கானப் போராட்டங்களையும் முன்னெடுத்து வருகிறது.
ஒருங்கிணைப்புக்குழு
இந்தச் சூழலில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) விடுதலை கட்சி ஆகிய மூன்று கட்சிகளும் இணைந்து மக்கள் பிரச்சனைகளை முன்வைத்து, இயக்கங்களை நடத்த தமிழ்நாட்டில் இடதுசாரி கட்சிகளின் ஒருங்கிணைப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை ஆறு கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. வர்க்க வெகுமக்கள் அமைப்புகளின் கூட்டமும் நடைபெற்றுள்ளன. பல்வேறு கட்டப் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. மேலும், மக்கள் கோரிக்கைகள், பிரச்சனைகள் அடிப்படையில் போராட்டங்கள், கூட்டங்கள் நடத்தவும், திருச்சியில் 2027 மார்ச் 23ஆம் தேதி மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளன.
படிப்பினைகளைக் கவனத்தில் கொள்வோம்
இதற்கிடையில் 2026 அக்டோபர் 6 ஆம் தேதி தாராபுரம், மதுராந்தகம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெற்றது. நமது கட்சி தாராபுரத்திலும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மதுராந்தகத்திலும் போட்டியிடுவது என்று முடிவு செய்து களம் கண்டோம். இரண்டு தொகுதிகளிலும் மிகக் குறைவான வாக்குகளையே பெற்றுள்ளோம். இதன் படிப்பினைகளை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இடதுசாரி ஒருங்கிணைப்புக்குழு அமைக்கப்பட்டதும், கூட்டுப் போராட்டங்கள் நடைபெற்றதும், கட்சி அணிகள், ஆதரவாளர்கள் மற்றும் இடதுசாரி சிந்தனையாளர்கள் ஆகியோர் மத்தியில் பெரும் உற்சாகத்தையும், வளர்ச்சிக்கான நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, இடதுசாரிகளுடன் இணைந்து கூட்டுப் போராட்டங்களை நடத்துவதோடு, தனித்த சுயேச்சையான இயக்கங்களையும், போராட்டங்களையும் திட்டமிட்டு நடத்த வேண்டும். நமது கட்சியை பலப்படுத்துவதன் மூலம் தான் இடதுசாரி ஒற்றுமையையும், ஜனநாயக சக்திகளை ஈர்ப்பதிலும் நாம் வெற்றி பெற முடியும்.
அகில இந்திய கட்சிக் காங்கிரஸ் முடிவின்படி, ஆர்எஸ்எஸ்-ஆல் வழிநடத்தப்படும் ஒன்றிய பாஜக அரசை ஆட்சியிலிருந்து அப்புறப்படுத்துவதற்கு தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளை அணித்திரட்டிட, இடதுசாரிகளின் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் ஒரு அடித்தளமாக அமையும். நாடாளுமன்றம், சட்ட மன்றங்கள் உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு அமைப்புகளில் நமது பிரதிநிதிகளின் எண்ணிக்கையை உயர்த்திடுவதற்கு இவ்வுத்தி நமக்கு பயன்படும்.
கட்சியின் அமைப்பு நிலை பிரச்சனைகளையும், பலவீனங்களையும் களைந்து, கட்சி எடுத்த முடிவுகளை ஊக்கமுடன் நிறைவேற்ற வேண்டும். இதன் மூலம் நமது கட்சியின் அரசியல் நிலையை உறுதிப்படுத்த முடியும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. – இவ்வாறு அரசியல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.