கட்டுரைகள்

உற்பத்தி குறைவும் விலை உயர்வும்!

இரா.முத்தரசன்

அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பண்டங்கள் அனைத்தும் விலை உயர்ந்து கொண்டே இருக்கின்றன! மளிகைப் பொருள்கள்- வெங்காயம் காய்கறிகள் கடைகளில் காரம், இனிப்பு வகைகள் உட்பட அனைத்தின் விலையும் ஏவுகணைகளுடன் போட்டியிட்டு உயர்ந்து கொண்டே உள்ளன.

இவற்றுக்கு சொல்லப்படும் காரணங்கள்- வேளாண் உற்பத்தி நிலப்பரப்பு குறைந்துவிட்டது. குறிப்பாக நெல், கரும்பு உற்பத்தி குறைந்துவிட்டது. உற்பத்தி குறைவின் காரணமாக விலை உயர்ந்து விட்டது –என்று கூறுகின்றார்கள்.

விலைவாசி உயர்வுக்கு எதிராக அரசியல் கட்சிகள் பல்வேறு வடிவங்களில் இயக்கங்களை நடத்தியுள்ளன – கண்டன அறிக்கைகள் வெளியிட்டுள்ளன. சில நாளேடுகளும் விலை உயர்வு குறித்து கவலை தெரிவித்துள்ளன. அனைவரும் வேண்டுவது ஒன்றிய, மாநில அரசுகள் விலைவாசியைக் கட்டுப்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான்.

மாநில அரசின் அமைச்சர்,

  • அரிசியின் விலை உயரவில்லை- நார்மல் என்கிறார்.
  • அரிசி ஆலை அதிபர்கள் பதுக்கல் செய்கின்றார்கள் என்கிறார்.
  • உற்பத்திக் குறைவு காரணமாக விலை உயர்வு என்கிறார்.

விளைநிலங்கள் குடிமனைகளாக மாறி வருகின்றது. சாலைகள் அமைக்கவும், அகலப்படுத்தவும், தொழில்கள் அமைக்கவும், விளை நிலங்கள் கையகப்படுத்தப்படுகின்றன.

விளைநிலங்கள் கைவிடப்பட்டு தற்போதைய நிலை தொடர்ந்தால், எதிர்காலத்தில் விளைநிலம் என்று ஏதும் இருக்குமா?

மற்றொரு புறத்தில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக சாகுபடிப் பணிகள் மேற்கொள்ளாமல், விளைநிலங்கள் தரிசு போடப்பட்டு வருகின்றன.

குறிப்பாக இவ்வாண்டு மேட்டூர் அணைக்கு உரிய தண்ணீர் வரவில்லை. இதன் காரணமாக ஜூன் 12 அணை திறக்கப்படவில்லை. ஆகவே குறுவை சாகுபடி பெருமளவிற்கு நடைபெறவில்லை- மோட்டார் பம்பு செட்டு வசதி உள்ளவர் மட்டும் குறுவை சாகுபடி மேற்கொண்டனர்.

டெல்டா மாவட்டங்கள் முழுவதும் ஆற்றுப் பாசனத்தை பெரும் அளவு நம்பி உள்ளதால் ஒருபோக சாகுபடிக்கு காவிரி தண்ணீர் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்போடு இருந்தனர் விவசாயிகள்.

கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆண்டாலும், பாஜக ஆண்டாலும், மதசார்பற்ற ஜனதா தளம் ஆட்சி நடத்தினாலும் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கொடுப்பதில்லை என்பதில் மிக உறுதியாக உள்ளனர்.

கர்நாடக மாநிலத்தின் வடிகாலாக தமிழ்நாட்டை பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளனர். நடுவர் மன்ற தீர்ப்பு, உச்ச நீதிமன்றத் தீர்ப்பு என எதனையும் கர்நாடகம் மதிக்காத – ஏற்காத ஒன்றிய அரசு இரு மாநில மக்களும் மோதிக்கொள்ளட்டும். ‘ஆடுகள் இரண்டும் மோதிக்கொண்டால் நரிக்குக் கொண்டாட்டம்’ என்பது போல், நாட்டு நலன் முக்கியமல்ல. மாறாக மோதலே முக்கியம் என்று மிகக் குறுகிய நோக்குடன் செயல்பட்டு வருவது நாட்டின் அவமானங்களில் ஒன்றாகும்.

மேட்டூர் அணைக்கு உரிய நீரை காவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்றுக் குழு ஆகியவை அளித்திட்ட தீர்ப்புகளின்படி கர்நாடகம் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் வழங்கவில்லை. ஆதலால் தமிழ்நாட்டில் 10 லட்சம் ஏக்கரில் பயிர் சாகுபடி செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.

சட்டப் போராட்டங்களை நடத்தி வரும் தமிழ்நாடு அரசு, அரசியல்ரீதியாக மாநிலத்தின் உரிமையை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை செவி மடுக்கவில்லை.

அண்மையில் போதுமான அளவிற்கு தண்ணீர் இல்லை – மழையில்லை – குறுவை சாகுபடி இல்லை என்ற நிலையில் ஒருபோகம் (சம்பா) மட்டுமே சாகுபடி செய்ய முடியும் நிலையில்- செப்டம்பர் மாதம் முதல் தேதி அன்று மேட்டூர் அணையை திறக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஆண்டுதோறும் அணை திறக்கப்படுவதற்கு முன்பாக, மே, ஜூன் மாதங்களில் – டெல்டா மாவட்ட விவசாயிகள், பொதுப்பணி மற்றும் வேளாண்மைத் துறை அதிகாரிகள் கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெறும்- கருத்துகள் அறிந்து அணை திறக்கப்படும் நாள் மற்றும் தூர்வாருதல்- விதை நெல், உரம், பூச்சி மருந்து போன்ற இடுபொருட்களின் தேவை குறித்து கருத்து அறியப்படும். என்ன காரணத்தாலோ இவ்வாண்டு இக்கூட்டம் நடைபெறவில்லை.

அவசரப்பட்டு செப்டம்பர் முதல் நாள் அன்று மேட்டூர் அணையை முதலமைச்சர் ஜோசப் விஜய் திறந்துவைத்தார்.

‘அவசரப்பட்டுத் திறக்க வேண்டாம்’ – என்று விவசாய சங்கங்களும், அரசியல் கட்சிகளும், ஊடகங்களும் கூறிய கருத்துக்கள் ஆட்சியாளர்களால் வழக்கம்போல் அலட்சியப்படுத்தப்பட்டன.

மற்றொரு முக்கியமான செய்தி மேட்டூர் அணை கட்டப்பட்டு, அணையின் நீர் இருப்பைப் பொறுத்துத்தான் திறக்கப்படும். அது ஜூன் 12 ஆக இருக்கலாம் அல்லது அதற்கு முன்னதாக அல்லது பிந்தைய தேதியாக இருக்கலாம் – திறக்கப்படும் தேதிகள் ஒரே மாதிரியாக இருந்தது இல்லை- எந்த தேதியில் திறந்தாலும், அணை மூடப்படும் தேதி என்று ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 28 என்று உறுதியாகப் பின்பற்றப்பட்டு வந்தது.

ஆனால் இவ்வாண்டு செப்டம்பர் முதல் நாள் அணை திறந்து 45 நாட்களில் அக்டோபர் 15-ல் அணை மூடப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது விந்தையாக உள்ளது.

நெல் சாகுபடிக்கு 200 முதல் 250 நாள் வரை தண்ணீர் தேவை என்ற நிலையில், 45 நாட்களுக்குள் சாகுபடி சாத்தியம் என்ற அரிய கண்டுபிடிப்பை கண்டறிந்த மகான் யார் எனத் தெரியவில்லை!

அணை திறக்கப்பட்டால், தினசரி குறைந்தது 15 ஆயிரம் முதல் 18 ஆயிரம் கன அடி திறந்து விடப்பட்டால்தான் முக்கொம்பில் தண்ணீரை தேக்கி- காவிரி வெண்ணாறு, வெட்டாறு என பெரும் ஆறுகளிலும், பின்னர் கிளை நதிகளான பாசன ஆறுகளிலும் தண்ணீர் விடப்பட்டு- அதனிலிருந்து கண்ணி வாய்க்கால்கள்வழியே தண்ணீர் வயல்களுக்கு செல்லும்.

இவ்வாண்டு இவை எதுவும் நடைபெறவில்லை. 45 நாள்களிலும் 8ஆயிரம், 10ஆயிரம் கன அடியே நீர் திறக்கப்பட்டதால், ஆறுகளில் ஓரம், சாரமாக ஓடியதே தவிர பாசனத்திற்கு பயன்படவில்லை.

வழக்கமாக அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஆறுகளில் வெள்ளப் பெருக்கெடுத்து ஆங்காங்கே ஆறுகளிலும், பாசன வாய்க்கால்களிலும் உடைப்புகள் ஏற்பட்டு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும். டெல்டா மாவட்ட ஆறுகளும், வாய்க்கால்களும் இந்த ஆண்டு கோடைகாலம்போல் வறண்டு கிடக்கும் அவலத்தை இதுவரை டெல்டா மக்கள் பார்த்ததில்லை.

மறுபுறத்தில் டெல்டா மாவட்டங்கள் முழுவதும் ஆற்றுப் பாசனத்துக்கு வழியின்றி இயற்கையை நம்பி நேரிடை விதைப்பில் விவசாயிகள் நெல் பயிர் சாகுபடி செய்துள்ளனர்.

ஜனவரி 15 வரை மழை அவ்வப்போது சீராக பெய்து வந்தால் வேளாண்மைக் காக்கப்படும். வேளாண் மக்களும் காக்கப்படுவார்கள்.இல்லையெனில் பேரிழப்பே ஏற்படும்.

இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, உற்பத்தி குறைவும் விலைவாசி உயர்வும் குறித்து பார்ப்போம்.

சாகுபடி நிலப்பரப்பு குறைந்து வருகின்றது, உற்பத்தி குறைந்துள்ளது, சந்தைக்கு போதிய அளவிற்கு நெல் வரத்து இல்லை எல்லாம் உண்மை!

ஆகவே, விலை உயர்ந்துள்ளது – மேலும் உயர வாய்ப்புள்ளது என்று மொத்த வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கூறுகின்றனர்.

விலை உயர்வுக்கும், விவசாயிக்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா?

உற்பத்தியாளரான விவசாயி நெல், கரும்பு, கடலை, எள், தேங்காய் என எதுவாயினும் அரசு நிர்ணயிக்கும் குறைந்தபட்ச ஆதார விலைக்கு அல்லது அதனை விட குறைந்த விலை நிர்ணயம் செய்யும் வியாபாரிக்கு கொடுத்து விடுகின்றார்.

விவசாயி, உற்பத்திக் குறைவைக் காரணம் காட்டி விலையை அதிகரிக்க முடியாது. அதற்கான வாய்ப்பு விவசாயிக்கு இந்நாள்வரை கிட்டவில்லை.

விவசாயி தான் வியர்வை சிந்தி- கடும் உழைப்பால்- உற்பத்தி செய்துவிட்டு, விளைபொருள் அனைத்தையும் அறுவடை செய்த அன்றே அல்லது மறுநாளே விற்பனை செய்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளான்.

விவசாயிக்கு இருப்பு வைத்து அல்லது பதுக்கி வைத்து விற்க வழியில்லை.

அதிக உற்பத்தியானாலும்- உற்பத்தி குறைந்தாலும்- விலை ஏற்ற, இறக்கத்திற்கு விவசாயி பொறுப்பல்ல – அதனால் விவசாயிகளுக்கு லாபம் இல்லை- அரசு நிர்ணயித்த விலையை விட ஒரு பைசா கூட கூடுதலாகப் பெற வாய்ப்பில்லை.

சிமெண்ட் தட்டுப்பாடு ஏற்படும் – அதன் விளைவாக விலை உயரும்- சிமெண்ட் ஆலை முதலாளிகள் கூட்டணி அமைத்து உற்பத்தியை குறைத்து செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி விலை உயர்த்துவார்கள்- உற்பத்தியாளரான ஆலை முதலாளிக்கு லாபம் கிட்டும்-இது ஒரு உதாரணம்.

ஆலைகளில் உற்பத்தியாகும் பொருள்களை உற்பத்தியை அதிகரிக்கவும், குறைக்கவும் செய்து அல்லது பதுக்கிவைத்து இஷ்டம் போல் விலை நிர்ணயம் செய்து லாபம் ஈட்ட முடியும்!

விவசாயத்தில் அவ்வாறு செய்ய முடியாது- இயற்கையைச் சார்ந்தது. நெல், கரும்பு மற்றும் வேளாண் உற்பத்தி பொருள்களின் உற்பத்தியை சற்று குறைத்து செயற்கையாக ஆலை முதலாளிகள் போன்று நெருக்கடியை உருவாக்கி விலை உயர்த்த இயலாது. லாபம் காண முடியாது.

அரிசியை- சீனியை மற்ற இதர உணவுப் பொருள்களை அரசின் ஆதரவோடு பெரும் பணக்கார வியாபாரிகள் பதுக்குகிறார்கள் – செயற்கையான பற்றாக்குறையை ஏற்படுத்துகின்றார்கள் – பொருள் கிடைக்கவில்லை, தட்டுப்பாடு என்ற நிலையை உருவாக்குகிறார்கள். என்ன விலை கொடுத்தும் வாங்க வேண்டிய நிர்ப்பந்த நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்படுகிறார்கள். வேறு வழியின்றி, வாங்கும் அளவை சற்று குறைத்து – அதிக விலை கொடுத்து பொருள்களை வாங்குகிறார்கள்.

இவ்விலை உயர்வால் கிடைக்கும் கொள்ளை லாபம் யாருக்கு? விவசாயிக்கு இல்லை- முழுமையாக இல்லை! பின் யாருக்கு? பதுக்கல்காரர்கள்- எவ்வித உழைப்பும் இன்றி, பணத்தின் பலம் கொண்டு, அரசு அதிகாரிகளின் ஆதரவு பலத்துடன்- கொள்ளை லாபம் ஈட்டுகின்றார்கள்.

பாடுபட்ட விவசாயிக்கு பலன் இல்லை- நுகர்வோருக்கும் பலன் இல்லை.

இடைத்தரகர்கள் இஷ்டத்திற்கு அடிக்கின்றார் லாபக் கொள்ளை!

இதைத் தடுத்து நிறுத்திட வேண்டியவர் யார்? பதுக்கலைத் தடுத்து கடும் நடவடிக்கை எடுத்து, கொள்ளை லாபத்தை தடுத்து, பொதுமக்களுக்கு குறைந்த விலையில் அல்லது நியாயமான விலையில் அரிசி உள்ளிட்ட உணவுப் பொருள்கள் கிடைப்பதை உறுதிப்படுத்திட வேண்டுவது அரசின் தலையாயக் கடமையாகும்.

கொள்முதலுக்கு குறைந்தபட்ச ஆதரவுகளை நிர்ணயம் செய்து- அரசே கொள்முதல் செய்வதன் மூலம் குறைந்த விலை கிடைப்பதை உறுதி செய்ய முடியும்.

அதனைப் போன்று, நியாய விலைக் கடைகள் மூலம் அனைத்து அத்தியாவசிய பண்டங்களும் பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி, தரமான முறையில் கிடைப்பதை அரசு உறுதிப்படுத்துவதன் மூலம் விலையைக் குறைக்க முடியும். விலை உயர்வைத் தடுக்க முடியும்.

ஒன்றிய, மாநில அரசுகள் முன் வருமா? மக்கள் நலன் காக்கப்படுமா? விலை ஏற்றக் கொடுமையில் இருந்து விடுதலை கிடைக்குமா?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button