இந்தியா

நிக்கோபார் தீவை அழிக்காதே!

சு.மோகன்குமார்

தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகச்சிறந்த பல்லுயிர் பெருக்கத்தைக் கொண்ட பகுதிகளில் ஒன்றான பெரும் (அந்தமான்) நிக்கோபார் தீவு, விரைவில் கடந்தகால நினைவாக மாறப்போகிறது.

“பெரும் நிக்கோபார் தீவின் முழுமையான வளர்ச்சி” (Holistic Development of Great Nicobar Island) எனப் பெயரிடப்பட்ட பேராசைத் திட்டம், அதை வளர்ப்பதற்குப் பதிலாக அழிக்கப்போகிறது. பெரும்பாலும் தொலைதூரமாகவும் மனிதத் தலையீடு குறைவாகவும் உள்ள நிக்கோபார் தீவை, சரக்குப் பரிமாற்றத் துறைமுகமாகவும், சுற்றுலா மையமாகவும் மாற்றுவதே இந்தத் திட்டம்.

      • ஒரு சர்வதேச கொள்கலன் சரக்குப் பரிமாற்ற முனையம்
      • ஒரு புதிய விமான நிலையம்
      • பெரும் நிக்கோபார் எரிவாயு மற்றும் சூரிய மின்சக்தி நிலையம்
      • இரண்டு புதிய கடலோர நகரங்கள்,

ஆகியவற்றை உருவாக்குவதே இத்திட்டத்தின் இலக்கு.

இச்சூழ்நிலையின் தீவிரத்தை உடனடியாக மறுமதிப்பீடு செய்யாவிட்டால், ஏற்படும் பாதிப்புகள் சரிசெய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்படும்.

நிக்கோபாரி என்ற இனத்தினர் இங்கு வாழ்வதால்தான் இது ‘நிக்கோபார்’ எனும் பெயர் பெற்றது. அந்த இனத்தினர் வெறும் 1,094 பேர் தான் அங்கு இருக்கின்றனர். இது தவிர ஷோம்பென் இனத்தினர் 237 பேர் வாழ்கின்றனர். நிக்கோபாரி மக்கள் பொதுச்சமூகத்துடன் இணைந்துவிட்டாலும், 420 நிக்கோபாரிகளும், ஷோம்பென் பழங்குடியினரும் தொடர்ந்து காடுகளின் ஆழப்பகுதிகளில் வாழ்ந்து, உலகின் பிற பூர்வகுடி இனங்களைப் போலவே தங்களுடைய பாரம்பரிய பூர்வகுடி வாழ்க்கை முறையைப் பாதுகாத்து வருகின்றனர்.

பழங்குடிப் பாதுகாப்பு மட்டுமல்ல; நிக்கோபார் தீவு பல்லுயிர் உயிரியல் செல்வத்தின் ஒரு புதையலாகும். இது ஓர் உயிர்மண்டலக் காப்பகம் (Biosphere Reserve), பழங்குடியினர் காப்பகம், தேசியப் பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சரணாலயங்களைக் கொண்டுள்ளது.

உலகின் மிகச் சில எஞ்சியிருக்கும் மனித தலையீடில்லாத வெப்பமண்டல பசுமை மழைக்காடுகளைக் கொண்ட இந்தத் தீவு, பல வகையான உள்நாட்டு தாவரங்களுக்கும், விலங்குகளுக்கும் உறைவிடமாக உள்ளது. இவற்றில் பெரும்பாலானவை இன்னும் ஆவணப்படுத்தப்படாமலும், அறிவியல் சமூகத்திற்குத் தெரியாமலும் உள்ளன.
மொத்தம் 910 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட இந்தத் தீவில், பெரும்பகுதி அடர்ந்த காடுகளால் சூழப்பட்டுள்ளது, அவை அதன் நிலப்பரப்பில் 865.84 சதுர கிலோமீட்டரை (95.2%) ஆக்கிரமித்துள்ளன.

இந்தத் திட்டத்தின் பரப்பளவில் 50%க்கும் அதிகமான பகுதி பழங்குடியினர் காப்பகத்தின் (Tribal Reserve) கீழ் வருகிறது. 130.75 சதுர கி.மீ வெப்பமண்டல பசுமை மழைக்காடுகளை வனமற்ற நோக்கங்களுக்காக மாற்றியமைக்க வழிவகுத்துள்ளது. 91,000 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தினால், நான்கு லட்சத்திற்கும் அதிகமானவர்கள், வெளிப்பகுதிகளிலிருந்து இந்தத் தீவுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது பழங்குடியின சமூகங்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையிலான இயற்கையான உறவைச் சிதைக்கும். 1500 பேர் மட்டுமே எஞ்சியுள்ள கலப்பற்ற இரண்டு பழங்குடி இனங்களை அழிக்கும். இந்த விசாலமான வனப்பகுதியின் உள்ளே, பழங்குடி ஷோம்பென் (Shompen) இனத்தின் பாரம்பரிய வாழ்க்கை முறையைப் பாதுகாப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட 751.40 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட பழங்குடியினர் காப்பகம் அமைந்துள்ளது.

தேனி மாவட்டம், மேகமலை புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டதால், அந்த ‘வனப்பகுதியில்’ தலைமுறை தலைமுறைகளாக வாழ்கிற 98 மலைக் கிராமங்களைச் சேர்ந்த (14 கிராம ஊராட்சிகள்) 4,601 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 25,000 மக்களை வெளியேற்றவும், கட்டடங்களை இடிக்கவும் 29.05.2026-ல் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், நிகோபார் திட்டம் குறித்த வழக்கில் தம்மை இணைத்துக்கொள்ள வேண்டும் என பழங்குடி மக்கள் மனு செய்தபோது, ஒன்றிய அரசின் பழங்குடிகள் துறை அதை ஆட்சேபித்தது! “சட்டபூர்வ செயல்பாடுகளின்போதும், தீவின் வன உரிமைகளைத் தீர்மானிக்கும்போதும் பழங்குடியினத் தலைவர்கள் உறங்கிக் கொண்டிருந்தார்களா? அவர்களை வழக்கில் சேர்க்க வேண்டிய அவசியமில்லை” என்று அது கூறியது. எந்தப் பழங்குடியைக் காப்பதற்காக அந்தத் துறை உருவாக்கப்பட்டதோ, அந்த நோக்கத்துக்கே எதிராக பெருமுதலாளிகளின் லாப வேட்டைக்காக பழங்குடியினரைப் பலி கொடுக்கிறது – கேவலம்!

இந்தத் திட்டத்துக்காக, நிகோபாரில் 10,00,000 மரங்கள் வெட்டப்படுகின்றன. அதை ஈடு செய்ய, அரியானா, மத்தியப்பிரதேச மாநிலங்களில் 24,750 ஹெக்டேர் பகுதியில் மரங்கள் நட்டு வனமாக்கப் போகிறார்களாம்!

இதற்கு பசுமைத் தீர்ப்பாயம் அனுமதியளித்திருப்பதுதான் மேலும் அதிர்ச்சியளிக்கிறது. மேகமலையில் புலிகளுக்காக 98 கிராமங்கள் அழிக்கப்பட வேண்டும்; நிக்கோபாரில் பெருமுதலாளிகளுக்காக பழங்குடிகள், இயற்கை வளம் அழிக்கப்பட வேண்டும்! இதுதான் சட்டத்தின் ஆட்சி!

தனித்துவமான தாவரங்கள், லெதர் பேக் கடலாமைகள், மெகாபோட் பறவைகள் உள்ளிட்ட அழிவின் விளிம்பில் இருக்கும் உயிரினங்கள், விலங்குகளையும், இரு பழங்குடி இனங்களையும் அழித்து, பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக உருவான நுணுக்கமான சுற்றுச்சூழல் வலைப்பின்னல்கள் சிதைக்கப்படுவதற்கும் வழிவகுக்கும்.

குறுகிய கால லாபத்திற்காக இந்தத் தீவை பலியிடுவதற்குப் பதிலாக, அதன் உயிரினங்களைப் பாதுகாக்கவும், இயற்கை உலகில் அதன் பங்கினைப் பேணவும், இந்தத் தீவை அப்படியே தக்கவைக்க வேண்டும்.

எனவே, நிதி ஆயோக் (NITI Aayog) முன்வைத்துள்ள ‘அந்தமான் நிக்கோபார் தீவுகளில் உள்ள பெரும் நிக்கோபார் தீவின் முழுமையான மேம்பாடு’ திட்டம் இயற்கைக்கும், பழங்குடியின மக்களுக்கும், அழிவின் விளிம்பில் உள்ளதும் அப்பகுதிக்கே உரியதுமான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கும் எதிரானதாகும்.

நிக்கோபார் தீவு அதன் இயற்கைத் தூய்மையான நிலையில் தொடர்ந்து பாதுகாக்கப்பட, இத்திட்டம் கைவிடப்பட வேண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button