உலக செய்திகள்

தீப்பற்றி எரிந்த பிரான்ஸ் நாட்டு குளிர்பதனிகள்: பின்னணி காரணம் என்ன?

வ.மணிமாறன்

குளிர்பதனிகள் (Refrigerator), உறைகலன்கள் (Freezers) இல்லாமல் பல்பொருள் அங்காடிகள், பெரிய மளிகைக் கடைகள், இறைச்சி, மீன் விற்பனையகங்கள் போன்றவை இயங்காது. குளிர்பதனி இல்லாத வீடுகளை விரல் விட்டு எண்ணி விடலாம். இந்தியாவிலேயே இப்படி என்றால், ஐரோப்பிய நாடுகளைச் சொல்லவா வேண்டும். அங்கு குளிர்பதனிகள் இல்லாத வீடுகளோ, வணிக நிறுவனங்களோ இருக்காது.

கடந்த அக்டோபர் 11 அன்று அதிகாலை, பிரான்ஸ் நாட்டில் உள்ள பல்பொருள் அங்காடிகள், பெரிய வணிக நிறுவனங்களில் இருந்த குளிர்பதனிகள் மற்றும் உறைகலன்கள் செயலிழந்துவிட்டன. இதனால் அதனுள் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் வீணாயின. இறைச்சி மற்றும் உணவுப் பொருட்கள் கெட்டுப் போயின. ஐஸ்கிரீம்கள் உருகி தண்ணீராய் ஓடின.வெப்பநிலை அதிகரித்து சில தீப்பிடித்தும் எரிந்தன.

இப்படி பிரான்ஸ் நாட்டில் உள்ள பெரும்பாலான பல்பொருள் அங்காடிகள், வணிக நிறுவனங்களில் இருந்த குளிர்பதனிகள் (Refrigerator), உறைகலன்கள் (Freezers) சூடு அதிகரித்து செயலிழந்துவிட்டன. இதனால் பல கோடி யூரோ (ஒரு யூரோவுக்கு 105 இந்திய ரூபாய்) மதிப்புள்ள உணவுப் பொருட்கள் வீணாகிப் போய் விட்டதாக வணிகர்கள் கூறுகின்றனர்.

எப்படி இது நிகழ்ந்தது?

நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் முக்கியமான ஒரு மாற்றம் நிகழ்ந்துள்ளது. அதாவது நாம் பயன்படுத்தும் கருவிகள், எந்திரங்கள், வாகனங்கள், கட்டடங்கள், விவசாயக் கருவிகள் எனப் பல்வேறு பொருட்கள் இன்டர்நெட்டுடன் (இணையம்) இணைக்கப்பட்டு தானியங்கியாகச் செயல்படுகின்றன. இதற்கான தொழில்நுட்பத்திற்கு இணையத்துடன் இணைக்கப்பட்ட பொருட்களின் வலையமைப்பு (Internet of Things – IoT) என்று கூறப்படுகிறது.

இந்த வலையமைப்புக்குள் ஹேக்கர் எனப்படும் இணையக் கள்வர்கள் நுழைந்து ‘நினைத்த காரியங்களை’ சாதிக்கின்றனர். இப்படி ஊடுருவித்தான் பிரான்ஸ் நாட்டைப் பதற வைத்துள்ளனர்.

இணையத்துடன் இணைக்கப்பட்ட பொருட்களின் வலையமைப்பில் (Internet of Things – IoT) குளிர்பதனிகளும் உறைகலன்களும் உள்ளன. இந்த வலையமைப்புக்குள் ஹேக்கர்கள் ஊடுருவினர். குளிர்பதனிகள் (Refrigerator), உறைகலன்களை (Freezers) தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, விபரீதத்தை நிகழ்த்தி விட்டனர்.

குளிர்பதனிகள் எப்படிச் சூடாயின?

குளிர்பதனிகளில் உறைபனி உருவாகி விட்டால், அதை உருகச் செய்வதற்காக வெப்பத்தை அதிகரிக்கும் டிஃப்ராஸ்ட் மோட் (defrost mode) தானாகவே இயங்கத் தொடங்கி விடும். அதன் வெப்பநிலையை அதிகரித்து உறைபனியை கரைந்து செல்ல வைக்கும். உறைபனி உருகியவுடன் டிஃப்ராஸ்ட் மோட் தானாகவே நின்றுவிடும்.

ஹேக்கர்கள் இந்த வலையமைப்புக்குள் ஊடுருவி தங்களின் கைவரிசையை காட்டியதால், உறைபனி உருகிய பிறகும் டிஃப்ராஸ்ட் மோட் அணையாமல் தொடர்ந்து இயங்கியது. இதனால் வெப்பநிலை அதிகரித்து குளிர்பதனிகள் வெடித்தும் தீப்பிடித்து எரிந்தும் பாதிப்புக்கு உள்ளாயின.

700க்கும் மேற்பட்ட பெரும் சூப்பர் மார்க்கெட்டுகளில் (பல்பொருள் அங்காடிகள்) இருந்த குளிர்பதனிகள், உறைகலன்களின் வெப்பநிலை அதிகரித்து 15 இடங்களில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது என பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.

பல்பொருள் அங்காடிகள் மட்டுமல்ல, சிறிய இறைச்சிக் கடைகள், இறைச்சி வெட்டும் கூடங்கள், உணவுப் பொருட்களைப் பதப்படுத்தும் தொழிற்சாலைகள் போன்றவையும் ஹேக்கர்களின் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கின்றன. பிரான்ஸ் நாட்டில் உள்ள ரத்த வங்கிகளின் குளிர்பதனிகளும் இத்தகைய இணையத் தாக்குதலில் இருந்து தப்பவில்லை.

இதுபோன்ற இணைய வழித் தாக்குதல்கள் பிரான்ஸ் நாட்டில் மட்டுமல்ல, பெல்ஜியம், சுவீடன், அயர்லாந்து, நெதர்லாந்து உள்ளிட்ட ஒன்பது நாடுகளில் உள்ள பல்பொருள் அங்காடிகள் மீதும் நடத்தப்பட்டதால் ஐரோப்பாவில் பதற்றம் அதிகரித்தது

ஈரான் மீது குற்றச்சாட்டு

ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படையுடன் தொடர்புடைய ‘ஷாஹித் காவே’ (Shahid Kaveh) என்ற சைபர் தொழில்நுட்பப்பிரிவு, இந்தத் தாக்குதலின் பின்னணியில் இருப்பதாக பிரான்ஸ் உளவு மற்றும் சைபர் பாதுகாப்பு அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹமீத் ரெசா லஷ்கரியான், மஹ்தி லஷ்கரியான், ரெசா சலர்வந்த் ஆகிய மூன்று ஹேக்கர்கள் பல்வேறு போலி அமைப்புகளின் பெயர்களில் இதனைச் செயல்படுத்தி இருப்பதாகவும் கூறியுள்ளது.

பிரான்ஸ் மட்டுமல்ல ஒன்பது ஐரோப்பிய நாடுகளின் குளிர்பதனிகள், உறைகலன்களைக் குறிவைத்து இணைய வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதனால் இந்தத் தாக்குதல்களின் பின்னணியைக் கண்டறிவதற்கான பணிகளில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் அரசு அமைப்புகளும் தொழில்நுட்ப நிறுவனங்களும் தீவிரமாக இறங்கியுள்ளன. ஆனால் இந்த இணைய வழித் தாக்குதல்களுக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என ஈரான் மறுத்துள்ளது.

இது வெறும் “சைபர் பாதுகாப்பு” பற்றியதல்ல. அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் கூட்டாளிகளும் நடத்திவரும் ஆக்கிரமிப்புப் போர், தொழில்நுட்ப வளர்ச்சியால் பல்வேறு தளங்களுக்கும் பரவியுள்ளது. அண்மையில் ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேல் போர் இதன் பரிமாணங்களை உலகுக்கு வெளிப்படுத்தியுள்ளன.

இவற்றில் ஒன்றுதான் பல்பொருள் அங்காடிகள், வணிக வளாகங்களில் இருக்கும் குளிர்பதனிகள் மற்றும் உறைகலன்களை செயலிழக்க வைப்பதும் ஆகும். இதுபோன்ற இணைய வழித் தாக்குதல்களால் அமெரிக்கா மற்றும் கூட்டாளி நாடுகளில் உள்ள வணிகர்களும் சாதாரண மக்களுமே பாதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலில் நடைபெற்ற தேர்தலில் டொனால்ட் டிரம்ப் கட்சியும், நெதன்யாகுவும் அந்நாட்டு மக்களால் தோற்கடிக்கப்பட்டுள்ளனர். ஆனால், கார்ப்பரேட் லாபத்திற்காகவும், புவிசார் அரசியல் ஆதிக்கத்திற்காகவும் ஈரான் மீதான போரைத் தீவிரப்படுத்த அவர்கள் விரும்புகின்றனர். இதற்காக ஈரானை “அச்சுறுத்தும் சக்தியாக” சித்தரித்து, மக்கள் ஆதரவைத் திரட்டுவதற்கான பரப்புரை ஆயுதமாக இப்பிரச்சனையைக் கையாளுகின்றனர். இதற்கு அமெரிக்க – ஐரோப்பிய ஊடக பலத்தைப் பயன்படுத்துகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button