
இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் மாநில 9-வது மாநாடு 19.09.2026 அன்று கோவை மாநகரில் அமைந்துள்ள NSK-தி கிராண்ட் ஸ்பேஸ் அரங்கில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் என். ஆனந்த் வெங்கடேஷ் ஆற்றிய ஒன்றரை மணி நேர உரையின் சுருக்கம் வருமாறு:
“நீதித்துறையை பலவீனப்படுத்தும் வகையில் அது கட்டமைப்பு நெருக்கடியில் சிக்கியுள்ளது. வழக்கறிஞர்களும் நீதித்துறையும் எதிர்கொள்ளும் அடிப்படைப் பிரச்சினைகள் குறித்து தீவிரமாக விவாதிக்க வேண்டிய நேரம் இது
நாம் சுயபரிசோதனை செய்ய வேண்டிய கட்டத்தில் இருக்கிறோம். நீதித்துறையும் இதைத் தொடங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. நீதித்துறையின் ஒவ்வொரு நிலையையும் வணிகமயமாக்கல், நிறுவன ரீதியான தேக்கம், சுயநலம், அறநெறியின் வீழ்ச்சி ஆகியவை பலவீனப்படுத்துகின்றன. வழக்கறிஞர் தொழில் வணிகத் தன்மை கொண்டதல்ல; அது சேவை நோக்கமுள்ள உயரிய தொழில் என்கிறது உச்சநீதிமன்றம்.
சமூகத்தின் மேல்தட்டில் வழக்கறிஞர்கள் அறிவுஜீவிகளாகவும், ஒடுக்கப்பட்ட மக்களிடையே சமூகச் செயற்பாட்டாளர்களாகவும் பார்க்கப்படுகின்றனர். இந்த இரட்டைச் சமூகப் பங்கு வழக்கறிஞர் தொழிலுக்கு உள்ளது.
நான் ஓய்வு பெற்ற பிறகு இதைப் பற்றிப் பேசினால் யாரும் கவனம் செலுத்த மாட்டார்கள். அதிகாரத்தில் இருக்கும் போதே இதைப் பற்றி துணிச்சலாகப் பேசியாக வேண்டும்.
சட்டக் கல்வியின் தரம் வீழ்ச்சி
சட்டக் கல்வியின் தரம் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. மாநிலம் முழுவதும் சட்டக் கல்லூரிகள் கட்டுப்பாடின்றி பெருகி வருகின்றன. இதனால் சட்டக் கல்வியே படுகுழிக்குச் சென்று கொண்டிருக்கிறது. சட்டக் கல்வியை ஒழுங்குபடுத்தவும், கல்வித் தரத்தை நிர்ணயிக்கவும் வழக்கறிஞர்கள் சட்டத்தின் 49-ஆவது பிரிவின்படி இந்திய பார் கவுன்சிலுக்கு அதிகாரம் உள்ளது. சட்டக் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் அதன் தரம் குறைந்து வருவதை 2015-ஆம் ஆண்டு பார் கவுன்சில் உணர்ந்தது. இதையடுத்து, நாடு முழுவதும் புதிய சட்டக் கல்லூரிகளுக்கு மூன்று ஆண்டுகளுக்கு தடையில்லாச் சான்றிதழ் வழங்க வேண்டாம் என்று மாநிலப் பல்கலைக்கழகங்களுக்கு அறிவுறுத்தியது. ஆனால் அதற்கு மாறாக 300 கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. சில நிறுவனங்களுக்கு நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்தும் வழங்கப்பட்டது.
நாடு முழுவதும் 27 தேசிய சட்டப் பல்கலைக்கழகங்கள் உட்பட 1,500-க்கும் மேற்பட்ட சட்டக் கல்லூரிகள் உருவாகியுள்ளன. பதிவு செய்யப்படும் மொத்த வழக்கறிஞர்களில் தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களில் படித்தவர்கள் சுமார் 5 சதவீதம் மட்டுமே. மீதமுள்ளவர்கள் இரண்டாம், மூன்றாம் நிலை சட்டக் கல்லூரிகளில் இருந்து வருகின்றனர். அடிப்படை சட்டப் பயிற்சிகூட இல்லாமல் அவர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். நாடு முழுவதும் உள்ள சட்டக் கல்லூரிகளில் 30 முதல் 50 சதவீத பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. பல கல்லூரிகள் தற்காலிகப் பேராசிரியர்களைக் கொண்டே இயங்கி வருகின்றன. நமது சட்டப் பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தரே இல்லை.
அரசு சட்டக் கல்லூரிகளில், தற்போதுள்ள சட்டங்களைப் பற்றி தெளிவாக கற்று உணரும் வகையில் சில பாடங்களே இல்லாத நிலையும் உள்ளது. தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களுக்கும் பிற சட்டக் கல்லூரிகளுக்கும் இடையே பாடத்திட்டத்திலும் வேறுபாடு உள்ளது. தமிழ்நாட்டிலும் அரசு சட்டக் கல்லூரிகளுக்கும் பிற கல்லூரிகளுக்கும் இடையே சட்டக் கல்வியின் தரத்தில் வேறுபாடு காணப்படுகிறது. பார் கவுன்சில்களின் முக்கியப் பொறுப்புகளில் அரசியல் தொடர்பு கொண்டவர்கள் இருக்கின்றனர். இவை அனைத்தும் விவாதிக்கப்பட வேண்டும். இல்லையென்றால் அவர்களிடம் இருந்து எப்படி நடுநிலையை எதிர்பார்க்க முடியும்?
பெரும்பாலான பார் கவுன்சில் தேர்தல்கள் வெறித்தனமாக நடத்தப்படுகின்றன. சமீபத்திய தேர்தலில் நாம் பார்த்ததைப் போல கோடிக்கணக்கான ரூபாய் செலவிடப்படுகிறது. முன்பு அரசியல் இயக்கங்களில் வழக்கறிஞர்கள் ஈடுபட்டிருந்தாலும், அந்த அரசியலை தங்களுடைய பிற பணிகளில் கலக்கவில்லை. ஆனால் இன்று அரசியலை ஒரு கேடயமாகவும், செல்வாக்கைப் பெறுவதற்கான கருவியாகவும் பயன்படுத்தும் மலிவான அரசியல் சிந்தனையுடன் சிலர் வருகின்றனர்” என்றார்.
செயற்கை நுண்ணறிவு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்
நீதித்துறையில் செயற்கை நுண்ணறிவு (AI) மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். வழக்கறிஞர்கள் ஆழமாகப் படிக்கவில்லை என்றால், நடுநிலையுடன் செயல்படவில்லை என்றால், செயற்கை நுண்ணறிவு அவர்களை முற்றிலும் பின்னுக்குத் தள்ளிவிடும்.
நாட்டில் ஐந்து கோடிக்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் இருப்பதற்கு நீதிமன்றப் புறக்கணிப்பும் ஒரு முக்கியக் காரணமாக உள்ளது” என்று அவர் பேசினார்.
