தலையங்கம்

நூறு நாள்கள்: வாக்குறுதிகளும் செயல்பாடும்

ஜனசக்தி தலையங்கம்

தமிழ்நாட்டில் புதிய ஆட்சி பொறுப்பேற்று 100 நாள்கள் கடந்துள்ளன. மூன்றே மாதத்தில் முடிந்துவிடும் என்ற ஆருடங்களை நிராசையாக்கி அரசு நிலைத்துள்ளதற்காகவே அதனைப் பாராட்டி வாழ்த்த வேண்டும்.

த.வெ.க. ஆட்சியமைக்க ஆதரிப்பதென, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி முடிவெடுத்த போது நிறைவேற்றிய தீர்மானத்தில், “உழைக்கும் மக்களின் நலன்களைப் பாதுகாப்பதும், அதனை மறுத்து முன்னெடுக்கப்படும் கார்ப்பரேட் தாக்குதல்களை எதிர்ப்பதும், அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக மக்களை மதரீதியாகப் பிளவு படுத்தி மோத வைக்கும் வகுப்புவாத பாசிச சக்திகளை முறியடிப்பதும், சமூகநீதியை நிலை நிறுத்துவதும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் கொள்கை நிலையாகும்.

மாண்புமிகு முதலமைச்சர் ஜோசப் விஜய், ‘சமூக நீதி, சமநீதி, மதச்சார்பின்மை ஆகியவற்றைப் பாதுகாப்பதாகவும், சென்ற அரசின் நலத்திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்தப்போவதாகவும்’ மக்களுக்கு உறுதியளித்துள்ளார். அதனையும், மாநில உரிமைகளைப் பாதுகாப்பதோடு, த.வெ.க.வின் தேர்தல் வாக்குறுதிகளை செயல்படுத்த வேண்டும் என்ற மக்களின் எதிர்பார்ப்புகளையும் புதிய அரசு நிறைவேற்றும் என நம்புகிறது. அதே நேரத்தில் தனது அரசியல் நிலைக்கு மாறான செயல்பாட்டில் அரசு ஈடுபடுமானால், பாதிக்கப்பட்ட மக்களோடு இணைந்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி போராடும்” என்று கூறப்பட்டுள்ளது.

நூறாவது நாளில் ‘ஒரு யுகத்துக்கான மக்களின் மனசாட்சி’ என்ற பிரம்மாண்டமான பொருள்தரும் தலைப்பில் தந்துள்ள விளம்பரத்தில், சிங்கப் பெண் அதிரடிப்படை, தாய்மாமன் தங்க மோதிரம், 717 மதுபானக்கடைகள் மூடல், 1 லட்சம் கோடி ரூபாய் புதிய முதலீடு, சுகாதாரம், குடிநீர், சாலை மேம்பாடு, போதைப்பொருள் ஒடுக்க 65 அதிரடிப்படைகள், மணப்பெண்களுக்கு 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை, கரும்பு டன்னுக்கு ரூ4000/-, நெல் குவிண்டாலுக்கு ரூ 2750/-, வீடு கட்டும் திட்டம், விவசாயத் தொழிலாளருக்கு 150 நாள்கள் வேலை வாய்ப்பு, ஆடுகள் வளர்ப்புத் திட்டம், 200 யூனிட் கட்டணமில்லாத மின்சாரம், காலை உணவுத்திட்டம், 6000 கோடி ரூபாய் விவசாயக்கடன் ரத்து, மடிக்கணினித் திட்டம், மாணவர்களுக்கு பிராண்டட் மிதிவண்டி, நேரடி தொடர்பற்ற பத்திரப்பதிவு ஆகியவை 100 நாள் சாதனையாகச் சொல்லப்பட்டுள்ளன.

இவை வெறும் அறிவிப்புகள் தான். நன்றாகச் செயல்படுத்தப்படும் என்று நம்புவோம்.

ஊழல் ஒழிக்கப்படும் என்பது இன்றைய முதலாளித்துவ சமூகத்தில் சாத்தியமில்லை. ஆனால் அதற்குள்ளாகவே ஊழலை முற்றாக ஒழித்து விட்டதாக அமைச்சர்கள் பேசுகிறார்கள். உண்மை நிலவரம் மக்களுக்குத் தெரியும். குறைந்தபட்சம் சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையை ஊழலின் கொடுங்கரங்கள் நசுக்காமல் பார்த்துக் கொண்டால் மக்கள் மகிழ்வார்கள்.

200யூனிட் இலவச மின்சாரம் தரப்பட்ட பிறகு, மின்கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவதாக மக்கள் புகார் தெரிவிக்கிறார்கள்.

பெண்கள் பாதுகாப்பு, சட்டம்–ஒழுங்கு பற்றி அன்றைய அரசு மீது தேர்தல் பரப்புரைகளில் கடும் தாக்குதல் தொடுத்த இன்றைய அரசின் 100 நாட்களுக்குள், குறைந்தது 85 கொலைகள், 151 வன்புணர்வுகள், 5 காவல் நிலைய / சிறைச்சாலை மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

காண்ட்ராக்ட், அவுட்சோர்ஸிங் பணிகளில் உள்ள தொழிலாளரை, நிரந்தரப்படுத்துவோம் என்று த.வெ.க. தேர்தலறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இப்போது பிபிபி முறையில், அரசு மற்றும் அரசு சார்ந்த உள்ளாட்சி, போக்குவரத்து, மருத்துவமனைகள் உள்ளிட்ட அமைப்புகளில், பல ஆண்டுகளாகப் பணியில் உள்ளவர்களையும் காண்ட்ராக்டர் கையில் ஒப்படைப்பதாக நிதிநிலை அறிக்கை உள்ளது.

சமூகத்தின் அடிமட்டத்தில் நசுக்கப்பட்டுக் கிடக்கும் ஒடுக்கப்பட்ட சமூகப்பிரிவைச் சார்ந்த தூய்மைப் பணியாளர்களை, இன்னும் நசுக்குவதா சமூக நீதி? சென்ற ஆட்சியைப் போலவே, ஆட்சிக்கு வருமுன்பு இவர்களைப் பார்த்து அழுது கண்ணீர் வடிப்பது, வந்தபின்னர் வயிற்றில் ஓங்கி மிதிப்பது என்ற குரூரமான போலித்தனம், சமூக அக்கறையற்ற அதிகாரவர்க்க மனநிலையையே பிரதிபலிக்கிறது.

எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு பதிலளிப்பதைவிட ஆட்சியின் செயல்பாடுகளில் அமைச்சர்கள் கவனம் செலுத்த வேண்டும். தவறான புள்ளிவிவரங்களும் தேவையற்ற அரசியல் மோதல்களும் அரசின் நம்பகத்தன்மையைப் பாதிக்கும்.

புதிய ஆட்சிக்கு அனுபவம் தேவைப்படுவது இயல்பே. ஆனால் 100 நாட்கள் என்பது திசையை மதிப்பிடத் தொடங்கும் காலகட்டம். குதிரை பேரம் போன்ற ஜனநாயகத்தை இழிவுபடுத்தும் அரசியல் நடைமுறைகளுக்கு இடமளிக்காமல், மக்களின் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வெளிப்படையான, சமூகநீதியை முன்னிறுத்தும் ஆட்சியாக தமிழ்நாடு அரசை மாற்றுவதே இப்போது அதன் முன் நிற்கும் மிகப்பெரிய பொறுப்பு.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button