தலையங்கம்

தங்கமோதிரம்: ஒரு பைசா டெண்டர்

ஜனசக்தி தலையங்கம்

தங்கம் ஒரு கிராம் ரூ.10,000-ஐத் தாண்டி விற்கிறது. இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் தாய்மாமன் சீர் திட்டத்திற்கான தங்க மோதிரங்களை வழங்குவதில், ஒரு முன்னணி நகை நிறுவனம் ஒரு மோதிரத்துக்கு ஒரு பைசா மட்டுமே கூடுதல் கட்டணமாக கோரியிருக்கிறது. இது வியப்பை ஏற்படுத்தாமல் இருக்க முடியாது.

தங்கத்தின் அடிப்படை விலையை அரசு செலுத்துகிறது. மோதிரம் தயாரித்தல் உள்ளிட்ட கூடுதல் கட்டணத்துக்குத்தான் ஒரு பைசா எனக் கூறப்பட்டுள்ளது.

ஆனால் இதனால் கேள்வி முடிந்துவிடவில்லை; இங்குதான் கேள்வி தொடங்குகிறது.

ஒரு தனியார் நகை நிறுவனம் தனது தயாரிப்புக்கான செய்கூலி, உற்பத்திச் செலவு, நிர்வாகச் செலவு, விநியோகச் செலவு ஆகியவற்றை ஏறத்தாழ பூஜ்யமாக்கி ஏன் இவ்வளவு பெரிய அரசு ஒப்பந்தத்தை ஏற்க முன்வருகிறது?

“போட்டியில் வெல்ல வேண்டும்” என்பதும் இருக்கலாம். ஆனால் வணிக நிறுவனங்கள் லாபம் குவிப்பதற்குத்தான் போட்டியிடுகின்றன. ஒருவேளை இப்போது நஷ்டம் வந்தாலும், போட்டியாளர்களை வீழ்த்திவிட்டால் எதிர்காலத்தில் பெரும் லாபத்தில் கொழிக்க முடியும் என்றால் மட்டுமே போட்டியில் இறங்குவார்கள். ஐந்து ஆண்டுகளும் மோதிரம் தயாரித்துத் தந்தாலும், இவர்களுக்கு ஒரு ரூபாய் என்பது அதிகரிக்கப்போவதும் இல்லை அல்லது லாபக் கொள்ளையடிக்க இதில் வாய்ப்பும் இல்லை.

அவ்வாறாயின் லாபம் நேரடியாகக் கிடைக்காவிட்டாலும், வேறு பொருளாதாரப் பலன் இருக்க வேண்டும். இந்தத் திட்டத்தின் அளவு சிறியது அல்ல. தமிழ்நாட்டில் ஆண்டுக்கு சுமார் 9 லட்சம் குழந்தைகள் பிறக்கிறார்கள். இதில் அரசு மருத்துவ மனைகளில் பிறப்பவர்கள் 5.7 லட்சம் குழந்தைகள். ஆனால் திட்டத்தில் 4.41 லட்சம் மோதிரங்கள் மட்டுமே செய்யப்போகிறார்கள். மீதி 1.3 லட்சம் குழந்தைகளுக்கு மோதிரம் தராமலிருக்க ஏதேனும் உச்சவரம்பு வரலாம்.

4.41 லட்சம் மோதிரங்கள் என்றால் 441 கிலோவுக்கும் அதிகமான தங்கம். வாங்கவேண்டும். இதை வாங்கி, தயாரித்து, விநியோகிக்கும் ஒப்பந்தம் ஒரு சாதாரண கொள்முதல் ஆர்டர் அல்ல. மிகப்பெரிய அளவிலான வணிகச் செயல்பாடு.

அப்படியானால், ஒரு பைசா என்பது உண்மையான வணிகச் செலவா? அல்லது மிகப்பெரிய ஒப்பந்தத்தைப் பெறுவதற்கான நுழைவுக் கட்டணமா?

இதற்குப் பதில் நிறுவனத்திடம் மட்டும் இல்லை; அரசிடமும் இருக்க வேண்டும்.

ஒவ்வொரு மோதிரத்திலும் குறிப்பிடப்பட்ட எடையும் தூய்மையும் இருப்பதை எவ்வாறு உறுதி செய்கிறார்கள்? இதனைச் செயல்படுத்தும் தனியார் நிறுவனங்களுக்கு உருவாகும் வணிக வாய்ப்பை அரசு வெளிப்படையாகக் கணக்கிட வேண்டும். ஏனெனில் இங்கே செலவாவது கட்சியின் பணமல்ல, அரசின் பணம்; மக்களின் பணம்.

ஒரு மோதிரத்துக்கு செய்கூலி, சேதாரம் ரூ.1000 க்கு மேலாகும். பிஐஎஸ் ஹால் மார்க் முத்திரைக்கு ரூ.45க்கு மேல் செலவாகும். அப்புறம், பேக்கிங், போக்குவரத்து செலவு, காப்பீடு உள்ளது. இவ்வளவு பெரிய செலவை வெறும் ஒரு பைசாவில் எப்படி ஈடுகட்ட முடியும்?

ஒரு டெண்டரில் விலை வழக்கத்துக்கு மாறாக மிகக் குறைவாக இருந்து, அதனால் பணியை தரமாக செய்ய முடியுமா என சந்தேகம் எழுந்தால் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் விரிவான விலைப் பகுப்பாய்வு மற்றும் எழுத்துப்பூர்வ விளக்கத்தைக் கோர அதிகாரிகளுக்கு உரிமை உண்டு என மத்திய நிதி அமைச்சகம் தெளிவாக வழிகாட்டி இருக்கிறது.

மோதிரங்கள் தயாரிப்பதில் 70% ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்துக்கும், 30% கல்யாணி ஜூவல்லர்ஸ் நிறுவனத்துக்கும் டெண்டர் தரப்பட்டுள்ளது. இரண்டுமே ஒரு பைசா டெண்டர். ஒன்றுக்கு 70% மற்றது 30% என்பது ஏன்?

ஜாய் ஆலுகாஸ் நிறுவனத்தின் விளம்பரத் தூதராக, அன்றைய நடிகர் விஜய் விளம்பரப் படங்களில் நடித்திருக்கிறார். புதிய கடைகளைத் திறந்துவைத்துள்ளார். அரசுப் பொறுப்பு தரப்பட்டுள்ள விஷ்ணு ரெட்டி, அர்ச்சனா கல்பாத்தி, ஜெகதீஷ் பழனிச்சாமி உள்ளிட்டோர் பற்றிய நினைவு தவிர்க்க முடியாது எழுகிறது.

எந்த நிறுவனம் மீதும் குற்றம் சுமத்துவது நம் நோக்கம் அல்ல. லாபமே இல்லாமல் மூலதனம் ஒரு போதும் அசையாது என்பதே பொருளாதார விதி. இந்தக் குறைந்த தொகையில் மோதிரத் தயாரிப்பு எவ்வாறு சாத்தியம் என்பதை அரசு வெளிப்படையாக்க வேண்டும்.

மோதிரங்களின் தரம், எடையை சோதனைகளுக்கு உட்படுத்திய பிறகே குழந்தைகளுக்கு அணிவிக்க வேண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button