தலையங்கம்

திருப்புத் துறை அமைச்சர்கள்

ஜனசக்தி தலையங்கம்

நடந்து கொண்டிருக்கும் சட்டப்பேரவை கூட்டத் தொடர், யார் ஆளுங்கட்சி, யார் எதிர்க்கட்சி என்று விளங்கிக் கொள்ள முடியாத விவாதங்களோடு நிறைவடைவது கவலையளிக்கிறது.

எதிர்க்கட்சிகள் எழுப்பும் மக்களது கோரிக்கைகளை கூர்ந்து கவனித்து, அதில் ஆளுங்கட்சிக்கு இசைவான பொருத்தமான விஷயங்களைக் கண்டு தெளிந்து, அவை குறித்து அரசின் நிலையையும் எடுக்கவிருக்கும் நடவடிக்கைகளையும் மக்களிடம் சொல்ல வேண்டும். ஆனால், விவாதத்தின் போக்கைத் திசை திருப்புவதிலேயே அமைச்சர்கள் குறியாக இருக்கிறார்கள்.

“திமுக என்பது ஒரு ஊழல் கட்சி, அவர்கள் ஆட்சியின் போது பெரும் தவறுகள் இழைக்கப்பட்டன” என்பது போன்ற பதிவை செய்வதற்கு இந்த கூட்டத்தொடர் ஆளுங்கட்சிக்கு பயன்பட்டது. அதற்கான பதில்களைச் சொல்வதிலேயே திமுகவின் நேரம் கழிந்தது.

என்ன ஆரவாரங்கள் தம்மைச் சுற்றி நடந்தாலும், அவற்றால் தூண்டப்படாமல், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டு உறுப்பினர்களும், மக்களின் கோரிக்கைகளை எழுப்புவதிலேயே குறியாக இருந்தனர். எந்தப் பயனையும் ஏற்படுத்தாத விவாதங்களை அனுமதிக்கும் அவைத்தலைவரும், துணைத்தலைவரும், இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் பேசும்போது, குறுக்கிட்டு விரைவில் முடிக்குமாறு வலியுறுத்துகிறார்கள்.

மானியக் கோரிக்கைகளை தயாரிப்பதில், அதிகாரிகள் எந்த அக்கறையும் செலுத்தவில்லை என்பதை, அவற்றை மேம்போக்காகப் பார்ப்பவர்கள் கூட புரிந்துகொள்ள முடியும். சென்ற ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட அதே கொள்கைக் குறிப்புகளை அங்கங்கே வெட்டியும் ஒட்டியும், சில புள்ளி விபரங்களை மட்டும் மாற்றியும் புதியவை தயாரிக்கப்பட்டுள்ளன.

புதிய ஆட்சியின் கொள்கைகளை இந்த ஆவணங்கள் ஏந்தியுள்ளனவா என்பதைப் பார்க்கவோ, கண்காணிக்கவோ அமைச்சர்களுக்குக் கவனமும் இல்லை; நேரமும் இல்லை. அதிகாரிகளின் அனுமதிக்காகவும், ஒப்புதலுக்காகவும் அமைச்சர்கள் காத்திருப்பது, ஜனநாயகத்தின் நோக்கங்களைச் சீரழித்துவிடும்.

மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடந்தபின்பு, அந்தத் துறையில் அரசு எடுக்கவிருக்கிற நடவடிக்கைகளை அறிவிப்பதற்குப் பதிலாக, முன்னதாகவே அறிவிப்புக்களை வெளியிடும் புதிய நடைமுறை இந்த கூட்டத்தொடரில் கொண்டு வரப்பட்டது.

என்ன வேண்டுமானாலும் பேசிக்கொள்ளுங்கள், எங்கள் அரசின் முடிவு ஏற்கனவே அதிகாரிகளால் எடுக்கப்பட்டுவிட்டது என்பதைத் தவிர, அதற்கு வேறு என்ன பொருள்?

உதாரணமாக, தொழிலாளர் துறை மானியக் கோரிக்கையில், 15 அறிவிப்புகளை ‘அரசு’ வெளியிட்டுள்ளது.

இந்தியாவிலேயே அதிகத் தொழிற்சாலைகளையும், அதிகத் தொழிலாளர்களையும் கொண்ட மாநிலம் தமிழ்நாடு. அதிக உற்பத்தி எடுப்பதில் மகாராஷ்டிராவுக்கு அடுத்த இடத்தில் இருப்பது தமிழ்நாடு. ஆனால் இந்த 15 அறிவிப்புகளில் இந்தத் தொழிலாளர்கள் பற்றி ஒரு அறிவிப்பு கூட இல்லை.

கட்டுமானத் தொழிலாளர்கள் குறித்து அறிவிப்புகள் உள்ளன. ஆனால் இதுவரை சுமார் 8,400 கோடி ரூபாய் நல வரியாக வசூலிக்கப்பட்டு, அதில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு 2 ஆயிரம் கோடி நிதிப் பலன் வழங்கப்பட்டது. இப்போது 5 ஆயிரம் கோடி இருப்பில் உள்ளது. அவர்களுக்கு நிதிப் பலனை உயர்த்தித் தர வேண்டும் என போராடி வருகின்றனர். ஆனால் ஒரு ரூபாய் கூட உயர்த்தித் தரப்படவில்லை.

மாறாக திறன் மேம்பாட்டுப் பயிற்சி என்ற பெயரில், தனியார் பயிற்சி நிறுவனங்களை ஈடுபடுத்தி, எந்தப் பயிற்சியும் தராமல் கோடிக்கணக்கான ரூபாய்களைக் கொள்ளையடிக்க வழி திறக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர் அமைச்சர் பதவியேற்று 3 மாதங்கள் கடந்த பின்னரும், ஒருமுறை கூட தொழிற்சங்கத் தலைவர்களை இன்னும் சந்திக்கவில்லை என்று, க.மாரிமுத்து சுட்டிக்காட்டினார். விரைவில் சந்திக்கிறேன் என்று சொல்வதற்குக் கூட தொழிலாளர் அமைச்சருக்கு வாய் வரவில்லை.

ஒப்பந்தத் தொழிலாளர்களை, அவுட்சோர்ஸ் தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்வோம் என த.வெ.க தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. அது பற்றி ஒரு வார்த்தை பேசவில்லை.

தொழிலாளர் உரிமைகளைப் பறிக்கும் வகையில், ஒன்றிய அரசு வகுத்துள்ள நான்கு தொழிலாளர் சட்டத்தொகுப்புகளுக்கு, தி.மு.க. அரசு விதிகளை அறிவிக்காமல் நிறுத்தி வைத்தது.

இப்போது நான்கு சட்டத்தொகுப்புகளும் அமலாக்கப்படுவதாக ஒன்றிய அரசு அறிவித்து விட்டது. அந்தச் சட்டங்களை அமல் நடத்தமாட்டோம் என்று அறிவிக்குமாறு தொழிலாளர்கள் போராடுகின்றனர். ஆனால் கொள்கை விளக்கக் குறிப்பில், ஒன்றிய, மாநிலச் சட்டங்களை தொழிலாளர் துறை அமல் நடத்தி வருவதாகப் பொத்தாம் பொதுவாகச் சொல்லப்பட்டுள்ளது.

மீனுக்குத் தலையும், பாம்புக்கு வாலும் காட்டும் வித்தையில் அதிகாரிகள் கை தேர்ந்தவர்கள். அரசின் கொள்கையை அதிகாரிகள் நிர்ணயிக்கிறார்கள் என்றால், அது ஆபத்தின் அறிகுறி. அவ்வளவுதான் சொல்ல முடியும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button