அறிக்கைகள்

பாதாள சாக்கடைத் திட்டங்களை தனியாரிடம் ஒப்படைக்காதே!

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டிப்பு

மதுரை, நாகர்கோவில் பாதாள சாக்கடை திட்டங்களை தனியாரிடம் ஒப்படைப்பதை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது குறித்து, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

மதுரை மற்றும் நாகர்கோவில் மாநகராட்சிகளில் செயல்படுத்தப்பட உள்ள பாதாள சாக்கடைத் திட்டங்களை பொது- தனியார் கூட்டு என்ற அடிப்படையில் செயல்படுத்துவதற்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

இத்திட்டங்களுக்கான தனியார் நிறுவனத்தை தேர்வு செய்ய, தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதிச் சேவைகள் நிறுவனம் (TNUIFSL) ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “மதுரை மற்றும் நாகர்கோவில் மாநகராட்சிகளில் பாதாள சாக்கடைத் திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கைகள் (DPR) ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளன. தற்போது இந்தத் திட்டங்களை அரசு–-தனியார் கூட்டு முறையில் (பிபிபி மாடல் ) செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து, அதற்கான திட்ட அறிக்கை மற்றும் ஒப்பந்த ஆவணங்களை தயாரிக்க ஆலோசகர் நியமிக்கப்பட உள்ளனர். தேர்வு செய்யப்படும் ஆலோசனை நிறுவனம், இரு மாநகராட்சிகளின் பாதாள சாக்கடை திட்டங்களையும் ஆய்வு செய்யும்” எனக் கூறப்பட்டுள்ளது.

மதுரை மாநகராட்சியில் ஏற்கனவே உள்ள பாதாள சாக்கடை மற்றும் கழிவுநீர் அமைப்புகளை மேம்படுத்துதல், புதிதாக மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளில் கழிவுநீர் சேகரிப்பு அமைப்புகளை ஏற்படுத்துதல், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளிட்ட பணிகள் இத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளன. இந்த திட்டத்தின் மதிப்பு ரூ2,377.48 கோடி என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இத்திட்டத்தின் மூலம், நாகர்கோவில் மாநகராட்சியில் பாதாள சாக்கடை வசதி இல்லாத பகுதிகளில் புதிய கழிவுநீர் சேகரிப்பு அமைப்புகளை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதில் சுமார் 111 கி.மீ. நீளத்துக்கு கழிவுநீர் குழாய்கள், வீட்டு கழிவுநீர் இணைப்புகள், சுமார் 19.93 கி.மீ. நீளத்துக்கு கழிவுநீர் உந்துக் குழாய்கள் மற்றும் தேவையான உந்துநிலையங்கள் உள்ளிட்ட பணிகள் இடம்பெறுகின்றன. இந்தத் திட்டத்தின் மதிப்பு சுமார் ரூ.189.82 கோடி என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசு மற்றும் உலக வங்கியின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து, தவெக அரசும், குடிநீர் வழங்கல், கழிவுநீர் அகற்றுதல், மருத்துவம் கல்வி, சாலைகள் அமைப்பது, மின்சாரம் உற்பத்தி, விநியோகம் போன்ற சேவைத்துறைகளில் தனியாரை, பொது-தனியார் கூட்டு என்ற பெயரில் அனுமதிப்பது மக்கள் நலன்களுக்கு எதிரானதாகும். மதுரை மற்றும் நாகர்கோவில் பாதாள சாக்கடைத் திட்டங்களை முழுமையாக தனியாரிடம் ஒப்படைக்க முயற்சிகள் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது. இத்தகைய தனியார்மயமாக்கல் தனியார் நிறுவனங்களின் லாபத்தை அதிகரிக்கவே உதவிடும். தனியார்மயமாக்கல் மக்களின் பொது சுகாதாரத்தை அலட்சியப்படுத்தும் செயலாகும்.

எனவே, மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு நாகர்கோவில் மற்றும் மதுரை பாதாள சாக்கடைத் திட்டத்தை தனியாரிடம் வழங்குவதை தமிழ்நாடு அரசு முழுமையாகக் கைவிட வேண்டும் என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button