அம்பானி, அதானி, பிர்லா, ஜிந்தால், டாட்டா ஐந்து குடும்பங்கள் கையில் இந்தியா!
டி.எம்.மூர்த்தி

இந்தியாவின் மொத்த வருவாயில் 60 சதத்துக்கும் அதிகமான வருவாய், ஐந்து முதலாளிகளின் குடும்ப நிறுவனங்களிடம் போய்ச் சேந்துள்ளதாக உலக வங்கியின் பொருளாதார ஆய்வு தெரிவிக்கிறது. இது World Bank Economic Review இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
புதிய பொருளாதாரக் கொள்கை நரசிம்மராவ் ஆட்சியின்போது 1991 ல் கொண்டுவரப்பட்டது. தொழில் நடத்துவதற்கு அரசு விதித்த கட்டுப்பாடுகள், ஒழுங்குபடுத்தும் நடைமுறைகள் அனைத்தையும் அகற்றுவது, தொழிலாளர் உரிமைகள் எல்லாவற்றையும் பறித்து அவர்களைத் தினக்கூலிகளாக மாற்றி, முதலாளியின் விருப்பம் போல வேலை தரலாம், மறுக்கலாம், சம்பளம் தரலாம், தராமலும் இருக்கலாம் என்ற நிலையை உருவாக்குதல், பொதுத்துறை நிறுவனங்களை தரை மட்ட விலைக்கு தனியார் முதலாளிகளிடம் கொடுத்துவிடுதல், ஏற்றுமதி இறக்குமதி விதிகள் அனைத்தையும் நீக்கிவிடுதல், வெளிநாட்டு முதலீடுகள், பெரும் கார்ப்பரேட் மூலதனம் நாட்டின் சொந்த நிறுவனங்களை அழிக்க வழிவகுத்தல் உள்ளிட்ட தாராளமயம், தனியார்மயம், உலகமயம் ஆகியவற்றின் தொகுப்பே இந்தப் புதிய பொருளாதாரக் கொள்கை ஆகும்.
இது அறிமுகப்படுத்தப்பட்ட போது, முக்கிய தொழில்கள் அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் இருப்பதால், சந்தையில் போட்டியாளர்களே இல்லை. தொழிலில் போட்டி இருந்தால் தான் ஒன்றை ஒன்று மிஞ்சும் வகையில் உற்பத்திப் பொருட்களின் தரம் உயரும். நிறைய நிறுவனங்கள் உற்பத்திப் பொருட்களைச் சந்தைக்குக் கொண்டு வந்தால், நுகர்வோருக்கு விலை குறையும். இதற்காக தொழில் நடத்தும் தனியார்களை ஊக்குவிக்க, பெரும் பணம்படைத்தவர்களுக்கு சலுகைகள் தந்தால், அவர்களுக்குக் கிடைக்கும் நலன்கள் யாவும் சொட்டுச் சொட்டாகக் கீழிறங்கி, அடிமட்ட மக்களுக்கும் வளம் ஏற்படும் என்று தான் சொன்னார்கள். 25 ஆண்டுகளில் இந்தியா முன்னேறிய நாடுகளில் ஒன்றாக உயர்ந்து விடும் என்றார்கள்.

2014ல் மோடி பிரதமரான பின்பு, அந்த தாராள, தனியார்மயத்தின் வழியில் இந்தியா படுவேகமாக இழுத்துச் செல்லப்படுகிறது. பொதுத்துறை நிறுவனம் ஒன்றுகூட உருவாக்கப்படவில்லை. ஆனால் 200 பொதுத்துறை நிறுவனங்கள் தனியாரிடம் தரப்பட்டுள்ளன.
தாராளமயமாக்கலுக்குப் பிறகு சந்தைகளில் போட்டி வந்தது. உதாரணமாக, தொலைபேசித் துறையில் ஏர்செல், டொகோமோ, யூனினார், வோடஃபோன் போன்ற 12 நிறுவனங்கள் வந்தன. அரசின் பிஎஸ்என்எல் வேண்டுமென்றே இன்றும் கூட 5ஜி தரப்படாமல் அரசாங்கத்தாலேயே ஓரம் கட்டப்பட்டது. நிறைய நிறுவனங்கள் வந்ததால் கட்டணம் குறைந்தது என்பதையும் மறுப்பதற்கில்லை.
ஆனால் அம்பானியின் ஜியோ, கட்டணமின்றி இலவசமாகவே சேவை வழங்கியது. அதன் முன் நிற்க முடியாமல் படிப்படியாக பல நிறுவனங்கள் தவித்தன. இப்போது அம்பானியின் “ஜியோ”, பாரதி மிட்டலின் “ஏர்டெல்” ஆகியவை மட்டுமே உள்ளன. மற்றவை விழுங்கப்பட்டுவிட்டன. அவற்றின் கட்டணம் உயர்த்தப்பட்டுக்கொண்டே உள்ளது. போட்டிக்கு ஆளே இல்லை. பல தொழில்களை இவ்வாறு பட்டியலிடலாம்.
2001 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் அம்பானி, அதானி, பிர்லா, ஓம் பிரகாஷ் ஜிண்டால், டாட்டா ஆகிய ஐந்து தொழில் குழுமங்களும் சேர்ந்து இந்தியச் சந்தையில் பெரும் ஆதிக்கம் செலுத்துகின்றன. இதற்கு மோடி அரசு பக்க பலமாக இருக்கிறது. இதன் விளைவாக இந்தியாவின் மொத்த தொழில் வருவாயில் 60 சதவீதத்துக்கும் அதிகமான பங்கை இந்த ஐந்து குடும்பங்களும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விட்டன.
இதுதான் தாராளமயத்தின் உண்மையான முகம். “போட்டி வந்தால் விலை குறையும்; செல்வம் கீழ்மட்ட மக்களிடம் சொட்டும்” என்ற வாக்குறுதியுடன் தொடங்கிய பயணம், இன்று போட்டியையே அழித்து, செல்வத்தையும் சந்தையையும் ஒரு சில பெரும் குடும்பங்களின் கைகளில் குவித்திருக்கிறது.
எனவே பிரச்சினை தனிப்பட்ட சில முதலாளிகளின் வளர்ச்சி அல்ல; பொதுத்துறையைப் பாதுகாத்து, அரசின் கட்டுப்பாட்டை வலுப்படுத்தி, தொழிலாளர்கள்–விவசாயிகள்–நடுத்தர மக்களின் நலனை முன்னிறுத்தும் மாற்றுப் பொருளாதாரப் பாதையை உருவாக்க வேண்டிய அவசியமே இன்று நம் முன்னுள்ள முக்கியக் கேள்வியாகும்.