தலையங்கம்

‘ஜெம்’ வீரமணி வழக்கின் அரசியல் கேள்வி

ஜனசக்தி தலையங்கம்

இந்த இடைத்தேர்தல் பல போலி முகங்களைத் தோலுரித்துக்காட்டியுள்ளது. கம்யூனிஸ்டுகள் ஏன் எப்போதும் கூட்டணியில் சேர்ந்து நிற்கிறார்கள். தனித்து நிற்க வேண்டும் என்று பேசிய சில வாய்கள், இப்போது திட்டித் தீர்க்கின்றன.

தவெக ஆட்சி அமைக்க ஆதரவு அளித்துக்கொண்டே, தனியாகப் போட்டியிடலாமா என்ற கேள்வி ஒருபுறம். அடுத்து, கம்யூனிஸ்டுகளின் நேர்மை, மக்கள் நலனுக்கான தன்னலத்தை தூர வைக்கும் வாழ்க்கைமுறை, போராட்ட மனப்பான்மை உள்ளிட்ட நற்பண்புகளைக் குறிவைத்துத் தாக்குதல் தொடுப்பது மறுபுறம்.

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ‘ஜெம்’ வீரமணி மீதான போக்சோ வழக்கை கம்யூனிஸ்டுகள் கண்டிக்கவில்லை என்று ஆரம்பித்து தனி நபர் தாக்குதல்களைக் கட்டவிழ்க்கிறார்கள்.

ஆனால், வழக்கு நடந்த பாதையைப் பார்த்தால் இந்தக் கேள்விக்குப் பின்னால் உள்ள அரசியல் நோக்கம் தெளிவாகிறது.

சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றத்தில் ஈடுபட்டவர் யாராக இருந்தாலும், அவர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதில் கம்யூனிஸ்டுகளுக்கு எந்த இரட்டை நிலைப்பாடும் இல்லை. குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை அவர் யாராக இருந்தாலும் கம்யூனிஸ்டுகள் காப்பாற்றியதில்லை.

சொந்தக் கட்சியிலேயே பாலியல் குற்றங்களைச் செய்தவர்கள் மீது, காவல்துறையில் கட்சியே புகார் கொடுத்து, நடவடிக்கை எடுக்கவைத்த பெருமிதமிக்க வரலாற்றைக் கொண்டது.

2025 அக்டோபர் 6 அன்று ஒரு குழந்தைகள் உரிமை ஆர்வலர் காவல்துறையிடம் பென் டிரைவ் ஒன்றை அளித்து புகார் தெரிவித்ததாகப் பதிவுகள் கூறுகின்றன. அதற்கு மறுநாளே போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

ஆனால், அந்த நேரத்தில் இந்த விவகாரம் இன்றுள்ள அளவுக்கு பொதுவெளியில் பெரும் அரசியல் செய்தியாக மாறவில்லை. வழக்கு விசாரணையில் இருந்தது.

காவல்துறை, வீடியோவில் இருந்த சிறுமியை அடையாளம் காண முடியவில்லை, போதுமான ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்று கூறி, 2026 பிப்ரவரி 18 அன்று மேல்நடவடிக்கையை கைவிடும் அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறது.

ஆனால், நீதிமன்றம் அதை ஏற்கவில்லை என்பதுதான் இந்த வழக்கின் மிக முக்கியமான கட்டம். நீதிமன்றப் பதிவின்படி, 2026 ஜூன் 19 அன்று “Final Report not accept. Further Investigation is ordered” என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்பிறகுதான், புதிய ஆதாரங்கள், சிறுமியை அடையாளம் காணும் முயற்சி, புதிய சாட்சிகள், சோதனைகள் என வழக்கு புதிய திருப்பத்தைப் பெற்றுள்ளது. இறுதியில் வீரமணி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2026 செப்டம்பர் மாதத்தில்தான் இந்த வழக்கு தமிழ்நாட்டின் அரசியல் விவாதத்தின் மையத்துக்கு வருகிறது. கம்யூனிஸ்டுகள் எந்த நிலையிலும் குற்றச்சாட்டுக்குள்ளான வீரமணியை ஆதரித்ததில்லை.

வழக்கு ஏன் பிப்ரவரி 2026-ல் முடித்து வைக்கப்படும் நிலைக்குச் சென்றது? நீதிமன்றம் மறுத்ததற்குப் பின்பு காவல்துறை எப்படி புதிய தகவல்களை ஒன்றன்பின் ஒன்றாக வெளிக்கொண்டு வந்தது? இந்த விசாரணையை நடத்தவிடாமல் தடுத்த சக்தி எது?

இந்தக் கேள்விகளை பின்தள்ளிவிட்டு பாலியல் குற்றச்சாட்டு போன்ற மிகக் கடுமையான ஒரு வழக்கைத் தேர்தல் பிரச்சார ஆயுதமாக மாற்றி, “கம்யூனிஸ்டுகள் கண்டித்தார்களா?” என்று கேட்பது, இழைக்கப்பட்ட கொடுமைகளை மக்களிடம் விளக்குவதற்குப் பதிலாக அரசியல் கவனத்தை வேறு திசைக்குத் திருப்பும் முயற்சியே ஆகும்.

ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரை நீதிமன்றம்தான் குற்றவாளி என்று இறுதியாகத் தீர்மானிக்கிறது. அதேபோல், ஒரு அரசியல் கட்சி குற்றவாளியை ஆதரித்ததா, இல்லையா என்பதையும் ஆதாரத்துடன்தான் பேச வேண்டும். “அவர்கள் கண்டிக்கவில்லை” என்ற அரசியல் முழக்கம் மட்டும் அதற்கான ஆதாரமாகிவிடாது.

குற்றம் சாட்டப்பட்டவர் தொழிலதிபராக இருந்தாலும் சரி, அரசியல்வாதியாக இருந்தாலும் சரி, அதிகாரம் படைத்தவராக இருந்தாலும் சரி, சட்டத்தின் முன்பு அனைவரும் சமம்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனை; குற்றச்சாட்டு என்றால் நேர்மையான விசாரணை; பாதிக்கப்பட்டவருக்கு நீதி; இதுதான் ஜனநாயகத்தின் அடிப்படை.

அந்த அடிப்படையில்தான் வீரமணி வழக்கிலும் முழுமையான, பாரபட்சமற்ற விசாரணை நடைபெற வேண்டும். குற்றத்தில் தொடர்புடையவர் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். இதனைத் தடுத்து நிறுத்தியவர்கள் யார் என்று அடையாளம் கண்டு அவர்களும் தண்டிக்கப்பட வேண்டும்.

இப்போது மக்களுக்குத் தேவையானது அரசியல் அவதூறு அல்ல. உண்மையான, முழுமையான விசாரணை. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படுவதுதான் இந்த வழக்கின் உண்மையான அரசியல் கேள்வி.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button