கட்டுரைகள்

ஆர்.டி.ஐ. விலக்கு அரசாணை 6 நாட்களில் ரத்து: தமிழ்நாட்டில் நடப்பது அதிகாரிகள் ஆட்சியா?

வ.மணிமாறன்

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வரம்பிலிருந்து பொது சட்டம் – ஒழுங்குத் துறையை விலக்கி வெளியிட்ட அரசாணைக்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால், தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப் பெற்றது. இதுபோன்ற நிகழ்வுகள் அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படுகிறார்களா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

அரசின் பல்​வேறு துறை​களின் செயல்​பாடு​கள் குறித்து, தகவல் அறி​யும் உரிமைச் சட்​டம் (ஆர்​டிஐ) மூலம் பொதுமக்கள் தகவல்​களை பெற்று வருகின்றனர். இதிலிருந்து சட்​டம் – ஒழுங்குத் துறைக்கும் விலக்கு அளித்து, தமிழ்நாடு அரசின் மனிதவள மேலாண்மைத் துறை செப்டம்பர் 21 அன்று அரசாணை வெளியிட்டுள்ளது.

மனிதவள மேலாண்​மைத்துறை செய​லா​ளர் சி.சமயமூர்த்தி வெளி​யிட்ட அந்த அரசாணை​யில், “சாதி, மத மோதல்கள், அவை தொடர்பான விசாரணை ஆணையங்கள், அவற்றின் பரிந்துரைகள் மீதான நடவடிக்கைகள், காபிபோசா மற்றும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழான தடுப்புக்காவல், ஆட்கொணர்வு மனுக்கள்” ஆகியவையும் “காவல்துறை துப்பாக்கிச்சூடு, காவல் நிலைய மரணங்கள், காவல் சித்ரவதை, ரிமாண்ட் கைதிகள் மரணம் குறித்த விசாரணைகள், தேசிய மனித உரிமைகள் ஆணையம் தொடர்பான விவகாரங்கள், மாணவர்கள், விவசாயத் தொழிலாளர்கள், அரசியல் கட்சிகளின் போராட்டங்கள் தொடர்பான கோப்புகள்” ஆகியவையும் இத்துறையால் கையாளப்படுகின்றன.

“இதனைப் பாது​காக்​கும் நோக்​கில் சட்​டப்​பிரிவு 24(4)-ன் கீழ் ஆளுநரின் ஒப்​புதலுடன், தகவல் அறி​யும் உரிமைச் சட்​டத்தில் (ஆர்​டிஐ) இருந்து சட்​டம் – ஒழுங்குத் துறை தொடர்​பான தகவல்​களை பெறு​வ​தில் கட்​டுப்​பாடு விதிக்​கப்​படு​கிறது.” அதாவது உளவு மற்​றும் பாது​காப்புப் பணி​களில் ஈடு​படும் அமைப்​பாக அறி​வித்து இந்த விலக்கு அளிக்​கப்​படுகிறது என்று தெரிவிக்​கப்​பட்​டிருந்​தது.

இந்த அரசாணை செப்டம்பர் 21 அன்று வெளியாகி இருந்தாலும், செப்டம்பர் 27 அன்று தான் வெளியுலகிற்குத் தெரியவந்தது. உடனே கடும் எதிர்ப்பு எழுந்தது. அரசின் கூட்டணிக் கட்சிகள், எதிர்க்கட்சிகள், உரிமைக்கான அமைப்புகள் என பல்வேறு தரப்பும் அரசாணைக்கு எதிர்ப்புத் தெரிவித்தன. இந்த அரசாணை அப்பட்டமான மனித உரிமை மீறல்களுக்கும், எதேச்சதிகார போக்கிற்குமே வழி வகுக்கும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்தது.

இதனையடுத்து, செப்டம்பர் 21 அறிவிக்கை ரத்து செய்யப்படுவதாக மனிதவள மேலாண்மைத்துறை புதிய அரசாணை வெளியிட்டது. இதன் மூலம் பொது (சட்டம் மற்றும் ஒழுங்கு) துறை மீண்டும் ஆர்டிஐ சட்டத்தின் முழு வரம்புக்குள் வந்துள்ளது. அரசாணை வெளியுலகிற்குத் தெரியவந்து ஒரு சில மணி நேரங்களில் தமிழ்நாடு அரசு அதனைத் திரும்பப் பெற்றது.

இதேபோன்று ஏற்கனவே பல நிகழ்வுகள் நடந்துள்ளன. திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை தாலுகாவில் உள்ள அனைத்து வருவாய் கிராமங்களிலும் கம்யூனிஸ்ட் கட்சியினர் குறித்த விவரங்களை சேகரித்து அனுப்புமாறு வட்டாட்சியர் அய்யாசாமி சுற்றறிக்கை அனுப்பினார். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து, குஜிலியம்பாறை வட்டாட்சியரால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை திரும்பப் பெறுவதாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவித்தார். குஜிலியம்பாறை வட்டாட்சியர் அய்யாச்சாமி பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

கம்யூனிஸ்ட்டுகள் மற்றும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் (CJP) நடத்தும் போராட்டங்களில் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் கலந்கொள்வதைத் தடுக்க வேண்டும், கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்களை கணக்கெடுக்க வேண்டும் என தலைமைச் செயலாளர் சாய்குமார் அறிவுறுத்தலின்படி உயர்கல்வித் துறை மூலம் சுற்றறிக்கை அனுப்பியது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தவுடன், அந்தச் சுற்றறிக்கை திரும்பப்பெறப்பட்டது.

இப்படி அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் அரசாணைகள் அடுத்தடுத்து வெளியாகி உள்ளன. இவை அனைத்தும் யாருடைய ஒப்புதலுடன் தயாரிக்கப்பட்டது? முதலமைச்சர் மற்றும் துறை அமைச்சர்களின் ஒப்புதல் பெற்று தான் வெளியிடப்படுகிறதா? இல்லை, அதிகாரிகளின் ஆட்சி நடக்கிறதா? என்ற கேள்வி மக்களிடம் எழுந்துள்ளது. இதற்கு முதலமைச்சர் விளக்கம் அளிப்பாரா?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button