
சென்ற சட்டப் பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிட்டாத நிலையில், திமுக வெளியில் இருந்து ஆதரவு தர அதிமுக ஆட்சி அமைக்கலாம் என்றொரு ஆலோசனை வைக்கப்பட்டது.
தமிழ்நாடு – எதிர் – டெல்லி என்ற முழக்கத்தை வைத்து, மதவாத பிஜேபிக்கு எதிராக சட்டப்பேரவை தேர்தலைச் சந்தித்த பிறகு, பாஜக – அதிமுக கூட்டணியின் தமிழ்நாட்டுத் தலைவரையே முதல்வராக்கலாம் என்ற ஆலோசனை அதிர்ச்சி அளித்தது.
அறுதிப் பெரும்பான்மை பெறவில்லை என்றாலும், தனிப்பெரும் கட்சியாக அதிகத் தொகுதிகளை வென்ற தவெகவை ஆளுநர் அழைக்க மறுத்துவிட்டார். 118 உறுப்பினர் எண்ணிக்கையை முன்கூட்டியே நிரூபித்தால் தான் அழைக்க முடியும் என்று பிடிவாதம் செய்தார்.
பாஜகவின் விருப்பங்களை நிறைவேற்றும் அரசியல் கருவியாக ஆளுநர் பதவி மாற்றப்பட்டு பல்லாண்டுகளாகி விட்டன. எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை என்று, குடியரசுத் தலைவர் ஆட்சியைத் திணித்து பாஜக கையில் ஆட்சி அதிகாரத்தை எடுக்கும் அபாயம் ஏற்பட்டது. எனவே, அதைத் தடுப்பதற்காக ஆளுநரிடம் ஆதரவுக் கடிதம் கொடுப்பது என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்ஸிஸ்ட் கட்சி ஆகியவை முடிவு செய்தன. விசிக, ஐயூஎம்எல் ஆகியவை மறுநாள் அந்த முடிவுக்கு வந்தன.
தோழமைக் கட்சிகளிடம் சொல்லப்பட்ட தனது ஆலோசனையை வெளியில் தெரிவிக்காமல் ஒளித்துக் கொண்டு, திமுகவின் உயர் பதவியில் உள்ளோர், தோழமைக் கட்சிகள் மீது தரம் தாழ்ந்த இழிவான விமர்சனங்களைப் பொழிந்தனர். தவெக காங்கிரஸோடு சேர்ந்து ஆட்சிப் பொறுப்பேற்றது. சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கும் நேரத்தில்தான் அஇஅதிமுக விலிருந்து 25 எம்எல்ஏக்கள் பிரிந்து தவெக வுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
கட்சித்தாவல் தடைச் சட்டத்திலிருந்து தப்பிக்கத் தேவையான அளவுக்கு அஇஅதிமுக எம்எல்ஏக்களை இழுக்க தவெகவால் முடியவில்லை. இதனால் சில எம்எல்ஏக்களை மட்டும் பதவி விலக வைத்து, அந்தக் காலியிடங்களில் மீண்டும் அதே எம்எல்ஏ களை தவெக வேட்பாளராக நிறுத்தி வெற்றி பெற வைத்து தனக்கு பெரும்பான்மையை உருவாக்கிக் கொள்ள ஆளும் கட்சி முனைகிறது. அதில் குதிரை பேரம் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
தற்போது நடைபெறும் தாராபுரம், மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல்களில், பதவி விலகிய அதே எம்எல்ஏக்களை தனது வேட்பாளராக தவெக நிறுத்தி இருப்பது அந்த குற்றச்சாட்டை உண்மையாக்குகிறது. பாஜக அறுதிப் பெரும்பான்மை பெற முடியாத மாநிலங்களில், இதே வழியில் தான் மற்ற கட்சி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கியது.
விசிக, ஐயூஎம்எல் ஆகியவையும் அமைச்சரவையில் சேர்ந்தன. இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் அமைச்சர் பதவியை ஏற்க மறுத்து, வெளியிலிருந்து ஆதரவு என்ற நிலையில் உறுதியாய் இருந்தன. எந்தக் கூட்டணியிலும் தாம் அங்கம் வகிக்கவில்லை என்று அறிவித்தன.
100 நாட்கள் தாண்டிய ஆட்சியில், பாஜக பெயரைச் சொல்லவே ஆட்சியாளர்கள் அஞ்சுகிறார்கள். நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை செயல்படுத்தப் போகிறார்கள். விவசாயிகள், மாணவர்கள், மீனவர்கள், பெண்கள் ஆட்சியின் கொள்கைகளை எதிர்த்துப் போராடுகிறார்கள். அவர்கள் மீது காவல்துறை கடுமையான அடக்குமுறைகளைப் பிரயோகிக்கிறது. மக்களோடு சேர்ந்து கம்யூனிஸ்ட் கட்சிகளும் போராடுகின்றன. ஆட்சிக்கு ஆதரவு தந்து விட்டு போராடுவது இரட்டை நிலைப்பாடு என்று குற்றம் சாட்டுவது அரசியல் முதிர்ச்சியின்மையின் அடையாளம்.
கம்யூனிஸ்டுகளை கணக்கெடுப்பதற்கும், மாணவர்களுக்கு இடதுசாரிகளைச் சார்ந்து போராடும் எண்ணம்கூட வந்துவிடாமல் தடுப்பதற்கும் அரசின் தலைமைச் செயலாளரே உத்தரவிடுகிறார். உயர் அதிகாரிகளைக் கொண்ட அரசு எந்திரத்தை மீறி, அரசியல் முடிவுகளை மேற்கொள்ளும் திறன் இந்த அமைச்சரவைக்கு இதுவரை வரவில்லை.
சாதாரண மக்களின் நலன்களை மறுக்கும் திசை வழியில் அரசு சென்றால், அதனை ஆட்சேபிப்பதற்கும் போராடுவதற்கும் எல்லோருக்கும் உரிமை உண்டு. பாஜகவின் கரம் தமிழ்நாட்டுக்குள் விளையாடக்கூடாது என்று தான் ஆட்சி அமைக்க ஆதரவே தவிர, அதன் கொள்கைகளை வேறொரு கட்சி அமல்நடத்துவதை வேடிக்கை பார்ப்பதற்காக அல்ல.
மக்களின் நலன் காப்பதற்காக, மெய்யான மாற்றாட்சி காண்பதற்கு ஒருங்கிணைந்து போராட, இடதுசாரி கட்சிகளின் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. “தமிழ்நாடு இனி இடது பக்கம்” என்ற முழக்கம் வைக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேர்தலில் தமது நிலையை வலியுறுத்தி, தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதான இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் முடிவு செய்து வேட்பாளர்களை நிறுத்தி இருக்கின்றன. இவர்கள் வெற்றி பெற, அனைத்து வகை ஆதரவையும் வழங்குமாறு தமிழ்நாட்டின் முற்போக்கு ஜனநாயக சக்திகளை வேண்டுகிறோம்.