கட்டுரைகள்

அமைச்சர்களுக்கு விளக்கம் தேவையாம்

த.இந்திரஜித்

கம்யூனிஸ்ட்டுகள் தமிழகத்தை இடதுபக்கம் திருப்புவோம் என்று முடிவு செய்து, இடது முன்னணி அமைப்பதற்கான முன்னோட்டமாக ஒருங்கிணைப்பு குழு அமைத்து, எந்த அணியுடனும் கூட்டணியில்லை இடது முன்னணி தனித்த அணி.

இந்த அணி போராட்ட அணியாக செயல்படும். தேர்தல் வரும் போது ஒத்தக் கருத்துடைய ஜனநாயக சக்திகளுடன் தொகுதிவுடன்பாடு பற்றி யோசிப்போம் என்று செயல்பட ஆரம்பித்தவுடன் விமர்சிக்கத் தொடங்கிவிட்டனர்.

கொல்லைப்புற வழியாக தமிழகத்தில் பாஜக ஆட்சியதிகாரத்திற்கு வந்து விடக்கூடாது என்பதற்காக மக்கள் ஜனநாயகத்தை மதித்து த.வெ.க ஆட்சியமைக்க வெளியிலிருந்து ஆதரவு என்கிற நிலைப்பாட்டை கம்யூனிஸ்ட்டுகள் எடுத்தோம்.

இதைத் தெள்ளத் தெளிவாக சொன்னதற்குப் பிறகும் த.வெ.க வுடன் கம்யூனிஸ்ட்டுகள் கூட்டணி என்று அபத்தமாகப் புரிந்துகொண்டு வியாக்கியானம் செய்கிறார்கள் சிலர்.

தி.மு.க.வில் ஆ.ராஜா தொடங்கி அள்ளு சில்லுகள் வரை அப்படியே தலைகீழாக மாறி “சோபா கம்யூனிஸ்ட்டுகள்” என்ற அடைமொழியோடு திட்டுகிறார்கள். என்னமோ, தி.மு.க.காரனுக்கு வாக்கப்பட்டு இப்போது விவாகரத்து வாங்கிட்ட மாதிரி பேசுகிறார்கள்.

“இடைத்தேர்தல்” யாரும் செத்துப் போகாமலேயே தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறது.

காரணம் யார் என்று சாவித்திரி கண்ணன், பத்திரிக்கையாளர் மணி போன்றவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

எந்த ஜனநாயக மாண்பை காப்பாற்ற த.வெ.க அரசு அமைக்க ஆதரவு தந்தோமோ, அதே காரணம்தான் இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட்டுகள் போட்டியிட முக்கிய காரணம்.

தமிழக வெற்றிக் கழகம் தாராபுரம், மதுராந்தகம் தொகுதி மக்களுக்கு செய்தது துரோகம் இல்லையா? ஜனநாயக படுகொலை இல்லையா?

அதிமுக வேட்பாளராக நின்ற இரண்டு பேரையும் – வெற்றி பெற்றபின் ராஜினாமா செய்ய வைத்து தங்கள் கட்சியில் சேர்த்துக்கொண்டு, மீண்டும் த.வெ.க. வேட்பாளராக நிறுத்தியிருக்கிறது, அந்த மக்களை என்னவென்று நினைத்தார்கள்?

அதுமட்டுமா அந்த தொகுதியில் ஏற்கனவே நிறுத்தப்பட்ட ஒரிஜினல் த.வெ.க வேட்பாளர்கள், கடந்த தேர்தலில் தோற்ற நிலையில் அவர்களை நிறுத்தாமல் கட்சி தாவி வந்தவர்களை நிறுத்தியது த.வெ.க.

– இது தொண்டனுக்கும் செய்த துரோகம்தானே!

இதையெல்லாம் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டுமாம் – பத்திரிக்கையாளர் மணி நியாயம் பேசுகிறார்.

த.வெ.க விற்கு தனி மெஜாரிட்டி கிடைப்பதை இடதுசாரிகள் விரும்பவில்லை இப்படி சிலர், இடதுசாரிகள் குழப்புகிறார்கள் அன்பு மணி ராமதாஸ் போன்றவர்கள் கருத்து.
த.வெ.க. வேட்பாளருக்கு ஆதரவாக இடதுசாரிகள் வேட்பாளரை வாபஸ் பெற வேண்டும் இப்படி சிலர் குருட்டு பூனை விட்டத்தில் பாய்ந்த மாதிரி பேசுகிறார்கள்.

இந்த நியாயவான்கள் ஜனநாயகத்தைப் பாதுகாக்க மந்திரி பதவி வேண்டாம், நாங்கள் வெளியில் இருந்து ஆதரவு கொடுக்கிறோம். நல்லது செய்தால் வரவேற்போம், மக்களைப் பாதிக்கிற செயல் நடந்தால்

மக்கள் பக்கம் நின்று எதிர்த்துப் போராடுவோம் என்று கூறும் கம்யூனிஸ்ட்டுகள் பலம் சட்டமன்றத்தில் கூடுதலானால் நாட்டுக்கு நல்லது தானே! எனவே த.வெ.க வேட்பாளர்களை திரும்பப் பெற்று கம்யூனிஸ்ட் வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை.

த.வெ.க அமைச்சர்கள் கம்யூனிஸ்ட்டு களிடம் விளக்கம் கேட்கிறோம் என்பதுபோல் கம்யூனிஸ்ட்டுகளை விமர்சிக்க முயற்சித்துள்ளனர். எங்களுக்கும் உங்களிடம் விளக்கம் கேட்க நிறைய இருக்கிறது.

கம்யூனிஸ்ட்டுகள் விமர்சனம் கண்டு வெஞ்சினம் கொள்வதில்லை. நேர்மையாக எதிர்கொண்டு பதில் சொல்வோம்.

தமிழ்நாட்டின் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் “ஜெம் கிரானைட் வீரமணி மீதான பாலியல் வழக்கை கடந்த ஆட்சியாளர்கள் மூடி மறைத்தனர். அன்றைய காலகட்டத்தில் அவர்களுடன் கூட்டணி வைத்திருந்த கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் கண்டித்தார்களா? இதை கோபத்தில் கேட்கவில்லை தெரிந்து கொள்வதற்காக கேட்கிறோம் “இப்படி ஒரு வினாவை எழுப்பியுள்ளார்.

கம்யூனிஸ்ட்டுகளைவிட பாலியல் வன்கொடுமைக்கு எதிராக போராடியவர்கள் உண்டா? போக்சோ வழக்குகளில் கம்யூனிஸ்ட்டுகள் போராடவில்லையென்றால் குற்றவாளிகள் பலர் தப்பித்து இருப்பார்கள், இந்த வழக்கிலும் குற்றவாளிகள் தப்பிக்க கூடாது கூட்டுக் குற்றவாளிகளும் தப்பிக்கக் கூடாது என்பதே கம்யூனிஸ்ட்டுகளின் நிலை.

ஆட்சி அதிகாரம் உங்கள் கையில் உள்ளது. காவல்துறை முதலமைச்சர் கையில்தான் உள்ளது.

ஜெம் வீரமணியை தப்பிக்க வைத்த கருப்பு ஆடுகளும் அதே காவல்துறையில்தான் இருக்கின்றனர். நடவடிக்கை எடுங்கள்.

பதில் சொல்லிவிட்டோம். இப்போது உங்களிடம் விளக்கம் கேட்கிறோம், கோபத்தில் அல்ல தெரிந்துகொள்வதற்காக.

நீங்கள் ஜெம் வீரமணி அட்டூழியம் செய்த காலக்கட்டத்தில் வேற்றுக்கிரகத்தில் இருந்தீர்களா? நீங்கள் பேசிய பொது மேடைகளில் தொலைக்காட்சிகளில் எங்காவது இந்த கேடுகெட்ட ஜெம் வீரமணி பற்றி பேசியதுண்டா? சரி அதைவிடுங்கள். தமிழக வெற்றிக்கழகம் ஆரம்பித்து ஏறத்தாழ இரண்டு வருடங்கள் ஆகியிருக்கும், த.வெ.க போராடியதா?

இப்போது கூட, நீதிபதி பத்மா சண்முகசுந்தரம் அவர்கள் காவல்துறை தாக்கல் செய்த Closer Report-ஐ ஏற்க மறுத்து வழக்கு விசாரணைக்கு உத்தரவிட்டதால், விசாரணை, கைது தொடர்கிறது.

எனவே, கருப்பு ஆடுகளை சுட்டுப் பிடிக்கும் அதிகாரம் உங்கள் கையில் இருக்கிறது – பிடியுங்கள்.

நெடுஞ்சாலை துறை அமைச்சர் “ஆதவ் அர்ஜீனா” அவர்கள் கம்யூனிஸ்ட்டுகள் நெஞ்சை நிமிர்த்தி சொல்லுங்கள், திமுக ஆட்சியில் ஊழல் நடக்கவில்லையா? என்று கேட்கிறார்.

இதை எதற்கு எங்களைப்பார்த்து கேட்கிறீர்கள்?

நடந்ததா, நடக்கவில்லையா என்று ஆட்சி அதிகாரம் கையில் வைத்துள்ள நீங்கள்தான் கண்டுபிடித்து, அதை நிரூபிக்கவேண்டும். முதலமைச்சர் ஜோசப் விஜய் மேஜையில் ஊழல் சம்பந்தமாக மூன்று கோப்புகள் இருக்கிறது என்று சட்டமன்றத்தில் கூறினார் நேரலையில் பார்த்தேன்.

கோப்புகளைத் திறக்க வேண்டியதுதானே, “அபுக்காகசம் திறந்திடு சீசே” என்று எதாவது ஒரு பூதம் வந்து சொன்னால்தான் திறப்பாரா?

இங்கே பாருங்கள் அமைச்சர், கம்யூனிஸ்ட்டுகளை ஊழல் நெருங்காது, ஊழலுக்குத் துணை போவதும் இல்லை. அதுமட்டுமல்ல, நாங்கள் திமுகவுடன் தொகுதி உடன்பாடு கண்டுதான் போட்டியிட்டோம். அவ்வளவுதான் ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்கவில்லை. கூட்டணியும் அமைக்கவில்லை. எனவே, எங்களை நோக்கிய உங்கள் வினா தவறானது.

சரி, உங்களிடம் சில விளக்கங்கள் எங்களுக்கு தேவைப்படுகிறது.

தாங்கள் அதாவது அமைச்சர் ஆதவ் அர்ஜீனா ஆகிய தாங்கள் பல்வேறு கட்சிகளுக்குப் போய் வந்திருக்கிறீர்கள்.

இப்போது த.வெ.க.வில் இருக்கும் நீங்கள், இதில் நிடிப்பீர்கள் என்பது என்ன நிச்சயம்?

பிற கட்சிகளில் நீங்கள் இருந்த போது, தி.மு.க.வின் இந்த ஊழல் நடவடிக்கைகளைக் கண்டித்து எதாவது போராட்டங்களை நெஞ்சை நிமிர்த்தி நடத்தியதுண்டா?

கோபத்தில் இந்த கேள்வியைக் கேட்கவில்லை – தெரிந்து கொள்ள கேட்கிறேன்.

உங்கள் ஊழல் ஒழிப்பு நடவடிக்கையை கனவுத் தொழிற்சாலையான திரைத்துறையில் இருந்து தொடங்கலாமே! உங்கள் முதலமைச்சர்…?

பெரும் தொகை கருப்புப் பணமாக இல்லாமல் வெள்ளைப் பணமாக மாறி அரசு கஜானாவிற்கும் வரும். அப்படியே நம்ம த.வெ.க நண்பர்கள், நண்பிகள் அதிக விலை கொடுக்காமல் சினிமா பார்க்கவும் வசதியாக இருக்கும் குறைவான முதலீட்டில் சினிமா எடுக்க வசதியாகவும் இருக்கும்,

அத்தோடு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு அளிக்கப்படும் வரிச்சலுகை, இடச்சலுகை, மின்சார சலுகை, கடன் சலுகை இவைகளில் பல லட்சம் கோடி ஊழல் நடைமுறை இருக்குதுங்க, கடந்த பத்தாண்டுகளில் வராக்கடன், வரிச்சலுகையில் நாட்டுக்கு நஷ்டம் இருபது லட்சம் கோடி. ஒன்றிய பாஜக கண்ணசைவில் நடந்தவை இவையெல்லாம் ஊழல் இல்லையா? இவற்றை எதிர்த்தும் குரல் கொடுங்கள்.

கல்லாப்பெட்டி யெல்லாம் எங்களுக்கு பொருந்தாத வார்த்தை – ‘உண்டியல் குலுக்கிகள்’ என்று சொல்லிக் கொள்ளுங்கள்!

கடவுளே உண்டியலை நம்பித்தான் இருக்கிறார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button