கட்டுரைகள்

சீனாவிடம் மண்டியிடுகிறதா அமெரிக்க வல்லரசு?

மே.து.ரா.

சில நாள்களுக்கு முன்னர் அமெரிக்காவின் டிரம்பும் சீனாவின் சி சின் பிங்கும் நேரில் நடத்திய பேச்சுகள் பல எதிர்பார்ப்புகளைத் தந்திருந்தன.

சீனாவின் தலைவர், அவரது துணைவியாருடன் அமெரிக்க மண்ணில் அடியெடுத்து வைத்தபோது, வானூர்தி வந்திறங்கும் இடத்திற்குச் சென்று அமெரிக்கத் தலைவர் டிரம்ப் வரவேற்றது புதிராகவே தெரிந்தது. கடந்த 50 ஆண்டுகளில் அமெரிக்கத் தலைவர் ஒருவர் இவ்வாறு நேரில் சென்று எவரையும் வரவேற்கவில்லை. ஒரே விலக்கு, ரசியத் தலைவர் புதின் அலாசுகா மாநிலத்தில் வந்திறங்கியபோது டிரம்ப் நேரில் வரவேற்றது மட்டுமேயாகும்.

தனக்கிருந்த முன்னுரிமைகளை தக்கவைத்துக்கொள்ள அமெரிக்காவின் முன்னெடுப்புகளும், அவற்றை முறியடிக்கும் சீனாவின் முன்னேற்றங்களும் இரண்டு நாடுகளுக்குமான முரண்களை வெவ்வேறு வகைகளில் வெளிப்படுத்தி வருகின்றன.

சீனாவின் முன்னேற்றம்

பொருளுற்பத்தி, பொருளிய மேன்மை, மனித வளம், நுட்ப அறிவு, வணிகப் பெருக்கம், படை வலிமை ஆகியவற்றோடு, அரசியல் செல்வாக்கிலும் சீனா முன்னேறி வருவதை அமெரிக்கா எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது.

சீனாவின் வணிக வளர்ச்சியைத் தடுத்து நிறுத்த ஒரு கட்டத்தில் சீனப் பொருள்களுக்கு 145% அளவுக்கு இறக்குமதி வரியினை டிரம்ப் உயர்த்தினார். இதற்கு எதிர்வினையாகச் சீனாவும் அமெரிக்கப் பொருள்களுக்கான இறக்குமதி வரியினை 125% அளவுக்கு ஏற்றியது.

இந்த நிலையில், ஈரான் மீதான போருக்கிடையில், சீனாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார் டிரம்ப். அதனையடுத்து, உடனடியாக இந்தப் போட்டிகளை 2026 நவம்பர் 10 வரை நிறுத்தி வைப்பதென்று உடன்பாடு காணப்பட்டது. இத்தகைய சூழ்நிலையில்தான் அமெரிக்க, சீனத் தலைவர்கள் தீர்வு காணத் தனித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

ஆனால், இத்தகைய பேச்சுகளுக்குப் பின்னர் வெளிவந்துள்ள முடிவுகள் அடிப்படைச் சிக்கல்களுக்கான தீர்வுகளைத் தந்திருப்பதாகத் தெரியவில்லை.

வழக்கமான முறையில் இரண்டு நாட்டினரும் இடம்பெற்றுள்ள குழுக்கள் தீர்வுகளுக்கு முயற்சிக்கும் என்ற அளவில்தான் முடிவுகள் எட்டப்பட்டிருக்கின்றன.

உலகின் உற்பத்திக் கூடமாக மாறிய சீனா

கடந்த 50 ஆண்டுகளில், குறிப்பாக 25 ஆண்டுகளில் உலக அளவில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறிக்கத்தக்கன. இக்காலகட்டத்தில் உலகத்துக்கான உற்பத்திக் கூடமாகச் சீனா மாறியுள்ளது.

2001இல் அமெரிக்காவின் கூட்டு ஏற்றுமதி 729 பில்லியன் அமெரிக்க டாலராக முன்னிலையில் இருந்தது. அப்போது சீனாவின் ஏற்றுமதி அதில் மூன்றிலொரு பகுதியான 266 பில்லியன் டாலர் மட்டுமேயாகும். ஒப்பீட்டளவில், சீனாவின் ஏற்றுமதி அமெரிக்காவைவிட 30 நாடுகளில் மட்டுமே மிகுந்திருந்தது.

ஆனால், அடுத்த 20 ஆண்டுகளில், அதாவது 2024இல் சீனாவின் ஏற்றுமதி 3.59 டிரில்லியன் டாலராகப் பெருகிவிட்டது. மாறாக, அமெரிக்காவின் ஏற்றுமதி 1.9 டிரில்லியனைத் தாண்டவில்லை. மேலும், அமெரிக்காவைவிட 145 நாடுகளுக்கான சீனாவின் ஏற்றுமதி உயர்வாக இருந்தது.

இதன்றி, சீனாவின் ஏற்றுமதி 3.59 டிரில்லியன் டாலராக இருக்க, அதன் இறக்குமதி 2.58 டிரில்லியனாக மட்டுமே அமைந்தது. இதனால், ஓராண்டில் ஒரு டிரில்லியன் டாலர் அளவுக்குச் சீனாவால் ஈட்ட முடிந்தது.

அமெரிக்காவின் ஏற்றுமதி 1.9 டில்லியன் என்றாலும், இறக்குமதி 3.12 டிரில்லியன் டாலராகும். இதனால், அமெரிக்காவின் கடன் அல்லது வணிக இடைவெளி 1.22 டிரில்லியன் டாலராகப் பெருகியிருந்தது.

இதன் விளைவாக அமெரிக்காவின் கூட்டுக் கடன், அதனுடைய உள்நாட்டு உற்பத்தியில் 115% என உயர்ந்தது.

ஏற்றுமதி இறக்குமதி இடைவெளி மட்டுமல்லாது, உலக நிதி நெருக்கடி ஏற்பட்டபோது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், நோய்த் தொற்று போன்றவற்றாலும் கடன் கூட்டளவு 39 டிரில்லியன் டாலராகக் கூடியிருந்தது.

சீனாவைப் பொருத்தவரை அதன் உள்நாட்டு உற்பத்தியில் 94% கடன் என்றாலும், இத்தொகை பெரும்பாலும் கட்டமைப்பு மேம்பாடு, நுட்பத் திறன் வளர்ச்சி ஆகியவற்றுக்கான செலவுகளாகவே இருந்தன. உள்நாட்டு நெருக்கடிகளுக்கான தீர்வுக்குச் செலவிடப்பட்ட கடனாக இருக்கவில்லை.

அறிவியல் நுட்ப மேம்பாடு

பொருளிய, வணிக வளர்ச்சி என்றில்லாமல், அறிவியல் நுட்ப மேம்பாடும் புதிய கண்டுபிடிப்புகளும் இன்று அடித்தளமாக அமைகின்றன. இவற்றிலும், அமெரிக்காவை மிஞ்சும் நிலைக்குச் சீனா சென்றுவிட்டதை மறுப்பதற்கில்லை.

உயர் தொழில் நுட்பம், மனித வளம், உற்பத்தி ஆற்றல், இவற்றுக்கான கட்டமைப்புகள் போன்றவை இல்லாமல் பொருளிய, வணிக வளர்ச்சி ஏற்பட வாய்ப்புகள் இல்லை எனலாம். இவற்றை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும் அளவுக்குத் திறன் மேம்பாடு காண வேண்டும்.

மின் வண்டிகள், திறன்பேசி, தொலைக்காட்சி, விளையாட்டுப் பொருள்கள் போன்ற பலவகைப் பயன்படு பொருள்களுக்கும் இன்று குறைக்கடத்தி மற்றும் சிப்பி போன்றவை வேண்டப்படுகின்றன. இவற்றை உற்பத்தி செய்யும் திறன் மிக நுட்பமானது. ஒரு சில நாடுகளே இந்த நுட்பத்தைப் பெற்றுள்ளன.

குறிப்பாக, தைவான் 90% அளவுக்கு உற்பத்தித் திறன் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. ஆயினும், இந்த உற்பத்திக்கு வேண்டிய நுட்பத்தை அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளே வழங்கி வருகின்றன. இந்த உயர்நுட்பக் குறைக்கடத்தி, சிப்பி ஆகியவற்றைச் சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய அமெரிக்கா முன்வரவில்லை.

இவற்றைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யும் தொழில்கள் சீனாவிலேயே பெருமளவில் உள்ளன. இதனால், சீனா தனக்கான குறைக்கடத்தி, சிப்பி ஆகியவற்றை உற்பத்தி செய்யும் திறனை வளர்த்துக்கொண்டுள்ளது. என்வீடியா போன்ற உயர்நுட்பச் சிப்பிகளைச் சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய விடாமல் அமெரிக்கா தடுத்து நிறுத்தியுள்ளதால், அந்த நிறுவனத்தின் சில பொருள்கள் முடங்கி இழப்பேற்படும் நிலையும் உருவாகியுள்ளது. சீனாவுக்கு நுட்பங்கள் சென்றுவிடக்கூடாது என்ற தடைகள் நீடிக்கநீடிக்க, சீனா அவற்றைத்தானே உற்பத்தி செய்யும் நிலையினை எட்டிவிட்டது.

எதிர்வினையால் தடுமாறும் அமெரிக்கா

இதற்கு எதிர்வினையாக வேறொரு சிக்கலைச் சீனா உருவாக்கிவிட்டது. மின் வண்டிகள், மின்கலன்கள், திறன்பேசிகள், காற்றாலைகள், போர்க் கருவிகள், வானூர்திகள், குறைக்கடத்திகள், சிப்பிகள் போன்றவற்றை உருவாக்கப் பல்வேறு வகையான அரிய மண் தனிமங்கள் வேண்டியுள்ளன. இவற்றில் 17 வகைகள் இன்றியமையாதனவாக உள்ளன.

உலக இருப்பில் பாதியளவுக்கு மேல் இந்த அரிய மண் வகைகள் சீனாவிடம் குவிந்துள்ளன. இந்த அரிய மண் வகைகளைப் பயன்பாட்டுக்கேற்றவாறு பக்குவப்படுத்தும் தொழில் ஆற்றல் மிக நுட்பமானது. இந்தப் பக்குவப்படுத்தும் பங்களிப்பினை 90% சீனாதான் செய்ய முடியும் என்ற நிலை தற்போதுள்ளது. ஒரு சில நாடுகள் பக்குவப்படுத்தினாலும், அவற்றுக்குச் சீனாவின் தொழில்நுட்பமே உதவுகிறது.

இந்த நிலையைப் பயன்படுத்தி, அமெரிக்காவுக்கு இந்த அரிய மண் வகைகள் கிடைக்காதவாறு சீனா தற்போது தடைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அமெரிக்காவில் பல தொழில்கள் முடங்கிக் கிடக்கின்றன.

இவற்றுக்கப்பால், மக்காச்சோளம் போன்ற வேளாண் பொருள்கள், இறைச்சி, எண்ணெய் போன்றவற்றின் ஏற்றுமதிக்கும் சீனாவையே அமெரிக்கா பெரிதும் நம்புகிறது.

சீனாவைப் பொறுத்து, தனக்கு வேண்டிய பொருள்களை உலகின் வேறு பல நாடுகளிடமிருந்து வாங்கிக்கொள்ளும் வாய்ப்பினைப் பெற்றுள்ளது.

அமெரிக்கா தடுத்தாலும் ஏற்றுமதி மிகுதி

இறக்குமதி வரிகளாலும் தடைகளாலும், அமெரிக்காவுக்கான சீனாவின் ஏற்றுமதி அண்மைக் காலங்களில் 29% குறைந்துவிட்டது. ஆனால், ஆசிய, அய்ரோப்பிய, தென்அமெரிக்க, தென்னாப்பிரிக்க நாடுகளுடனான வணிகத்தால் சீனாவின் கூட்டு ஏற்றுமதி 6%க்கு மேல் கூடியுள்ளது.

இவற்றுடன், போர் நுட்பம், வானியல் அறிவு, உணவு உற்பத்தி, உரங்கள், எண்ணெய் வளம் போன்ற பலவற்றில் மேம்பட்டிருக்கும் ரசியாவும் சீனாவும் வணிகத்திலும் பொருளியலிலும் அரசியல் களத்திலும் ஒன்றிணைந்து செயல்படுகின்றன.

அமெரிக்காவின் தடைகள் அல்லது கட்டுப்பாடுகளால் சீனாவுக்குப் பெருமளவில் இழப்புகள் ஏற்படவில்லை. ஆனால், அமெரிக்கா பெரும் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது. இத்தகைய பின்புலத்தில்தான் சீனாவிடம் மண்டியிடும் நிலைக்கு அமெரிக்கா தள்ளப்பட்டுள்ளது. ரசியாவையும் முழுக்கப் பகைக்க இயலவில்லை.

பேச்சுக்களால் மட்டுமே இந்தச் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் வாய்ப்புகள் இல்லை. போட்டிகள் தொடர்ந்து கொண்டிருக்கும்.

இருப்பினும், நெருக்கடிகள் கூர்மை அடையாமல் தவிர்க்கும் முயற்சிகள் தொடர்கின்றன. இவற்றுக்கிடையே சீனாவின் குவாய் போன்ற நிறுவனங்கள் மீது அமெரிக்கா திட்டமிட்டுத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. குவாய் நிறுவனத்தின் உயர் தலைவர் அமெரிக்காவின் வற்புறுத்தலால் கனடாவில் தளைப்படுத்தப்பட்டு விடுதலையானார்.

அய்ந்தாவது தலைமுறைக்கான திறன்பேசி உற்பத்தியில் குவாய் மேம்பட்டிருப்பதை அமெரிக்காவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அமெரிக்காவின் வழக்கமான பொய்மைகளான நுட்பத் திருட்டு, ஈரானுடன் உறவு என்பன போன்ற குற்றச்சாட்டுகளில் அமெரிக்காவில் நீதிமன்ற வழக்கு நடந்து வருகிறது.

முன்னேற்றத்திற்குத் தடையாகவும் இருக்கவேண்டும், மண்டியிட்டுப் பயன்களையும் பெறவேண்டும் என்ற அமெரிக்காவின் அணுகுமுறை எப்போதும் வென்றதில்லை.

தடுமாறும் இந்திய ஒன்றியம்

சீனா இன்று அமெரிக்க வல்லரசையே அசைத்துப் பார்த்து விஞ்சும் நிலைக்கு உயர்ந்துள்ளது. ஆனால், இந்திய ஒன்றியம் முதலடிகூட எடுத்துவைக்கவில்லை. அதனால்தான், அமெரிக்காவின் உயர் அலுவலர் ஒருவர், ‘இந்திய ஒன்றியம் வல்லரசாக எப்போதும் விடமாட்டோம்’ என்று சூளுரைத்திருக்கிறார்.

மனித வளம் இருந்தும் மக்கள் பெருக்கம் என்ற அங்காடி இருந்தும் அமெரிக்க வல்லரசையும் அய்ரோப்பிய வளர்நாடுகளையும் எதிர்கொள்ளத் தயங்கித் தத்தளிக்கிறது. ரசியா, சீனா உள்ளிட்ட பிரிக்சு அமைப்பு நாடுகளின் ஒத்துழைப்போடு முன்னேறும் வாய்ப்புகளை மோடியின் பா.ச.க. அரசு புறக்கணித்து வருகிறது.

தைவானுடன் பகையிருந்தும், சீனா பொருளிய, வணிகத் தொடர்புகளை அறுத்துக்கொள்ளவில்லை. தைவான் மக்களுக்கு வேலைவாய்ப்புகளைச் சீனாதான் வழங்கி வருகிறது. காய்கறிகள் உள்ளிட்ட அன்றாட வேண்டல்களையும் நிறைவேற்றுத்கிறது. தைவானின் பெரும் நிறுவனங்கள் சீனாவில் கிளைகளை அமைத்திருக்கின்றன.

ஆனால், சீனாவோடு இணைந்து செயல்பட மோடி விரும்பவில்லை. ரசிய உறவுகளும் அவ்வப்போது அமெரிக்காவின் எண்ணங்களுக்கேற்ப ஏற்றத்தாழ்வுகளைக் காண்கின்றன.

புதிய வழியினைத் தேர்ந்தெடுக்க இந்திய ஒன்றிய இளைய தலைமுறையினர் இணக்கத்தோடு ஒன்றிணையவேண்டும் என்பதுதான் இன்றைய எதிர்பார்ப்பாகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button