
சென்னையில் நடைபெற்ற “தேவநாயகி” நிகழ்வில், எழுத்தாளர் அ.வெண்ணிலா, ஜெயமோகன் ஆகியோர், தேவதாசி முறையை வெறும் “விபச்சாரம்” என்ற காலனியக் கண்ணோட்டத்தில் புரிந்துகொள்ளக் கூடாது என்றும், அந்தப் பெண்களின் கோயில் உரிமை, நில உரிமை, கலைப் பங்களிப்பு ஆகியவற்றையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்று பேசியதாக செய்திகள் வந்துள்ளன.
ஒரு நூற்றாண்டுக்கு முன்பு ஒழிக்கப் போராடப்பட்ட தேவதாசி முறையைப் பற்றி இன்று மீண்டும் “கௌரவம்”, “பண்பாடு”, “கலைமரபு” என்ற சொற்களில் பேச வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது?
தேவதாசி மரபில், சில பெண் கலைஞர்களுக்கு சொத்துரிமையும் பொருளாதார சுதந்திரமும் இருந்தது என்பதாலேயே, “தேவதாசி முறை பெண்களுக்கான விடுதலை அமைப்பு” என்ற புதிய பொருளைச் சுமத்த முடியாது.
தேவதாசி சமூகத்திற்குள்ளேயே சாதி, வர்க்கம், பொருளாதார நிலை ஆகியவற்றில் பெரும் வேறுபாடுகள் இருந்தன. சிலரிடம் நிலமும் செல்வமும் இருந்தபோது, மிகப் பலர் வறுமையிலும் அதிகாரம் படைத்த ஆண்களின் பொருளாதார ஆதரவிலும் வாழ வேண்டியிருந்தது.
தேவதாசி முறையில் பெண்களுக்கு வழக்கமான திருமண வாழ்க்கை கட்டாயமாக இருக்கவில்லை. ஆனால் அவர்களது வாழ்க்கை சமூக அதிகார உறவுகளிலிருந்து விடுபட்டதல்ல. அவர்களது உடல், கலை உழைப்பு ஆகியவை அதிகாரம் கொண்ட ஆண்களின் ஆதரவுடன் இணைக்கப்பட்டிருந்தது.
புரவலர்கள், கோயில் நிர்வாகம், அரசர்கள், உள்ளூர் அதிகாரிகள், செல்வந்த ஆண்கள் ஆகியோரின் ஆதரவு அல்லது பாதுகாப்பு பல நேரங்களில் பொருளாதார வாழ்க்கையில் முக்கியமாக இருந்தது. சில ஆய்வுகள் இதனை பாலினம், சாதி, பொருளாதார அதிகாரம் ஆகியவை சந்திக்கும் அமைப்பாகவே பார்க்கின்றன.
தேவதாசி முறையை வெறும் “ஆண்-பெண்” உறவாக மட்டும் குறுக்கிவிட முடியாது. சாதியும் வர்க்கமும் அதில் முக்கியப் பங்கு வகித்தன. தேவதாசிப் பெண்கள் உருவாக்கிய இசை, நடனம், இலக்கியம், கலை ஆகியவற்றை காலப்போக்கில் மேல்சாதி, நடுத்தர வர்க்க நிறுவனங்கள் கைப்பற்றிக் கொண்டன; அந்தக் கலைகளை உருவக்கிய பெண்களையே களத்திலிருந்து முற்றிலும் வெளியேற்றி பாலியல் குழியில் தள்ளிவிட்டன என்பது ஆய்ந்தறியப்பட்ட உண்மை.
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார், முத்துலட்சுமி ரெட்டி போன்றோரின் போராட்டம் அவ்வளவு எளிதில் வெற்றி பெற்று விடவில்லை.
மூவலூர் இராமாமிர்தம், அந்த சமூகத்தின் வாழ்க்கையை உள்ளிருந்து பார்த்தவர். அந்த அமைப்பின் கொடுமைகளை நேரடியாக அறிந்தவர். தேவதாசிப் பெண்களை அந்த அவல வாழ்க்கையிலிருந்து தப்புவித்து வெளியேற வைத்தவர். “தாசிகளின் மோசவலை அல்லது மதி பெற்ற மைனர்” என்ற அவரது நூல் அந்த அமைப்புக்குள் இருந்த சமூக, பொருளாதார உறவுகளையும் பெண்களின் நிலையும் வெளிப்படுத்துகிறது.
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் போராட்டம் இன்னும் முக்கியமானது. தேவதாசி குடும்பப் பின்னணியை நெருக்கமாக அறிந்திருந்த அவர், சட்டமன்றத்திற்குள்ளேயே பெண்களை கோயில்களுக்கு அர்ப்பணிக்கும் முறைக்கு எதிராகப் போராடினார். அவருக்கு கடுமையான எதிர்ப்பு இருந்தது. சத்தியமூர்த்தி உள்ளிட்டோரின் நிலைப்பாடு குறித்த பிரபலமான மேற்கோள்கள் இன்று மீண்டும் விவாதிக்கப்படுகின்றன. அவை பல முறை எடுத்தாளப்பட்டவை. இது உண்மையா என்ற வாதம் இப்போது தொடர்பற்றது.
ஆனால் 1947-ஆம் ஆண்டின் “மெட்ராஸ் தேவதாசி (பிரிவென்ஷன் ஆஃப் டெடிகேஷன்) ஆக்ட், ஒரு பெண்ணை மதச் சடங்கின் மூலம் தேவதாசியாக அர்ப்பணிப்பதை அவள் சம்மதித்திருந்தாலும், சம்மதிக்காவிட்டாலும் சட்டவிரோதமாக்கியது. மேலும், தேவதாசியாக அர்ப்பணிக்கப்பட்டதால் அந்தப் பெண்ணின் திருமண உரிமை பறிக்கப்படாது என்றும் சட்டம் தெளிவுபடுத்தியது.
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளில் மதம், பாரம்பரியம், கோயில், “பழைய இந்தியப் பெருமை”, குடும்ப ஒழுக்கம் போன்ற கருத்துகள் பொதுப் பண்பாட்டு விவாதங்களில் மீண்டும் வலுவாக முன்னிறுத்தப்படுகின்றன. அவை “இந்துத்துவப் பெருமிதங்களாகச் சித்தரிக்கப்படுகின்றன.
ஒரு சமூகத்தின் கடந்தகாலத்தில் இருந்த ஒவ்வொரு நடைமுறையும் தொன்மையானது என்பதற்காகப் பாதுகாக்கப்பட வேண்டியதில்லை. கணவன் உடலோடு மனைவியை உயிருடன் எரிக்கும் ‘சதி’ ஒழிக்கப்பட்டது. குழந்தைத் திருமணத்தைத் தடை செய்து, குற்றச்செயலாக்கிச் சட்டம் வந்தது. பெண்களின் கல்வி விரிவடைந்தது. விதவை மறுமணம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. தேவதாசி அர்ப்பணிப்பு தடை செய்யப்பட்டது.
கடந்த காலத்தை ஆய்வு செய்யலாம்; ஆனால் கடந்த காலத்தின் அநீதியை மீண்டும் உயிர்ப்பிக்க முடியாது. வரலாற்றைப் புரிந்துகொள்ளலாம்; வரலாற்றின் பெயரில் ஆணாதிக்கத்திற்கு புதிய மகுடம் சூட்ட முடியாது.
பெண்ணின் சுதந்திரத்தையும் சமத்துவத்தையும் மறுக்கும் பழைய அதிகார உறவுகள் இருந்தால், அவற்றை தயக்கமின்றித் தகர்த்தெறிய வேண்டும்.