தமிழகம்

தாராபுரம் – ப.லட்சுமணன், மதுராந்தகம் – பி.சுகந்தி இடதுசாரி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்வீர்!

சிபிஐ, சிபிஎம், சிபிஐ(எம்எல்) தலைவர்கள் வேண்டுகோள்

இடதுசாரிக் கட்சிகள் சார்பில், தாராபுரம் (தனி) தொகுதியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ப.லட்சுமணன்; மதுராந்தகம் (தனி) தொகுதியில் மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பி.சுகந்தி ஆகியோர் போட்டியிடுகின்றனர். சட்டமன்றத்தில் மக்களின் குரலை ஒலித்திட இவர்களை வெற்றி பெறச் செய்யுமாறு சிபிஐ, சிபிஎம், சிபிஐ(எம்.எல்.) தலைவர்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் மு.வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் பெ. சண்முகம், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (எம்.எல்) லிபரேசன் மாநிலச் செயலாளர் பழ.ஆசைத்தம்பி ஆகியோர் 15.09.2026 அன்று கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, தாராபுரம் (தனி) தொகுதியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ப. லட்சுமணன்; மதுராந்தகம் (தனி) தொகுதியில் மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பி. சுகந்தி ஆகியோர் போட்டியிடுவதாக அறிவித்தனர்.

இதனையடுத்து, தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் ப.லட்சுமணன், மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடும் பி.சுகந்தி ஆகிய இருவரும் 16.09.2026 அன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.

வேட்பாளர்கள் பற்றிய விவரம்:

தாராபுரம்: ப.லட்சுமணன்

ப. லட்சுமணன் 29-12-1985ஆம் ஆண்டு (வயது 41) பிறந்தவர். கட்டடத் தொழிலாளியான இவரது பெற்றோர் பழனிசாமி – நீலாவதி. 9-ஆம் வகுப்பு முடித்துள்ளார்.

2011-ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ப.லட்சுமணன் கட்சியில் பகுதிநேர ஊழியராகவும், தாராபுரம் தாலுகா குழுச் செயலாளராகவும் செயலாற்றி வருகிறார். இவரது மனைவி ல.கோவிந்தமாள் கூலித் தொழிலாளியாவார். மூத்த மகன் ரீபத் பி.காம். இரண்டாம் ஆண்டும், இளைய மகன்7-ஆம் வகுப்பும் பயின்று வருகின்றனர். கூலித் தொழிலாளியாக இருந்தாலும் கட்சி நடத்தும் போராட்டங்களில் பங்கேற்று, உழைக்கும் மக்களுக்காக பணியாற்றி வருகிறார்.

மதுராந்தகம்: பி.சுகந்தி எம்.ஏ., பி.எட்.,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுராந்தகம் தொகுதி வேட்பாளர் பி. சுகந்தி, விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு – அயன் ரெட்டியப்பட்டியில் பிறந்தவர். வயது 58. இவரது தந்தை அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர், தாய் அரசுப் பள்ளி ஆசிரியை. விருதுநகர் வி.வி.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரியில் எம்.ஏ. படிப்பையும், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.எட். படிப்பையும் முடித்தவர்.

அரசு உதவி பெறும் பள்ளி விடுதி ஒன்றில் பணியாற்றிய அவர், பின்னர் அப்பணியிலிருந்து விடுவித்துக் கொண்டு 1990-ஆம் ஆண்டு அரசு தொடங்கிய அறிவொளி இயக்கத்தில் தொண்டராக, கருத்தாளராக மாவட்ட ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டவர். இளம் வயதில் கல்வி கற்கும் வாய்ப்பை இழந்த ஏழை – எளிய மக்களுக்கு எழுத்தறிவை கற்றுக் கொடுக்கும் பணியின் மூலம் பொது வாழ்விற்கு வந்தவர். தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராக செயல்பட்டு வருகிறார். 2025-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலப் பொதுச்செயலாளராக செயலாற்றி வருபவர். தமிழகம் முழுவதிலும் எண்ணற்ற பெண்கள், குழந்தைகள் மீதான வன்கொடுமைகளுக்கு எதிராக தொடர்ந்து போராடி பாதுகாப்பை உறுதி செய்யவும், நீதி கிடைக்கவும் பாடுபட்டு வருபவர்.

இவரது இணையர் கே. சாமுவேல்ராஜ் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராக செயல்பட்டு வருகிறார். இருவரும் முழுநேரமாக மக்கள் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டவர்கள். இவர்களுக்கு சிந்தியா, சுபாஷினி என இரண்டு மகள்கள் உள்ளனர்.

– வ.ம.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button