
தமிழ்நாடு சட்டப்பேரவை தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் (திருத்த) மசோதா, 2026ஐ 8 செப்டம்பர் 2026 அன்று, எதிர்ப்புகளை பொருட்படுத்தாமல் நிறைவேற்றியுள்ளது. இந்த மசோதா உயர்கல்வியை வணிகமயமாக்கி, சமூக நீதிக்கு சவால் விடுகிறது.
2025 ல் திமுக ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மசோதா அரசியல் கட்சிகள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரிடமிருந்து கடும் எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து, 2026 பிப்ரவரியில் திரும்பப் பெறப்பட்டது.
செப்டம்பர் 2026 ல் தவெகவால் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டு சட்டமன்றத்தில் விவாதம் இன்றி நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா உயர்கல்வியை வணிகமயமாக்குவதில் அதிதீவிரமானதாக உள்ளது. சட்டப்பேரவையில் இதனை நிறைவேற்றிய விதம், நாடாளுமன்றத்தில் முக்கியமான சட்டங்களை எதிர்க்கட்சிகளின் கருத்துகளைக் கணக்கில் கொள்ளாமல் பாஜக அரசு நிறைவேற்றிவரும் ஜனநாயக விரோத நடைமுறையை நினைவூட்டுகிறது.
தனியார் பல்கலைக்கழகங்களுக்கான தடைகள் தளர்த்தப்படுகின்றன
தனியார் பல்கலைக்கழகங்களை நிறுவுவதற்கான குறைந்தபட்ச நிலத் தேவையை இந்த மசோதா கணிசமாகக் குறைக்கிறது. இதன்படி, முன்பு இருந்த 100 ஏக்கர் என்ற அளவு, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதியில் 12 ஏக்கராகவும், பிற மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் 18 ஏக்கராகவும், மாநிலத்தின் பிற பகுதிகளில் 25 ஏக்கராகவும் குறைக்கப்படுகிறது.
அதேபோல், கட்டாய நிரந்தர நிதி வைப்பு ரூ.50 கோடியிலிருந்து ரூ.25 கோடியாக குறைக்கப்படுகிறது.
2025ஆம் ஆண்டு எழுந்த எதிர்ப்புகள் அந்த மசோதாவைத் திரும்பப் பெறும் அளவுக்கு நியாயமானவையாகவும் வலுவானவையாகவும் இருந்தன என்றால், அந்த ஆட்சேபனைகள் இப்போது எவ்வாறு பொருத்தமற்றதாகிவிட்டன என்பதை தமிழ்நாடு அரசு விளக்க வேண்டும்.
ஆனால், அந்த ஆட்சேபனைகளை பரிசீலிக்க வேண்டிய அரசியல் அக்கறையைக்கூட தற்போதைய அரசு காட்டவில்லை.
அரசின் வாதம் என்னவென்றால், இந்தத் தளர்வுகள் “உலகத் தரம் வாய்ந்த” தனியார் பல்கலைக்கழகங்களை உருவாக்கவும், குறிப்பாக சென்னையில் நிலத்தின் பற்றாக்குறை மற்றும் அதிக விலையை சமாளிக்கவும் உதவும் என்பதாகும். இது ஏற்றுக் கொள்ளக் கூடிய வாதம் அல்ல.
தமிழ்நாட்டின் உயர்கல்வி சமூக வாய்ப்பை விரிவுபடுத்திய வரலாறு
தமிழ்நாட்டின் உயர்கல்வி வளர்ச்சி, அரசு கல்லூரிகள் பல்கலைக்கழகங்கள் மூலமாக தொழிலாளர்கள் மற்றும் உழைக்கும் மக்களின் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள், கிராமப்புற மாணவர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள், பட்டியலின மக்கள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கு உயர்கல்விக்கான வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
கல்வியில் அரசின் முதலீடு என்பது வெறும் நிறுவனங்களுக்கான செலவாக மட்டும் இன்றி சமூக முன்னேற்றத்திற்கும் சமூக ஜனநாயகமயமாக்கலுக்கும் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதே அரசின் கல்விக்கொள்கையாக இருந்தது. அரசியலமைப்பு சட்டத்தின் சமத்துவம், சமூக நீதி, மதச்சார்பின்மை, ஜனநாயகம் போன்ற விழுமியங்களை வலுப்படுத்தும் முதலீடு. மக்களின் வாழ்க்கையை வலுப்படுத்தும் அறிவு திறன் சிந்தனை மற்றும் வாய்ப்புகளை உருவாக்கும் முதலீடாகவே கல்விக்கான நிதி கருதப்பட்டது. ஆனால் தற்போதைய மசோதா இந்தக் கொள்கைக்கு நேர்மாறாக உள்ளது.
தனியார் கல்வி விரிவாக்கம்
அரசுப் பல்கலைக்கழகங்களும் அரசு கல்லூரிகளும் நீண்டகாலமாக போதிய நிதியின்மை, ஆசிரியர் காலியிடங்கள், ஆராய்ச்சிக்கான போதிய ஆதரவின்மை, புதிய கல்வித் திட்டங்களை விரிவுபடுத்துவதில் உள்ள கட்டுப்பாடுகள் போன்ற பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றன.
பொதுப் பல்கலைக் கழகங்கள் நிதியின்றி பலவீனப்படுத்தப்படும் நிலையில், தனியார் பல்கலைக்கழகங்களுக்கான நிலம் மற்றும் நிதித் தேவைகளைத் தளர்த்துவது பொதுஉயர்கல்வியை வலுப்படுத்துவதற்கான மாற்றாக ஒருபோதும் இருக்க முடியாது. இது வெறும் நிர்வாக மாற்றமல்ல. நலஅரசின் பொறுப்பிலிருந்து விலகும் அடிப்படையான கொள்கை மாற்றமாகும்.
தரமான உயர்கல்வியை ஒரு பொது நலன் சார்ந்த கல்வியாக விரிவுபடுத்துவதே அரசின் பொறுப்பு; தனியார் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பது ஏழைகளுக்கான கல்வி வாய்ப்பை அதிகரிக்காது
குறைந்த நிலம் மற்றும் நிதித் தேவைகளுடன் நிறுவப்படும் தனியார் பல்கலைக்கழகம் நவீன கட்டமைப்புகள், புதிய பாடப்பிரிவுகள், சர்வதேச ஒத்துழைப்புகள் போன்றவற்றைக் கொண்டிருக்கலாம். ஆனால் கட்டண அமைப்பு சாதாரண குடும்பங்களின் பொருளாதார திறனுக்கு அப்பாற்பட்டதாக இருந்தால், தனியார் பல்கலைக்கழகங்களின் விரிவாக்கம் கல்வியில் உள்ள ஏற்றத்தாழ்வை மேலும் ஆழப்படுத்தும்.
ஆபத்தான இரட்டை அடுக்கு உயர்கல்வி அமைப்பு உருவாகும்
பணம் செலுத்தும் திறன் கொண்டவர்களுக்கான வளமான தனியார் பல்கலைக்கழகங்கள் ஒரு புறமும் செலவு செய்ய முடியாத பெரும்பான்மையினருக்கான நாளுக்கு நாள் பலவீனமடையும் அரசுப் பல்கலைக்கழகங்கள் மற்றொரு புறம். இத்தகைய அமைப்பு கல்வி வாய்ப்புகளில் வர்க்க அடிப்படையிலான ஏற்றத்தாழ்வை மேலும் அதிகரிக்கும். ஆசிரியர் அமைப்புகளும், கல்வித் துறையைச் சேர்ந்தவர்களும் கூட இந்த அச்சத்தை ஆழமாக வெளிப்படுத்தி இருக்கின்றார்கள்.
நிரந்தர நிதியைக் குறைப்பது ஆபத்தானது
ஒரு பல்கலைக்கழகம் என்பது வகுப்பறைகளின் தொகுப்பு மட்டுமல்ல. ஆசிரியர்கள், ஆய்வகங்கள், நூலகங்கள், ஆராய்ச்சி, மாணவர் சேவைகள், கல்வி உதவித்தொகைகள், விடுதிகள், கல்வி நிர்வாகம் மற்றும் பராமரிப்பு ஆகியவற்றுக்குத் தொடர்ச்சியான நிதி தேவைப்படுகிறது.
நிரந்தர நிதி வைப்பு என்பது நீண்டகால நிதித் திறன் இல்லாமல் நிறுவனங்கள் தொடங்கப்படுவதைத் தடுக்கும் குறைந்தபட்ச பாதுகாப்பாக இருந்தது.
அந்தத் தொகையை பாதியாகக் குறைப்பது தனியார் நிறுவனங்கள் நுழைவதை எளிதாக்குகிறது. ஆனால், ஆசிரியர் எண்ணிக்கை, ஆராய்ச்சி கட்டமைப்பு, கல்வித் தரம், மாணவர் நலன், கல்வி உதவித்தொகைகள் மற்றும் நீண்டகால நிதி நிலைத்தன்மை ஆகியவற்றுக்கான உறுதிப்பாடுகள் குறித்து இந்த மசோதா போதுமான உத்தரவாதங்களை வழங்கவில்லை.
இதன் மூலம் பல்கலைக்கழகங்கள் தொடங்குவது எளிமையாக்கப்பட்டு உயர்கல்வியின் தரம் மற்றும் சமூக நோக்கம் பின்தள்ளப்படுகின்றன.
சமூகநீதியும் இடஒதுக்கீடும் மறுக்கப்படும் அபாயம்
தனியார் பல்கலைக்கழகங்களின் விரிவாக்கத்தை வெறும் கட்டமைப்பு மற்றும் முதலீட்டின் அடிப்படையில் மட்டுமே மதிப்பிட முடியாது.
அதில்,
♦ சமூக ரீதியாக பின்தங்கிய மக்களுக்கான இடஒதுக்கீடு மற்றும் பிரதிநிதித்துவம்;
♦ கல்விக் கட்டணச் சலுகைகள் மற்றும் கல்வி உதவித்தொகைகள்;
♦ வெளிப்படையான சேர்க்கை நடைமுறை;
♦ தன்னிச்சையான கட்டண நிர்ணயத்திலிருந்து மாணவர்களுக்கான பாதுகாப்பு;
♦ முதல் தலைமுறை மாணவர்களுக்கான சலுகை;
♦ கிராமப்புற மாணவர்களுக்கான வாய்ப்புகள்; பொதுமக்களுக்கான பொறுப்புணர்வு
ஆகியவை உறுதி செய்யப்பட வேண்டும்.
நவீன பாடப்பிரிவுகளையும் உலகத் தரம் வாய்ந்த கட்டமைப்புகளையும் கொண்டிருப்பதால் மட்டுமே ஒரு தனியார் பல்கலைக்கழகம் சமூக முன்னேற்றத்தின் நிறுவனமாகிவிடாது. வணிகமயமாகும் கல்வி, கல்வியின் அர்த்தத்தையே மாற்றுகிறது. கல்வி சந்தையில் விற்கப்படும் ஒரு பொருளாக மாறும்போது, அதன் அடிப்படை நோக்கமும் மாறுகிறது.
சந்தை சார்ந்த உயர்கல்வி நிறுவனம் இயல்பாகவே அதிகமாக தனியார் தேவை, வருவாய் வாய்ப்பு மற்றும் வேலை வாய்ப்பு திறன் கொண்ட பாடப்பிரிவுகளுக்கு முன்னுரிமை அளிக்கும். இதனால் உடனடியாக வருமானம் ஈட்டக் கூடியதாக இல்லாமல், அதே நேரத்தில் சமூகத்திற்கு முக்கியமான கல்வித் துறைகள் பலவீனமடையும்.
மனிதநேயம், சமூக அறிவியல், அடிப்படை அறிவியல் ஆராய்ச்சி மற்றும் ஜனநாயகக் குடிமை உணர்வுக்கு அவசியமான அறிவுத் துறைகள் உயர்கல்வியின் அறிவுசார், சமூக மற்றும் ஜனநாயக நோக்கங்களில் பற்றாக்குறை உருவாகும் அபாயம் உள்ளது.
இத்தகைய போக்கு கல்வியை வேலைவாய்ப்புக்கான திறன் மற்றும் சந்தைத் தேவைக்கு மட்டுமே சுருக்கிவிடும். விமர்சனச் சிந்தனை, வரலாற்று உணர்வு, அறிவியல் மனப்பான்மை, சமூகப் பொறுப்பு, அரசியலமைப்புச் சிந்தனைகள் மற்றும் நிலவும் அதிகார அமைப்புகளையும் சமத்துவமின்மைகளையும் கேள்விக்குள்ளாக்கும் பகுப்பாய்வு திறன் ஆகியவை பின்தள்ளப்படும். இது சமூக வளர்ச்சிக்கு ஆபத்தான போக்காகும்.
நிலம் குறித்த வாதம் ஏற்புடையதல்ல
சென்னையில் 100 ஏக்கர் தொடர்ச்சியான நிலத்தைப் பெறுவது கடினம் என்றும், நிலத் தேவையைக் குறைப்பதன் மூலம் நகர்ப்புற மக்களுக்கு அருகிலேயே பல்கலைக்கழகங்களை அமைக்க முடியும் என்றும் அரசு வாதிடுகிறது.
இது பிரச்சினையின் அடிப்படையைத் தவிர்க்கும் வாதமாகும். கல்வி நிறுவனங்களுக்கு குறைந்தபட்சம் கட்டமைப்பு, ஆய்வகங்கள், நூலகங்கள், விடுதிகள், விளையாட்டு வசதிகள், ஆராய்ச்சி மையங்கள் மற்றும் மாணவர் சேவைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
நகர்ப்புற நிலப் பற்றாக்குறைக்கான தீர்வு சிறந்த திட்டமிடலும், பகிர்ந்து பயன்படுத்தக்கூடிய பொதுக் கட்டமைப்புகளுமே தவிர, தனியார் பல்கலைக்கழகங்களுக்கான நுழைவுத் தடைகளைத் தளர்த்துவது அல்ல.
தமிழ்நாட்டின் உயர்கல்வி சாதனையை தனியார்மயமாக்கல் சீர்குலைக்கக் கூடாது.
தமிழ்நாடு அரசு பல்கலைக்கழகங்கள் மூலம் உயர்கல்விக்கான வாய்ப்புகளைப் பெரிதும் விரிவுபடுத்தி முன்னேறியது வரலாற்று உண்மை.
NITI Aayog-ன் 2025ஆம் ஆண்டு அறிக்கை, AISHE (All India Survey on Higher Education) அகில இந்திய உயர்கல்வி ஆய்வுத் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு, 2021–22ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் உயர்கல்விக்கான மொத்தச் சேர்க்கை விகிதம் (GER Gross Enrolment Ratio) 47 சதவீதமாக இருந்ததாகவும், தேசிய சராசரி 28.4 சதவீதமாக இருந்ததாகவும் குறிப்பிடுகிறது. இந்த அளவில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக உள்ளது. கடந்த பத்தாண்டுகளில் GER அதிக அளவில் முன்னேறிய மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாகும்.
இந்தச் சாதனை, பல்வேறு சமூகப் பிரிவினருக்கும் பிராந்தியங்களுக்கும் பொருளாதார ரீதியாக கட்டுப்படியாகும் உயர்கல்வியை உத்தரவாதப் படுத்தக்கூடிய அரசின் கல்விக் கொள்கையினால் சாத்தியமானது.
எனவே, தமிழ்நாட்டின் உயர்கல்வி வளர்ச்சிக்கான தீர்வு பொதுக்கல்வியை படிப்படியாக தனியார் கல்வியால் மாற்றுவது அல்ல.
தனியார்மயமாக்கல் உயர்கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம்; ஆனால் அதன் பலன்களை ஜனநாயகப்படுத்தவில்லை என்றால், அவை செலுத்தும் திறன் கொண்ட பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே அதிகமாகச் சென்றடையும் அபாயம் உள்ளது.
அரசு தனது அரசியலமைப்புச் சார்ந்த பொறுப்பைத் தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது
தனியார் பல்கலைக்கழகங்களின் விரிவாக்கம், கல்வியில் அரசு தன் பொறுப்பில் இருந்து விலகுவதற்கானக் காரணமாக மாறக்கூடாது. தனியார் பல்கலைக்கழகங்கள் ஒருபோதும் அரசின் பொது உயர்கல்விக்கு மாற்றாக இருக்க முடியாது.
தமிழ்நாட்டில் கல்வியில் நிகழ்ந்துள்ள சாதனைகள் பொது முதலீடும் சமூகநீதிக் கொள்கைகளும் இணைந்ததன் விளைவாக உருவானவை. முதலீட்டை ஈர்ப்பது அல்லது “உலகத் தரம் வாய்ந்த” நிறுவனங்களை உருவாக்குவது என்ற பெயரில் அந்த மரபு பலவீனப்படுத்தப்படக் கூடாது.
தமிழ்நாடு அரசின் கல்விக் கொள்கை உண்மையில் உள்ளடக்கியதாக (inclusive) இருக்கிறதா என்பதற்கு அளவுகோல் எத்தனை தனியார் பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன என்பதில் இல்லை. மாறாக ஏழை மற்றும் வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த எத்தனை மாணவர்கள் கடன் சுமையோ, பொருளாதாரத் தடையோ இல்லாமல் தரமான உயர்கல்வியைப் பெறுகின்றனர் என்பதுதான் உண்மையாக அளவுகோல்.
வலதுசாரி அரசியலின் பரந்த திட்டத்தின் ஒரு பகுதி!
மார்க்சிய அரசியல் பொருளாதாரக் கண்ணோட்டத்தில் ஆய்வு செய்யும் பொழுது கல்வியின் வணிகமயமாக்கலை வெறும் பொருளாதாரக் கொள்கையாக மட்டுமே பார்க்க முடியாது. அது வலதுசாரி அரசியலின் பரந்த அரசியல் திட்டத்தின் ஒரு பகுதியாகவும் தெளிவாக புரிந்து கொள்ளலாம் .
தனியார்மயமாக்கல், சந்தைமயமாக்கல் மற்றும் கல்வியை வியாபார பொருளாக்குதல் ஆகியவை கல்வியின் பொருளாதாரச் செயல்பாட்டை மட்டுமல்லாமல், அதன் கருத்தியல் செயல்பாட்டையும் மாற்றக்கூடியவை.
கல்வி, ஒரு சமூக உரிமையிலிருந்து ஒரு சந்தையில் பண்டமாக மாற்றப்படுகிறது. வாங்கும் திறனை அடிப்படையாகக் கொண்டு உயர்கல்விக்கான அணுகல் தீர்மானிக்கப்படும் போது, கல்வி வாய்ப்புகளும் வர்க்க அடிப்படையில் பிளவுபடுகின்றன.
சந்தைமயமாக்கல் சமூகத்தைப் பற்றிய சிந்தனை யையும் பொறுப்பையும் மறுத்து தனிமனிதவாதக் கண்ணோட்டத்தை உருவாக்குகிறது.
“ உன்னையே நீ முதலீடு செய்; திறன்களைப் பெறு; போட்டியிடு; வெற்றி பெறு.” எ ன்ற தனிமனிதவாதக் கருத்து முன்னிலைப்படுத்தப்படுகிறது.
இதன் விளைவாக வேலையின்மை, சாதி ஏற்றத்தாழ்வு, வர்க்க ஏற்றத்தாழ்வு, பிராந்திய வேறுபாடுகள் மற்றும் செல்வத்தின் குவிப்பு போன்ற கட்டமைப்புசார் பிரச்சினைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு, தனிநபரின் வேலைவாய்ப்புத் திறன் மற்றும் தனிநபரின் பொறுப்பு என்ற கருத்து முன்னிலைப்படுத்தப்படுகிறது.
பொருளாதார சமத்துவமின்மையும் கருத்தியல் சமத்துவமின்மையும் ஒன்றை ஒன்று வலுப்படுத்துகின்றன. வசதிபடைத்தவர்கள் சிறந்த கல்வியை வாங்க முடியும்; ஏழை மாணவர்களுக்கு தரம் குறைந்த வாய்ப்புகள் மட்டுமே கிடைக்கும் என்ற நிலை உருவானால், கல்வி அமைப்பு ஏற்கனவே உள்ள வர்க்க உறவுகளை மீண்டும் உற்பத்தி செய்யும், மற்றும் தீவிரப்படுத்தும்.
பொதுக்கல்வி, ஒடுக்கப்பட்ட மற்றும் பின்தங்கிய வர்க்கங்களின் அறிவுத் திறனையும் சமூகத் திறனையும் விரிவுபடுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளது. ஆனால், வணிகமயமாக்கப்பட்ட கல்வி, அந்த அறிவுத் திறன்களையே வாங்கும் திறனைப் பொறுத்து பகிரப்படும் சலுகைகளாக மாற்றும் அபாயத்தைக் கொண்டுள்ளது.
கல்வியில் வலதுசாரி கருத்தியல் ஆதிக்கம்
மார்க்ஸும் ஏங்கல்ஸும் The German Ideology நூலில், “ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆளும் வர்க்கத்தின் கருத்துக்களே ஆளும் கருத்துக்களாக இருக்கின்றன; அதாவது, சமூகத்தின் பொருளாதார ரீதியான ஆளும் சக்தியாக இருக்கும் வர்க்கமே அதன் அறிவுசார் ஆளும் சக்தியாகவும் இருக்கிறது.” என்று கூறுகின்றனர்.
கார்ல் மார்க்ஸ்சின் இந்தக் கண்ணோட்டத்தில் இருந்து அணுகும் பொழுது, கல்வி வணிகமயமாகும் பொழுது கல்வியைப் பொருளாதார ரீதியாக கட்டுப்படுத்துபவர்கள் தனியார் முதலாளிகள்; கருத்தியல் தலையீடு சமூகத்தின் அறிவு, வரலாறு, மதிப்பீடுகள் மற்றும் சிந்தனைகளை இந்த கல்வி நிறுவனங்கள் மூலமாக வலதுசாரி அரசியல்வாதிகள் கட்டுப்படுத்துகிறார்கள் என்ற மற்றொரு அரசியல் உண்மையும் தெளிவாகும்.
இத்தாலிய மார்க்சிய சிந்தனையாளர் அந்டோனியோ கிராம்ஸ்கியின் சிந்தனையில் கல்வி அறிவை பரப்பும் நிறுவனமாக மட்டும் கருதப்படவில்லை. அவரது “ மேலாதிக்கம்” (hegemony) என்ற கருத்தின் அடிப்படையில், சமூகத்தில் ஆளும் வர்க்கத்தின் கருத்துக்கள் மற்றும் உலக பார்வைகள் மக்கள் மத்தியில் “இயல்பானவை” அல்லது “பொது அறிவு” போன்றவையாக ஏற்றுக் கொள்ளப்படுவதில் கல்வி போன்ற நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன
கிராம்சியின் Prison Notebooks நூலில் கூறப்பட்டுள்ள “hegemony” என்ற கருத்தின் அடிப்படையில் பார்க்கும்போது, கல்வி என்பது மேலாதிக்கம் உருவாக்கும் முக்கியமான சமூகத் தளங்களில் ஒன்றாகும்
“ஒவ்வொரு ‘மேலாதிக்க’ உறவும் தவிர்க்க முடியாமல் ஒரு கல்வி உறவாகும்.” என்று கிராம்ஸி கூறுகிறார்.
எனவே கல்வி வணிகமயமாகும் பொழுது, எந்த அறிவு கற்பிக்கப்படுகிறது, எந்த கருத்துக்கள் முன்னிறுத்தப்படுகின்றன, மாணவர்கள் சமூகத்தை எவ்வாறு புரிந்து கொள்ள பழக்கப்படுகிறார்கள் என்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த கேள்வி ஆகும் .
வலதுசாரி அரசியல் திட்டம், ஒருபுறம் கல்வி நிறுவனங்களை வணிக மயமாக்கும் அதே நேரத்தில், பொதுக் கல்வி மற்றும் மதச்சார்பற்ற கல்வியை பலவீனப்படுத்தி, பாடத்திட்டங்கள் மற்றும் வரலாற்றுப் பார்வையில் தலையீடு செய்து, பெரும்பான்மைவாத தேசியவாதத்தை முன்னிறுத்தி, விமர்சன சமூக அறிவியலை ஓரங்கட்டும் முயற்சிகளையும் மேற்கொள்கிறது.
எனவே, கல்வியின் வணிகமயமாக்கல் என்பது அரசு கல்வியிலிருந்து விலகுவது மட்டுமல்ல. அது சமூகத்தையே மறுசீரமைக்கும் திட்டமாக மாறக்கூடும். இது வலதுசாரி அரசியல் திட்டம். இது பாஜக ஆர்.எஸ்.எஸ். திட்டம். பாஜக இதை தேசிய கல்விக்கொள்கை 2020 ன் மூலமாகவும், Ease of Doing Business என்ற பெயரில் உயர்கல்வித்துறையில் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி தனியார் முதலீட்டிற்கும் தனியார் பல்கலைக்கழகங்களில் விரிவாக்கத்திற்கும் சாதகமான சூழலை உருவாக்குகிறது
கல்வியைப் பாதுகாப்பது: சமூகநீதிக்கான போராட்டம்
கல்வி ஒரு சமூக உரிமையாகவும், பொதுநலப் பொருளாகவும், ஜனநாயக நிறுவனமாகவும் பாதுகாக்கப்பட வேண்டும்.
வணிகமயமாக்கலை எதிர்ப்பது மட்டும் போதாது. கல்வியின் மதச்சார்பற்ற, அறிவியல், அரசியலமைப்புச் சார்ந்த மற்றும் சமூக விடுதலைத் தன்மையையும் பாதுகாக்க வேண்டும். அதுவே முழுமையான போராட்டம் ஆகும்
தவெக அரசு, சமூகநீதியைப் பாதுகாப்பதாகக் கூறிக்கொண்டே, பரந்த தனியார்மயமாக்கல் திட்டத்தின் முன்னால் அரசியல் ரீதியாக மௌனம் காக்கிறது
மத்திய அரசின் Compliance Reduction and Deregulation Task Force பரிந்துரைகளை உறுதியாக எதிர்ப்பதில் தமிழ்நாடு அரசு காட்டிய அரசியல் தயக்கம், கல்வியின் வணிகமயமாக்கலை நோக்கிய பாஜக தலைமையிலான கொள்கைத் திசைக்கு காட்டும் அமைதியான இணக்கம், மேலும் அரசியல் கட்சிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பிற தரப்பினரின் ஆட்சேபனைகளைக் கருத்தில் கொள்ளாத அணுகுமுறை ஆகியவை தவெக அரசின் அரசியல் நிலைப்பாடு குறித்து ஆழமான சந்தேகங்களை எழுப்புகிறது.
தமிழ்நாடு அரசு இந்த தனியார்மயமாக்கல் நோக்கிய மசோதாவை திரும்பப் பெற வேண்டும்.
உயர்கல்வியை சந்தையின் கரங்களில் ஒப்படைக்கக் கூடாது. அது மக்களின் உரிமை; சமூகநீதியின் கருவி.