தலையங்கம்

ரீல்ஸ் ஆய்வுகளின் அபாயம்

ஜனசக்தி தலையங்கம்

அரசு மருத்துவமனைகள், அரசு பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு நேரில் சென்று அமைச்சர்களும், சட்டப்பேரவை உறுப்பினர்களும் ஆய்வு நடத்துவது தவறல்ல. அது வரவேற்கத்தக்கது.

ஆனால், அண்மைக் கால “ஆய்வுகளை” கவனித்தால், ஒரு ஆபத்தான அரசியல் போக்கு வெளிப்படுகிறது. கேமராக்களோடு செல்கிறார்கள். வலிந்து குறை காண்பதும், அதிகாரிகளை விசாரிப்பதும், மாணவர்களையும் நோயாளிகளையும் காட்சிப் பொருளாக மாற்றுவதுமாக தம்மை முன் தள்ளிக் கொண்டு ரீல்ஸ் வெளியிடுகிறார்கள்.

உண்மையான ஆய்வு என்றால், தொழிலாளி, விவசாயி, மாணவர், ஆசிரியர், மருத்துவர், செவிலியர், நோயாளி ஆகியோரின் அனுபவங்களைக் கேட்டு, குறைகளுக்கான காரணங்களை கண்டறிந்து, தமக்குள்ள அதிகாரத்தின் வழியாக, நிர்வாகக் குறைகளைச் சரிசெய்வதாக இருக்க வேண்டும்.

அதற்கு அந்தத் துறையின் மீது அக்கறையும், பிரச்சினைகளை கற்றறியும் ஆர்வமும் இருக்க வேண்டும். அங்கு பணிபுரிகிற, பயன்பெறுகிற மக்களை மனமார நேசிக்க வேண்டும்.

ஆய்வு செய்த மருத்துவமனை, பள்ளி அல்லது கல்லூரிகளில், என்ன போதாமைகள் கண்டறியப்பட்டன என்பது குறித்தோ, அதற்கு என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன என்றோ எந்த அறிக்கையும் வெளிவரவில்லை. வந்ததென்னவோ ரீல்ஸ்கள் மட்டுமே. அதனை எத்தனை பேர் பார்த்திருக்கிறார்கள் அல்லது பகிர்ந்திருக்கிறார்கள் என்று பார்த்து சுயமகிழ்ச்சியடைந்து கொள்வதற்கா இத்தனை ஆர்ப்பாட்டங்கள்?

அரசு மருத்துவரை மிரட்டும், தவெக மருத்துவ அணிச் செவிலியர், போலியோ சொட்டுமருந்தை குழந்தை வாயில் ஊற்றுகிற, பள்ளிக் குழந்தைகளை விஜய் திரைப்படப் பாடலை கூட்டாகப் பாட வைக்கிற ஆளும் கட்சிப் பிரமுகர்கள் என்று ரீல்கள் வந்து கொண்டே இருக்கின்றன.

அண்மையில் அமைச்சர் கீர்த்தனா அரசு பள்ளியில் ஒரு மாணவியிடம் கேள்வி எழுப்பி, அந்தக் குழந்தை ஆங்கிலத்தில் பதிலளிக்க முடியாமல் தடுமாறுகிற காட்சியைப் பதிவு செய்து பொதுவெளியில் பலர் பார்க்க வெளியிட்டார்.

பள்ளிக்கூடத்தில் ஆய்வுக்காக மாணவர்கள் தயார்ப்படுத்தும் எண்ணத்தில், ஆசிரியர்களே ஒருவித அச்சச் சூழலை, பதற்றத்தை ஏற்படுத்தி விடுவார்கள். ஆய்வு செய்யப்போகிறவர், குழந்தைகளை தனது அணுகுமுறை வழியாக சகஜ நிலைக்குக் கொண்டு வந்து உரையாட வேண்டும். ஆசிரியர் அல்லது மாணவர் மீது விமர்சனம் இருக்குமானால் தனியே அழைத்துப் பேச வேண்டும். தான் உணர்வதை அறிக்கையாக கல்வித்துறைக்கு அனுப்பலாம். அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்று கண்காணிக்கலாம்.

‘கடைசி பெஞ்ச்’என்று எள்ளி நகையாடுவதும், ஒரு பெண் குழந்தைக்கு பதற்றத்தை ஏற்படுத்தி, தடுமாற வைப்பதும், அவற்றை வீடியோவாகப் பதிவு செய்து வெளியிட்டு, அதன் தன்னம்பிக்கையைச் சிதைப்பதும் அறமும், மாண்புமற்ற நடவடிக்கையாகும்; மேட்டிமைத்தனத்தின் வெளிப்பாடாகும்.

இது பெரும் கண்டனத்துக்கு உள்ளான பின்பு, தான் அரசுப் பள்ளியில் படித்ததால், தன்னை விமர்சிப்பது அரசுப்பள்ளி மாணவர்களைக் கேவலப்படுத்துவதாகும் என்று அந்த அமைச்சர் பதிலளித்துள்ளது, பிரச்சினையின் தீவிரத்தை அவர் உணர மறுப்பதையே காட்டுகிறது.

ஆனால், இதே தொழில்துறை அமைச்சர் தனது விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலை வெடித்து பல தொழிலாளர்கள் உயிரிழந்தபோது அங்கு செல்லவில்லை. திருவள்ளூரில் அம்மோனியா கசிவால் இளம் பெண் தொழிலாளர்கள் உயிரிழந்தபோதும், நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டபோதும் நேரில் சென்று காரணங்களைக் கேட்டு அறியவில்லை; எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மேற்பார்வையிடவில்லை. தொழிலாளர்களின் உயிரைப் பறிக்கும் தொழிற்சாலைகள் ஆய்வுக்குரியவையாகத் தெரியவில்லை போலும்.

அதேபோல, தனியார் பள்ளிகளிலும் தனியார் மருத்துவமனை களிலும் திடீர் ஆய்வுகள் இல்லை. கட்டணக் கொள்ளை, மருத்துவச் சுரண்டல், பாதுகாப்பு விதிமீறல்கள் குறித்து ஆய்வும் இல்லை, நடவடிக்கை இல்லை, ஏன் ரீல்ஸ்களும்கூட இல்லை.

அரசு நிறுவனங்கள் மட்டுமே பொதுமக்கள் முன் குறைபாடுடையவையாகக் காட்டப்படுகின்றன; தனியார் நிறுவனங்கள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவையாக நடத்தப்படுகின்றன. பொதுத்துறையின் மீது மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்படுத்தி, “அரசால் முடியாது; தனியாரால்தான் முடியும்” என்ற மனநிலையை உருவாக்கும் அரசியல் உத்தி இதன் பின்னால் இருக்கிறது.

பொதுக் கல்வியையும், பொதுச் சுகாதாரத்தையும் பலவீனப்படுத்தி, தனியார்மயத்திற்கு சமூக ஒப்புதலை உருவாக்கும் முயற்சியாகவே இதைப் பார்க்க முடியும்.

நல்லாட்சி என்பது கேமராவை நோக்கி நடிப்பதல்ல; மக்களை நோக்கி செயல்படுவதுதான். ஒவ்வொரு ஆய்வும் ஒரு ரீலாக முடிந்தால், அது அரசு நிர்வாகத்தின் வெற்றி அல்ல; நிர்வாகம் காட்சி அரசியலாகச் சுருங்கிவிட்டதற்கான அபாயம் அது.

மக்கள் எதிர்பார்ப்பது ரீல்கள் அல்ல; தீர்வுகளைத் தரும் பொறுப்புணர்வுள்ள ஆட்சி.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button