
இயற்கை நமக்கு பல கொடைகளை வழங்கியுள்ளது. அத்தகைய கொடைகளில் மகத்தான கொடையாக கிடைத்த காவிரி நதி நீர் பாய்ந்தோடும் மாவட்டங்கள் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் திருச்சி மாவட்டத்தின் சில பகுதிகள் ஆகும்.
நாட்டின் வேறு எங்கும் காணக் கிடைக்காத, கிடைக்கப் பெறாத நீண்ட, அகண்ட சமவெளிப் பகுதியாகும். இப்படியான ஓர் சமவெளிப் பகுதியாக நாட்டிற்கு இயற்கை வழங்கிய பெருங்கொடையல்லவா? அத்தகைய கொடைக்குரிய பகுதி வண்டலும், செம்மண்ணும், மணலும், களிமண்ணும் நிறைந்த பகுதியாக விளங்குகின்றது. இப்பகுதியில் வாழை, தென்னை, கரும்பு, சோளம் என பயிரிட்ட போதும் பெருமளவு நெற்பயிரே பன்னெடுங்காலந்தொட்டு பயிரிடப்பட்டு வருகிறது.
ஏறக்குறைய 14 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர் படிப்படியாகக் குறைந்து வருவது கவலைக்குரியது. ஆனாலும் தொன்றுதொட்டு தமிழகத்தின் நெற்களஞ்சியம் என போற்றப்பட்டு வருகிறது.
அத்தகைய நெற்களஞ்சியத்தில் பாடுபட்டு வரும் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் ஒவ்வொரு நாளும் தாங்கள் மேற்கொண்டு வரும் வேளாண் தொழில்மீது நம்பிக்கை இழந்து வருவது குறித்து அலட்சியப் பார்வை மேலோங்கி வருவது மிகுந்த கவலைக்குரியது மட்டுமல்ல, கண்டனத்திற்கும் உரியது.
வேளாண் தொழில் செழிப்புற இயற்கையின் ஒத்துழைப்பு என்பது மிக முக்கியமான ஒன்று. இயற்கையின் இடர்ப்பாடுகள் ஒருபுறம் எனில், செயற்கையாய் உருவாக்கப்படும் இடர்ப்பாடுகள் நாள்தோறும் அதிகரித்து வெற்று அரசியல் கூச்சல் போடுவதின் மூலம் அடையப் போகும் பயன் என்ன?
காவிரி நதிநீர்ப் பிரச்சினையில் இரு மாநிலங்களுக்கிடையே பேசித் தீர்வு காண 26 முறை முயன்றும் தோல்விகளையே தழுவியது குறித்துக் கவலைக் கொள்ள வேண்டாமா? சுமுகப் பேச்சுவார்த்தை பயனற்ற நிலையில் தீர்விற்கு வழிதேடும் விதமாக நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அக்கோரிக்கைக்காக தமிழ்நாட்டில் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் நடைபெற்ற எண்ணற்ற போராட்டங்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தன.
நடுவர் மன்றம் 1998ல் அமைக்கப்பட்டு தீர்ப்பாக 205 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது.
2007-ல் நடுவர் மன்றம் தனது இறுதி தீர்ப்பை வழங்கும்போது இடைக்கால தீர்ப்பை காட்டிலும் கூடுதலாக வழங்கும் என்ற எதிர்பார்ப்புக்கு மாறாக, 13 டிஎம்சி குறைத்து 192 டிஎம்சி என தீர்ப்பளித்தது. இதனையும் தாண்டி, உச்சநீதி மன்றம் இறுதியாக வழங்கிய தீர்ப்பில் மேலும் 15 டிஎம்சியைக் குறைத்து 177 டிஎம்சி என தீர்ப்பளித்தது.
இக்குறைந்த அளவு நீரைக்கூட பெற முடியாத நிலைக்கு தமிழகம் தள்ளப்பட்டுள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றது. கர்நாடகா அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பை முழுமையாக அமல்படுத்தினால் கூட நமது தேவை பூர்த்தியாகாது.
டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி ஆகிய சாகுபடிகளைச் செய்ய 250 முதல் 300 டி.எம்.சி வரை தண்ணீர் தேவை, இத் தேவைகளை உச்சநீதிமன்றம் கவனத்தில் கொள்ளாது, அது அளித்திட்ட தீர்ப்பு அநீதியானது என்பது ஒருபுறம் இருந்த போதிலும், தீர்ப்புக்குரிய தண்ணீரையும் வழங்க மறுக்கின்றது கர்நாடக அரசு.
கர்நாடக அரசு கட்டியுள்ள கிருஷ்ணராசசாகர் அணை, ஹேரங்கி அணை, ஹேமாவதி அணை மற்றும் கபினி ஆகிய நான்கு அணைகளிலும் தண்ணீர் நிரம்பி இனியும் நீரைத் தேக்கினால் அணைகள் உடைபடும் என்ற நிலை ஏற்பட்ட பின்னரே, தனது அணைகளைக் காப்பாற்றிக் கொள்வதற்காக நீர் திறக்கப்படுகின்றது. அதாவது தமிழ்நாட்டை வடிகாலாகப் பயன்படுத்தும் கொள்கையை கர்நாடக அரசு முரண்டுபிடிக்கின்ற முறையில் பின்பற்றுகின்றது. நடுவண் அரசு நடுநாயகமாக நடக்க மறுக்கின்றது-
இதன் விளைவு- டெல்டா மாவட்டங்களில் ஏறக்குறைய 6 லட்சம் ஏக்கரில் மேற்கொள்ளப்பட வேண்டிய குறுவை சாகுபடி 3 லட்சம் ஏக்கராக – 50 சதவீதமாகக் குறைந்தது. உற்பத்தி குறைந்தது நாட்டிற்கு ஏற்பட்டுள்ள இழப்பு இல்லையா?
உற்பத்தியை பெருக்க வேண்டும் என்று ஒருபுறம் உரத்த குரல் எழுப்புகின்றார்கள். மறுபக்கம் உற்பத்தி இழப்பு ஏற்படக் காரணமாக உள்ளார்கள். இவர்கள்தான் தேச வளர்ச்சி குறித்து உரக்கப் பேசுகின்றார்கள்.
குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. இதனை நம்பியுள்ள விவசாயப் பெருங்குடி மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிர்க்கதியாய் நிற்கின்றனர்.
வேளாண் தொழிலாளர்கள் வேலையின்றி அவர்களது வீடுகளில் உள்ள அடுப்புகளில் பூனைக்குட்டிகள் உறங்கி மகிழ்கின்றன.
மகாத்மா காந்தி வேலை உறுதி அளிப்பு திட்டத்தை ஒன்றிய அரசு சீர்குலைத்து விட்டது. ஆண்டுக்கு 125 நாள் வேலை என்றும், தின ஊதியம் ரூ.345 என்றும் நாவில் தேனை தடவி விட்டு வேடிக்கை பார்க்கின்றது.
ஒன்றிய அரசின் உதவாக்கரை வி பி ஜி ராம் ஜி திட்டத்திற்கு மாநில தவெக அரசும் துணை போனது மட்டுமின்றி, ஆண்டுக்கு 150 நாள் வேலை என்று தம்பட்டம் அடிக்கின்றது.
நடைமுறையில் ஒவ்வொரு ஊராட்சியிலும் 15 அல்லது 20 பேருக்கு மட்டுமே வேலை வழங்கப்படுகின்றது- வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் அடிப்படையில் அடையாள அட்டை (ஜாப் கார்டு) பெற்றவர்களுக்கு முழுமையாக வேலை வழங்கப்படவில்லை என்பதுதான் உண்மை.
விவசாயிகளுக்கு வாக்குறுதி அளித்தபடி கடன் தள்ளுபடி இல்லை- பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின்படி, குறுவை சாகுபடியை இழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை. குறுவைத் தொகுப்புத் திட்டத்தில் முழு அளவிற்கு இழப்பீடு கிடைக்கவில்லை.
நகரம்- கிராமங்களில் குடிப்பதற்கு தண்ணீர் கிடைக்கவில்லை- விலைவாசி பன்மடங்கு உயர்ந்து, அனைத்து தரப்பு மக்களும் மிகக் கடுமையான முறையில் பெரும்பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர்.
சம்பா சாகுபடிப் பணிகளை மேற்கொள்ள எவ்விதமான உத்தரவாதமும் இல்லை.
மேற்கண்ட பிரச்சனைகளை முன்வைத்து, கடந்த 28.8.2026 அன்று திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெருந்திரள் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான மக்கள் இப்போராட்டத்தில் பங்கேற்று விரிவான கோரிக்கை மனு முதலமைச்சருக்கு மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மூலம் வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர்கள் அரசின் கவனத்திற்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்தனர். அரசுக்கு அனுப்பப்பட்டதா? அரசு படித்துப் பார்த்து, தீர்வுக்குரிய முயற்சிகளை மேற்கொண்டதா?
டெல்டா மாவட்டம் பாலைவனமாக காட்சியளிக்கும் – பரிதாப நிலைக்குச் சென்றுள்ள நிலையில், வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை குறித்து மாநில அரசு நீண்ட நெடிய மவுனத்தில் ஆழ்ந்துள்ளது வியப்பாக உள்ளது.
இத்தகைய நிலையில் முதலமைச்சர் செப்டம்பர் முதல் தேதியில் மேட்டூர் அணையை திறந்து வைத்து மகிழ்ந்துள்ளார்.
அணை திறக்கப்படுவதற்கு முன்பாக, விவசாயிகள், வேளாண் துறை, பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் கூட்டத்தை நடத்தி அவர்களின் கருத்து அறிவது என்கிற வழக்கமான நடைமுறையைக் கூட இவ்வாண்டு அரசு மேற்கொள்ளாமல் தன்னிச்சையாக அணையைத் திறந்துள்ளது.
செப்டம்பர் முதல் நாள் முதல் 45 நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் விடப்படும் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்பு விவசாயிகள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
குறுகிய காலப் பயிர் சாகுபடி மேற்கொண்டால் குறைந்தபட்சம் 110 முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் தேவை- மத்திய காலப் பயிர் சாகுபடி என்றால் 135 முதல் 140 நாட்கள் வரை தண்ணீர் தேவை என்ற நிலையில் – 45 நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் விடப்படும் என்ற அரசின் அறிவிப்பு ஆச்சரியத்தையும், வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
நாள்தோறும் 15, 000 முதல் 18,000 கன அடி தண்ணீர் திறந்து விட்டால்தான் ஆறுகளில் இருந்து பாசன வாய்க்காலுக்கும், அதன் மூலம் கன்னி வாய்க்காலுக்கும் தண்ணீர் சென்று வயல்களில் நீர் பாய்ச்ச முடியும்.
இத்தகு எதார்த்தமான நடைமுறைகள், நடைமுறை சாத்தியங்கள் குறித்து அரசுக்கு தெரியுமா? தெரிந்து கொள்ள முயன்றார்களா?
செப்டம்பர் 1-ல் மேட்டூர் அணை திறக்கப்பட்ட போதும் கடைமடை பகுதி வரை தண்ணீர் சென்றடைய 10 முதல் 15 நாட்கள் ஆகும் என்பது பொதுப்பணித்துறை அதிகாரிகள் நன்கறிவார்கள் – இதுகுறித்து அரசுக்கு உரிய முறையில் தெரிவித்தார்களா? அவ்வாறு தெரிவித்திருந்தால் அதனை அரசு கவனத்தில் எடுத்துக் கொண்டதா?
அரசின் அறிவிப்பின்படி, அக்டோபர் 15 வரை தண்ணீர் வரும்- அதன் பின்னர் என்ன செய்வது?
மழை பெய்யும் என்கிற நம்பிக்கை அரசுக்கு இருக்கின்றதா? அவ்வாறெனில் எந்த நம்பிக்கையின் அடிப்படையில் அணையைத் திறந்தார் முதல்வர்!
அணைத் திறப்பைக் கொண்டு சாகுபடிப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுப் பயிர்களை வளர்த்து குறிப்பிட்டக் காலத்துக்குப் பின்பு தண்ணீர் இல்லாமல் போனால், பயிர்கள் கருகிப்போய் பெரும் இழப்பிற்கு விவசாயிகள் உள்ளாவார்கள். ஏற்கனவே நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் விவசாயிகள் மேலும் மிகக் கடுமையான நெருக்கடிக்கு உள்ளவர்கள் என்பதனை அரசு கவனத்தில் கொள்கின்றதா?
வரும் முன் காப்பது மந்திரிக்கு அழகு என்பதனை அரசு கவனத்தில் கொள்ளாததாகவே அரசின் நடவடிக்கைகளும், அலட்சியப் போக்கும் அமைந்துள்ளதாகவேத் தெரிகின்றது.
பட்ட காலிலேயே படும் என்பதற்கேற்ப, விவசாயிகளை மேலும் மேலும் நெருக்கடிகளுக்கு உள்ளாக்கி வருவது, அவர்கள் விவசாயத்தின் மீது கொண்டுள்ள பற்றை, அவநம்பிக்கைகளுக்கு ஆட்படுத்தாமல் இருக்க அரசு ஆவன செய்யுமா? வருமுன் காக்க அரசு முன்வருமா?